இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 03

எரிமுட்செடியினுள்ளே கர்த்தர் மோயீசனுக்குத் தரிசனமான வரலாறு.

1. மோயீசனோவென்றால், மதியான் ஆசாரியனாயிருந்த ஜெத்திராவென்னும் தன் மாமனாருடைய ஆடுகளை மேய்த்துக்கொண் டிருக்கையில், மந்தையை வனாந்தரத்தின் உட்புறத்திலே ஒட்டித் தேவ (காட்சிப்) பர்வதமாகிய ஓரேப் மலைமட்டும் வந்து சேர்ந் தான்.

* 1-ம் வசனம். மோயீசன் இதற்கு முன் மதியான் நாட்டிலே 40 வருஷ காலமாய் வசித்து வந்தமையால் தற்காலம் 80 வயதாயிருந்தார். (அப். நடபடி 7:30) - ஓரேப் மலையானது சீனாயி மலைக்கடுத்த ஒரு குன்று. ஓரேப் என்பதோ வனாந்தரமென்றர்த்தமாகும். இது தேவதரிசன மலை என்னப்படுவதற்குக் காரணமேதெனில்: அம்மலையிலே தேவன் மோயீசனுக்கு நானாவித அற்புதமானக் காட்சிகளை அருளிச்செய்ததினால் அப்பெயர் வழங்கி வந்ததென்றறிக.

2. ஆண்டவரோ அவனுக்கு ஒரு முட்செடி நடுவினின்று அக்கினிச் சுவாலை ரூபமாய்த் தரிசனமாயினார். அவன் முட்செடி வெந்து போகாமல் எரிவதைக் கண்டுகொண்டிருந்தான்.

* 2-ம் வசனம். ஆண்டவர் எரிமுட்செடியினுள் சுவாலை வடிவாக மோயீசனுக்குத் தம்மைக் காண்பித்தாரென்றால், மனுஷரூபத்தை எடுத்த ஓர் சம்மனசைக் கொண்டு மோயீசனுக்குத் தரிசனையானாரென்று, உணரக்கூடும்.

3. ஆகையால் மோயீசன்: நான் போய், முட் செடி வெந்துபோகாத இந்த அற்புதக் காட்சியைப் பார்ப்பேன் என்றான்.

4. ஆனால் அவன் உற்றுப்பார்க்க வருவதை ஆண்டவர் கண்டு, முட்செடி நடுவினின்று: மோயீசா! மோயீசா! என்று அவனைக் கூப்பிட, அவன்: இதோ இருக்கிறேன் என்று மறு மொழி கூற,

5. அவர்: அண்டிவராதே! உன் பாதரட்சைகளைக் கழற்றி விடு, ஏனென்றால் நீ நிற்கின்ற ஸ்தலம் பரிசுத்த பூமி என்றார்.

* 5-ம் வசனம்: இஸ்றாயேலியர் பரிசுத்த ஒரு ஸ்தலத்திலே பிரவேசிக்கும்போது தங்கள் பாதரட்சையைக் கழற்றிவிடுவார்கள்.

6. மீளவும் அவர்: உன் பிதாவின் தேவன், அபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் நாமே என்றருளினார். மோயீசன் தேவனை நோக்கிப் பார்க்கத் துணியாது, தன் முகத்தை மூடிக் கொண்டனன்.

7. கர்த்தர் அவனைப் பார்த்து: எஜிப்த்தில் நமது பிரஜைக்குண்டான உபத்திரவத்தையும் கண்ணுற்றோம். வேலை விசாரணைக்காரருடைய கொடுமையின் நிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலையும் கேள்வியுற்றோமே;

8. நாம் அவர்களுடைய துயரத்தை அறிந்தமையால், அவர்களை எஜிப்த்தியர் கைகளினின்று மீட்டிரட்சிக்கவும், இந்தத் தேசத்திலிருந்து நல்ல விசாலமான தேசத்தில் பாலும் தேனும் ஓடும் பூமியில், கானானையர், ஏத்தையர், ஆமோறையர், பாரேசையர், ஏவையர் வாசஸ்தலங்களிடமே கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கி வந்தோம்.

9. இஸ்றாயேல் புத்திரருடைய பிரலாபம் நம் சந்நதிக்கு வந்தெட்டியது. அவர்கள் எஜிப்த்தியரால் உபாதிக்கப்படுகிற உபத்திரியத்தையும் கண்டுகொண்டோம்.

10. ஆனால் வா! இஸ்றாயேல் புத்திரராகிய நமது ஜனத்தை எஜிப்த்தினின்று புறப்படும்பொருட்டு உன்னைப் பரவோனிடத்திற்கு அனுப்புவோம் என்றார்.

11. மோயீசனோ கடவுளை நோக்கி: பரவோனிடத்திற்குப் போகவும், இஸ்றாயேல் புத்திரரை எஜிப்த்தினின்று அழைத்துவரவும் நான் எம்மாத்திரம்? என,

* 11-ம் வசனம். மோயீசன் தேவகட்டளை மீறக் கருதுகிறவரல்ல. ஆனால் தமது நீசத்தனத்தை யோசித்துப் பயந்து இவ்வாறு தாழ்ச்சியாகப் பேசினாரென்று அறியவும்.

12. அவர்: நாமே உன்னோடு இருப்போமன்றி, நீ நமது பிரஜையை எஜிப்த்தினின்று புறப்படப்பண்ணின பின்னர், இந்த மலையின்மீது கடவுளுக்குப் பலியிடுவாய். இதே நாம் உன்னை அனுப்பினோமென்பதற்கு அத்தாட்சியாகும் என்றருளினார்.

