இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புதிய ஏற்பாட்டின் மாபெரும் பிரதான குருவானவர்

இது வரை சொல்லப்பட்டவைகளில் இருந்து, திவ்விய பலி பூசையின் மிக உயர்வான மகத்துவத்தைப் பற்றி நாம் ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஆயினும், இந்த தெய்வீகப் பலியை ஒப்புக்கொடுப்பவர் யார் என்பதை நாம் சிந்திக்கும்போது, இதை நாம் அதிக முழுமையாகப் புரிந்து கொள்வோம். உண்மையில், யார் அவர்? 

ஒரு குருவா, அல்லது மேற்றிராணியாரா, ஒரு பாப்பரசரா, ஒரு சம்மனசானவரா, ஓர் அர்ச்சியசிஷ்டவரா, அல்லது ஒரு வேளை கடவுளின் மகா பரிசுத்த திருமாதாவா? இல்லை! அவர் வேறு யாருமின்றி, சகல குருக்களிலும், மேற்றிராணிமாரிலும் மேலான குருவும், மேய்ப்பருமானவர், நித்திய பிதாவின் ஏகபேறான திருச்சுதனாகிய சேசுக் கிறீஸ்துவானவர், பிதாவினால் பிரதான குருவாக அபிஷேகம் செய்யப்பட்டவர், மெல்கி செதேக்கின் முறைப்படி என்றென்றும் குருவாயிருப்பவர். இந்த சாத்தியமே திவ்விய பலி பூசைக்கு அதன் அளப்பரியதும், அனைத்திற்கும் அப்பாற்பட்டதுமான உன்னத மகத்துவத்தைத் தருகிறது, இதுவே மிக உண்மையான விதத்தில் அதை ஒரு தெய்வீகப் பலியாக்குகிறது.

பூசையில் மாபெரும் பிரதான குருவாகிய கிறீஸ்துநாதர் தாமே அந்தப் பரிசுத்த பலியை நிறைவேற்றுகிறார் என்ற உண்மைக்கு அர்ச். க்றி சோஸ்தோம் அருளப்பர் பின்வரும் வார்த்தைகளில் சாட்சியம் தருகிறார்: "குருவானவர் ஓர் ஊழியர் மட்டுமே, ஏனெனில் பலிப் பொருளை அர்ச்சிப்பவரும், அதை மாற்றமடையச் செய்பவரும் கிறீஸ்துநாதர்தான். அவரே கடைசி இராப் போஜனத்தின் போது, அப்பத்தைத் தம்முடைய திருச்சரீரமாக மாற்றினார். அதை அவர் இப்போது தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். ஆகவே, கிறீஸ்தவனே, குருவானவரைப் பீடத்தினருகில் நீ காணும் போது, அவர்தான் பலி செலுத்துகிறவர் என்று நினைத்து விடாதே, மாறாக, ஊனக் கண்களுக்குத் தெரியாத கிறீஸ்துநாதரின் திருக்கரமே அதைச் செலுத்துகிறது என்று விசுவசி. 

இந்த வார்த்தைகளின் மூலம், கிறீஸ்து தாமே தமது சொந்த ஆளுமையில் இந்த மாபெரும் பலிச் செயலை நிறைவேற்றுகிறார் என்றும், அவர் இறங்கி வருகிறார். அதாவது மோட்சத்திலிருந்து இறங்கி வருகிறார் என்றும், அவர் அப்பத்தையும், இரசத்தையும் தமது திருச்சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றுகிறார் என்றும், அவர் உலக இரட்சணியத்திற்காகத் தம்மையே பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறார், பிரமாணிக்கத்தோடு பரிந்து பேசுபவர் என்ற முறையில் அவர் தம் மக்களின் நன்மைக்காக மன்றாடுகிறார் என்றும் அர்ச். க்றி சோஸ்தோம் அருளப்பர் சந்தேகத் திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறார். 

குருக்கள் அவருடைய ஊழியர்களாக மட்டுமே இருக்கிறார்கள். கருவிகளாகிய தங்கள் வழியாக, அவர் தெய்வீகப் பலியை ஒப்புக்கொடுக்கும்படியாக, அவர்கள் தங்கள் உதடுகளையும், தங்கள் குரலையும், தங்கள் கரங்களையும் அவர் பயன்படுத்தும்படி விட்டுக் கொடுக்கிறார்கள்.

