(பாரம்பரியப் பூசையில்) பூசை நிறைவேற்றும் குருவானவர் செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்முறைகளும் பரிசுத்த பூசைப் பலியின் உன்னத மகத்துவத்திற்கு சாட்சியம் தருகின்றன.
சில முக்கியமான செயல்முறைகளை நாம் இங்கு பட்டியலிட்டுக் காட்டுவோம்:
குரு 16 முறை தம் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்கிறார்;
ஆறு முறை அவர் மக்களை நோக்கித் திரும்புகிறார்;
எட்டு முறை அவர் பீடத்தை முத்தமிடுகிறார்;
பதினொரு முறை அவர் பரலோகத்தை நோக்கித் தம் கண்களை உயர்த்துகிறார்;
பத்து முறை அவர் தம் மார்பில் அறைந்து கொள்கிறார்.
பத்து முறை அவர் முழந்தாளிடுகிறார்;
ஐம்பத்து நான்கு தடவைகளுக்கும் குறையாமல் அவர் தம் கரங்களை ஒன்று சேர்க்கிறார்;
முப்பது தடவைகள் அவர் தம் சிரசையோ, அல்லது தம் உடல் முழுவதையுமோ தாழ்த்தி, பணிந்து வணங்குகிறார்;
பலிப் பொருட்களின் மீது முப்பத்தொரு தடவைகள் அவர் சிலுவை அடையாளம் வரைகிறார்;
சில சமயங்களில் தம் கரங்களை விரித்தபடியும், மிக அடிக்கடி மடக்கிய கரங்களோடும் அவர் ஜெபிக்கிறார்;
ஒன்பது முறை அவர் தம் இடக்கரத்தைப் பீடத்தின் மீது வைக்கிறார்;
பதினொரு முறை அவர் அதைத் தம் மார்பின் மீது வைக்கிறார்;
எட்டுத் தடவைகள் அவர்தம் இரு கரங்களையும் பரலோகத்தை நோக்கி உயர்த்துகிறார்;
பதினொரு முறை அவர் மவுனமாக ஜெபிக்கிறார்;
பதின்மூன்று முறை அவர் சத்தமாக ஜெபிக்கிறார்;
பத்துத் தடவைகள் திருக் கிண்ணம் மூடித் திறக்கப்படுகிறது;
இருபது முறை குருவானவர் பீடத்திற்கு முன்பாக முன்னும் பின்னுமாக நகர்கிறார்.
அடிக்கடி பல தடவை செய்யப்படும் இந்தச் செயல்களும், சுமார் 150 வேறு செயல்களும் பூசை நிறைவேற்றும் குரு கட்டாயம் அனுசரிக்க வேண்டிய கடமைகளாக இருக்கின்றன.
இவை தவிர, இன்னும் கடைப்பிடிக்க வேண்டிய 400 சடங்குகளும் இருக்கின்றன.
பூசை நிறைவேற்றும் குரு உரோமைப் பூசைப் புத்தகத்தின்படி இந்தச் சடங்குகளைக் கண்டிப்பாக அனுசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
அவற்றில் தவறுவது அவருக்குப் பாவமாக இருக்கிறது. ஏனெனில் இந்த ஒவ்வொரு சடங்கும் ஒரு பரம இரகசிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் இந்தப் பரிசுத்தமான, பக்திக்குரிய செயலானது முறையாகவும், வணக்கத்தோடும் நிறைவேற்றப்பட உதவுகின்றன.
இவ்விஷயத்தில், கர்தினால்மார், அதிமேற்றிராணிமார், மேற்றிராணிமார், உயர்குருநிலையினர், குருக்கள் அனைவரும் வேறு எந்த முறையிலுமன்றி, இந்த முறைப்படி மட்டுமே பூசை நிறைவேற்ற வேண்டும், எதையும் சேர்ப்பதன் மூலமோ, அதையும் அதிலிருந்து விலக்குவது மூலமோ, எந்த விதத்திலும் அதிலிருந்து அவர்கள் விலகிச் செல்லக் கூடாது என்று பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் தமது குவோ ப்ரிமும் தெம்ப்போரே (1570) ஆணை மடலின் மூலம் கண்டிப்பான முறையில் கட்டளையிட்டார்.
ஒரு குரு இந்தச் சடங்குகளில் எதையாவது மனப்பூர்வமாகவும், தான் செய்வதை நன்றாக அறிந்து வேண்டுமென்றும் மாற்றுகிறார், அல்லது தவிர்த்து விடுகிறார் என்றால், அது அவருடைய ஒரு இலேசான அசட்டைத்தனமாகக் கருதப்படாமல், ஒரு கனமான பாவமாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், அது அனைத்திலும் உயர்ந்த வழிபாட்டுச் செயலின் மகத்துவத்திற்கும், மேன்மைக்கும் எதிரான ஒரு குற்றம் மட்டுமல்ல, மாறாக, திருச்சபையின் நேரடியான ஒரு சட்டத்தை வேண்டுமென்றே மீறும் குற்றமாகவும் அது இருக்கிறது.
