இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு செல்லல்.

பிரியமான கிறிஸ்தவர்களே , மோட்சத்தை அடைகிறதுதான் நமது சீவியத்தின் ஒரே இலக்கு. அதற்காகத்தான் சருவேசுரன் நம்மை உண்டாக்கினார். நாம் மோட்சத்தை அடைய வேண்டுமானால் நம்முடைய பரம குருவாகிய யேசுநாதசுவாமியைப் பின்பற்றுவது அவசியம். அவரே நம்முடைய வழியும் உண்மையும் சீவியமும் ஆனவர் (அருளப். 14; 6).

அவருடைய திருப் போதகங்களுக்கெல்லாம் அத்திவாரமான போதகம் ஒன்றை இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். யேசுநாதசுவாமி ''எல்லாரையும் நோக்கித் திருவுளம் பற்றியதாவது: யாராவது என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றி வரக்கடவான் '' (லூக். 9; 23) என்றார்.

இந்தப் போதகத்திலே ஐயப்பாட்டுக்கு இடமில்லை. ஆண்டவர் சகலரையும் நோக்கிச் சொல்லுகிறார் சந்நியாசிகள் தவத்தாளிகளை மாத்திரமல்ல, சகலரையும். ஏனென்றால், மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் எவர்கள் எவர்களோ அவர்களெல்லாரும் அவரைப் பின்பற்ற வேண்டியவர்கள். இனி, ஆண்டவரை நாம் எல்லாரும் பின்பற்ற வேண்டிய முறை என்ன? அனுதினமும் இதைக் கவனியுங்கள் அனுதினமும், அதாவது ஒவ்வொரு நாளும், நாம் எமது எமது சிலுவையைச் சுமந்துகொண்டு தமக்குப் பின்னே வர வேண்டுமாம். எமது எமது சிலுவை என்றது என்ன? இதுதான் தன் மறுப்பு என்கிற புண்ணியம். நாம் நாள்தோறும் நம்மை மறுத்து, அதாவது நம்முடைய ஆசாபாசங்களை அடக்கி, மனம் போன போக்கெல்லாம் போகாமல் நம்மை மட்டுப்படுத்தி, ஆண்டவருடைய சிலுவையின் பாதையிலே நடக்க வேணும். தன்மறுப்பு இல்லாமல் நாம் கிறீஸ்துநாதருடைய சீஷராய் இருக்க முடியாது. தன் மறுப்பு இல்லாமல் புண்ணிய வளர்ச்சியும் இல்லை.

1. நம்முடைய அன்பு நிறைந்த மீட்பராகிய யேசுநாதசுவாமி பாவச் சகதியிலே தவழ்ந்துகொண்டிருந்த மனுக்குலத்தை அந்த மோசமான சகதியிலேயிருந்து வெளியேற்றி பரலோக பாதையிலே நடப்பிக்கவென்று இவ்வுலகத்துக்கு எழுந்தருளுகிறவரானார். இதற்காக அவர், பாவம் ஒன்று தவிர, மற்றும் மனுஷ சுபாவத்துக்கு உரிய சகல பலவீனங்களையும் கையேற்று (மத். 8; 17 ), மனிதர் மத்தியில் ஒரு மனிதனாக விளங்கி, நமக்கெல்லாம் முன்மாதிரிகையான ஒரு சீவியத்தை நடப்பித்துக் காட்டினார். அந்தச் சீவியமுமோ முழுதும் தம்மை மறுத்து நடத்திய சீவியம் அல்லாமல் வேறல்ல.

பெரிய வெள்ளிக்கிழமையன்று மாத்திரம் அவர் நமக்காகப் பாரமான மரச்சிலுவையைச் சுமக்கலானார். ஆனால், அதற்கு முன் தமது திருச்சீவிய காலம் முழுதுமே, பெத்தலேமின் புல்லணை தொடக்கமாகவே, மரச்சிலுவையிலும் அதிக பளுவான ஒறுத்தல் என்னும் மனச் சிலுவையை அனுதினமும் ஓயாமற் சுமந்துகொண்டு வரலானார். '' கிறீஸ்துநாதர் தமது பிரியப்படி நடவாமல், உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என் மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார் '' (ரோமர் 15; 3).

