இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். இயாகப்பர் எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 02

ஐசுவரியவான்களைச் சங்கித்து ஏழைகளைப் புறக்கணிப்பது தகாதென்றும், ஒரு கற்பனையை மீறுகிறவன் எல்லாக் கற்பனைகளுக்கும் குற்றவாளியாயிருக்கிறானென்றும், தர்மக் கிரியைகளில்லாத விசுவாசம் செத்த விசுவாசமென்றும் காட்டுகிறார்.

1. என் சகோதரரே, மகிமை பொ ருந்திய நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் மேலுள்ள விசுவா சத்தைப் பாரபட்சத்தோடு இணைக் காதேயுங்கள். (லேவி. 19:15; பழ. 24:23.)

* 1. பாரபட்சத்தோடு: விசுவாசத்துக்கு அடுத்தவைகளிலும், தேவதிரவிய அநுமானங்களிலும், இன்னம் சர்வேசுரனுடைய திருச்சபையிலுள்ள மற்ற ஞான ஊழியங்களிலும் மனுஷ முகப்பிரீதியென்பது ஒன்றுமில்லாமல், ஆஸ்திக்காரர் என்ற வித்தியாசமின்றி நடத்தவேண்டுமென்பது இதன் கருத்து.

2. ஏனெனில் பொன் மோதிரமும், மினுக்கான வஸ்திரமும் தரித்த ஒருவன் உங்கள் சபையில் பிரவேசிக்கும்போது, அழுக்குத் துணியையுடைய ஒரு தரித் திரனும் உள்ளே பிரவேசித்தால்,

3. நீங்கள் மினுக்கான வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இங்கே நன்றாய் உட்கார்ந்திரும் என்றும், பிற்பாடு தரித்திரனை நோக்கி: நீ அங்கே நில் அல்லது என் பாத அணையின்கீழ் உட்கார் என்றும் சொன்னால்,

4. நீங்கள் உங்களுக்குள் வித்தியாசமாய் வகையறுத்து, அநீத சிந்தனை யாயுள்ள நடுவர்களானீர்களல்லோ?

* 4. விசுவாசத்துக்கடுத்த காரியங்களிலே ஆஸ்திக்காரருடைய ஆத்துமங்களையும் தரித்திரருடைய ஆத்துமங்களையும் ஒரு கண்ட சீராய் எண்ணக்கடவோமொழிய வெளித் தோற்றத்தைப்பற்றி ஆஸ்திக்காரனுடைய ஆத்துமம் மேன்மையானதென்றும் தரித்திரனுடைய ஆத்துமம் தாழ்மையானதென்றும் எண்ணப்படாது. ஏனென்றால், சர்வேசுரன் மாத்திரம் அந்தந்த ஆத்துமத்தின் அந்தஸ்தை அறிந்திருக்கிறார். அவர் மாத்திரம் ஒரு ஆத்துமம் மேன்மையானதென்றும், ஒரு ஆத்துமம் தாழ்மையானதென்றும் தீர்க்கக்கூடும். ஆனால் வெளி ஆசாரத்துக்கடுத்த விஷயங்களாகிய மேலான அந்தஸ்தும் கீழான அந்தஸ்தும் உலகத்திலே எப்போதும் எங்கும் இருந்தது, இப்பொழுதும் இருக்கிறது. திருச்சபையிலும் இப்படிப்பட்ட அந்தஸ்து வித்தியாசம் இருப்பதவசியம். மேற்றிராணிமார் குருமார் முதலிய ஞான மேய்ப்பர்களுக்கும் மற்றும் கிறீஸ்துவர்களுக்குமுள்ள அந்தஸ்தின் வித்தியாசத்துக்குத் தக்கது பெரியவர்களைச் சிறியவர்கள் மதிக்கவும், கனம்பண்ணவுங்கடவார்கள். அப்படியே பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக என்று பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே துரைத்தனமுள்ளவர்களைக் கனம்பண்ணக்கடவோமென்று அர்ச். சின்னப்பர் உரோமர் 13-ம் அதி. 7-ம் வசனத்தில் சொல்லுகிறார். அப்படியே அர்ச். இராயப்பர் முதல் நிருபம் இரண்டாம் அதிகாரம் 17-ம் வசனத்தில் இராஜாவைக் கனம்பண்ணுங்கள் என்கிறார்.