அர்ச். கறிசோஸ்தோம் கூறுவதை எவனும் நம்ப மறுத்து விடாதபடி, நாம் மற்றொரு சாட்சியளத்தைத் தருவோம். அதை எதிர்த்துக் கேள்வி கேட்க எவனும் துணிய மாட்டான், ஏனெனில் அது பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையின் சாட்சியமாக இருக்கிறது. அது திரிதெந்தின் பொதுச்சங்கத்தின் ஆணைப் பத்திரங்களின் வழியாக நமக்குப் பின்வருமாறு போதிக்கிறது: 

''சிலுவைப் பலியும், பூசைப் பலியும் ஒன்றே; (பூசைப்பலி) சிலுவையின் மீது தம்மையே கையளித்தவர் குருக்களின் ஊழியத்தின் வழியாக இப்போது ஒப்புக் கொடுக்கும் அதே பலி.'' இவ்வார்த்தைகளின் மூலம், குருக்கள் கிறீஸ்துநாதரின் ஊழியர்கள் மட்டுமே என்றும், கிறீஸ்துநாதர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, தம்மையே பலியாக்கியது போன்ற அதே முறையில், பீடத்தின் மீது தம்மையே பலியாக்குகிறார் என்று திருச்சபை நமக்குக் கற்பிக்கிறது, இதை விசுவசிக்கும்படியாக நமக்குக் கட்டளையிடுகிறது. 

நம் தெய்வீக இரட்சகர் நம் குருவாகவும், நம் மத்தியஸ்தராகவும், நமக்காகப் பரிந்து பேசுகிறவராகவும் ஆகத் தயை புரிந்திருக்கிறார் என்பதும், அவர் தமது ஆளுமையில் தம்மையே நமக்காகத் தமது பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறார் என்பதும் எப்பேர்ப்பட்ட நமக்கு எப்பேர்ப்பட்ட ஒரு மகிமையாக, எவ்வளவு மேலான, வாக்குக் கெட்டாத ஒரு சலுகையாக, எவ்வளவு விலை மதிக்கப் படாத பெரும் உபகாரமாக இருக்கிறது!

இந்தப் பலிச் செயலின் மேன்மையையும் மகிமையையும் குறித்து அர்ச். சின்னப்பர் கூறுவதைக் கேளுங்கள் : பரிசுத்தரும், மாசில்லாதவரும், அமலரும், பாவிகளினின்று பிரிக்கப்பட்டவரும், பரமண்டலங்களுக்கு மேலாக உயர்ந்தவருமாகிய இவ்வித பிரதான குரு நமக்கு உண்டாயிருப்பது தகுதியானதே. இவர் மற்றக் குருக்களைப்போல் முதலில் தம்முடைய சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாள்தோறும் பலியிட வேண்டியதில்லை. ஒரே முறை தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து இதை நிறைவேற்றினார். வேதப்பிரமாணமானது பலவீனமுள்ள மனிதர்களைக் குருக்களாக ஏற்படுத்துகிறது. வேதப் பிரமாணத்துக்குப் பிறகு ஆணையோடு சொல்லப்பட்ட வாக்கியமோ என்றென்றைக்கும் உத்தமராகிய சுதனையே ஏற்படுத்துகிறது (எபி. 7:26-28).

நம் சர்வேசுரன் நம்மீது கொண்டுள்ள மாபெரும் அன்பை அப்போஸ்தலர் நம் முன் ஸ்தாபிக்கும் அற்புதமான, சுடர் வீசும் வார்த்தைகள் இவை. இதில் நம் சர்வேசுரன் பலவீனமுள்ள, பாவியான ஒரு மனிதனையல்ல, மாறாக, அர்ச்சியசிஷ்டதனத்திலும், மாசற்றதனத்திலும் உத்தமராக இருக்கும் தமது ஏக பேறான திருச்சுதனையே அவர் நம் குருவாகவும் மத்தியஸ்தராகவும் நியமிக்கிறார்.

இனி, தமது சொந்தப் பலியை ஒப்புக்கொடுக்கும் அலுவலை அழியக்கூடிய எந்த ஒரு மனிதனிடமும் கிறீஸ்துநாதர் ஏன் ஒப்படைக்கவில்லை என்பதற்கான காரணங்களை இப்போது நாம் சிந்திப்போம். இந்தப் பலி பரிசுத்தமானதாகவும், மாசுமறுவற்றதாகவும் இருக்க வேண்டும் என்பது முதன்மையான காரணம்; மலாக்கியாஸ் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தைப் பாருங்கள் : எவ்விடத்தும் பலியிடப்பட்டு, நமது நாமத்துக்குச் சுசிகர நிவேதனம் (பரிசுத்தமான பலி) நடந்து வருகிறது" (மலாக். 1:11). இது தொடர்பாக, திருச்சபை கற்பிப்பதாவது: "இது (இந்தப் பூசைப்பலி), உண்மையில், அதை ஒப்புக்கொடுப்பவர்களின் எந்த ஒரு தகுதியின்மை அல்லது துர்க்குணத்தால் களங்கப்படுத்தப்பட முடியாத பரிசுத்தமான பலியாக இருக்கிறது" (திரிதெந்தின் பொதுச்சங்கம், 22-ம் அமர்வு, அத். 1).