அவர்தாமே திருவுளம் பற்றியபடி : ''என் சித்தத்தின்படி அல்ல என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் பரலோகத்தினின்று இறங்கி வந்தேன் '' ( அருளப். 6; 38 ). நம்முடைய தாறுமாறான ஆசாபாசங்களைப் போல ஆண்டவருடைய கீழ் அங்கிஷம் அவருடைய மேல் அங்கிஷத்துக்கு எதிராய் ஒரு போதும் கிளம்பியிருக்கக் கூடாது. ஏனென்றால், அவருடைய திரு மனுஷக சித்தம் தேவ திருச்சித்தத்துக்கு எப்போதும் கீழ்ப்படிந்திருந்ததும் அல்லாமல், இரண்டு சித்தமும் ஒரு தேவ ஆளிலே தானே தங்கியிருந்தது.

தேவ ஆளுடைய சித்தத்திலேயும் கீழ் அங்கிஷத்திலேயும் ஒருபோதும் எந்த நெறிகேடும் வர முடியாது. இப்படி இருந்தாலும், நெறிகேட்டுக்கு உட்பட்ட நமக்கு முன்மாதிரிகை காட்டும்படியாக, ஆண்டவர், தாம் மனித சுபாவத்திலே யாதொரு தவறும் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய சுகங்களைத் தானும் வெறுத்து, சிலுவையையே எப்போதும் சுமந்துகொண்டார். ''தமக்கு முன்னே சந்தோஷம் வைக்கப்பட்டிருந்தபோதிலும் அவமானத்தை எண்ணாமல் சிலுவையையே சகித்தார் '' (எபி. 12; 2).

தம்மை மறுப்பதும் சிலுவையைச் சகிப்பதும் ஆண்டவருக்கு அவசியமாய் இருக்கவில்லை. நமக்கோ அது அவசியம் ; இன்றியமையாத ஒரு அவசியம். ஏனென்றால், சென்ம பாவ தோஷத்தினால் நம்முடைய ஆசாபாசங்கள் நெறி தப்பி எழுந்து நம்மை எப்போதும் பாவ வழியிற் செலுத்திக்கொண்டிருக்கப் பார்க்கும். கடிவாளமும் சவுக்கும் முள்ளுக்களும் இல்லாமல் குதிரையில் ஏறினவன் பாடு எப்படியோ, அப்படியே தன் மறுப்பு இல்லாதவன் பாடும் இருக்கும். குதிரைச் சவாரிக்காரன் கடிவாளத்தைச் சரியாய்ப் பிடித்துச் சவுக்கை விளக்கி தன் காற் குழைச்சுகளில் மாட்டிய முள்ளுக்களால் இடுக்கிக்கொண்டு வந்தால், குதிரை போக வேண்டிய பாதையால் போகும். கடிவாளம் இல்லாமலும், சவுக்கு முள் இல்லாமலும் ஏறியிருக்கிறவனை, அந்த மிருகம் தன் எண்ணத்துக்கு இழுத்துக்கொண்டு ஓடி, எந்தப் பற்றையிலோ எந்தக் கிடங்கிலோ விழுத்தி விடும் என்று சொல்ல முடியாது.

தன்மறுப்பு இல்லாமல் ஆசாபாசங்களின் நெறிகேடுகளை அடக்கி ஆளுவது கூடாத காரியம். ஆசாபாசங்களை அடக்கி ஆளாமல், கிறீஸ்துநாதருடைய சீஷராயிருப்பது எப்படி? கிறீஸ்துநாதருடைய சீஷராய் இராமல், மோட்சத்தை அடைவது எப்படி? இதினாலேதான் அர்ச். சின்னப்பரும் : ''கிறீஸ்து நாதருடையவர்கள் தங்கள் மாமிசத்தையும் அதின் துர் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து விட்டவர்களாம்'' என்று வசனித்தார் (கலாத். 5; 24 ). இதிலே சீஷனானவர் தம்முடைய குருவின் திருப் போதகத்தை எடுத்து எதிரொலி பண்ணினார் ஒழிய வேறு அல்ல.

