இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். இயாகப்பர் எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 01

துன்பங்களின் பிரயோஜனம் ஏதென்ப தும் விசுவாசத்தோடு சர்வேசுரனைப் பிரார்த்திக்கவேண்டுமென்பதும், சர்வ நன்மைக்கும் சர்வேசுரன் காரணமாயிருப்பதல்லாதே பாவத்துக்கு அவர் காரணமல்லவென்பதும், சத்தியத்தைக் கேட்பது போதாமல் அதை அநுசரிக்கவேண்டு மென்பதும்.

1. சர்வேசுரனுக்கும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருக்கும் ஊழியனாகிய இயாகப்பன் சிதறிப் போயிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்க ளுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுவது: 

1. ஊழியனாகிய இயாகப்பன்:- பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரும், அப்போஸ்தலராகிய அர்ச். யூதாவுக்குச் சகோதரரும், ஜெருசலேம் பட்டணத்துக்கு முதல் மேற்றிராணியாருமான அர்ச். சின்ன யாகப்பர் இந்த நிருபத்தை கர்த்தர் அவதாரமாயின 61-ம் வருஷத்தில் எழுதினார். விசுவாசத்துக்கும் நன்னடக்கைக்கும் உரிய அநேக சுகிர்த புத்திமதிகள் இதில் அடங்கியிருக்கின்றன. (பன்னிரண்டு கோத்திரங்கள்) யூதர் மார்க்கத்திலிருந்து கிறீஸ்துவர்களாகி அஞ்ஞானிகள் நடுவில் வசித்து வந்தவர்கள்.

2. என் சகோதரரே, உங்களுக்குப் பற்பல சோதனைகள் நேரிட்டிருக்கும் போது, அது அவ்வளவும் சந்தோஷ மென்று எண்ணிக்கொள்ளுங்கள்.

* 2. சோதனைகள் :- இவ்விடத்திலும் இந்த நிருபத்தில் இன்னம் பல இடங்களிலும் சோதனை என்பது உபத்திரவம், கஸ்தி, துன்பங்கள் என்று அர்த்தங் கொள்ளும்.

3. ஏனெனில் உங்கள் விசுவாசத்தின் பரீட்சை பொறுமையைப் பெறுவிக்கிறதென்று அறிந்து கொள்ளுங்கள். (உரோ. 5:3.)

4. பொறுமையோ நீங்கள் யா தொன்றிலும் குறையுள்ளவர்களாயி ராமல், உத்தமரும் பூரணருமாய் இருக்கும்படி உத்தம கிரியையைப் பிறப்பிக்கின்றது.

5. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால், கடிந்து கொள்ளாமல் யாவருக்கும் ஏராளமாய்க் கொடுக்கிற சர்வேசுரனிடத்தில் கேட்கக்கடவான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். (மத். 7:7.)

6. ஆனால் அவன் சற்றுந் தத்தளியாமல், விசுவாசத்தோடு கேட்கக்கடவான்; ஏனெனில் தத்தளிக்கிறவன் காற் றினால் அடிபட்டு எப்பக்கத்திலும் கொண்டுபோகப்படுகிற கடல் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். (மாற். 11:24.)

7. அப்படிக்கொத்த மனுஷன் ஆண்டவரிடத்தில் ஏதாகிலும் பெற்றுக்கொள்ளலாமென்று எண்ணவேண்டியதில்லை.

8. இருமனமுள்ள மனிதன், தன் சகல வழிகளிலும் நிலையற்றவனாமே.

9. தாழ்மையிலிருக்கிற சகோதரன் தன் உயர்வை நினைத்து, மகிமை பாராட்டக்கடவான்.

10. ஐசுவரியவான் தன் தாழ்மையில் மகிமை பாராட்டக்கடவான். ஏனெனில் அவன் புல்லின் பூவைப் போல் ஒழிந்துபோவான். (சர்வப். 14:18; இசை. 40:6; 1 இரா. 1:24.)

11. எப்படியெனில் சூரியன் உக்கிரத்தோடே உதயமாகிப் புல்லை உலர்த் தவே, பூ உதிர்ந்து, அதன் அழகான வடி வும் அழிந்துபோயிற்று. அத்தன்மை போல் ஐசுவரியவானும் தன் வழிகளில் வாடுவான்.

