இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

குருத்துவப் பட்டங்களை வழங்கும் முறை

(குருத்துவத்தின்) மூன்று உயர்பட்டங்கள் உபதியாக்கோன் பட்டம், தியாக்கோன் பட்டம் மற்றும் குருத்துவப் பட்டம் ஆகியவை ஆகும். 

இவற்றில் கடைசியான குருப்பட்டம் ஒரு பூசையின் போது, பின்வரும் முறையில் வழங்கப்படுகிறது: குருவாக அபிஷேகம் பெற இருக்கும் தியாக்கோன், நெடு வெண்ணங்கியும் (ஆல்ப்), தலைப்பட்டும் (அமீஸ்), இடைக்கச்சையும், கழுத்துப் பட்டும் --இது இடது தோளின் மீது அணியப்பட்டு, வலது பக்கத்தில் கட்டப்படுகிறது -- அணிந்து பீடத்தின் மேல்படியில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மேற்றிராணியாருக்கு முன்பாக வந்து, அவரது பாதங்களின் அருகில் முழந்தாளிட வேண்டும். 

மேற்றிராணியார் ஒரு நீண்ட, வலியுறுத்தும் பிரசங்கத்தில், தியாக்கோன் தம் மீது ஏற்றுக் கொள்ள இருக்கும் பதவியின் பாரமான கடமைகளை அவருக்கு எடுத்துரைக்கிறார். பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு அவர் தம் உரையை முடிக்கிறார்: 

"ஆண்டவரின் திரு மரணத்தின் பரம இரகசியத்தை நீர் நிறைவேற்றும் போதெல்லாம், உம் உறுப்புக்களில் சகல தீய ஆசைகளையும், இச்சைகளையும் ஒறுத்து அடக்கப் பாடுபடும். உமது போதனை கடவுளின் மக்களுக்கு ஓர் ஆன்ம மருந்தாக இருக்கக்கடவது; உமது போதனையாலும், முன்மாதிரிகையாலும் நீர் கிறீஸ்துநாதரின் திருச்சபையின் ஞான வாழ்வுக்குத் தூண்டுதலாக இருக்கும்படியாகவும், இவ்வளவு பாரமான ஒரு பதவியை உம்மீது சுமத்துவதற்காக நானும், அதை உம்மீது ஏற்றுக் கொள்வதற்காக நீரும், ஆக நாம் இருவரும், கடவுளிடமிருந்து தண்டனைத் தீர்ப்பையல்லாமல், தமது வரப்பிரசாதத்தால் உம்மில் கடவுள் செயலாற்றக் கூடிய நற்செயல்களின் சம்பாவனையைப் பெற்றுக் கொள்ளும்படியாக, உமது வாழ்வின் இனிய சுவை கிறீஸ்து நாதரின் திருச்சபையை மகிழ்விப்பதாக. ஆமென்.'' 

இதன்பின் மேற்றிராணியார் மக்களிடம் உரையாடி, இந்த உயர்ந்த பதவிக்காகக் காத்திருப்பவரின் தகுதி பற்றி சாட்சியம் கூறும்படி அவர்களிடம் கேட்கிறார். யாரும் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றால், மேற்றிராணியார் முழந்தாளிட்டு, உரத்த குரலில் அர்ச்சியசிஷ்டவர்களின் பிரார்த்தனையையும், மற்ற ஜெபங்களையும் சொல்ல, முகங்குப்புற சாஷ்டாங்கமாக விழுந்திருக்கும் தியாக்கோன் அவற்றிற்குப் பதில் சொல்கிறார். 

அதன்பின், மேற்றிராணியார் அவரது சிரசின் மீது தம் கரங்களை வைத்து, அவருக்கு மேலாக ஒரு ஜெபத்தையும், ஒரு நீண்ட முகவுரையையும் சொல்கிறார். அதன்பின் அவர் கழுத்துப் பட்டை அவருடைய கழுத்தைச் சுற்றி இட்டு, பூசை ஆயத்தத்தை அவரது சிரசுக்கு மேலாக வைக்கிறார். பின் முழந்தாளிட்டு, மற்றொரு ஜெபத்தையும், வேனி, க்ரேயாத்தோர் ஸ்பீரித்துஸ் பாடலையும் உச்சரிக்கிறார். 

இது முடிந்தவுடன் அவர் தம் ஆசனத்தில் அமர, தியாக்கோன் அவருக்கு முன்பாக முழந்தாளிட்டு, மேற்றிராணியாரின் மடியின் மீது தம் கரங்களைத் திறந்து வைக்கிறார். மேற்றிராணியார் அவரது உள்ளங்கைகளில் சிலுவை அடையாளமாக க்றீஸ்மா தைலத்தைப் பூசி, அவற்றை அபிஷேகம் செய்கிறார். 

அதன்பின் அவர் ஒவ்வொரு விரலையும், இரு கரங்களையும் தனித்தனியாகத் தொட்டு, "ஆண்டவரே, இந்த அபிஷேகத்தின் மூலமாகவும், நம் ஆசீர்வாதத்தின் வழியாகவும் இந்தக் கரங்களை அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தத் தயை புரியும்" என்று ஜெபிக்கிறார். 

நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரின் திருப்பெயரில், இந்தக் கரங்கள் ஆசீர்வதிக்கும் எதுவும் ஆசீர் வதிக்கப்படும்படியாகவும், அவை அர்ச்சிக்கும் எதுவும் அர்ச்சிக்கப்பட்டதாக நிலைத்திருக்கும்படியாகவும் ஒரு ஜெபம் செய்து, அந்தக் கரங்களில் சிலுவை அடையாளமும் வரைகிறார். 

