இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பரிந்து பேசுதலைப் புதுப்பிக்கிறார்

நம் ஆண்டவரின் பிரிய சீடனாகிய அர்ச். அருளப்பர் தமது முதல் நிருபத்தில், "நீதிபரனாகிய சேசுக்கிறீஸ்துநாதர் பிதாவிடத்தில் நமக்கு மனுப்பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தப்பலியாய் இருக்கிறார்" (1 அரு.2:1-2) என்று கூறுகிறார். 

இந்த வார்த்தைகள் நம் இரட்சணியத்திற்கு எப்பேர்ப்பட்ட ஆறுதல் தரும் உறுதிப்பாட்டை நமக்குத் தருகின்றன! ஏனெனில் ஜீவியரையும், மரித்தோரையும் நடுத்தீர்க்கிறவராகிய சுதனாகிய சர்வேசுரன் தாமே நம்மை ஆதரித்துப் பாதுகாப்பவராகவும், நமக்காகப் பரிந்து பேசுபவராகவும் இருக்கிறார்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது: எப்போது, எங்கே கிறீஸ்துநாதர் தமது இந்த அலுவலை நிறைவேற்றுகிறார்? பரலோகத்தில் மட்டுமல்ல, மாறாக, பூலோகத்திலும், பூசையில் கிறீஸ்துநாதர் நமக்காக மன்றாடுகிறார் என்றும், கடவுளின் இரக்கத்திடம் நம்மை ஒப்படைக்கிறார் என்றும் கத்தோலிக்கத் திருச்சபை விசுவசித்துப் போதிக்கிறது. அறிஞரான சுவாரஸ் இதுபற்றிக் கூறும்போது, "பூசைப் பலி எவ்வளவு அடிக்கடி ஒப்புக்கொடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் சேசுநாதர் அதை ஒப்புக்கொடுப்பவர்களுக்காகவும், யாருக்காக அது ஒப்புக்கொடுக்கப்படுகிறதோ, அவர்களுக்காகவும் மன்றாடுகிறார்" என்று கூறுகிறார். 

அதாவது, அவர் பலி நிறைவேற்றும் குருவுக்காகவும், அவருடைய ஜெபங்களோடு தங்கள் ஜெபங்களை இணைக்கும் மக்களுக்காகவும், குருவானவரும் மக்களும் யாருக்காக இந்த திவ்வியபலியை ஒப்புக்கொடுக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்காகவும் கிறீஸ்துநாதர் மன்றாடுகிறார்.

அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் இந்தப் பரிந்து பேசுதலைக் கிறீஸ்துநாதர் ஒப்புக்கொடுக்கும் விதத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்: ''கிறீஸ்துநாதர் ஞான முறையில் பீடத்தின் மீது பலியாக்கப்படும்போது, அவர் தம் பரலோகப் பிதாவைக் கூவியழைக்கிறார்; தமது ஏக்கமுள்ள மன்றாட்டின் பலனாக, மனிதன் நித்திய சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்படியாக, அவர் தம் பிதாவுக்குத் தம் திருக்காயங்களைக் காண்பிக்கிறார். 

"இவை ஆறுதல் தரும் வார்த்தைகள், ஏனெனில் கிறீஸ்துநாதர் எவ்வளவு பிரமாணிக்கமாக நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்றும், எவ்வளவு ஆழமாக நம் சார்பாக அவர் அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்றும் அவை காண்பிக்கின்றன. பூலோகத்தில் அவர் தங்கியிருந்தபோது, அவர் நம் இரட்சணியத்தைப் பற்றி எந்த அளவுக்கு ஏக்கம் கொண்டிருந்தார் என்றால், அவர் அடிக்கடி இரவு முழுவதையும் ஜெபத்திலும், கண்விழிப்பிலும் செலவிட்டார். 

இதை அர்ச். லூக்காஸ், "அவர் ஜெபம் செய்யத்தக்கதாக ஒரு மலைக்குப் புறப்பட்டுப் போய், சர்வேசுரனை வேண்டிக்கொள்வதிலே இரவெல்லாம் செலவழித்தார்” (6:12) என்று கூறுகிறார். இது எப்போதாவது நடக்கும் நிகழ்வு அல்ல. அதே சுவிசேஷகரிடமிருந்து இதையும் நாம் அறிந்து கொள்கிறோம்: ''பகற்காலங்களிலே அவர் தேவாலயத்தில் உபதேசித்துக் கொண்டு வருவார். இராக்காலங்களிலோ வெளியே போய், ஒலிவ மலை என்னப்பட்ட மலையில் தங்குவார்" (லூக். 21:37). 