* 10-11. தாழ்மை அல்லது எளிமையான அந்தஸ்திலிருக்கிற சகோதரன் அதாவது கிறீஸ்துவன் உலகத்தார் முன்பாகத் தாழ்ந்தவனாயிருந்தாலும் மெய்யாகவே சர்வேசுர னுடைய சமுகத்திலே மேன்மையுள்ளவனாயிருக்கிறதுந் தவிர, அப்படிப்பட்ட மேன்மை ஊழியுள்ளகாலமாய் அவனுக்கு நிலைநிற்குமென்பதினால், அவன் தன் மேன்மையிலே மகிமை பாராட்டுவது நியாயந்தான். ஐசுவரியவானோவெனில் உலகத்தார் முன்பாக மேன்மையுள்ளவனாய்த் தோன்றினாலும், அவனுடைய ஐசுவரியம் அவனிடத்தில் நிலைநில்லாமல் காலையில் மலர்ந்து சாயங்காலம் உலர்ந்துபோகிற பூவைப்போல் கொஞ்சத்துக்குள்ளே அவனைவிட்டுப் போகிறபடியினாலே மெய்யாகவே சர்வேசுர னுடைய சமுகத்தில் தரித்திரனாயிருக்கிறான். ஆகையால் அவன் புத்திமானாயிருப்பா னாகில், தற்காலம் தனக்குள்ள ஆஸ்திகளைப்பற்றி மேன்மைபாராட்டாமல், சர்வேசுரன் சமுகத்தில் தனக்குள்ள எளிமையைப்பற்றி மகிமை பாராட்டக்கடவான் என்றறியவும்.

12. சோதனையைச் சகிக்கிறவன் பாக் கியவான். ஏனெனில் அவன் பரீட்சிக்கப் பட்டபின், சர்வேசுரன் தம்மைச் சிநே கிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண் ணின ஜீவிய கிரீடத்தைப் பெற்றுக்கொள் ளுவான். (யோப். 5:17; 2 தீமோ. 4:8.)

13. எவனும் சோதிக்கப்படுகையில், சர்வேசுரனாலே நான் சோதிக்கப் படுகிறேனென்று சொல்லாதிருப்பா னாக. ஏனெனில் சர்வேசுரன் தின்மைக்குச் சோதிப்பவரல்ல. ஆகையால் அவர் எவனையும் சோதிக்கிறவரல்ல.

14. ஆனால் அவனவன் தன் சுய இச்சைகளால் இழுபட்டு, மருண்டு, சோதனைப்படுகிறான்.

15. பின்பு ஆசாபாசம் கர்ப்பந்தரித்துப் பாவத்தைப் பிறப்பிக்கும். பாவமோ முற்றினால், மரணத்தைப் பிறப்பிக்கின்றது. (உரோ. 6:23; 7:5.)

16. ஆதலால் என் மிகவும் பிரிய சகோதரரே, மோசம்போகாதேயுங்கள்.

17. உத்தமமான எந்தக் கொடையும், பூரணமான எந்த வரமும் ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்குவதால், மேலாவிலிருந்து வருகின்றது. அவரிடத்தில் யாதொரு வேற்றுமையும், விகற்பத்தின் நிழலுமில்லை. (மத். 7:11.)

18. தம்முடைய (ஞான) சிருஷ்டிப்புக்கு நாம் ஒரு ஆரம்பமாயிருக்கும் படி, அவர் தமது சித்தத்தின்படியே நம்மைச் சத்திய வாக்கியத்தால் ஜெனிப் பித்தார். (அரு. 1:13; 1 இரா. 1:23.)

19. எனக்கு மிகவும் பிரியமான சகோதரரே, இதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். எந்த மனிதனும் கேட்கிறதுக்குத் தீவிரமாயிருக்கக்கடவான்; பேசுகிறதற்கும் கோபிக்கிறதற்குமோ தாமதம் பண்ணக்கடவான். (பழ. 17;27.)

20 ஏனெனில் மனிதனுடைய கோபம் தேவ நீதியைப் பிறப்பிக்கமாட்டாது.

