ஸ்பெயின் நாட்டின் பெரும் பகுதியை மூர் இனத்தவர்கள் அடக்கியாண்டு கொண்டிருந்தபோது, பெரும் எண்ணிக்கையிலான கிறீஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருந்த கேரவாக்காவின் அரசன் ஒருவனின் இருதயம் அவர்கள் மீது ஒரு பரிதாப உணர்வால் தொடப்பட்டது.
அவன் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கட்டளையிட்டு, அவர்கள் அனைவரும் தன் முன் வரும்படி கட்டளையிட்டான். அதன்பின் அவன் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவனவனது தொழில் அல்லது கைவேலை என்ன என்று விசாரித்து, அந்த வேலையைச் செய்ய அனுமதியும் கொடுத்தான்.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒரு குருவும் இருந்தார். தம்மிடமும் இதே கேள்வி கேட்கப்பட்ட போது, எல்லாம் வல்ல சர்வேசுரனையே பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இழுத்து வர வல்லமை பெற்றது தமக்குத் தரப்பட்ட தேவ அழைத்தல் என்று அவர் கூறினார்.
இந்த வல்லமை தமக்கு இருப்பதை அவர் எண்பிக்க வேண்டும் என்ற தன் ஆசையை அரசன் வெளியிட, திவ்விய பலி பூசை நிறைவேற்ற கிறீஸ்தவ குருக்களுக்குத் தேவையான அனைத்தும் தமக்குக் கிடைத்தாலன்றி, தம்மால் அரசனது ஆசையை நிறைவேற்ற இயலாது என்று குருவானவர் பதிலளித்தார்.
எனவே தேவையான அனைத்தையும் எழுதித் தரும்படி அரசன் கட்டளையிட்டான். குரு ஒன்றைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் எழுதினார். பாடுபட்ட சுரூபத்தை அவர் அடியோடு மறந்து விட்டார்.
அனைத்தும் கொண்டு வரப்பட்டு, தாம் பூசை தொடங்கத் தயாராகும் வரை அவர் இதைக் கண்டுபிடிக்கவில்லை. இதனால் மிகுந்த கவலையடைந்த குரு, அது இல்லாமல் பூசை வைப்பதா கூடாதா என்ற குழப்பத்திற்கு உள்ளானார்.
ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட அரசன், அந்தக் குரு தம் கலையில் நிபுணர் அல்ல என்று எண்ணிக் கொண்டு, அவரது குழப்பத்திற்குக் காரணத்தை வினவினான்.
குரு தம் கலக்கக்தின் காரணத்தை மறைக்காமல், தாம் பாடுபட்ட சுரூபத்தைக் குறிப்பிட மறந்து விட்டதாகவும், அது இல்லாமல் பூசை வைப்பது சரியா இல்லையா என்பது தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.
இந்தப் பிரச்சினையில் தமக்கு உதவுமாறு அவர் கடவுளை மன்றாடிக் கொண்டிருக்க, இதோ, பீடம் அமைக்கப்பட்டிருந்த அறையின் கல்லாலான வளைவான கூரை திறந்தது. சூரியனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்த இரு தேவதூதர்கள், விலையேறப்பெற்ற ஆடைகள் அணிந்தவர்களாக, மரத்தாலான ஒரு சுடர்வீசும் மிகப் பெரிய பாடுபட்ட சுரூபம் ஒன்றைத் தாங்கியபடி இறங்கி வந்தார்கள்.
அவர்கள் அதைப் பீடத்தின் மேல் வைத்து, பூசையைத் தொடங்கும்படி குருவுக்குக் கட்டளையிட்டார்கள்! அரசனும், கூடியிருந்த அனைவரும், அச்சத்தால் நிரப்பப்பட்டவர்களாக முகங்குப்புறத் தரையில் விழுந்தார்கள், மோட்சத்திலிருந்து வந்தவர்கள் மறைந்து போகும் வரை, இவர்கள் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியவில்லை.
சம்மனசுக்களை இவர்கள் தெய்வங்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். அதன்பின் சர்வ வல்லப தேவனைப் பரலோகத்தில் இருந்து இறங்கி வரச் செய்ய குருவானவருக்கு இருந்த வல்லமையை அவர்கள் சந்தேகிக்கவேயில்லை.
கிறீஸ்தவ வேதமே உண்மையான வேதம் என்பதை அவர்கள் மனதார ஏற்றுக் கொண்டார்கள். இந்தத் திருச்சிலுவை இன்றும் ஸ்பெயினிலுள்ள கேரவாக்காவில் பாதுகாக்கப்பட்டு, பெரிதும் மதித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு நிறைவு அன்று, அது விசுவாசிகளின் வணக்கத்திற்காக ஸ்தாபித்து வைக்கப்படுகிறது; அது அமிழ்த்தப்பட்ட தண்ணீரைப் பருகியதன் மூலம் ஏராளமான நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த உண்மை நிகழ்ச்சி திவ்விய பலிபூசையின் உன்னத மகத்துவத்தையும், மிகப் பரிசுத்த பூசைப் பலி உரிய விதத்திலும் முறையாகவும் நிறை வேறுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொருட்களில் எதுவும் குறைவுபடாதிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் எண்பிக்க உதவுகிறது.