இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையின் பரம இரகசியங்கள்

இப்போது நான் பேச இருக்கும் திவ்விய பலிபூசையின் பரம இரகசியங்கள் ஏராளமானவையாகவும், உயர்வானவையாகவும் இருப்பதால், அரச தீர்க்கதரிசியான தாவீதோடு சேர்ந்து, "ஆண்டவர் பூலோகத்தில் செய்தருளிய அற்புதங்களாகிய அவரது கிரியைகளை வந்து பாருங்கள்'' (சங். 45:7) என்று வியந்து கூறாதிருக்க என்னால் முடியவில்லை. 

உண்மையில் கிறீஸ்துநாதர் பூலோகத்தில் செய்தருளிய அற்புதங்களும் அடையாளங்களும் மிக ஏராளமான உள்ளன. ஆனால் அவை அனைத்திலும், கடைசி இராப் போஜனத்தில் திவ்விய பலிபூசையை ஏற்படுத்தியதை விட அதிக அற்புதமான, அல்லது அதிக மேலான எதையும் அவர் செய்து விடவில்லை. 

ஒரு பேச்சு முறைக்கு, அது கடவுள் செய்தருளிய எல்லா அற்புதங்களுடையவும் தொகுப்பாக இருக்கிறது. அது தன்னிலேயே எந்த அளவுக்குப் பரம இரகசியங்களால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது என்றால், "பெருங்கடல் நீர்த்துளிகளால் நிரம்பியுள்ளது போல, அல்லது ஆகாயம் நட்சத்திரங்களால் நிரம்பியுள்ளது போல, அல்லது பரலோக முற்றங்கள் சம்மனசுக்களால் நிறைந்திருப்பது போல, திவ்விய பலிபூசையும் எண்ணற்ற பரம இரகசியங்களால் நிரம்பியுள்ளது. 

ஏனெனில் அதில் எவ்வளவு அதிகமான பரம இரகசியங்கள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன என்றால், தெய்வீக சர்வ வல்லபத்தால் அவற்றை விட மேலான, அல்லது அதிக உயர்வான அற்புதங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்று சொல்ல இயலாதவனாக நான் இருக்கிறேன்" என்று சொல்ல அர்ச். பொனவெந்தூர் தயங்கவில்லை.

இந்த அவரது அறிக்கை உண்மையில் விசித்திரமானதாகவும், ஏறக்குறைய நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. திவ்விய பலிபூசையிலுள்ள பரம இரகசியங்கள் எண்ணற்றவை என்பது நிஜமாகவே உண்மையாக இருக்க முடியுமா?

இக்காரியத்தில் சாஞ்செஸ் என்பவர் அர்ச். பொனவெந்தூர் கூறியதை ஒப்புக்கொள்கிறார். ஏனெனில், "திவ்விய பலிபூசையில், நாம் எந்த அளவுக்கு மிகவும் அற்புதமானவையும், மிக நிஜமானவையுமான பொக்கிஷங்களையும், எவ்வளவோ தெய்வீகமான, மிகவும் விலையேறப்பெற்ற கொடைகளையும், இந்த உலக வாழ்வோடு தொடர்புள்ள ஏராளமான நன்மைகளையும், வரவிருக்கும் வாழ்வு பற்றிய மிக நிச்சயமான நம்பிக்கையையும் பெற்றுக் கொள்கிறோம் என்றால், விசுவாசமின்றி, இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொள்ள நம்மால் இயலவே இயலாது” என்று அவர் கூறுகிறார். 

இந்த வார்த்தைகளின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் திவ்விய பலிபூசையின் வழியாக நாம் பெற்றுக் கொள்ளும் நன்மைகள் நம் நம்பிக்கையின் சுபாவமான பலத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன; மேலும், புரிந்து கொள்ள முடியாததையும் மனதார நம்பி ஏற்றுக்கொள்ள நமக்கு உதவுகிற சுபாவத்திற்கு மேலான விசுவாசம் என்னும் கொடையைக் கடவுள் நமக்குத் தந்திருக்கவில்லை என்றால், பூசையின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் விலைமதிக்க முடியாத நன்மைகளை ஒருபோதும் நம்பவே மாட்டோம் என்பதுதான். 

இதே அறிஞர் தொடர்ந்து: "கடல் அல்லது ஆற்று நீரை வற்றச் செய்யாமலும், அதன் கொள்ளளவை கொஞ்சம் கூட குறைக்காமலும் ஒருவன் அதிலிருந்து தனக்குத் தேவையான நீரை எடுத்துக் கொள்வது போலவே, திவ்விய பலிபூசையிலிருந்தும் ஒருவன் தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அது எந்த அளவுக்கு அளவற்ற மேன்மையுள்ளதாக இருக்கிறது என்றால், அதன் பூரணத்துவத்திலிருந்து அணுவளவும் எதுவும் குறைவுபடுவதோ, அல்லது அது வற்றிப் போவதோ சாத்தியமேயில்லை" என்று கூறுகிறார். 

பூசையானது வரப்பிரசாதம் மற்றும் மகிமை மிக்க தேவ இரகசியங்களின் ஒரு பெருங்கடல் என்றும், அதிலிருந்து நம் ஆன்மாக்களுக்கும், நம் சரீரங்களுக்கும் தேவையான எல்லா வகையான நன்மையான காரியங்கள் அனைத்தையும் அனுதினமும் நாம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த உவமை நமக்குக் கற்பிக்கிறது.