21. ஆகையால் எவ்வித அசுசியை யும், துர்க்குணப் பெருக்கத்தையும் அகற்றி விட்டு, உங்கள் உள்ளத்தில் ஒட்டப்பட்டதும் உங்கள் ஆத்துமங்களை இரட்சிக்கக்கூடியதுமான வாக்கியத்தைச் சிரவணத்தோடு கைக்கொள்ளுங்கள். (1 இரா. 2:1; கொலோ. 3:8.)

22. நீங்கள் வாக்கியப்படி செய்கிறவர்களாயிருங்கள். ஆனால் உங்களையே மோசம்போக்கி (வாக்கியத்தைக்) கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்க வேண்டாம். (மத். 7:21; உரோ. 2:13.)

23. ஏனெனில் ஒருவன் வாக்கியத்தைக்கேட்டு, அதன்படி செய்யாதிருந்தால், அவன் பார்வைக் கண்ணாடியிலே தன் முகச்சாயலை உற்றுப்பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்.

24. அதிலே அவன் தன்னை உற்றுப் பார்த்து, அப்பால் போகவே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிட்டான்.

25. சுயாதீனம் தரும் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, மறக்கிறவனாகாமல், அதிலே நிலைத்து, கிரியையைச் செய் கிறவன் எவனோ, அவனே செய்கையில் பாக்கியவானாயிருப்பான். (அரு. 13:17.)

26. யாதொருவன் தன் நாவை அடக்காமல், தன் மனதை மோசம் போக்கி, தன்னைப் பக்திமானென்று எண்ணுவானாகில், அப்படிப்பட்டவனுடைய பக்தி வியர்த்தமானது.

27. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய சமுகத்தில் பரிசுத்தமும் மாசற்றதுமான தேவபக்தி ஏதெனில், அநாதைப்பிள்ளைகளையும், விதவை களையும் அவர்களுடைய துன்பத்தில் சந்திக்கிறதும், இப்பிரபஞ்சத்தினின்று தன்னை மாசற்றவனாய்க் காப்பாற்று கிறதும் என்க.