இனி, இவ்வுலகைச் சேர்ந்த ஒரு குருவே உண்மையில் இந்தப் பலியை ஒப்புக்கொடுப்பவராக இருக்கிறார் என்றால், அது ஒருவேளை அசுத்தமானதாகவும், களங்கமுள்ளதாகவும் இருக்கலாம், இத்தகைய ஒரு பலி கடவுளுக்குப் பிரியமானதாக இல்லை என்று நாம் சந்தேகப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, "மெல்கிசெதேக் கின் முறைமையின்படி நீர் என்றென்றும் குருவாயிருக்கிறீர்" என்ற அவருடைய சொந்த வார்த்தைகளின்படி, தமது மகா பரிசுத்த திருச்சுதன்தாமே குரு என்னும் பெயரையும், அலுவலையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிதாவாகிய சர்வேசுரன் நியமம் செய்தார். இவ்வாறு, ஒரு குருதான் பூசை வைக்கிறார் என்றாலும், உண்மையில் பலி ஒப்புக்கொடுப்பவர் அவரல்ல, அவர் மாபெரும் பிரதான குருவாகிய சேசுநாதரின் பிரதிநிதி மட்டுமே என்பதை நாம் கண்டு பிடிக்கிறோம். ஒரு மனிதன் ஒரு கோவிலுக்குத் தனது நன்கொடை யாக ஒரு தொகையை வழங்கும்படி அதைத் தன் ஊழியனிடம் தருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஊழியன் சாவான பாவ அந்தஸ்தில் இருக்கிறான் என்ற உண்மை, இந்த நன்கொடை யின் மதிப்பை எந்த விதத்திலும் குறைத்து விட முடியாது. இதே விதமாக, சேசுக்கிறீஸ்துநாதரின் திருப்பெயரால் மட்டுமே தாம் ஒப்புக்கொடுக்கும் பலியை குருவானவர் பரிசுத்தமற்றதாகவோ, அசுத்தமானதாகவோ எந்த விதத்திலும் ஆக்கி விட முடியாது.

ஆனால் கிறீஸ்துநாதர் ஏன் இந்தப் பலியை ஒப்புக்கொடுக்கும் பொறுப்பை ஒரு சம்மனசானவரிடமோ, ஓர் அர்ச்சியசிஷ்டவரிடமோ, அல்லது அமல உற்பவியும், பிரியதத்தத்தினால் பூரணமானவர்களும், எந்த விதத்திலும் இந்தப் பலியை அசுத்தமானதாக ஆக்க முடியாதவர்களும், மாறாக, உத்தமமான முறையில் மட்டுமே அதை ஒப்புக்கொடுக்கக் கூடியவர்களுமாகிய தமது மகா பரிசுத்த மாசற்ற திருமாதாவிடமோ ஒப்படைக்கவில்லை என்ற கேள்வி எழலாம்.

கிறீஸ்துநாதர் மகா பரிசுத்த பூசைப்பலியை ஒப்புக்கொடுக்கும் அலுவலை ஒரு சம்மனசானவரிடமோ, ஓர் அர்ச்சியசிஷ்டவரிடமோ, அதை விடக் குறைவாக, ஒரு பாவியான மனிதனிடமோ ஒப்படைக்காமல், அந்த உரிமையைத் தாமே வைத்துக் கொண்டார் என்பதற்கான காரணம் என்னவெனில், மனுக்குல இரட்சணியத்திற்காக, மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்குப் பிரியமானதும், ஏற்புடையதுமான ஒரு முறையில் என்றென்றும் மாறாததாக இருக்கும் ஒரு பலியை, மிகுந்த பக்திக்குரியதும், முழுமையான பலன் தருவதுமான முறையில் தமது பரலோகப் பிதாவுக்குத் தாமே அனுதினமும் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வாறு, நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசையும், எந்த ஒரு சம்மனசானவரும், மனிதனும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உன்னதமான மகத்துவமுள்ள செயலாகவும், கிறீஸ்துநாதராலேயே மிக உன்னதமான பக்தியோடும், வணக்கத்தோடும், அன்போடும் செய்யப்படுவதுமான ஒரு தெய்வீகப் பலிச் செயலாக இருக்கிறது என்பது விளங்குகிறது. 