பரம குருவானவர் : ''தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின் செல்லாதவன், எனக்கு ஏற்றவன் அல்ல '' (மத். 10; 38 ), ''யாதொருவன் தன் சீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாய் இருக்க மாட்டான்'' (லூக். 14; 26 ) என்று திருவுளம் பற்றின போதகத்தைத்தான் சின்னப்பர் வியாக்கியானம் பண்ணி: நாம் ஆண்டவருடைய சீஷராய் இருக்க வேணுமானால் நம்முடைய ஆசாபாசங்களையும் சரீரத்தையும் சிலுவையில் அறைய வேணும் என்றார். இப் போதகத்தைத்தான் அர்ச்.அகுஸ்தினார் வேறொரு விதமாய் வற்புறுத்துகிறார். அதெப்படியென்றால் : ''நீ யேசுக்கிறிஸ்து நாதருடைய சிலுவையைச் சுமந்து கொள்ளாவிட்டால் இன்னும் அவருடைய சீஷன் ஆகவில்லை. உன்னுடைய இச்சைகளையும் நெறி கெட்ட ஆசைகளையும் சிலுவையில் அறையாவிட்டால் நீ கிறீஸ்துநாதருக்குச் சேர்ந்தவன் அல்ல'' என்கிறார்.

அர்ச். மகா சிங்கராய பாப்பானவரும் சின்னப்பர் எழுதிய வேறொரு வேத வாக்கியத்தை (ரோமர் 6; 4) வியாக்கியானம் பண்ணிக் கிறீஸ்தவர்களுக்குச் சொல்லுவது : "ஞானஸ்நானத்தினால் யேசுக்கிறிஸ்து நாதருடைய அவயவங்கள் ஆகிவிட்டீர்கள் ; ஆதலால் உங்களை மறுத்து நடந்து கொள்ளுங்கள். கொள்ளாவிட்டால், அவருடைய அங்கங்கள் என்ற சுதந்திரத்தை இழந்து போவீர்கள்'' என்றார்.

இந்தப் போதகத்தை ஆண்டவருடைய அடியார்கள் எல்லாரும், உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும், தங்கள் நாளாந்த சீவியத்தில் அனுசரித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆண்டவருடைய அப்போஸ்தலர்களது சீவியமெல்லாம் தன் மறுப்புத்தான். ''கிறிஸ்து நாதருடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன் '' (கலாத். 2; 19 ), " கர்த்தராகிய யேசுவுடைய காயத் தழும்புகளை என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன் '' (கலாத். 6; 17 ), '' மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் '' (1 கொரிந். 9; 27 ) என்று புறச் சாதிகளின் அப்போஸ்தலர் சொல்லியதை மற்றவர்களும் முழு உண்மைப்படி சொல்லக் கூடியவர்களாய் அல்லவோ நடந்தார்கள்! அப்போஸ்தலர்களிடத்திற் போலவே சகல நல்ல கிறீஸ்தவர்களிடத்திலும் தன்மறுப்பு என்கிற ஒறுத்தல் எப்போதும் காணப்படும். தன் மறுப்பு இல்லாமல் கிறீஸ்த சீவியமில்லை.

பிரியமானவர்களே, நான் இப்போது கடின ஒறுத்தல் உபவாசங்களைப் பற்றி, சரீரத்தை இரத்தம் பீரிட்டு ஓடக் கசைகளால் அடிப்பதைப் பற்றி, வனவாசத்திலே இருந்து தவம் பண்ணுவதைப் பற்றிப் பேசவில்லை. கிறீஸ்து வேத சீவியத்துக்கு அத்திவாரமாகிய தன் மறுப்பைப்பற்றி மாத்திரம் பேசுகிறேன். தன்னை மறுத்து நடவாமல், மனம் போன போக்கெல்லாம் நடந்துகொண்டு கிறிஸ்து நாதருடைய சீஷனாய் இருக்கலாம், மோட்சத்தை அடையலாம் என்று நம்பி மோசம் போகாதேயுங்கள்.

ஆண்டவர் திருவளம் பற்றினபடியே : 'பரலோகத்துக்குச் செல்லுகிற பாதை ஒடுக்கமானது ; அதின் வாசலும் இடுக்கமானது. நரகத்துக்கு நடக்கிற பாதையோ விசாலமானது ; அதின் வாசலும் விட்டுவீதியானது; அதில் பிரவேசிக்கிறவர்களும் அனந்தம் பேர்'' (மத். 7; 14). ஒடுக்கமான பாதையால் போகாமல், அதாவது உங்கள் ஆசாபாசங்களை அடக்காமல், சரீரம் என்கிற குதிரைக்கு நல்ல கடிவாளம் போடாமல் இருந்தால், அல்லது, ஆண்டவருடைய வாக்கியப்படியே, உங்கள் சிலுவையை ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டு அவர் பின்னே நடவாவிட்டால், நீங்கள் கிறீஸ்துநாதருடையவர்களும் அல்ல, அவர் தம்முடையவர்களுக்கு என்று திறந்துவிட்டிருக்கிற மோட்ச இராச்சியத்துக்குப் பங்காளிகளும் அல்ல.

