இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 01

சம்மனசுக்களிலும் சேசுக்கிறீஸ்துநாதர் மிகவும் மேன்மைப்பட்டவர் என்று பற்பல வேத அத்தாட்சிகளால் ஒப்பிக்கிறார்.

1. பூர்வீகத்தில் பலமுறைகளிலும், பலவிதமாகவும் தீர்க்கதரிசிகளைக் கொண்டு நம்முடைய பிதாக்களோடு பேசின சர்வேசுரன்,

2. கடைசியாய் இந்நாட்களில் தம்முடைய சுதனைக்கொண்டு நம்மோடு பேசியிருக்கிறார். இவரைக்கொண்டே சர்வலோகங்களையும் சிருஷ்டித்து, அவைகளெல்லாவற்றிற்கும் இவரைச் சுதந்தரவாளியாக்கினார்.

* 2. கடைசியாய்: - வரிசைக்கிரமத்தில் கடைசியான காலமென்றும், இதற்குமேல் இனிச் சர்வேசுரன் வேறு வேதத்தை அறிவிக்கமாட்டாராகையால் இது கடைசியான வெளிப்படுத்துதல் என்றும் கருத்தாம்.

* எபிரேயர்: - யூதேயா தேசத்தில் குடியிருந்து, கிறீஸ்து வேதத்தில் உட்பட்ட யூத ஜனங்கள்.

3. இவர் அவருடைய மகிமையின் பிரதாபமும் அவருடைய தற்பொருளின் சொரூபமாய் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லப வார்த்தையால் தாங்கி, நம்மைப் பாவங்களினின்று சுத்திகரித்து, உன்னத ஸ்தலங்களில் அவருடைய மகத்துவ வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். (ஞானா. 7:26; மாற். 16:19.)

* 3. மகிமையின் பிரதாபம்: - முகக்கண்ணாடியில் ஒருவனுடைய சாயல் முழுவதும் பிரதிபிம்பமாய்த் தோன்றுவதுபோல, பிதாவாகிய சர்வேசுரனுடைய சாயல் முழுவதும் சுதனிடத்தில் தோன்றுகிறது. அவருடைய தற்பொருளின் சொரூபம்: - சுதனாகிய சர்வேசுரன் தேவ பிதாவின் சுயசாயலும், அவருடைய தற்பொருளின் சொரூபமுமாயிருக்கிறார். முத்திரைக்கோலிலுள்ள சகல விஷயங்களும் முத்திரையில் பதிவதுபோல, பிதாவினிடத்திலுள்ள சுபாவமும் இலட்சணங்களும் சுதனிடத்தில் பதிந்திருக்கின்றன.

4. இவர் தேவதூதர்களைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்களைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவராய் இருக்கிறார்.

5. ஏனெனில்: நீரே என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜெனிப் பித்தேன் என்றும், மீளவும்: நான் அவருக்குப் பிதாவாய் இருப்பேன்; அவர் எனக்குக் குமாரனாய் இருப்பார், என்றும் அவர் எக்காலத்திலாவது தூதர்களில் யாருக்காகிலுஞ் சொன்ன துண்டோ? (சங். 2:7; 2 அரச. 7:14.)

6. அன்றியும் தாம் முதல் ஜெனிப்பித்தவரைப் பூமண்டலத்தில் பிரவேசிக்கச் செய்தபோது: தேவதூதர்கள் அனைவரும் அவரை நமஸ்கரிப்பார்களாக என்றார். (சங். 96:8.)

7. தேவதூதர்களைக் குறித்தோவெனில்: அவர் தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தமது ஊழியரை அக்கினிச்சுவாலையாகவும் செய்கிறாரென்று சொல்லுகிறார். (சங்.103:4.)

8. ஆனால் தமது சுதனை நோக்கி: தேவனே, உம்முடைய பத்திராசனம் என்றென்றைக்கும் உள்ளது. உம்முடைய அரசின் செங்கோல் நீதிச்செங் கோலாயிருக்கின்றது. (சங். 44:7.)

9. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உம்முடைய தோழருக்குமேலாக உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்,

10. ஆண்டவரே, ஆதியில் நீரே பூமிக்கு அஸ்திவாரமிட்டீர்; பரமண்டலங்களும் உம்முடைய கைவேலையாமே. (சங். 101:26.)

11. அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைநிற்பீர். அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழசாய்ப்போம்.

12. ஆடையை மாற்றுவதுபோல் நீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளும் மாறுபட்டுப்போம். நீரோ ஒரே தன்மையாய் இருக்கிறவர். உம்முடைய வருஷங்கள் குறைவுபடாது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

13. அன்றியும் நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாகப் போடுமட்டும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திரும் என்று எக்காலத்திலாவது அவர் சம்மனசுக்களில் யாருக்காகிலும் சொன்ன துண்டோ? (சங். 109:1; 1 கொரி. 15:25; எபி. 10:13.)

14. இவர்களெல்லாரும் பணிவிடை செய்யும் அரூபிகளாயிருந்து, இரட் சணிய சுதந்தரத்தை அடைகிறவர் களுக்கு ஊழியஞ் செய்யும்படி அனுப்பப் பட்டவர்களல்லவா?

* 14. இந்த அதிகாரத்திலும் இந்த நிருபத்தின் மற்ற அதிகாரங்களிலும் சொல்லப் பட்ட தீர்க்கதரிசனங்கள் சேசுநாதரைக்குறித்து நேராய்ப் பேசாதேபோனாலும் அவருக்கு முன்னோடிகளாகவும் அவருடைய முன்சாயலாகவும் இருந்த சாலமோன், தாவீது, இஸ்ராயேலைப்பற்றி நேராய்ப்பேசி அவர்கள் மூலமாய் சேசுநாதரை மெய்யாகவே குறிக்கின்றன என்று அறியவும்.