சம்மனசுக்களாலே கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கற்பனைகளைப் பார்க்கிலும் தேவசுதனாலே கொடுக்கப்பட்ட கற்பனைகளை எவ்வளவோ அதிக பயபக்தியோடே அனுசரிக்கவேண்டியதென்று காண்பிக்கிறார்.
1. ஆதலால் நாம் கேட்டவைகளைச் சிதறவிடாமல், அவைகளை மிகுந்த எச்சரிக்கையோடு காத்துவரவேண்டும்.
2. ஏனெனில் தேவதூதர்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட கற்பனை ஸ்திரப்படுத்தப்பட்டு, அதற்கு விரோதமான எந்த மீறுதலுக்கும், கீழ்ப்படியாமைக்கும் நீதியின்படி செல்லவேண்டிய பிரதிபலன் கிடைத்திருக்குமாகில்,
3. இவ்வளவு பெரிதான இரட்சணியத்தை நாம் அசட்டைபண்ணுவோமானால், நாம் எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்? இந்த இரட்சணிய காரியம் முந்த முந்த ஆண்டவரால் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டறிந்தவர்களால் நமக்குள் உறுதி யாக்கபட்டது.
4. இதற்குச் சர்வேசுரனும் புதுமைகளாலும், அற்புதங்களாலும், பற்பல வல்லப கிரியைகளாலும், தமது சித்தத் தின்படியே பகிர்ந்தளித்த இஸ்பிரீத்து சாந்துவின் வரங்களாலும் சாட்சி கொடுத் திருக்கிறார். (மாற். 16:20; அப். 14:3.))
5. இனி வரப்போகிற உலகத்தைக் குறித்துப் பேசுகிறோமே. அதைச் சர்வேசுரன் தம்முடைய தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
* 5. இதிலே சொல்லப்படுகிறதும் இனி வருவதுமான உலகமானது இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் நீடித்திருக்கவேண்டிய சத்திய திருச்சபையாமே. அதற்குத் தேவதூதர் களையல்ல, தம்முடைய சுதனாகிய சேசுநாதரைத்தாமே தலைவராகவும், அரசனாகவும், மகா ஆசாரியனாகவும் பிதாவாகிய சர்வேசுரன் ஏற்படுத்தினாரென்று அர்த்தமாம்.
6. இன்னும் (வேதாகமத்தில்) ஓரிடத்தில்: மனிதனை நீர் நினைவுகூருகிறதற்கு அவன் என்ன? மனுமகனை நீர் சந்திக்கிறதற்கும் அவன் என்ன? (சங். 8:4.)
7. அவனைத் தேவதூதரிலும் கொஞ்சம் சிறியவனாக்கி, மகிமையினாலும் பெருமையினாலும் அவனுக்கு முடி சூட்டி, உமது கைவேலைப்பாடுகளின் மேல் அவனை அதிகாரியாக்கி,
8. எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று ஒருவர் சாட்சி சொல்லியிருக்கிறார். சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்றால், அவனுக்குக் கீழ்ப்படாத பொருள் ஒன்றுமில்லையே. ஆகிலும் இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக்காணோமே. (மத். 28:18; 1 கொரி. 15:26.)
* 8. பரலோகத்திலும் பூலோகத்திலும் வாழ்ந்திருக்கவேண்டிய சத்திய திருச்சபைக்கு இராஜாவாகப் பிதாவாகிய சர்வேசுரனாலே ஏற்படுத்தப்பட்ட சுதனாகிய சர்வேசுரன் மனுஷாவதாரம் எடுக்கும்போதும் விசேஷமாய்ப் பாடுபட்டு மரிக்கும்போதும், சம்மனசுக்களிலும் தாழ்த்தப்பட்டாரென்பது மெய்யே. ஆனால் பிதாவாகிய சர்வேசுரன் சகலத்தையும் தம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதருக்குக் கீழ்ப்படுத்தினாரென்பது குன்றாத சத்தியமாமே. ஆகிலும் இன்னும் அவருக்குக் கீழ் அடங்காத அநேக பாவிகளும், அஞ்ஞானிகளும், அவிசுவாசிகளும் இவ்வுலகத்தில் இருக்கிறார்கள். அப்படியே பொதுத் தீர்வை நாள்மட்டும் அநேகர் இருப்பார்கள். பொதுத்தீர்வைக்குப் பிறகோவென்றால் அவருக்குக் கீழ் அடங்காதது ஒன்றுமில்லையென்று காண்போம்.
