இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 02

மோயீசனின் பிறப்பும் வளர்ப்பும் - மதியான் தேசத்திற்கு ஓடிப் போனதும் - விவாகம் பண்ணினதும்.

1. அதின் பிறகு லேவி கோத்திரத்து மனிதனொருவன் வந்து தனது வம்சத்துப் பெண்ணைக் கொண்டான்.

* 1-ம் வசனம். அம்மனிதன் யாரென்றால், லேவி என்பவனுக்குப் பேரனாகிய காகாதின் புத்திரன் ஆமிரமென்பவன். இவனே மோயீசனைப் பெற்ற தந்தை: அவனுடைய மனைவியின் பெயர், ஜோக்கபேட் (6:20-ம் வசனம்.)

2. இவள் கற்பங்கொண்டு ஒரு மகனைப் பெற்றாள். அவனை வடிவுள்ளவனென்று கண்டு அவனை மூன்று மாதமாய் ஒளித்து வைத்தாள்.

* 2-ம் வசனம். இந்தப் புத்திரனே மகா தீர்க்கத்தரிசியாகவும் தேவ பிரஜையை இரட்சிப்பவனாகவும் பிரமாண நீதிநூலோனாகவும் சர்வேசுரனாலே தெரிந்துகொள்ளப்பட்டவனாகையால், அவன் பிறந்து ஒளிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்ட வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இஸ்றாயேலை மீட்டிரட்சித்த அந்த மோயீசனுக்கும், மனுக்குலத்தை இரட்சிக்கவந்த சேசுநாதருக்கும், மோயீசனுடைய கோத்திரத்தாராகிய எபிறேயர்களைத் துன்பப்படுத்திய பரவோனுக்கும், சேசுகிறீஸ்துநாதரைக் கொலைசெய்யப் பார்த்த ஏரோதரசனுக்கும் வெகு விசேஷமான ஒப்பந்தமுண்டு. (மத். 2-ம் அதிகாரத்தையும், அப். 7-ம் அதி. 20,35-ம் வசனங்களுக்கடுத்த உரைகளையும் காண்க.)

3. பிறகு குழந்தையை ஒளிக்கக் கூடாமையினால், அவள் ஒரு நாணற்பெட்டியை எடுத்து அதைக் கிசிலாலும் பிசினாலும் பூசி, அதிலே குழந்தையை வளர்த்தி அவனை ஆற்றங்கரை கோரைக்குள்ளே போட்டு விட்டனள்.

4. பிள்ளையின் தமக்கையோ என்ன சம்பவிக்குமென தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

5. அப்பொழுது அதோ பரவோனுடைய குமாரத்தியானவள் ஆற்றிலே ஸ்நானம்பண்ண வந்து இறங்கினாள். அவளுடைய தாதிகள் அலையாலடிபட்ட கரையோரத்தில் நடந்து கொண்டிருந்தார்கள்; அவள் கோரைகளுக்குள் பெட்டியைக் கண்டு, தன் தாதிகளில் ஒருத்தியை அனுப்பி அதைக் கொண்டுவரச் செய்தனள்.

6. அதைத் திறந்தபோது, அதில் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தையை நோக்கினவுடன் அதின்மீது இரக்கங்கொண்டவளாய்: எபிறேயருடைய குழவிகளில் இஃது ஒன்றாக்கும் என்றாள்.

7. அந்நேரத்திலே பாலகனின் தமக்கை அவளைப் பார்த்து: குழந்தைக்குப் பாலூட்டும்படியான எபிறேய ஸ்திரீகளில் ஒருத்தியை நான் போய் உம்மிடம் அழைத்துக் கொண்டு வரட்டுமா என,

8. அவள்: ஆம். அழைத்து வா என்று பதில் கூறச், சிறு பெண் போய்த் தன்னுடைய தாயை அழைத்துவந்தாள்.

9. பரவோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இப்பாலனைக் கைக்கொண்டு எனக்காக வளர்த்திடுவாய். நான் உனக்குச் சம்பளங் கொடுக்கிறேன் என்று வாக்கிட்டனள். ஸ்திரீ பாலனை ஏற்றுக்கொண்டு வளர்த்தாள். பிறகு பிள்ளை பெரிதானபோது அதைப் பரவோனுடைய குமாரத்தியிடம் கொண்டுபோய் விட்டாள்.

10. இவளோ அவனைச் சொந்தப் பிள்ளையாகச் சுவீகரித்துக்கொண்டு: அவனை நான் ஜலத்தில் நின்றெடுத்தேன் என, அவனுக்கு மோயீசன் என்று பெயரிட்டாள்.

11. மோயீசன் பெரியவனான காலத்தில் அவன் தன் சகோதரரிடத்திற் போய், அவர்கள் படுங் கஷ்டத்தை அனுபவிக்கிறதையும், எபிறேயராகிய தன் சகோதரரில் ஒருவனை ஒரு எஜிப்த்தியன் அடிக்கிறதையும் கண்டான்.

* 11-ம் வசனம். இந்த வார்த்தைக்கு வியாக்கியானமாகிய எபிறே. 11:24,27 வசனங்களை வாசித்துப் பார்க்கிறது தகுதியாம். மோயீசன் தன் சகோதரர் படும் கஷ்டத்தையும் கொடுமையான உபத்திரவங்களையும் கண்டு சகிக்கமாட்டாமல், ஒன்றில் அவர்களை இரட்சிக்க வேண்டுமென்றும், அல்லது அவர்களோடே சாகவேணுமென்றுந் தீர்மானித்து, அரசனுடைய மாளிகையின் சுகத்தையும் பிரதாபத்தையும் வெறுத்துவிட்டான்.

12. அவன் இங்குமங்கும் சுற்றிப் பார்த்து, நிற்பாரொருவருமில்லையென்று அறிந்து, எஜிப்த்தியனை வெட்டி அவனை மணலிற் புதைத்துப்போட்டான்.

* 12-ம் வசனம். மோயீசன் தனது ஜனத்தை எஜிப்த்தினின்று வெளிப்படுத்தவுந் தேவப் பிரமாணத்தின்படி நடத்தவும் தேவனால் அதிகாரம் பெற்றுக்கொண்டவனாகையால், அக்கிரமஞ் செய்த அந்த எஜிப்த்தியனை வெட்டிக் கொன்றுபோட்டான். அவன் அக்காலத்திலே தன் ஜனத்தில் நடுவனாக நின்று நீதி செலுத்திவர ஆரம்பித்திருந்தான். (13-ம் வசனம்.)

13. அவன் மறுநாளிலும் வெளியே போகையில், இரண்டு எபிறேய மனுஷர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் பிறனை அடிப்பதென்ன என்று கேட்டான்.

14. அதற்கவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நேற்றையதினம் நீ எஜிப்த்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ? என்று மறுவுத்தாரஞ் சொல்லக் கேட்டு, மோயீசன் அச்செய்தி எவ்வாறு பிரசித்தமாயிற்று என்று பயங்கொண்டான்.

* 14-ம் வசனம். அவன் பயந்தோடிப்போயிருந்தும், தேவசித்தத்தால் அவனுக்குச் சகலமும் அனுகூலமாயிற்றென்று பின்வரும் வசனங்களைக் கொண்டு கண்டுகொள்ளலாம். (15-ம் வச.), (ஆதி. 25:2).

15. பரவோனும் இவ்வர்த்தமானத்தைக் கேட்டறியவே மோயீசனைக் கொலை செய்ய வழிதேடினான். இவனோ அவன் சந்நிதியினின்று ஓடிப்போய், மதியான் நாட்டிலே தங்கிக்கொண்டு ஒரு கிணற்றண்டையில் உட்கார்ந்தான்.

16. மதியான் தேசத்து ஆசாரியனுக்கோ ஏழு குமாரத்திகள் இருந்தனர். அவர்கள் ஜலத்தை மொள்ள வந்து தொட்டிகளை நிரப்பித் தங்கள் தகப்பனுடைய மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டவிருக்கையில்,

* 16-ம் வசனம். அந்த ஜெத்திரோ என்பவன் மதியான் நாட்டிலே குருவும் அரசனுமாயிருந்து, ஜோப், மெல்கிசெதேக் என்பவர்களைப் போலவும், பிதாப்பிதாக்களைப் போலவும் ஒன்றான சத்திய கடவுளைத் தொழுது ஆராதித்து வந்தவன்.

