இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஈடேற்ற அலுவல் - அவனவன் தான் தானே முடிக்க வேண்டிய அலுவல்

ஈடேறிக் கொள்ளுவது தான் மனிதனுடைய ஒரேயொரு அலுவல்; முக்கியமான அலுவல்; இன்றியமையாத அலுவல். இந்த அலுவலை நமக்கு யார் பார்த்துத் தருவார்? சருவேசுரனா? திருச்சபையா? இனசனமா? இல்லையில்லை. இந்த ஒரேயொரு அலுவலை, முக்கியமான அலுவலை, இன்றியமையாத அலுவலை ஒவ்வொருவரும் தான் தானே பார்த்து வைக்க வேணும்.

பிரியமானவர்களே, சருவேசுரன் உங்களைக் கேளாமல் உங்களை உண்டாக்கினார் என்பது சந்தேகமில்லாத உண்மை . ஆனால் உங்களைக் கேளாமல், உங்களுடைய விருப்பம் இல்லாமல், உங்களுடைய அதிக பிடிவாதமான ஆசையில்லாமல், உங்களை ஒருபோதும் ஈடேற்றமாட்டார்.

கேளாமற் படைத்தது போல், கேளாமலே ஈடேற்றியும் போட அவருக்குச் சித்தமானால், இந்தப் பூவுலகத்திலே மனுமக்களைப் பரிசோதனைக்கு வைத்திரார்; மனிதருக்குத் தன்னிட்டம் என்னும் வரத்தைத் தந்திரார். பாவைப் பிள்ளைகளைப் பண்ணிவைப்பதுபோல மனிதரையும் படைத்துப் படைத்து நிரைநிரையாய் ஒரு இடத்திலே வைத்து, அவர்கள் சும்மா முளிசி முளிசிப் பார்த்துக்கொண்டிருக்க விடுவதானால், அதிலே மனிதருக்கும் யாதொரு இன்பமில்லை, படைத்தவருக்கும் மேலான மகிமை இல்லை.

''தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுமில்லை உரையுமில்லை'' என்பது மெய் அல்லவா? மனிதர் தாங்களாகப் பாடுபட்டு, அந்தப் பாடுகளுக்கு ஒரு சம்பாவனையாக மோட்சத்தை அடையாவிட்டால், மோட்ச பாக்கியந்தானும் அவர்களுக்கு இனிக்கமாட்டாது. சருவேசுரனுக்கும் அது மகிமையாய் இராது.

கால் கை வழங்காத ஒரு ஏழை நோயாளிக்கு "வீர சூரச் சேனாபதி'' என்ற பட்டங்கொடுத்தால், அதனால் அவனுக்கு ஏதாவது சுகம் உண்டா? புகழ் உண்டா? '' நாய் அரசாண்டென்ன பூனை சிங்காசனத்தில் இருந்தென்ன?'' மொட்டைச்சியைப் பார்த்து நீ கூந்தல் அழகி என்று சொன்னால், அவளைப் பரிகாசம் பண்ணுவது ஒழிய பாராட்டுகிறதாய் இராதே. அப்படியே சருவேசுரனும் பாடு படாதவர்களுக்குப் பட்டங் கொடுக்க மாட்டார்; தாங்களாக வருந்தித் தேடாதவர்களுக்கு மோட்ச பாக்கியத்திலே பங்கு அருள மாட்டார்.

இது ஒரு புறம் இருக்க: சருவேசுரன் மனிதரை ஈடேற்றுவதற்காகப் பாடுபட்டிருக்கிறாரே, அதனால் நாம் சும்மாவிருக்க நமக்கு ஈடேற்றம் கிடையாதோ என்றால், அப்படியும் இல்லை. சுதனாகிய சருவேசுரன் மனித அவதாரம் பண்ணிச் சொல்லில் அடங்காத பாடுபட்டது, நாம் ஒரு பாடும் படாமல் மோட்சம் அடையலாம் என்று காட்டுவதற்காக அல்ல; இதற்கு மாறாக, அந்தப் பாடுகளிலே நாமும் நம்முடைய பங்கைக் கைக்கொள்ள வேணும் என்று காட்டத்தான்.

துன்பம் அறியாத இன்ப சமுத்திரம் ஆகிய அவர், அத்தனை பாடுகளைப் படாமல், வேறு வகையாகவும் நம்முடைய பாவங்களுக்குப் பொறுதியைத் தந்திருக்கக் கூடும். அப்படிச் செய்ய அவர் திருவுளமாகியிருந்தால், பாவத்தின் பயங்கரமான கொடுமை நமக்குப் புலப்பட்டிராது. நாமும் பாடொன்றும் படாமல் மோட்சத்தை அடைந்துகொள்ளலாம் என்ற மோசமான தப்பெண்ணத்தோடு இருந்துவிடுவோம்.

