இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தீத்துவுக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 02

அந்தந்த அந்தஸ்திலே உள்ளவர்களுக்குச் சொல்லத்தக்க புத்திமதிகளைக் காண்பிக்கிறார்.

1. நீரோ, குணமான உபதேசத்துக் கேற்றவைகளைப் பேசும்.

2. வயதுசென்றவர்கள் மன அடக்க முள்ளவர்களும், கற்புடையவர்களும், விவேகமுடையவர்களும், விசுவாசத் திலும், அன்பிலும், பொறுமையிலும் குணமுடையவர்களுமாய் இருக்கும்படி புத்திசொல்லும்.

3. அப்படியே வயதுசென்ற ஸ்திரீ கள் பரிசுத்தமான மேரை மரியாதை யுள்ளவர்களும், அவதூறு பேசாத வர்களும், மதுபானத்துக்கு அடிமைப் படாதவர்களும், நற்புத்தி சொல்லுகிறவர்களுமாயிருந்து,

4. மங்கையருக்கு விவேகத்தைப் படிப்பிக்கவும், இவர்கள் தங்கள் புருஷர்மேல் அன்புவைத்து, பிள்ளைகளைச் சிநேகிக்கவும்,

5. தேவ வாக்கியம் தூஷணிக்கப்படாதபடி, இவர்கள் ஜாக்கிரதை யுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், இச்சையடக்க முள்ளவர்களும், தங்கள் வீட்டை நன்றாய் விசாரிக்கிறவர்களும், சாதுள்ளவர்களும், தங்கள் புருஷருக்குப் பணிந்து நடக்கிறவர் களுமாய் இருக்கும்படி இவர்களைப் படிப்பிக்கவும் வேண்டுமென்று அவர்களுக்குக் கற்பியும்.

6. அப்படியே வாலிபர்கள் மன அடக்கமுள்ளவர்களாய் இருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லும்.

7. சகல காரியத்திலும் நற்கிரியைகளுக்கு உம்மையே மாதிரியாகக் காண்பிக்கவேண்டும். போதகத்திலும் பழுதற்ற நடத்தையிலும், கண்ணியத்திலும் (மாதிரியாயிரும்.)

8. எதிரியாயிருக்கிறவன் பொல்லாங்கு சொல்வதற்கு இடமில்லாமல், வெட்கிப்போகும்படிக்கு நீர் குறைவராததும், பழுதற்றதுமான உபதேசத்தைப் போதியும்.

9. அடிமைகள் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கவும், எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்குப் பிரியப்படவும், அவர்களுடன் எதிர்த் துப் பேசாமலும், (எபே. 6:5.)

10. திருடாமலும், சகலத்திலும் தங்களைப் பூரண பிரமாணிக்கமுள்ளவர்களாய்க் காண்பிக்கவும், இவ்விதமாய் அவர்கள் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய உபதேசத்தை எவ்விதத்திலும் அலங்கரிக்கும்படி புத்திசொல்லும். (எபே. 6:5; கொலோ. 3:22; 1 இரா. 2:18.)

11. ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)

12. நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

13. நமது நம்பிக்கைக்கு விஷயமாகிய ஆனந்த பாக்கியத்துக்கும், உந்நத கடவுளும், நமது இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்துவின் மகிமைப்பிரதாப ஆகமனத்துக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவும் நமக்குப் படிப்பிக்கிறது.

14. இவரே நம்மைச் சகல அக்கிரமங்களிலும் நின்று இரட்சித்து, நம்மைச் சுத்தமாக்கி, தமக்கு உகந்தவர்களும், நற்கிரியைகளில் வைராக்கி யருமான ஜனமாக்கிக்கொள்ளும் படி தம்மைத்தாமே நமக்காகக் கை யளித்தார்.

15. சர்வ அதிகாரத்தோடும் நீர் இவைகளைப் போதித்து, புத்திசொல்லிக் கண்டித்து வருவீராக. உம்மை எவனும் புறக்கணியாதிருப்பானாக.