இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கத்தோலிக்கப் பூசை விளக்கம் - அப்போஸ்தலர்களுக்குப் பூசை வைக்கும் வழக்கம் இருந்தது

அப்போஸ்தலர்களுக்குப் பூசை வைக்கும் வழக்கம் இருந்தது என்பதைப் பரிசுத்த வேதாகமத்திலிருந்தும், அப்போஸ்தலர்களின் சரித்திரங்களிலிருந்தும் நாம் அறிந்து கொள்கிறோம். 

அர்ச். மத்தேயு திவ்விய பலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். அர்ச். பிலவேந்திரர் நீதிபதியிடம்: "நான் அனுதினமும் சர்வ வல்லபரான சர்வேசுரனுக்கு பீடத்தின் மீது காளைகளின் மாமிசத்தையும், வெள்ளாடுகளின் இரத்தத்தையும் அல்ல, மாறாக, கடவுளின் மாசற்ற செம்மறிப்புருவையானவரையே ஒப்புக் கொடுக்கிறேன்" என்று கூறினார் என்று பாரம்பரியம் கூறுகிறது. 

அப்போஸ்தலரான அர்ச். யாகப்பராலும், அர்ச். மாற்குவாலும் இயற்றப்பட்ட பூசைக்கான வழிபாட்டுச் சடங்குகள் இன்றும் உள்ளன. 

பூசையின் பலிப்பாகத்தை அர்ச். இராயப்பர் உருவாக்கியதாகவும், மற்ற பாகங்கள் வேறு சில பரிசுத்த பாப்பரசர்களால் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை சொல்லப்பட்ட அனைத்து காரியங்களையும் பார்க்கும்போது, ஆதியிலிருந்தே திருச்சபையில் பூசை நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது என்பதும், அதுவே புதிய ஏற்பாட்டின் மெய்யான பலி என்று எல்லாக் காலங்களிலும் மதிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் விளங்குகிறது. 

திவ்விய பலிபூசையின் மீது பதிதர்கள் தொடுத்துள்ள தாக்குதல்கள் மிகப் பரிசுத்த பூசைப் பலிக்கு எதிராகப் பல்வேறு காலங்களில் தீய எதிரியானவன் கட்டவிழ்த்து விட்டுள்ள கலாபனைகள், அது எவ்வளவு புனிதமான கைங்கரியமாக இருக்கிறது என்பதற்கும், அது பசாசுக்கு எவ்வளவு பயங்கரமும், வெறுப்பும் வருத்துவிப்பதாக இருக்கிறது என்பதற்குமான நிரூபணமாக இருக்கிறது; அப்படி இராவிடில், இவ்வளவு அதிக வன்மையோடு அவன் அதைத் தாக்க மாட்டான். 

கிறீஸ்தவத் திருச்சபையின் முதல் பத்து நூற்றாண்டுகளில் உண்மையில் தப்பறைகளைப் போதித்தவர்களுக்குக் குறைவேயில்லை, ஆயினும் அவர்களில் யாரும் பூசையைத் தாக்கத் துணியவில்லை; அதை விடக் குறைவாகவே அதை அகற்றி விட அவர்கள் முயன்றார்கள். 

தூர்ஸ் பட்டணத்தைச் சேர்ந்த பதிதனான பெரங்காரியுஸ் என்பவன்தான் திவ்விய பலிபூசைக்கு எதிராகப் பேசவும் எழுதவும் முதன்முதலாகத் தகாத் துணிவு கொண்டான். அவனுடைய தப்பறையான போதனை அன்றைய கத்தோலிக்க வேத சஸ்திரிகளால் வெற்றிகரமாக வெளியாக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது. மேலும், அது ஒரு பொதுச்சங்கத்தாலும் (உரோமை --1079) கண்டனம் செய்யப்பட்டது. 

பரிதாபத்திற்குரியவனாக வாழ்ந்த இவன், தன் மரணத்திற்கு முன்பாகத் தன் தப்பறைகளை விட்டு விலகி, கத்தோலிக்கத் திருச்சபையின் மனஸ்தாபமுள்ள ஒரு மகனாகத் தன் வாழ்நாட்களை முடித்தான்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கியபோது, அவபக்தியாளர்களாகிய ஆல்பிஜென்ஸியப் பதிதர்கள் பிரான்ஸ் நாட்டில் தோன்றினார்கள். பல்வேறு தப்பறைக் கொள்கைகளை அவர்கள் பரப்பினார்கள். 

திருமணம் தேவ சட்டத்திற்கு எதிரானது என்று சாதித்த அவர்கள், ஒழுக்கக் கேடான, அசுத்த வாழ்வை ஊக்குவித்தனர். பெரிய மக்கள் கூட்டத்தின் முன்பாக, ஆடம்பர திவ்விய பலி பூசை நிறைவேற்றப்படுவதை அவர்கள் எதிர்க்கவில்லை, ஆனால் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றும் சாதாரணப் பூசையை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

உண்மையில் அவர்கள் அதைத் தடை செய்தார்கள். அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கும், அவற்றில் பங்குபெறும் விசுவாசிகளுக்கும் அபராதங்களும், சிறைத் தண்டனையும் விதித்தார்கள். இந்தப் பதிதர்கள் தொடர்பாக, இதே காலகட்டத்தில் வாழ்ந்த ஹைஸ்டர்பாக்கின் செசார் என்பவர் பின்வரும் சம்பவத்தை விவரிக்கிறார்:

சாதாரணப் பூசை வைக்கலாகாது என்றும், அப்படி வைக்கும் குருக்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாவார்கள் என்றும் ஆல்பிஜென்ஸியர்கள் குருக்களைத் தடை செய்திருந்தார்கள் என்றாலும், பக்தியுள்ள குரு தனிப் பூசை செய்வதற்கு எதிரான இந்த அநியாயமான தடைக்குப் பணிந்து போக விரும்பவில்லை. 