ஆனால், ஆண்டவர் பாடுபட்டதினால், அந்தப் பாடுகளுக்குக் காரணமாகிற பாவம் சருவேசுரனுக்குத் தாங்கொணாத மகா அவலட்சணமான அருவருப்பு என்று கண்டுகொண்டோம். நாமே பாவவாளரும் ஆண் டவரோ குற்றம் ஒன்றும் இல்லாதவரும் ஆனபடியால், அவருடைய அளவில்லாப் பாடுகளோடே, இயன்றளவு, நம்முடைய பாடுகளையும் சேர்க்க வேண்டும் என்பது குறையாத நீதியின் கிராமம் ஆகும்.

நம்முடைய சின்னப் பாடுகளை ஆண்டவருடைய மகா பாடுகளோடே சேராவிட்டால், நாம் ஈடேற முடியாது என்றது தவறில்லாத ஒரு வேத சத்தியம். இதை அர்ச். சின்னப்பர் வெளிப்படுத்தி : ''நான் கிறீஸ்துநாதருடைய பாடுகளோடு சேர வேண்டிய குறைப்பங்கை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக என் உடலிலே நிறைவேற்றுகிறேன்'' என்கிறார். (கொலோ, 1; 24).

ஒரு ஊரிற் சனங்கள் தாகந் தணிக்கத் தண்ணீர் இல்லாமல் வருந்துவதைக் கண்ட ஒரு தருமவாளன், நல்ல நீர்க்கிணறு ஒன்றைக் கன பாடுபட்டுச் செலவு செய்து வெட்டுவித்தான் என்று வைத்துக்கொள்ளுவோம். அதன்பின், தாகமுள்ள சனங்கள் கிணற்றடிக்குப் போய்த் தண்ணீரை அள்ளுகிற சிறுபாட்டைக் கூடப் படோம் என்று இருந்துவிட்டால், அவர்களுடைய தாகம் தீருமா? தாங்கள் அற்பமும் முயற்சி செய்யாமலிருக்க, தண்ணீர் அவர்கள் வாய்களிலே தானாக வந்து பாயுமா? பாயாதே.

இது போல, ஆண்டவர் அநேக பாடுபட்டு அடைந்து தந்த ஈடேற்றப் பலனைக் கைப்பற்ற வேண்டுமானால், நாமும் நம்முடைய பங்கான முயற்சியை ஊக்கமாய்ச் செய்யவேண்டும். இப்படியே நம்மை உண்டுபண்ணிய பிதா, நம்முடைய அதி ஆவலான முயற்சி இல்லாமல் நமக்கு மோட்ச பாக்கியம் தர மாட்டார். நமக்காகப் பாடுபட்ட ஆண்டவரும், நாம் தம்மோடு சொற்பமாவது பாடுபட்டு நமது இரட்சணியத்துக்காக உழையாமல் நம்மை ஈடேற்றமாட்டார்.

அல்லது, நாம் பிரயாசப்படாமல் இருக்க, திருச்சபையானது நமது ஈடேற்ற அலுவலைப் பார்த்துத் தருமா? ஞானஸ்நானத்தினால் நாம் திருச்சபையில் சேர்ந்துகொண்டோமே. அதின் சகல நன்மைகளுக்கும் பங்காளிகள் ஆகிவிட்டோமே. திருச்சபையிலே எத்தனையோ செபதபங்களும் பூசை பிரார்த்தனைகளும் நடை பெறுகிறதே. அவைகளின் பங்கு நாம் சும்மா இருக்க நமக்குக் கிடையாதா?

இப்போதுதான் நாம் ஈடேற்றத்தைக் கவனியாமல் இருந்துவிட்டாலும், அவஸ்தை நேரத்திலே குருவானவர் வந்து செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் நிறைவேற்றும்போது, நம்முடைய இரட்சணிய அலுவல் சுகமாய் முடிந்துவிடும் என்று நம்பியிருக்கக் கூடாதா? ஒருபோதும் கூடாது. திருச்சபையின் செப தபம் முதலிய நன்மைகள் எல்லாம், அவைகளை விரும்பித் தேடுவோருக்கு ஒழிய மற்று எவருக்கும் கிடையாது.

எவ்வளவு தண்ணீர்தான் ஆறாகப் பெருகிப் பாய்ந்தாலும், குடத்தைக் கொண்டுபோய் அள்ளினால் ஒழிய வீட்டுக்குத் தண்ணீர் வருமா? வராதே. யாராவது புண்ணியவாளர் தாங்களாகத் தண்ணீர் கொண்டுவந்து குடத்திலே வார்த்துவிட்டுப் போவார்கள் என்று தான் வைத்துக் கொண்டாலும், அதற்குங் குடத்தை நிறுத்தி வைத்துத் தான் தண்ணீர் வாங்க வேணும். குடத்தை நிறுத்திப் பிடித்து வாங்கு வதற்குப் பதிலாய், அதைக் கவிழ்த்து வைத்துக்கொண்டிருந்தால் எவ்வளவு தண்ணீரைத்தான் அதின் மேலே வார்த்தாலும் உள்ளுக்கு ஒரு சொட்டாவது சுவறாதே.