9. சர்வேசுரனுடைய கிருபையினாலே எல்லாருக்காகவும் மரணத்தைச் சுவைபார்க்கும்படி தேவதூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட அந்த சேசுநாதர் தம்முடைய மரண உபத்திரவத்தின் நிமித்தம் மகிமையினாலும் பெருமையினாலும் முடிசூட்டப்பட்டவரென்று காண்கிறோம். (பிலிப். 2:8.)
10. ஏனெனில் தமக்காகவும், தம்மாலேயும் சகலத்தையும் படைத்தவர் அநேகம் புத்திரர்களை மகிமைக்கு அழைத்திருந்ததினாலே, அவர்களு டைய இரட்சணியத்துக்குக் காரண மானவரைப் பாடுகளால் பூரணமாக்குவது அவருக்குத் தகுதியாயிருந்தது.
11. ஏனெனில் பரிசுத்தமாக்குகிறவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களுமாகிய எல்லோரும் ஒருவரிடத்தில் இருந்தே வருகிறார்கள். இது காரணத்தின் நிமித்தம் அவர்களைச் சகோதரர் என்று அழைக்க அவர் கூச்சப்படாமல்:
12. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்குப் பிரசங்கிப்பேன்; சபை நடுவில் உம்மை ஸ்துதிப்பேன் என்றும், (சங். 21:22.)
* 12. எல்லாவற்றிற்கும் காரணமாகி, எல்லாவற்றையும் தம்முடைய தோத்திரத்துக்காகச் செய்கிற சர்வேசுரன் தம்முடைய திருச்சுதனைக்கொண்டு சுவீகாரப் புத்திரர் அநேகரைத் தம்முடைய மோட்ச மகிமைக்கு அழைக்க அநவரதகாலமாய்த் தீர்மானித்திருக்கையிலே, அவர்களுடைய இரட்சண்யத்தின் காரணமானவரைப் பாடுகளைக்கொண்டும், மரணத்தைக்கொண்டும், மகிமையில் உயர்த்த நியாயமாய்த் தீர்மானித்தார். ஏனெனில் திருச்சபையைப் பரிசுத்தமாக்குகிற குருவும், அவராலே பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே சுபாவமுள்ளவர்களாயிருக்கத்தகும். ஆதலால் சுதனாகிய சர்வேசுரன் நம்முடைய பிரதான குருப்பிரசாதியாயிருக்கச் சித்தமானபோது நம்மைப் போல பாடுகளுக்கும் கஸ்தி துன்பங்களுக்கும் மரணத்துக்கும் ஏதுவான சுபாவத்தைத் தரித்துக்கொள்ளுவது தகுதியாயிருந்தது.
13. மறுபடியும்: நான் அவர்மேல் என் நம்பிக்கையை வைப்பேன் என்றும்; மீளவும், இதோ நானும் எனக்குச் சர்வேசுரன் கொடுத்த என் பிள்ளைகளும் என்றும் வசனித்திருக்கிறார். (சங். 17:2; இசை. 8:18; 2 அரச. 22:3.)
14. ஆகையால், பிள்ளைகள் மாம்சமும், இரத்தமும் உடையவர்களாயிருப்பதால், அவரும் அவர்களைப் போலவே மாம்சத்துக்கும் இரத்தத்துக்கும் பங்காளியானார். ஏனெனில் மரண அதிபதியாகிய பசாசைத் தமது மரணத்தால் நிர்மூலமாக்கி, (ஓசே. 13:14; 1 கொரி. 15:54.)
15. மரணபயத்தினாலே ஜீவியகால மெல்லாம் அடிமைத்தனத்துக்கு உள்ளாயிருந்தவர்களை மீட்டிரட்சிக்கச் சித்தமானார்.
16. ஏனென்றால் அவர் தேவதூதர்களுக்கு உதவியாக ஒருபோதும் கை கொடாமல், அபிரகாமின் சந்ததியாருக்கு (உதவியாகக்) கைக்கொடுத்துத் தூக்கினார்.
* 14-15-16. சேசுநாதர்சுவாமி சம்மனசுக்களை இரட்சிக்க வராமல், மனிதர்களை இரட்சிக்க வந்ததால் மனுஷ சுபாவமெடுத்து, பாவமில்லாத சகலத்திலும் மனுஷரோடு சமானமாயிருப்பது தகுதியாயிருந்ததென்று காட்டுகிறார்.
17. ஆதலால் அவர் இரக்கமுள்ளவரும், சர்வேசுரன்மட்டில் பிரமாணிக்கமான குருப்பிரசாதியுமாயிருந்து, ஜனங்களுடைய பாவங்களைப் பரிகரிக் கும்படிக்குச் சகலத்திலும் தம்முடைய சகோதரர்களுக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது.
18. ஏனெனில் அவரே பாடுபட்டுச் சோதிக்கப்பட்டிருக்கிற படியினாலே, சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.