17. ஆயர்கள் சடுதியில் வந்து அவர்களைத் துரத்தினார்கள். மோயீசனோ எழுந்திருந்து பெண்களுக்குத் துணை நின்று அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

18. அவர்கள் தங்கள் தந்தையாகிய இராகு வேலிடத்தில் திரும்பி வந்தபோது அவன்: நீங்கள் இன்று அத்தனைச் சீக்கிரமாய் வந்ததென்ன என்று கேட்க,

19. அவர்கள்: எஜிப்த்தியனான ஒரு புருஷன் எங்களை ஆயர்கள் கையினின்று தப்புவித்தான். அன்றியும் அவன் எங்களுடன் தண்ணீர் மொண்டு எங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.

20. அதற்கு அவன்: எங்கேயிருக்கிறான்? அம்மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? அவனை அப்பம் புசிக்கும்படி அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்.

21. மோயீசன் வந்து அவனிடத்தில் வசித்திருப்பதாகச் சபதம் கூறினான். பின்னும் அவனுடைய குமாரத்தியாகிய செப்பொறாளை விவாகம் பண்ணினான்.

22. இவள் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். நான் அன்னிய நாட்டில் பரதேசியாயிருக்கிறேன் என்று சொல்லி மோயீசன் அவனை ஜேற்சமென்றழைத்தான். பிறகு அவள் மற்றொரு குமாரனைப் பெற்றிருக்க, அவன்: மெய்யாகவே என் பிதாவின் தேவன் எனக்கு உதவி புரிந்து என்னைப் பரவோன் கையினின்று தப்புவித்தார் என்று சொல்லி அவனுக்கு எலியேசேர் என்று பேரிட்டான்.

* 21,22-ம் வசனம். செப்பொறாள் என்பது பட்சியெனவும், ஜெற்சாம் என்பது பரதேசி எனவும், எலியேசெர் என்பது தேவசகாயமெனவும் பொருட்படும். மோயீசன் என்ற பெயருக்கோ (ஜலத்தினின்று) எடுபட்டவன் என்றர்த்தமாம்.

23. நெடுங்காலஞ் சென்ற பின்போ வெனில், எஜிப்த்து இராயன் இறந்திருக்க இஸ்றாயேல் புத்திரர் வேலைகளினிமித்தம் துயரப்பட்டுப் பெருங் கூக்குரலிடவே, அவர்கள் முறையிடுஞ் சத்தமானது வேலை ஸ்தலத்திலே நின்று தேவசந்நதிக்கு எழும்பியது.

* 23-ம் வசனம். இந்த இராயன் மோயீசனை மீட்டு வளர்த்த இராஜகுமாரத்தியுடைய தகப்பனல்ல; இவளுடைய தகப்பன் பேர் தேர்முத்திம் பரவோன்.

24. தேவன் அவர்களுடைய புலம்பலைக் கேட்டுத் தாம் அபிரகாம், இசாக், யாக்கோபு என்பவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை ஞாபகப்பட்டார்.

25. பிறகு கர்த்தர் இஸ்றாயேல் புத்திரரைக் கண்ணோக்கி அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

* 24, 25-ம் வசனம். இதன் முன் கடவுள் தமது பிரஜையை மறந்தாரென்று நினைக்க வேண்டாம்; அவர் எந்நேரமும் அவர்கள் மட்டில் கண்ணுண்டாயிருந்து காப்பாற்றச் சித்தமாயிருந்து, இந்தச் சமயத்திலே அவர்களைக் கொடுஞ் சிறையினின்று இரட்சிக்கவும், அவர்களை வாக்குத்தத்தத்தின் பூமிக்குக் கொண்டுபோகவும் ஏற்பாடு செய்தார்.