5. என் மிகவும் பிரிய சகோதரரே, கேளுங்கள்: சர்வேசுரன் இவ்வுலகத்தில் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியராகவும், தம்மைச் சிநேகிக்கிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராச்சியத்துக்கு சுதந்திரராகவும் தெரிந்து கொள்ளவில்லையா?

6. நீங்களோ தரித்திரனைக் கன வீனம் பண்ணுகிறீர்கள். தங்கள் வல்ல மையினாலே உங்களை உபத்திரவப்படுத் துகிறவர்கள் ஐசுவரியவான்களல்லோ? அவர்களல்லோ உங்களை நியாயாசனங் களுக்கு முன்பாக இழுத்துக் கொண்டு போகிறவர்கள்! (1 கொரி. 11:12.)

7. உங்கள்மேல் உச்சரிக்கப்பட்ட நல்ல நாமத்தைத் தூஷணிக்கிறவர்கள் அவர்களல்லோ?

8. ஆகிலும், உன்னைப்போல் உன் பிறனையும் சிநேகிப்பாயாக என்று வேதப்பிரமாணத்தில் எழுதியிருக்கிற இராஜ கட்டளையை நீங்கள் நிறைவேற்றினால், நன்மையாமே. (மத். 22:39; லேவி. 19:18.)

9. ஆனால் நீங்கள் பாரபட்சம் பண் ணினால், பாவத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணத்தை மீறுகிறவர்களாக அதனாலே தீர்வையிடப்படுவீர்கள்.

10. ஒருவன் பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டும், ஒன்றிலே மாத்திரம் தவறுவானாகில், எல்லாக் கற்பனைகளுக்கும் குற்றவாளியாகிறான். (உபாக. 1:18; மத். 5:19.)

* 10. ஒரு கற்பனையை மீறுகிறவன் ஒருவிதத்தில் எல்லாக் கற்பனைகளையும் மீறுகிறான். ஏனெனில், கற்பனையைக் கொடுத்த கடவுளுக்கு விரோதமாய் ஒன்றில் மீறுகிறவன் அவருடைய மகத்துவத்தைப் புறக்கணிப்பதால், எல்லாவற்றிலும் அவரைப் புறக்கணித்ததற்குச் சரியாகும். மேலும் எல்லாக் கற்பனைகளுக்கும் ஆதாரமாகிய சிநேகத்தை ஒன்றில் மீறுகிறவன் மற்றொன்றிலும் அந்த சிநேகத்தை மீறுவதற்குச் சரி.

11. அதெப்படியென்றால்: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர், கொலைசெய்யாதிருப் பாயாக என்றும் சொல்லிருக்கிறார். ஆகையால் நீ விபசாரம் செய்யாதிருந்தும், கொலைசெய்தால், பிரமாணத் தை மீறுகிறவனானாய். (யாத். 20:13.)

12. சுயாதீனத்துக்குரிய பிரமாணத் தால் நடுத்தீர்க்கப்படப்போகிறவர் கள் போல், நீங்கள் பேசவும் வேண்டும், செய்யவும் வேண்டும். (இயா. 1:25.)

* 12. சுயாதீனத்தின் பிரமாணம் அல்லது முந்தின அதிகாரம் 25-ம் வசனத்தில் சொல்லியதுபோல சுயாதீனம் தரும் பிரமாணம் என்பது சுவிசேஷப் பிரமாணமாமே. ஏனெனில் மோயீசனுடைய பிரமாணமல்ல, சுவிசேஷப்பிரமாணமே நம்மைப் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்டு, தெய்வபுத்திரருக்குரிய சுயாதீனத்தை நமக்குப் பெறுவிக்கின்றது.

13. ஏனெனில் இரக்கஞ்செய்யாதவ னுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும். இரக்கமோ நியாயத் தீர்ப்புக்கு மேற்கொண்டுபோகிறது.

14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதிருந்தால், அவனுக் குப் பிரயோஜனம் என்ன? விசுவாசம் அவனை இரட்சிக்கக்கூடுமோ?