* 14-15. இதிலே அர்ச். இயாகப்பர் இருவகைச் சோதனைகளைப்பற்றிப் பேசுகிறார். அதன் முதலாவது: கஸ்தி, துன்பம், வியாதி, தரித்திரம் முதலிய பாவத்துக்குச் சம்பந்தப்படாததும், ஆத்துமத்துக்குப் புறத்திப்பட்டதுமான சோதனைகள். அப்படிப் பட்ட சோதனைகளைச் சர்வேசுரன்தான் அனுப்புகிறார். ஆகையால் நல்ல கிறீஸ்துவன் அவைகளெல்லாம் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட சோதனைகளென்று அறிந்து, சர்வேசுரனுடைய சித்தத்துக்கு இணங்கி, அவைகளைப் பொறுமையோடு சகித்துக் கொள்வதினால் பாக்கியவானாவான். ஏனென்றால் நாம் பொறுமையோடு சகித்துக் கொள்ளுகிற அப்படிப்பட்ட சோதனைகள் பாவத்துக்கு உத்தரிப்பாக ஆத்துமத்தைச் சுத்திகரிக்கவும், புண்ணிய பலன்களைப் பெறுவிக்கவும் உதவுவதுமன்றி, அவைகளுக்குச் சம்பாவனையாக மோட்சத்தில் நித்திய ஜீவிய முடியைப் பெறுவதற்குங் காரணமா யிருக்கின்றன. எல்லா அர்ச்சியசிஷ்டவர்களும் இப்படிப்பட்ட சோதனைகளால் பரீட்சிக்கப்படுவதுந்தவிர அர்ச்சியசிஷ்டதனத்தில் எவ்வளவுக்கு உயர்த்துபோகிறார்களோ, அப்படிப்பட்ட சோதனைகளால் அவ்வளவுக்கு அதிகமாய்ச் சோதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அப்படியே தட்டானானவன் பொன்னை உலையில் சோதிக்கிறது போல் சர்வேசுரன் நீதிமான்களைப் பரிசோதிக்கிறாரென்று ஞானாகமம் 3-ம் அதிகாரம் 5-ம், 6-ம் வசனங்களில் சொல்லியிருக்கின்றது. இந்தப்பிரகாரமாய்ச் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமாயிருந்த அபிரகாமுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. இவ்வண்ண மாய் யோபு ஆகமம் முதலாம் அதிகாரம் 8-ம்வசனத்தில்: என் தாசனாகிய யோபு என்பவனைப்போல் சற்குணமுள்ளவனும், நீதிமானும், சர்வேசுரனுக்குப் பயந்து தின்மைக்கு விலகி நடக்கிறவனும் இல்லையென்று சர்வேசுரன் தாமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், நிகரில்லாத துன்பங்களால் அவரைச் சோதிக்கும்படி சர்வேசுரன் சாத்தானுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே தோபியாஸ் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ளவராயிருந்ததினால், சோதனைகளால் பரீட்சிக்கப்பட வேண்டியதாயிருந்த தென்று தோபியாஸ் ஆகமம் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் சொல்லப்பட்டிக்கிறது. 2-ம் வகை சோதனையாவது: விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம் முதலிய புண்ணியங்களுக்கும் விசேஷமாய்க் கற்புக்கும் விரோதமாக ஆத்துமத்திலே எழும்புகிற பாவச்சோதனைகளாம். இப்படிப்பட்ட சோதனைகள் உலகம் பசாசு சரீரம் என்கிற மூன்று சத்துருக்களால் வருகிறது. அவைகளைத் தள்ளுகிறதற்குச் சர்வே சுரன் தம்முடைய வரப்பிரசாதத்தினால் நமக்கு உதவிசெய்கிறாரொழிய, அவரே அவைகளுக்கு ஒருபோதும் காரணமாயிருக்கிறதில்லை. அதனிமித்தமாக சேசுநாதர் தாமே நமக்குப் படிப்பித்திருக்கிற பரமண்டல மந்திரத்திலே சோதனையிலே எங்களைப் பிரவேசிப்பியாதேயும் என்று அவரே மன்றாடக் கற்பித்திருக்கிறார். பின்னும் பாவச் சோதனையில் மூன்றுபடி உண்டென்கலாம். 1-வது, வெறும் பாவ நினைவு அல்லது மாயமான தோற்றம். 2-வது, அந்த நினைவின்பேரில் பிரியமான யோசனை. 3-வது, அந்தப் பாவத்துக்கு மனச்சம்மதி. பாவச்சோதனையின் முதல் படியிலே அதாவது: சோதனை வெறும்மாயத்தோற்றமாயிருக்குமட்டும் பாவ மல்ல. ஆகிலும் அப்படிப்பட்ட தோற்றமானது பாவம் உட்பிரவேசிப்பதற்கான வாசலாயிருக்கிறபடியினாலே பாவம் ஆத்துமத்திலே நுழையாதபடிக்கு அதைத் தாமதமின்றித் தள்ளி, அந்த வாசலை அடைத்தாற்போல் துர்விசாரத்தை அகற்றக் கடவோம். சோதனையின் இரண்டாம் படி ஏதென்றால், அந்தப் பாவத்தோற்றமான நினைப்பின்பேரில் தற்சுபாவமான பிரியத்துக்கு மனது சம்மதியாதிருந்தால் இன்னம் சாவானபாவமாயிராது. ஆனால் அந்தப்பிரியமான நினைவை உடனே தள்ளு வதற்குத் தாமதித்தால், அற்பப்பாவமாகிலுமிருக்கும். பாவச்சோதனையின் 3-ம் படியிலே சேர்ந்தாலோவெனில் அதாவது: சோதனைப்படுகிறவன் அந்தப் பாவநினைப்பை மனதுபொருந்தி ஏற்றுக்கொண்டு, அந்த நினைவினால் உண்டாகிற பிரியத்துக்கும் ஆசைக்கும் முழுமனதோடு சம்மதிக்கும்போது, அப்படி சம்மதிக்கப்பட்ட பாவக் கிரியை கனமானதாயிருக்குமாகில் அந்தச் சம்மதமே ஆத்துமத்துக்கு ஞான உயிராகிய இஷ்டப்பிரசாதத்தைப் போக்கி ஆத்துமத்தை நித்திய நரக மரணத்துக்குப் பிராப்தி யாக்குகிறது என்றறிக.