இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தீத்துவுக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 01

குருப்பட்டம் பெறுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டுமென்றும், எவ்வித குற்றவாளிகளைக் கண்டிப்பாய் நடத்த வேண்டுமென்றும் காட்டுகிறார்.

1-2. சர்வேசுரனுடைய ஊழியனும், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர் களுக்கு விசுவாசத்தைப் பிரசங்கித்து, தெய்வபக்திக்கு வழிகாட்டி, நித்திய ஜீவியத்தைப் பயக்குகிற சத்தியத் தை அவர்களுக்கு அறியப்பண்ணும் படி சேசுக்கிறீஸ்துவின் அப்போஸ்தலனு மாகிய சின்னப்பன் (தீத்துவுக்கு எழுதுவது) :

3. பொய் உரையாத தெய்வம் உலகாதிமுதல் நமக்கு நித்திய ஜீவியத்தை வாக்குத்தத்தம் பண்ணி, நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய கட்டளையால் எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்க மூலமாய்த் தக்க காலத்தில் தமது வார்த்தையை (நமக்கு) வெளியாக்கினார்.

4. இவ்விதமாய் நமக்குப் பொதுவான விசுவாசத்தில் எனக்குப் பிள்ளையான தீத்துவே, (உமக்குப்) பிதாவாகிய சர்வேசுரனாலும், நம்முடைய இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துவினாலும் இஷ்டப்பிரசாதமும், சமாதானமும் உண்டாவதாக.

5. குறைவாயிருப்பவைகளை நீர் சீர்திருத்தவும், நான் உமக்குக் கொடுத்த கட்டளைப்படியே பட்டணங்கள் தோறும் குருக்களை ஏற்படுத்தவும் வேண்டுமென்பதை உத்தேசித்தே உம்மை நான் கிரேத்தா தீவில் விட்டு வந்தேன். (அப். 14:22.)

* 5. குருக்கள்:- மூலபாஷையில் மூப்பர் குருவானவர்கள் என்று அர்த்தங்கொள்ளும். இதனால் தீத்து என்பவர் திருச்சபையில் அங்கங்கே மேற்றிராணிமார்களையும் குருக்களையும் இன்னும் மற்ற அதிகார உத்தியோகஸ்தரையும் ஸ்தாபித்தாரென்று தெரியவருகிறது.

6. ஆகையால் ஒருவன் குற்றமற்றவனும், ஒரேதாரப் பூமானும், துர்மார்க் கரென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசிகளாகிய மக்களை உடையவனுமாயிருந்தால் (அவனைத் தெரிந்துகொள்ளலாம்). (1 தீமோ. 3:2.)

7. ஏனெனில், மேற்றிராணியாரா னவர் சர்வேசுரனுடைய காரியஸ்தருக்கு யோக்கியமானபடி குற்றமற்றவரும், ஆங்காரமில்லாதவரும், கோபமில்லாத வரும், மதுபானப்பிரியமில்லாதவரும், அடியாதவரும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவரும், ( 1 கொரி. 4:1.)

8. பிறரை உபசரிக்கிறவரும், அன்புள்ளவரும், மன அமைதியுள்ளவரும், நீதியுள்ளவரும், பரிசுத்தரும், இச்சை யடக்கமுள்ளவரும்,

9. குணமான உபதேசத்தைக் கொண்டு புத்திசொல்லவும், எதிர்த்துப்பேசுகிறவர்களை மறுத்து அடக்கவும் வல்லவராயிருக்கும்படி தாம் கற்பிக்கப்பட்ட விசுவாச வாக்கியத்தை ஸ்திரமாய்ப் பற்றிக்கொண்டவருமாய் இருக்கவேண்டும்.

10. ஏனெனில் அநேகர், விசேஷமாய் விருத்தசேதனத்தைச் சேர்ந்தவர்கள் அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரரும், புத்தியை மயக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.

11. இவர்கள் போதகத்தை மறுத்து அடக்கவேண்டும். ஏனெனில் இவர்கள் ஈன ஆதாயத்தை முன்னிட்டு, தகாத வைகளைப் போதித்து, குடும்பங்கள் முழுவதையும் அடியோடே பெயர்க்கிறார்கள்.

12. கிரேத்தா தீவார் ஓயாப் பொய்யர், துஷ்ட மிருகங்கள், சோம்பேறி, வயிற் றாளிகள் என்று அவர்களில் ஒருவ னாகிய அவர்கள் சொந்தத் தீர்க்க தரிசியே சொல்லியிருக்கிறான்.

* 12. இதில் சொல்லப்பட்டவன் எப்பிமேனிதெஸ் என்ற அஞ்ஞானப் புலவன்.

13. இந்தச் சாட்சியம் உண்மையாகவே இருக்கின்றது. இதனிமித்தமாக அவர்கள் விசுவாசத்திலே குண முள்ளவர்களாயிருக்கவும்,

* 13. யூதர்கள் அநேகங் கட்டுக்கதைகளையும், வீணான ஆசாரங்களையும் மோயீசனுடைய பிரமாணத்தோடு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் ஊருக்கு ஊர் புதுச் சபைகளிலே நுழைந்து, மோயீசன் பிரமாணத்தையும், ஆகாத கட்டுக்கதைகளான ஆசாரங்களையும், புதுக் கிறீஸ்தவர்கள் அநுசரிக்கவேண்டுமென்று போதித்துக்கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட கள்ளப்போதகர்களை அர்ச். சின்னப்பர் ஏறக்குறைய தமது எல்லா நிருபங்களிலும் கண்டித்துக்கொண்டு வருகிறார்.

14. யூதர்களுடைய கட்டுக்கதைகளையும், சத்தியத்தை விட்டு விலகின மனுஷர்களுடைய கற்பனைகளையும் கவனியாதிருக்கவும், நீர் அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்ளும்.

15. சுத்தருக்கு எல்லாஞ் சுத்தம்; அசுத்தருக்கும், அவிசுவாசிகளுக்குமோ ஒன்றும் சுத்தமில்லை. அவர்களுடைய புத்தியும், மனச்சாட்யும் கறைபிடித்திருக்கின்றது. (உரோ. 14:20.)

* 15. கலியாணம், மாம்ச உபயோகம் முதலியவைகள் பாவமென்று கள்ளப் போதகர்கள் சொன்னதால், இதை உண்மையென்று நினைத்து யாராவது செய்வார்களானால் அப்படிப்பட்டவர்களுடைய மனச்சாட்சியைப்பற்றி அது அவர்களுக்குப் பாவமாயிருக்கும். ஆனால் சத்தியத்தை அறிந்து தெளிவான மனச்சாட்சியோடு நடக்கிறவர்களுக்கு இவைகள் யாதொரு தீங்கும் செய்யாதென்பதைப் பற்றி சுத்தமுள்ளவர்களுக்கு எல்லாம் சுத்த மென்கிறார்.

16. அப்படிப்பட்டவர்கள் சர்வேசுரனை அறிவோமென்று வெளிப்படச் சொன்னாலும், கிரியைகளால் அவரை மறுதலிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அருவருப்புக்குரியவர்களும், அவிசு வாசிகளும், எவ்வித நற்கிரியைகளுக்கும் தள்ளுபடியானவர்களுமாய் இருக்கிறார்கள்.