15. அதெப்படியென்றால்: ஒரு சகோ தரனாவது சகோதரியாவது வஸ்திர மில்லாமலும், அநுதின ஆகாரமில்லா மலும் இருக்கும்போது, (1 அரு. 3:17.)

16. உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: சமாதானத்தோடே போங்கள்; குளிர்காய்ந்து, பசியாறுங்கள் என்று சொல்லி, சரீரத்துக்கு வேண்டியவை களை அவர்களுக்குக் கொடாதிருந் தால், பிரயோஜனம் என்ன?

17. அப்படிப்போல விசுவாசமும் கிரியைகளைக் கொண்டிராவிட்டால், தன் னிலே செத்த விசுவாசமாயிருக்கின்றது.

18. ஒருவன் உன்னைப் பார்த்து: உனக்கு விசுவாசம் உண்டு, எனக்குக் கிரி யைகள் உண்டு. கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியை களால் உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லலாமே.

19. ஒரே சர்வேசுரன் உண்டென்று விசுவசிக்கிறாய், நல்லதுதான். பசாசுக ளும் விசுவசித்து நடுநடுங்குகிறதல்லோ.

20. ஓ வீண் மனிதனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறதென்று அறியவேண்டாமோ?

21. நம்முடைய பிதாவாகிய அபிரகாம் பீடத்தின்மேல் தன் குமாரனைப் பலியிடுகையில், கிரியைகளினாலல்லோ நீதிமானாக்கப்பட்டார். (ஆதி. 22:9.)

22. விசுவாசமானது அவருடைய கிரியைகளோடு உடந்தையாய் முயற்சி செய்ததென்றும் கிரியைகளினாலே விசுவாசம் சம்பூரணமானதென்றும் காண்கிறாயல்லோ?

23. அப்படியே அபிரகாம் சர்வேசுரனை விசுவசித்தார், அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டதென்றும், சர்வேசுரனுடைய சிநேகிதனாக அழைக் கப்பட்டாரென்றும் சொல்லப்பட்ட வேதவாக்கியம் நிறைவேறிற்று. (ஆதி. 15:6; உரோ. 4:3; கலாத். 3:6.)

24. ஆதலால் மனுஷன் கிரியைகளினாலேயன்றி, விசுவாசத்தினாலே மாத்திரம் நீதிமானாவதில்லை யென்று காண்கிறீர்களே. (அரு. 8:39: உரோ. 4:12.)

25. அந்தப்பிரகாரமாய் ராஹாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக் கொண்டு வேறு வழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலல்லோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள். (ஜோசு. 2:4; எபி. 11:31.)

26. அப்படியே ஆவியற்ற சரீரம் செத் ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கின்றது.

* 14-26. இந்த வசனங்களில் அப்போஸ்தலர் நற்கிரியைகளோடு சேர்ந்திராத விசுவாசம் செத்த விசுவாமென்றும், ஞானப்பலனற்றதென்றும் பிரயோசனமில்லாததென்றும் காட்டுகிறார். ஆனால் அர்ச். இயாகப்பர் இங்கே சொல்வதற்கும், அர்ச். சின்னப்பர் உரோமானருக்கு எழுதிய நிருபத்தில் 3-ம், 4-ம் அதிகாரங்களில் சொல்வதற்கும் விரோதமில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் போதகத்துக்குத் தக்கது ஒன்றைமுன்னிட்டுப் பேசுகிறதால் வேறொன்றை மறுதலிக்கிறதில்லை. பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப்பட்ட சடங்குகளினால் மாத்திரம் நீதியை அடையலாமென்று எண்ணியிருந்தவர்களுடைய தப்பிதத்தை மறுதலிக்க அர்ச். சின்னப்பர் அந்தச் சடங்கு கிரியைகளினால் ஒன்றும் ஆகிறதில்லையென்றும், விசுவாசமே ஒருவனை நீதிமானாக்குகிறதென்றும் காட்டுகிறார். அர்ச். இயாகப்பரோ: விசுவசித்தால் போதும், வேத கற்பனைகளை மீறுவதினால் ஒன்றுமில்லை என்ற தப்பான எண்ணத்தை மறுத்து, நற்கிரியைகளோடு கூடியிராத வெறும் விசுவாசம் ஒன்றுக்கும் உதவாதென்று காட்டுகிறார்.