இது பின்வரும் வார்த்தைகளில், நம் ஆண்டவராலேயே அர்ச். மெட்டில்டாவுக்கு வெளிப்படுத்தப்பட்டது: "விசுவாசிகளின் இரட்சணியத்திற்காக என்னைக் கொண்டு நானே நிறைவேற்றும் இந்த ஒப்புக்கொடுத்தல் என்பது என்ன என்று நான் ஒருவன் மட்டுமே அறிந்திருக்கிறேன், நான் மட்டுமே அதை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அது பக்திச்சுவாலகர், ஞானாதிக்கர், பரலோக சேனைகள் முழுவதினுடைய புத்திக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது." 

ஓ என் சர்வேசுரா, பரலோகத்தின் மிக உயர்ந்த விலாச சம்மனசுக்களும் கூட இதைப் புரிந்து கொள்ள இயலாது என்பதால், திவ்விய பலிபூசையில், கிறீஸ்துநாதர் தம்மைக் கொண்டு தாமே நிறைவேற்றும் இந்த பலி எவ்வளவு மகிமையுள்ளதாகவும், வல்லமையுள்ளதாகவும், எந்த விதத்திலும் விலை மதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்! 

ஓ ஆராதனைக்குரிய சேசுவே, உமது தேவ ஞானமும், புத்தியும் மட்டுமே இந்தப் பரம இரகசியத்தை அறியவும், அதை மதித்துப் போற்றவும் கூடுமானவையாக இருக்கின்றன என்பதால், இது எந்த அளவுக்குத் தேடிக் கண்டுபிடிக்கப்பட இயலாததாக இருக்கிறது! திவ்விய பலிபூசையில் பங்குபெற்று, அதன் மூலம் தனக்காக தேவரீர் தாமே ஒப்புக்கொடுப்பதும், எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்ட புத்தியினாலும் அறிவினாலும் ஆழங்காண முடியாத புண்ணியத் தையும், நன்மை பயக்கும் தன்மையையும் கொண்டதுமான திவ்விய பலியில் பங்குபெறும் மனிதன் மெய்யாகவே பாக்கியவானாக இருக்கிறான்!

ஆகவே, நாம் இதை நம் இருதயத்தில் இருத்தி, பூசை காண்பது நமக்கு எவ்வளவு மேலான பலனுள்ளது என்பதை நன்கு சிந்திப்போம், ஏனெனில் திவ்விய பலிபூசையில், கிறீஸ்துநாதர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்கிறார். தேவ நீதிக்கும், மனுக்குலத்தின் பாவங்களுக்குமிடையே ஒரு மத்தியஸ்தராகத் தம்மையே வைக்கிறார். இதன் மூலம் ஒன்றில் நம் அன்றாடப் பாவங்களுக்கு உரிய அபராதமாகிய தண்டனையை முழுவதுமாக நம்மிடமிருந்து விலக்கி விடுகிறார், அல்லது குறைந்தபட்சம் அதைத் தடுத்து வைக்கிறார். 

இதை மட்டும் நாம் சரியாகக் கண்டுபிடிப்போம் என்றால், எவ்வளவு பக்தியோடு நாம் பூசை காண்போம், அதிலிருந்து நம்மை விலக்கும் எதையும் அனுமதிப்பதில் நாம் எவ்வளவு தயக்க முள்ளவர்களாக இருப்போம்! உண்மையில், இந்தப் புனிதமான, பலன் மிக்க பலியில் பங்குபெறுவதால் வரும் நன்மையை நம் ஆத்துமத்திடமிருந்து விலக்குவதை விட, எப்பேர்ப்பட்ட உலகத் தன்மையான இழப்பையும் ஏற்றுத் தாங்கிக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். 

ஆதிக் கிறீஸ்தவர்களின் பக்தியார்வம் இப்படிப் பட்டதாகவே இருந்தது. அவர்கள் பூசையைத் தவிர்ப்பதை விட, தங்கள் உயிரை இழக்கவும் தயாராக இருந்தார்கள். இக்காரியத்தில் பரோனியஸ் வியப்பூட்டும் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். இந்த நிகழ்ச்சி கி.பி. 303-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்றது.