இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 01

ஜோசேப்பு இறந்த பிற்பாடு இஸ்றாயேல் புத்திரர் அதிகரித்ததும், புதிய அரசனால் மெத்தவும் வருத்தப்பட்டதும்.

1. யாக்கோபுடன் எஜிப்த்தில் பிரவேசித்த இஸ்றாயேல் புத்திரரின் பெயர்களாவன: அவர்கள் தங்கள் தங்களுடைய குடும்பத்தா ரோடேகூட அத்தேசத்தில் பிரவேசித்தார்கள்.

2. ரூபன், சீமையோன், லேவி, யூதா.

3. இஸக்கார், ஜாபுலோன், பெஞ்சமீன்.

4. டான், நேப்தாளி, காத், ஆசேர் இவர்களேயாம்.

* 4-ம் வசனம். இவ்விடத்திலே யாக்கோபின் புத்திரர்கள் பிறந்த முறைப்படி எண்ணப்படாமல் வம்ச முறையாகவே குறிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்படியென்றால் முதலிற் சொல்லப்படுகிறவர்கள் லீயாள் வயிற்றிலும், பெஞ்சமீன் இராக்கேல் கர்ப்பத்திலும், பின்பு வருகிற இருபேர்கள் பாளாள் உதரத்திலும், கடைசியில் எண்ணப்பட்டவர்கள் செல்லாளுடைய வயிற்றிலும் பிறந்தனர்.

5. ஆதலால் யாக்கோபின் இடத்திலிருந்து ஜெனித்த யாவரும் எழுபது பேர். ஜோசேப்போ (அதற்கு முன்னமே) எஜிப்த்திலிருந்தான்.

6. இவனும், இவனுடைய எல்லாச் சகோ தரர்களும், அத்தலைமுறையாரெல்லோரும் இறந்த பின்னர்,

* 6-ம் வசனம். இந்தத் தலைமுறையார் அனைவோரும் யாக்கோபோடேகூட எஜிப்த்திலே பிரவேசித்த எழுபது பேர்களாம் என்றறியவும்.

7. இஸ்றாயேல் புத்திரர் பலுகி, புல் போலப் பெருகி, மெத்தவும் பலமடைந்தவர்களாய் அந்நாட்டை நிரப்பினர்.

* 7-ம் வசனம். அந்நாடானது ஜெசேன் நாடு. அங்குதானே அவர்கள் தேவனுடைய விசேஷக் கருணையால் ஆச்சரியத்துக்குரிய மேரையாகப் பெருகிப் பெரிய பிரஜையாய்ப் பலுகினார்கள்.

8. இதனிடையில் புதிய அரசன் ஒருவன் எஜிப்த்தையாள எழுந்தான்; இவனோ ஜோசேப்பை அறியாதவனாய்,

* 8-ம் வசனம். அப்புதிய இராஜா அந்நிய வம்சத்தான். அவன் பலவந்தத்தால் அரசாட்சியைப் பிடித்தவன்; ஜோசேப்பு தேசத்திற்குச் செய்துவந்திருந்த மேலான உபகாரங்களை அவன் அறியாமலிருக்கவில்லை; ஆனால் பேராசையாலும் காய்மகாரத்தாலும் அவனை அறியாதவனைப்போலக் காட்டினான்.

9. தன் ஜனங்களை நோக்கி: இதோ இஸ்றாயேல் புத்திரராகிய ஜனங்கள் பெருந்தொகையாய் நம்மிலும் வல்லபமாயிருக்கிறார்கள்.

10. வாருங்கள், அவர்கள் பெருகாதபடிக்கு நாம் அவர்களை உபாயமாய் உபாதிக்க வேண் டும். இல்லாவிடில் ஒருவேளை யாதொரு யுத்தம் நேரிடுங்காலத்திலே அவர்கள் நம் பகைவரோடு கூடி நம்மைச் ஜெயித்துத் தேசத்தை விட்டுப் புறப்பட்டுப் போவார்களாக்கும்.

11. அப்படியே அவன் சுமை சுமக்கும் கடும் வேலையினால் அவர்களைத் துன்பப்படுத்தச் சொல்லி வேலை விசாரணைக்காரரை நியமித்து வைத்தான். அப்பொழுது அவர்கள் பரவோனுக்குக் களஞ்சிய நகரங்களாகிய பிட்டோமையும் இராம்சேஸையும் கட்டினார்கள்.