அடுத்த அதிகாரத்தில் அவரே தொடர்ந்து, 'அவர் வெளியே புறப்பட்டுத் தம்முடைய வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார்" (லூக். 22:39) என்று கூறுகிறார். 

இந்த வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ள முடியாதபடி, சேசுநாதர் ஒலிவ மலைக்குச் சென்று, இரவு முழுவதையும் திறப்பான வானவிதானத்தின் கீழ் ஜெபத்தில் கழிப்பார். எதற்காக, அல்லது யாருக்காக அவர் ஜெபித்தார்? "ஆண்டவர் தமக்காக எதையும் கேட்டதில்லை, மாறாக எனக்காகவே அவர் ஜெபித்தார்" என்று அர்ச். அமிர்தநாதர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறார். 

ஆகவே, இரட்சகர் முழு இரவுகளை ஜெபத்தில் கழித்தது தமக்காக அல்ல: அது மனிதனின் நிமித்தமாக, நாம் நித்திய அழிவிலிருந்து இரட்சிக்கப்படும்படியாக. மனிதர்களுக்காகத் தாம் பாடுபட்டு மரித்த பின்னரும், கோடிக்கணக்கான மனிதர்கள் நித்தியத்திற்கும் இழக்கப்படுவார்கள் என்பதை அவர் தீர்க்கதரிசனமாகக் கண்டதால், இந்த ஆன்மாக்களின் இழப்பு அவரது பரிதாபம் நிறைந்த கண்களிலிருந்து ஏராளமான கண்ணீர்த் துளிகளைப் பொங்கி வழியச் செய்தது, அவருடைய தயை நிரம்பிய இருதயத்திலிருந்து வெளிப்பட்ட ஏராளமான பெருமூச்சுக்கள் வலிமையுள்ள மன்றாட்டாக மோட்சத்தை நோக்கி உயர்ந்து சென்றன.

நமது ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகர் பூலோகத்தில் இருந்த போது, அவர் ஒப்புக்கொடுத்த பக்தியார்வமிக்க ஜெபங்களை, உலகில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசையிலும் அவர் புதுப்பித்து, மீண்டும் மீண்டும் ஒப்புக்கொடுக்கிறார். மிகச் சுருக்கமாக, ஆனால் மீண்டும் ஒரு முறை முழுவதுமாக அவை ஜெபிக்கப்படுவது போல, அவர் அவற்றைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாக சமர்ப்பிக்கிறார். 

மேலும், பாவிகளின் இரட்சணியத்திற்காகத் தாம் மனங்கசந்து சிந்திய கண்ணீர்த் துளிகளைக் கண்ணோக்கும்படி அவர் பிதாவை மன்றாடுகிறார்; மனிதனின் மீறுதல்களின் காரணமாகத் தம் இருதயத்தைக் கிழித்த தமது பெருமூச்சுகளையும், கடவுளிடமிருந்து தொலைவாக வழிதவறிச் சென்று விட்டவர்களுக்காகக் கண்விழிப்பிலும், ஜெபத்திலும் தாம் கழித்த முழு இரவுகளையும் அவருக்கு நினைவுப்படுத்துகிறார். 

இவை அனைத்தையும் உலக இரட்சணியத்திற்காகவும், விசேஷமாக, பூசையில் பங்குபெறும் ஒவ்வொரு தனிமனிதனுடைய இரட்சணியத்திற்காகவும் அவர் ஒப்புக்கொடுக்கிறார். தமது தெய்வீகமாக்கப்பட்ட மனுஷீகத்தின் முழுமையான வல்லமையில், பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தராகிய சேசுக்கிறீஸ்துநாதரால் ஜெபிக்கப்பட்ட இந்த ஜெபங்களின் புனிதத்துவமும், பக்திப்பற்றுதலும், வற்புறுத்தலும் எப்பேர்ப்பட்ட தாக இருக்க வேண்டுமென்று சிந்தித்துப் பாருங்கள்! 

கடவுளிடம் இந்த ஜெபங்கள் எப்படி முழு வல்லமை கொண்டவையாக இருக்க வேண்டும்! அவை அவருடைய பார்வையில் எவ்வளவு பிரியத்திற்குரியவையாக இருக்க வேண்டும்! யாருக்காக அவை ஒப்புக் கொடுக்கப்படுகின்றனவோ, அவர்களுக்கு அவை எவ்வளவு அதிகமான நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும்! அவை யாரை நோக்கி ஜெபிக்கப்படுகின்றனவோ, அந்தப் பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு அவை எவ்வளவு ஏற்புடையவையாக இருக்க வேண்டும்!