அவர் தனிப்பூசை வைத்தது தெரிய வந்ததும் அவர் கைது செய்யப்பட்டு, சங்கத்திற்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டார். சங்கத்தினர் அவரிடம், "எங்கள் தடையையும் மீறி நீர் ஒரு சாதாரணப் பூசை வைத்து, ஒரு கடுமையான குற்றத்தைச் செய்திருக்கிறீர் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது; ஆகவே இது உண்மைதானா என்று நேரடியாக எங்களுக்குப் பதில் தரும்படி நாங்கள் உம்மை இங்கே எங்கள் முன்பாகக் கொண்டு வந்திருக்கிறோம்'' என்றார்கள். 

குருவானவர் எந்த விதமான அச்சத்தின் அடையாளமும் இன்றி, அடுத்த கணமே இப்படிப் பதிலளித்தார்: "கிறீஸ்துவின் திருநாமத்தில் போதித்ததன் மூலம் சட்டத்தை மீறிவிட்டதாக யூதச் சங்கத்திற்கு முன்பாகத் தாங்கள் விசாரிக்கப்பட்ட போது பரிசுத்த அப்போஸ்தலர்கள் கூறிய அதே வார்த்தைகளில் நான் உங்களுக்குப் பதில் தருவேன்: "மனிதர்களுக்கு அல்ல, கடவுளுக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்” (அப். நட 5:29).

ஆகவே, இக்காரணத்திற்காக, உங்கள் அநீதியான தடையையும் மீறி, கடவுளுக்கும் அவருடைய திரு மாதாவுக்கும் தோத்திரமாக நான் பூசை வைத்தேன்." இந்தத் துணிச்சலான பதிலைக் கேட்டுக் கோபவெறி கொண்ட நீதிபதிகள் அந்த பக்தியுள்ள குருவின் நாக்கு, எல்லா மனிதர்களின் முன்னிலையிலும் அறுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அந்தக் குருவானவர் மிகப் பெரும் பொறுமையோடு இந்தக் கொடூரமான தண்டனையை அனுபவித்தார். 

தம் வாயில் இன்னும் இரத்தம் வழிந்து கொண்டிருக்க, நேராகக் கோவிலுக்குச் சென்ற அவர், தாம் பூசை வைத்த பீடத்திற்கு முன்பாகத் தாழ்ச்சியோடு முழந்தாளிட்டு, தேவ தாயாரின் திருச்சன்னிதியில் தமது மன்றாட்டை சமர்ப்பித்தார். தம் நாவைக் கொண்டு இனி பேச முடியாத நிலையில் இருந்த அவர், முன் எப்போதையும் விட அதிகமாக பக்திப் பற்றுதலோடு தம் இருதயத்தை நம் திவ்விய அன்னையிடம் எழுப்பி, தம் நாவு மீண்டும் தமக்குத் தரப்பட வேண்டும் என்று அவர்களிடம் மன்றாடினார். 

அவருடைய மன்றாட்டு எவ்வளவு விசுவாசமும், உத்வேகமும் நிறைந்ததாக இருந்தது என்றால், இதோ, சர்வேசுரனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய மாதா அவருக்குத் தோன்றி, தன் சொந்தக் கரத்தால் அவருடைய வாயில் மீண்டும் அவருடைய நாவு தோன்றச் செய்தார்கள். அத்துடன், பூசை நிறைவேற்றியதன் மூலம் ஆண்டவராகிய சர்வேசுரனுக்கும் தனக்கும் அவர் செலுத்திய சங்கை மரியாதையின் பொருட்டு அவரது நாவு அவருக்குத் திரும்பத் தரப்படுவதாகக் கூறிய மாமரி, எதிர்காலத்திலும் இதே முறையில் அதைப் பயன்படுத்தும்படி அவருக்கு அறிவுரை கூறினார்கள். 

தமது நேச உபகாரிக்கு இருதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பிறகு, குருவானவர் மீண்டும் கூடியிருந்த மக்களிடம் திரும்பி வந்து, தமது நாக்கு தமக்குத் திரும்பத் தரப்பட்டு விட்டது என்று அவர்களுக்குக் காட்டினார். இதன் மூலம் பிடிவாதமான பதிதர்கள் மற்றும் திவ்விய பலிபூசையைப் பகைத்து வந்த அனைவரின் மத்தியிலும் பெரும் குழப்பத்தை அவர் ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்ட சிறு நூலின் முகவுரையில் சுவாமி செசாரின் வார்த்தைகள், அவற்றின் மீது எந்த சந்தேகமும் வர இடமளிக்கவில்லை. "நான் என் சொந்தக் கண்களால் கண்ட, அல்லது பொய் சொல்வதை விட இறந்து விடவும் தயாராக இருக்கும் மனிதர்கள் சொல்லக் கேட்டவை தவிர வேறு எதையும் இந்த நூலில் நான் எழுதவில்லை என்பதற்குக் கடவுளையே சாட்சியாக வைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். 

ஆகவே, திவ்விய பலி பூசை விசேஷமான முறையில் மகா உந்நத சர்வேசுரனுக்குப் பிரியமானதாக இருக்கிறது என்ற சத்தியத்திற்கு எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டுள்ள அனைவரையும் நம்பச் செய்வதற்கு, இந்த உண்மை நிகழ்வு போதுமானதாக இருக்க வேண்டும்.