அதுபோல், தன் இரட்சணியத்தைப்பற்றி ஒரு கவலையும் இல்லாமல், திருச்சபையின் சக்கிறமேந்துகளையும் அசட்டைபண்ணிவிட்டு, அதின் செப தபப் பலன்களுக்கும் தன்னை அப்புறப்படுத்திக்கொண்டிருப்பவன் ஈடேறுவது எப்படி ?

இப்படிப்பட்டவனுக்கு அவஸ்தைச் சடங்கு பலிப்புள்ள சடங்கு ஆவதும் அருமையிலருமை அல்லவா? சிறு குழந்தையானது தன்னுடைய முயற்சியில்லாமல் ஞானஸ்நானத்தினால் திருச்சபையிலே சேருவது மெய். இது, நம்மைக் கேளாமல் பிதா நம்மை உண்டாக்கினதுக்குச் சரி. ஆனால், அவர் நமது உடன் முயற்சியில்லாமல் நம்மை இரட்சியாதது போல், புத்தி விபரம் அறிந்தபின் ஈடேற்றத்துக்கு உரிய காரியங்களை ஒவ்வொருவனும் தான் தானே தேடிச் செய்யாமல் மோட்சத்தை அடையவுங் கூடாது.

கடைசியாக நாம் நம்முடைய இனஞ்சனங்களுக்காக, பிதா மாதாவுக்காக, பெண்சாதி பிள்ளைகளுக்காக நம்மையும் பாராமல் உழைக்கிறோமே. அவர்கள் நமது ஈடேற்ற அலுவலை நமக்குப் பார்த்துத் தரார்களா? இப்படிப்பட்ட ஒரு எண்ணம் சில அசட்டையான கிறிஸ்தவர்களுடைய மனதின் அடித்தளத்திலே காணப்படுவது உண்டு.

நான் கோயில் குளத்தைக் கவனிக்கிறதில்லைத் தான்; நான் நடக்கிற நடை செப்பமில்லை என்பது மெய். என் பெண்சாதியோ நல்ல புத்தியுள்ளவள்; பிள்ளைகளோ தவறாமற் பூசை காண்கிறவர்கள்; அடிக்கடி சற்பிரசாதம் பெறுகிறவர்கள் என்று சிலர் சொல்லிக்கொள்ளுகிறார்கள். ஆத்துமத்தை நித்தியமாய்ப் பிழைக்கப்பண்ணுகிற அருமையான அலுவலிலே சிரிப்புக்கு இடமான இந்தப் போக்கைச்சொல்லுகிறவர்கள், நாளைக்கு அழிந்துபடப்போகிற சரீர விஷயமாயும் இப்படிச் சொல்லுவார்களா?

என் பெண்சாதி பிள்ளைகள், தாய் சகோதரங்கள் நேரத்துக்கு நேரம் சாப்பிடுகிறார்கள்; ஆனபடியால் எனக்கு ஒருக்காலும் தீன் வேண்டாம் என்பார்களா? அப்படி ஏன் சொல்லவில்லை என்று கேட்டால்: “தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறே'' என்ற பழமொழியை எடுத்து ஒப்பனை பண்ணத் தாமதியார்கள். வாயும் வயிறும் வேறு என்றது போலத் தானே ஆத்துமமும் வேறு.

அப்படியிருக்க, இந்த ஈடு சொல்லக் கூடாத விலையுள்ள முத்தாகிய ஆத்துமத்தைச் சுழற்றி எறிந்துபோட்டு, மண்ணாகப் போகிற சரீரம் என்கிற நாறற் சிப்பியை இடுப்பில் முடிந்துகொண்டு போகிற பைத்தியத்தை என்னென்று சொல்லுவோம்! வேறு வேறு அலுவல்களைத் தனக்காக இன்னுமொரு ஆள் விட்டுப் பார்ப்பிக்கலாம். தன் தோட்டத்தைத் தான் கொத்தாமல் கூலியாள் பிடித்துக் கொத்துவிக்கலாம். தன் வழக்கைத் தரணியைக் கொண்டு ஆடு விக்கலாம். தன் உடலிலுள்ள காயம் முதலியவைகளைத்தானும் பிறரைக்கொண்டு கட்டுவிக்கலாம்.

ஆனால், தன் வயிற்றுப் பசிக்குப் பிறரைக்கொண்டு சாப்பிடுவிக்க முடியுமா ? பிரசவ வேதனைக்காரி'தன் பிள்ளையை வேறொருவரைப் பெறச் சொல்லிக் கேட்க முடியுமா ? '' அழுதும் பிள்ளை அவளே பெறவேணும்'' என்றது உலகப்பேச்சு அல்லவா? இப்படியே, அவனவன் தான் தானே தன் ஆத்துமத்தை ஈடேற்றுவது ஒழிய, பிறரால் அந்த அலுவலைச் செய்விக்க முடியாது. ''ஒவ்வொருவனும் தன் சுமையைத் தானே சுமப்பான்'' என்ற வேத வாக்கியத்தை (கலாத். 6; 5) அநீத வாக்கியம் ஆக்க எவராலும் கூடாது.