அதன்பின் அவர் தியாக்கோனின் இரு கரங்களையும் ஓர் ஒடுக்கமான லினன் துணியால் சேர்த்துக் கட்டி, திராட்சை இரசமும் தண்ணீரும் உள்ள ஒரு திருக்கிண்ணத்தையும், ஓர் அப்பத் தட்டையும், (தேவ வசீகரம் செய்யப்படாத) ஓர் அப்பத்தையும் அவரது கரங்களில் தந்து: "ஆண்டவரின் திருப்பெயரால் கடவுளுக்குப் பலி செலுத்தவும், ஜீவியருக்காகவும், மரித்தோருக்காகவும் பூசை நிறைவேற்றவும் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும். ஆமென்'' என்று கூறுகிறார். 

புதிதாக குருத்துவ அபிஷேகம் பெற்ற குருவின் கரங்களின் கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் அவற்றைக் கழுவுகிறார். இதனிடையே மேற்றிராணியார் திவ்விய பலிபூசை நிறைவேற்றத் தொடங்குகிறார். 

ஒப்புக்கொடுத்தல் பகுதியில், புதிய குரு எரியும் மெழுகுவர்த்தி ஒன்றை மேற்றிராணியாரிடம் தந்து, அவரது கரங்களை முத்தி செய்கிறார். அதன்பின் அவருக்குப் பின்னால் முழந்தாளிட்டு, ஒரு பூசைப் புத்தகத்தைக் கையில் ஏந்தி, அவரோடு சேர்ந்து பூசையின் பலிப் பாகத்தை ஒவ்வொரு வார்த்தையாக வாசிக்கிறார். 

மேற்றிராணியாரின் கரத்திலிருந்து அவர் திவ்விய நன்மையைப் பெற்றுக் கொள்கிறார். புதிதாக அபிஷேகம் செய்யப்பட்ட குரு விசுவாசப் பிரமாணமும் சொல்ல வேண்டும். அதன்பின் அவரது சிரசின் மீது தம் கரங்களை விரித்து, "இஸ்பிரீத்து சாந்துவைப் பெற்றுக் கொள்ளும்; எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீரோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும்: எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீரோ, அவர்களுக்கு அவைகள் மன்னியாதிருக்கப்படும்" என்ற வார்த்தைகளைக் கூறி, பாவங்களை மன்னிக்கும் வல்லமையை அவருக்கு வழங்குகிறார். 

இறுதியாக, புதிய குரு மேற்றிராணியாருக்கும், அவரது நியாயமான ஸ்தானாதிபதிகளுக்கும் கீழ்ப்படிந்திருப்பதாக வார்த்தைப்பாடு கொடுக்கிறார். 

"பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய ஆசீர்வாதம் உம்மீது இறங்குவதாக, குருத்துவ ஒழுங்கில் நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக, சர்வ வல்லப சர்வேசுரனுடைய மக்களின் பாவங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும், அவருக்கு மகிழ்ச்சியூட்டும் பலிப்பொருட்களை நீர் ஒப்புக்கொடுப்பீராக. அவருக்கே ஸ்துதியும், மகிமையும், என்றென்றும், சதாகாலமும் உண்டாகக்கடவது. ஆமென்" என்ற ஆசீர்வாதத்துடன் இந்தத் திருச்சடங்கு முடிவடைகிறது.

உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களின் அபிஷேகத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய சடங்கு முறை இத்தகையதே. இந்தச் சடங்குகளைக் கவனமாக ஆராய்ந்தால், குருத்துவமாகிய தேவத்திரவிய அனுமானத்தை பக்தியோடும், அதிகார பூர்வமாகவும் வழங்குவதற்காகத் திருச்சபையால் ஏற்படுத்தப்பட்ட புராதனமான வார்த்தை வடிவங்களை அறிந்து பிரமித்துப் பாராட்டவும், அவற்றை உயர்வாக மதித்துப் போற்றவும் நாம் தவற முடியாது. 

ஒரு கத்தோலிக்கக் குருவின் குருத்துவ அபிஷேகத்தில் இவ்வளவு விஸ்தாரமான ஒரு திருச்சடங்கு அனுசரிக்கப்படக் காரணம் என்ன? அவர் போதுமான அளவுக்கு சுத்திகரிக்கப்படுவதும், அர்ச்சிக்கப் படுவதும், கடவுளின் மகா உன்னத மகத்துவத்திற்கு பூரண மாசற்றதனமுள்ளதும், மகா பரிசுத்தமானதும், மிகவும் ஆராதிக்கப்படத் தக்கதும், தெய்வீகமானதுமான பரிசுத்த பூசைப் பலியை ஒப்புக் கொடுக்க அவர் தகுதி பெறுவதுமே அந்தக் காரணம். 

குருக்கள் பெற்றிருக்கும் அபிஷேகத்திற்காக நாம் அவர்களுக்கு சங்கை மரியாதை செலுத்த வேண்டும். குருக்களுக்கு சங்கை செய்கிறவன் தமக்கே சங்கை செய்கிறான் என்றும், அவர்களைப் புறக்கணிப்பவன் தம்மையே புறக்கணிக்கிறான் என்றும் கிறீஸ்துநாதர் கூறியிருக்கிறார் (லூக் 10:16).