இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தீத்துவுக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 03

போதிக்கத்தக்கவைகளையும், தகாதவைகளையும் தீத்துவுக்கு வெளியாக்கி, வைராக்கியங்கொண்ட வேதப்புரட்டரைவிட்டு விலகக் கற்பித்து, அவர் தம்மிடத்தில் வர வேண்டிய காலத்தையும் இடத்தையும் குறித்துத் தெரிவித்து நிருபத்தை முடிக்கிறார்.

1. துரைத்தனமுள்ளவர்களுக்கும், அதிகாரமுள்ளவர்களுக்கும் அவர்கள் பணிந்து நடக்கவும் அவர்கள் சொல்லுக்குக் கீழ்ப்படியவும், எவ்வித நற்கிரியைகளையுஞ் செய்வதற்கு ஆயத்தமாயிருக்கவும்,

2. ஒருவனையும் தூஷணியாமலும், வழக்காடாமலும், அமைதியுள்ளவர்களும், எல்லா மனிதர்மட்டிலும் சாந்தகுணத்தைக் காண்பிக்கிறவர் களுமாயிருக்கும்படி அவர்களை எச்சரிப்பீராக.

3. நாமும் ஒருகாலத்தில் புத்தியீனரும், அவிசுவாசிகளும், வழிதப்பினவர்களும், பற்பல இச்சைகளுக்கும், இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், வஞ்சனை காய்மகாரத்தில் நடந்தவர்களும், பகைக்குரியவர்களும், ஒருவரையயாருவர் பகைக்கிறவர்களுமாய் இருந்தோம்.

4. ஆனால் நம்முடைய இரட்சகராகிய சர்வேசுரனுடைய கிருபாகடாட்சமும், மனுஷ அன்பும் தோன்றினபோது,

5. நாம் செய்த நீதிக்கிரியைகளைப் பற்றியல்லவே, தம்முடைய இரக்கத்தின்படியே, இஸ்பிரீத்துசாந்துவினால், நம்மை மறு ஜெனனமாக்கி, புதுப்பிக்கிற ஸ்நானத்தினாலே, நம்மை இரட்சித்து, (2 தீமோ. 1:9.)

6. அந்த இஸ்பிரீத்துவை நம்முடைய இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துநாதர் மூலமாய் நமதுமேல் ஏராளமாய்ப் பொழிந்து,

7. நமக்குள்ள நம்பிக்கைக்குத் தக்கபடி, தம்முடைய இஷ்டப்பிரசாதத்தினால், நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவியத்துக்குச் சுதந்தரவாளிகளாகும்படி செய்தார்.

8. இது சத்திய வாக்கு. சர்வேசுரனை விசுவசிக்கிறவர்கள் நற்கிரிகைகளில் கதித்தோங்கும்படி கவனிக்கத்தக்கதாக நீர் இவைகளைப்பற்றி ஸ்திரமாய்ப் போதிக்கவேண்டியது. இவைகள் மனுஷருக்கு நன்மையும் பிரயோஜனமுமானது.

9. ஆனால் புத்தியீனமான தர்க்கங்களையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், வேதப்பிரமாணத்துக்கடுத்த சடுத்தங்களையும் விலக்குவீராக. ஏனெனில் இவைகள் பிரயோஜனமற்ற வியர்த்த காரியங்கள். (1 தீமோ. 1:4.)

10. பதிதனாய் இருக்கிறவனை ஒருமுறை கண்டித்தபிறகு, அவனைவிட்டு விலகும்.

11. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன் சொந்தப் புத்தியால் அவல தீர்வையடைந்த பாவியானான் என்று அறிந்துகொள்ளும்.

12. நான் அர்த்தேமாவையாவது, தீக்கிக்கனையாவது உம்மிடத்தில் அனுப் பும்போது நீர் தாமதமின்றி நிக்காப் போலியில் என்னிடம் வந்து சேரும். அவ்விடத்தில் மழைகாலத்துக்குத் தங்கி யிருக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

13. நீதிசாஸ்திரியாகிய சேனாவுக்கும், அப்போலோவுக்கும் யாதொரு குறைவும் இராதபடி ஜாக்கிரதையாய் விசாரித்து அவர்களை முன்னனுப்புவீராக.

14. நம்முடைய சபையார் பயனற்றவர்களாய் இராமல் அவசியமான சமயங்களில் வேண்டிய தர்மக்கிரியைகளில் கதித்தோங்கக் கற்றுக்கொள்வார்களாக.

15. என்னுடனே இருக்கிற யாவரும் உமக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள். விசுவாசத்தில் எங்களைச் சிநேகிக்கிறவர்களுக்கு மங்களஞ் சொல்லும். தேவ இஷ்டப்பிரசாதம் உங்கள் எல்லாரோடும் இருப்பதாக. ஆமென்.


தீத்து நிருபம் முற்றிற்று.