13. மோயீசன் கடவுளை நோக்கி: இதோ, நான் இஸ்றாயேல் புத்திரரிடத்தில் போய்: உங்கள் பிதாக்களின் தேவன் என்னை உங்களிடம் அனுப்பியருளினார் என்று நான் சொல்லும்போது: அவருடைய பேர் என்னவென்று அவர்கள் என்னைக் கேட்டால் நான் அவர்களுக்குப் பதில் என்ன சொல்லுவேன் என,

14. கடவுள் மோயீசனை நோக்கி: இருக்கிறவராயிருக்கிறோம்; (ஆதலால்) நீ இஸ்றாயேல் புத்திரர்களிடத்திற் போய்: இருக்கிறவரே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று சொல்வாயென்றார்.

* 14-ம் வசனம். கடவுள் எல்லாவற்றையும் உண்டாக்கித் தாமே யாவராலும் உண்டாக்கப்படாமல் நித்தியமாய்த் தம்மிடத்தில் தாமாயிருக்கிறார் என்றும், மற்றுமுள்ள வஸ்துக்களின் உயிரானது இரவலென்றும், அவர் ஒருவர் ஆதியந்தமின்றி தற்சுபாவ மகிமையால் எப்பொழுதும் சீவித்திருக்கிறாரென்றும் யோசித்துப் பிரமித்துக் கொள்ளுகிறது நியாயமன்றோ?

15. மறுபடியும் கடவுள் மோயீசனை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், அபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனாயிருக்கிறவரே என்னை உங்களிடத்தில் அனுப்பினார். என்றைக்கும் நமது பேரும் இதுவே; தலைமுறை தலைமுறை தோறும் நமது அறிகுறியும் இதுவே.

* 15-ம் வசனம். சேசுநாதர் சுவாமி மனுஷனாகியமட்டும் அபிரகாம், இசாக், யாக்கோபு என்பவர்களின் வம்சத்திலே பிறந்தார். வரிவேதத்துக்கும் அருள் வேதத்துக்குமுள்ள நெருக்கமான சம்பந்தத்தை அதினாலறியவும்.

16. நீ போய் இஸ்றாயேலரில் பெரியோர்களைக் கூட்டி அவர்கட்குச் சொல்லுவாய்: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், அபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் எனக்குத் தரிசனையாகித் திருவாக்கருளினதாவது: நாம் உங்களைச் சந்திக்க வந்தோம், உங்கட்கு எஜிப்த்திலே நேரிட்ட யாவையும் கண்டுகொண்டோம்.

17. ஆதலால் நாம் உங்களை எஜிப்த்தின் வல்லடியினின்று கானானையர், ஏத்தையர், ஆமோறையர், பரேசையர், ஏவையர், ஜெபுசேயர் வாசம்பண்ணுந் தேசத்தில் பாலுந் தேனும் ஓடும் பூமியில் கூட்டிக் கொண்டு போகத் திருவுளங்கொண்டோம்.

18. அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; பின்பு நீயும் இஸ்றாயேலின் பெரியோர்களும் எஜிப்த்து இராயனிடம் போய்: எபிறேயரின் தேவனாகிய கர்த்தர் எங்களை அழைத்திருக்கிறார்; நாங்கள் மூன்று நாள் பிரயாணம் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடச் செல்லவேண்டும் என்று அவனுக்குச் சொல்லுவாய்.

19. ஆனால் எஜிப்த்து இராயன் கை வல்லமை கண்டாலொழிய மற்றப்படி உங்களைப் போக விட மாட்டானென்றறிகின்றோம்.

20. ஆதலால் நாம் கையை நீட்டி எஜிப்த் தியருக்குள்ளே நானாவித அற்புதங்களையுஞ் செய்து அவர்களைத் தண்டிப்போம், அதற்குப் பின் அவன் உங்களைப் போக விடுவான்.

21. மேலும் நாம் இந்தப் பிரஜைகட்கு எஜிப்த்தியர் கண்களில் தயவு கிடைக்கச் செய்வதால், நீங்கள் புறப்படுங்கால் வெறுமையாய்ப் போவதில்லை.

22. எவ்வாறெனில் ஒவ்வொரு ஸ்திரீயும் தன் தன் அயல்வீட்டுக்காரி இடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும் பொன் வெள்ளிப் பாத்திரங்களையும் ஆடைகளையும் கேட்டு வாங்குவாள். நீங்களோ அவற்றை உங்கள் குமாரர் குமாரத்திகளுக்குத் தரிப்பித்து எஜிப்த்தைக் கொள்ளையிட்டுப் போவீர்கள் என்றருளினார்.

* 22-ம் வசனம். உலகமெல்லாம் கடவுளது. அவர் அதினுடைய திரவியங்களை எவர்களுக்குக் கொடுக்க இஷ்டமாயிருக்கிறாரோ, அவர்களுக்குக் கொடுக்கிறார். இவ்விதமாய் அவர் எஜிப்த்தின் திரவியங்களிற் பல தமது பிரஜைகளுக்குக் கொடுக்கச் சித்தமுள்ளவரானார். எஜிப்த்தியர் அவர்களுக்குச் செய்த நானாவித அநியாயங்களுக்கும் பரிகாரமாகக் கர்த்தர் இப்படிச் செய்தாரென்று தோன்றுகின்றது.