2. தன் மறுப்பு இல்லாமையினாலேதான் நாம் புண்ணியத்தில் வளராமல் பாவச் சகதியிலே கிடந்து புரளுகிறோம். மனதிலே வந்த வந்த எண்ணம் எல்லாத்துக்கும் இடங்கொடுத்து, கண் விரும்பியதை எல்லாம் பார்க்க, காது விரும்பியதை எல்லாம் கேட்க, வாய் விரும்பியதை எல்லாம் பேச விட்டுக்கொண்டு வந்தால், பாவத்தை விலக்குவது எப்படி? புண்ணியத்தைச் செய்வது எப்படி?

ஒருவனை அசுத்த நினைவுகள் வந்து எப்போதும் மொய்த்துப் பிடித்துக் கொண்டிருக்கிறதற்குக் காரணம் என்ன? ஒரு முக்கியமான காரணம் கண்ணை அடக்கி நடவாததுதான். கண் இச்சித்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு வரவ, கற்புக்கு அடாத ரூபங்கள் தன்னை அறியாமலே மனதிலே பதிந்துகொள்ளும். பிறகு காத்திராத நேரத்திலே அந்த ரூபங்கள் தலை காட்டவே, மொலு மொலுவென்று துர் எண்ணங்கள் ஆசைகள் பிறந்துகொண்டிருக்கும். ஆசைகள் முற்றிக் கிரியைகளாகிறதற்கு நோஞ்செல்லுமா?

கண்ட நின்ற கதையெல்லாத்துக்கும் காதைத் திறந்து பிடித்துக் கொண்டிருப்பதினாலும் இப்படியே பல பாவ எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் இடம் உண்டாகும். தெருத்திண்ணைகளிலே எத்தனை பிற சிநேகத்துக்கு மாறான கதைகள் பேசுவார்கள்! எத்தனை ஆவலாதிகள்! எத்தனை அழுகற் பேச்சுக்கள்! பலமுறையும், வேதத்துக்கும் திருச்சபைக்கும் ஆசாரக் குறைவான எத்தனை சன்னை சூசனைகள்! இப்படிப்பட்ட பேச்சுக்களுக்கு மனம் பொருந்திச் செவி கொடுத்தால், மெல்ல மெல்ல மனம் பழுதாகி, இருதயம் உளுந்து, பாவச் சோதனைகளுக்கு அகலமான வழி திறந்து விடப்படாமல் இருக்குமா? காற்றுடன் நெருப்புப்போல இந்தச் சோதனை நேரத்திலே பிசாசும் ஒரு கை பாராமல் விடுமா? வாய்க்குக் கடிவாளம் போடாமல் விடுவதினால், எத்தனை மனஸ்தாபங்கள் சண்டை சச்சரவுகள் பழி பாதகங்கள் உண்டாக வழியாகிறது!

நேரத்தோடு தன்னை மறுத்து இச்சைகளை அடக்கிவையாததினாலே தான், கோபம் குடிவெறி முதலிய பல பாவங்கள் விளைகிறது அல்லவா? புத்தியில்லாத மிருகமானது தன்னிச்சை தூண்டித் தூண்டி விட்டபடி அதையும் இதையும் செய்வது போல, நாமும் தன்னடக்கம் இல்லாமல் நினைத்த நினைத்தபடியெல்லாம் செய்தால் ஒருபோதும் பாவத்தை விலக்கமாட்டோம். ஒரு போதும் புண்ணிய பாதையில் நடக்க மாட்டோம்.

தன் மறுப்பிலே நாள்தோறும் பழகாதவர்கள் செய்கிற நற் கிருத்தியங்கள் புண்ணியங்களைப் போலத் தோற்றினாலும் உள்ளபடி அவைகள் புண்ணியங்கள் அல்ல. இரகசியமான பழிவாங்கும் மனதை, மோக இச்சைகளை, பொருளாசையை, அகங்காரத்தை மறித்து அடக்க யாதொரு முயற்சியும் பண்ணாமல், எத்தனை பேர் சிலசில் வெளி ஆசாரங்கள் தான் புண்ணிய சீவியம் என்று எண்ணி மோசம் போகிறார்கள்!