* 11-ம் வசனம். மோயீசன் பிறப்பதற்கு முன்னே, இஸ்றாயேலியர் வெகுநாளாய் எஜிப்த்தி லே பற்பல துன்பங்களால் உபாதிக்கப்பட்டார்கள். அத்துன்பங்கள் இஸ்றாயேலியர் செய்து வந்த விக்கிரகாராதனைப் பாவத்திற்கு ஆக்கினையாகவும், அவர்கள் எஜிப்த்து தேசத்தை வெறுத்து வாக்குத்தத்த பூமியை அபேட்சிக்க வேண்டுமென்பதாகவும், அவர்கள் எஜிப்த்தை விட்டுப் புறப்படுங் காலத்தில் அவர்கள் பட்ட கொடுமைக்குக் கைம்மாறாக எஜிப்த்தியருடைய பொருட்களை நியாயமாகப் பற்றிக்கொண்டு புறப்படுவதற்கு முகாந்தரமாகவும் தேவ சித்தத்தினால் அவர்களுக்கு நேரிட்டன. பரவோன் என்பது அந்நாட்டையாளும் அரசர்களின் பொது நாமம்.

12. ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பெருகிப் பலுகினார்கள்.

13. எஜிப்த்தியர் இஸ்றாயேல் புத்திரரைப் பகைத்து நிந்தித்து உபத்திரியப்படுத்தி,

14. சாந்து செங்கல் முதலிய கொடும் வேலைகளாலும், மண் தொழில்கட்குரிய நானா வித பணிவிடைகளாலும் அவர்களைப் பீடித்து வந்தமையால், அவர்களுக்கு ஜீவனே கசப்பாகும்படிச் செய்தார்கள்.

15. அன்றியும் எஜிப்த்து இராயனானவன் எபிறேயருக்குள் மருத்துவம் பார்த்து வரும் செவொறாள், பூவாள் என்பவர்களை நோக்கி:

16. நீங்கள் எபிறேய ஸ்திரீகளுக்கு மருத்துவம் பார்க்கையில், பேறுகாலமாகும்போது ஆண்பிள்ளையானால் கொல்லுங்கள். பெண்ணானால் காப்பாற்றுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

17. மருத்துவச்சிகளோ தேவனுக்குப் பயந்தமையால், எஜிப்த்து இராயனுடைய கட்டளையின்படி செய்யாமல் ஆண்பிள்ளைகளை யும் காப்பாற்றினார்கள்.

18. இராஜா அவர்களைத் தன்னிடம் அழைப்பித்து, நீங்கள் என்ன முகாந்தரத்தைப் பற்றி ஆண் குழந்தைகளைக் காப்பாற்றினீர்கள் என்று கேட்ட போது,

19. அவர்கள்: எபிறேய மாதர்கள் எஜிப்த்திய ஸ்திரீகளைப் போலல்லவே. அவர்கள் மருத்துவத் தொழிலை அறிவார்களாதலால் நாங்கள் அவர்களிடம் சேருமுன்னமே பிரசவித்தாகும் என்று பிரதி வாதித்தார்கள்.

20. இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகட்கு நன்மை புரிந்தார்; ஜனங்களோ விர்த்தித்து அதிக வல்லமையுற்றனர்.

* 20-ம் வசனம். அந்த மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து எபிறேய ஸ்திரீகளின் மேல் இரக்கங்கொண்டதினாலல்லோ சுவாமி அவர்களுக்குச் சம்பாவனை கொடுத்தாரேயொழிய பொய்யைச் சொன்னதினாலல்லவே.

21. மருத்துவச்சிகள் கடவுளுக்குப் பயந்தமையால், இவர் அவர்களுடைய குடும்பங்கள் தழைத்திருக்கச் செய்தார்.

22. அதன் பின் பரவோன் பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் நதியில் எறிந்து விடுங்கள், பெண்பிள்ளைகளையெல்லாம் காப்பாற்றுங்கள் என்று தனது சர்வ ஜனங்களுக்குக் கட்டளையிட்டனன்.