பூசையின் சடங்குகளை எந்த விதத்திலாவது குருவானவர் மீறும் ஒவ்வொரு முறையும், ஒரு புதிய பாவம் அவரது கணக்கில் சேர்கிறது.
இதன் காரணமாக, தங்களுக்காகப் பூசைப் பலி நிறைவேற்றுவதில் இத்தகைய கண்டிப்பான விதிகளை அனுசரிக்கக் கடமைப்பட்டுள்ள குருவுக்கு நன்றி செலுத்த விசுவாசிகளுக்குள்ள கடன் அற்பமானது அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இதன் பலனாக, அவர் ஒரு நித்திய வெகுமதியைச் சம்பாதித்துக் கொள்கிறார், ஆனால் உலக ரீதியான ஒரு வெகுமதிக்கும் அவர் உரிமையுள்ளவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. வழக்கமாக அவருக்குத் தரப்படும் பூசைப்பணம் நிறுத்தப்படக் கூடாது, ஏனெனில் அர்ச். சின்னப்பர் நமக்கு நினைவூட்டுவது போல, "பீடத்தின் பரிசாரகர் பீடத்திலுள்ளவைகளில் பங்கடைகிறார்கள்'' (1 கொரி. 9:13).
குருவானவர் ஏன் பிரதேச மொழியில் அல்லாமல், தெரியாத மொழியாகிய இலத்தினில் பூசை வைக்கிறார் என்ற கேள்வி எழுமானால், நாம் இப்படிப் பதில் சொல்ல வேண்டும்: பூசை என்பது ஒரு பிரசங்கம் அல்ல, மக்களுக்கு ஏதாவது ஒரு காரியத்தைப் போதிப்பது அதன் நோக்கமல்ல. அது, அவர்களுக்காகப் புதிய ஏற்பாட்டுப் பலி கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் செயலாக இருக்கிறது.
ஒரு போதும் மாற முடியாத ஒரு மொழியில் இது ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. சில மொழிகள் இறந்த, வழக்கொழிந்து போன மொழிகள் எனப்படுகின்றன. சில, உயிருள்ளவை எனப்படுகின்றன: முந்தின வகை மொழிகள் மேற்கொண்டு புழக்கத்தில் இல்லாதவை, இதன் காரணமாக, அவை மாற முடியாதவையாக இருக்கின்றன. பிந்தின வகை மொழிகள், பல்வேறு மக்களினங்கள் பேசுவதற்கான ஊடகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக, அவை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த உயிருள்ள மொழிகளில் ஒன்றில் பூசை வைக்கப்படுமானால், இம்மொழிகளில் வார்த்தைகளின் பொருள்கள் காலப்போக்கில் மாறிப் போவதால், வார்த்தை வடிவங்களின் தொடக்க கால முக்கியத்துவமும் மாறி விடும்.
இந்த ஆபத்திற்கு எதிராகத் திருச்சபை விழிப்பாயிருக்க வேண்டியுள்ளது. பரிசுத்த வேதத்தின் அடிப்படையான பாகம் மாற்றப்பட முடியாதது போலவே, வேத மொழியும் எப்போதும் மாற்றப்படாமல் நிலைத்திருக்க வேண்டும். உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்கத் திருச்சபை ஒரே விதமான சத்தியங்களைத்தான் போதிக்கிறது என்பது, அது பயன்படுத்துகிற மொழியின் மூலம் அழகாக விளக்கிக் காட்டப்படுகிறது.
கத்தோலிக்கன் உலகின் எந்தப் பகுதியில் தான் இருக்கக் கண்டாலும், அங்கே அவன் அறிக்கையிடும் விசுவாசத்தின் மாபெரும் பரம இரகசியம் அதே முறையில், அதே மொழியில், நிறைவேற்றப்படுகிறது.
சாதாரணக் கிறீஸ்தவன் பூசையின் இலத்தின் ஜெபங்களின் பொருளை அறியாமலே இருந்து விடாதபடி, பரிசுத்த திருச்சபை தன் பிள்ளைகள் மீது தனக்குள்ள தாய்க்குரிய அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு ஜெபப் புத்தகங்களில் அந்த ஜெபங்களைத் தருகிறது. (அதாவது, பூசையை விசுவாசிகள் சரியான முறையில் பின்பற்றுவதற்குப் பயன்படுத்த வசதியாக கைகளில் வைத்துக் கொள்ளக் கூடிய பூசைப் புத்தகங்கள்).
இவை அந்தந்த நாட்டின் பிரதேச மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். நாம் பார்த்துள்ளபடி, பூசைச் செபங்களையும், சடங்குகளையும் யாரும் புரிந்து கொள்ளத் தவறி விடாதபடி, ஆத்துமங்களைத் தங்கள் பொறுப்பில் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அடிக்கடி தத்தம் மந்தைக்கு அடிக்கடி விளக்கிக் கூறுவதைத் திருச்சபை அவர்களுக்குக் கடமையாக்குகிறது.