இவர்கள் வழக்கமான செபத்தை விடார்கள்; பூசையைப் பிரார்த்தனையை மறவார்கள்; வாடிக்கையான காலங்களில் ஒப்பாசாரமாய்ப் பாவசங்கீர்த்தனமும் பண்ணிச் சற்பிரசாதமும் பெற்றுக்கொள்ளுவார்கள்; ஆனால் தங்களுடைய துர் காட்டங்களையோ எதிர்த்து போராடுவதில்லை. தன்மறுப்பு என்கிற சிலுவையையோ நாள்தோறும் சுமக்கிறதில்லை. அதனால், அடிக்கடி மீண்டும் மீண்டும் அதே பாவத்தில் விழுவார்கள். பாவப் பழக்கங்களை முற்றாக அகற்றிப் புண்ணிய சீவியத்தை தொடங்கவோ ஒருபோதும் மனம் ஒத்த பிரயத்தனம் செய்வதில்லை. இப்படிப்பட்டவர்களுடைய வேத அனுசரிப்புக்கள் எல்லாம் புண்ணியம் தானா? ஒரு போதும் இல்லை. அடித்தளத்திலே பாவ முள்ளுப் படர்ந்திருக்கும்போது புண்ணியங்கள் வளர்ந்து சவிகொள்ள இடம் ஏது? தன்மறுப்பு என்கிற மண்வெட்டியால் பாவமுள்ளுப் பற்றிறையை வெட்டிப் பிரித்தால் ஒழிய புண்ணிய விதை முளைப்பதும் இல்லை, வளர்வதும் இல்லை.

கிறீஸ்தவர்களே, நாம் சிலுவையைச் சுமந்துகொண்டு போய் சிலுவையில் அறையுண்ட நாதருடைய சிலுவையின் வேதத்தை அனுசரிக்கிறவர்கள். ஆதலால், நம்முடைய நாதரின் சொற்படி நமது சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்ற வேண்டியவர்கள்: அதாவது நாள்தோறும் நம்மை நாமே மறுத்து, நம்மை நாமே அடக்கி, பாவ இச்சைகளை ஒறுத்து புண்ணிய வழியிலே நடப்பது நமக்குக் கடமை. இந்தத் தன்மறுப்பு தான் நமது சீவியத்துக்கு அச்சாணி போல இருக்க வேண்டியது. நமது புண்ணியப் பழக்கம் எல்லாம் அதிலே நின்று ஆடவேண் டியது. கடின தபசுகள் ஒருசந்தி ஒறுத்தல்கள் எப்போதும் அவசியமாயிராது. இதுவோ எப்போதும் அவசியம். இது இல்லாமல் புண்ணியமில்லை; மோட்சமில்லை.

ஆதலால், இன்று, நாம் இனிமேல் நம்முடைய பஞ்ச புலன்களை அடக்கி நடக்க நல்ல பிரதிக்கினை செய்துகொள்ளக்கடவோம். விசேஷமாய், இந்த ஞான ஒடுக்க நாட்களில் கண்களை, காதுகளை, எல்லாத்திலும் அதிகமாய் வாயை அடக்குவோமாக. மிதமிஞ்சிய நித்திரையை, தீனிலே அதிக ஆசையை, சரீரச் சொகுசை மட்டுப்படுத்தி, நமது தேகத்தையும் சற்றே ஒறுப்போமாக. அப்போது ஞான ஒடுக்கத்துக்கு வேண்டிய அடக்கமும் ஒடுக்கமும் நம்மிடத்தில் காணப்படும். சருவேசுரனும் நமக்கு வேண்டிய விசேஷ வரப்பிரசாதங்களையெல்லாம் ஏராளமாய் நமக்குப் பொழிந்தருளுவார். இப்படியே நாம் தேவ உதவியினால் முற்றாக மனந்திரும்பி, ஆண்டவருக்கு ஏற்ற உத்தம கிறீஸ்த சீவியத்தை நடத்தி, ஒரு நாள் அவருடைய பேரின்ப திருமுகதரிசனத்தையும் அடைந்துகொள்ளுவோம்.

ஆமென்.