இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உலக முடிவு வரைக்கும் நம் இரட்சகர் அல்லும் பகலும் நம்மோடு இருப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்ன?

1. ஏனெனில் அவர் திருச்சபையின் திருச்சிரசாக இருக்கிறார். அந்தத் திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அவரது ஞான சரீரமாக இருக்கிறார்கள். சரீரமானது சிரசானவரோடு மோட்சத்தில் இப்போதே இருக்க முடியாது என்பதால், சிரசானவர் பூமியில் சரீரத்தோடு இருப்பது பொருத்தமானதே.

2. கிறீஸ்துநாதர் மணவாளராகவும், திருச்சபை அவரது மணவாளியாகவும் இருக்கிறார்கள். இந்த மணவாளியோடு அவர் எந்தத் திருமணத் தம்பதியரையும் விட அதிக பாரதூரமான அளவுக்கு அவர் நெருக்கமாக ஒன்றித்திருக்கிறார். இதன் விளைவாக, தமது நேசத்திற்குரிய மணவாளியோடு எப்போதும் இருக்கும்படி அவரது அன்பு அவரைத் தொடர்ந்து வற்புறுத்துகிறது. 

அர்ச் சின்னப்பர் எபேசியருக்கு எழுதிய தமது நிரூபத்தில், கிறீஸ்துநாதர் தமது மணவாளியின் மீது கொண்டுள்ள அன்பின் தன்மையை அழகாக விளக்குகிறார்: "புருஷர்களே, கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, அதற்காகத் தம்மைத்தாமே கையளித்தது போல, நீங்களும் உங்கள் மனைவிகளை நேசியுங்கள். (கொலோ. 3:19.) 

கிறீஸ்துநாதர் ஜீவ வாக்கியத்தைக்கொண்டு நீர் ஞானஸ்நானத்தால் அதைச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கவும், கறைதிரை இவை முதலியவைகள் ஒன்றுமில்லாமல், அர்ச்சிக்கப்பட்டதும், மாசற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் துலங்கப்பண்ணவும் தம்மைத்தாமே கையளித்தார்" (எபே. 5:25-27). 

பரிசுத்த ஞான ஸ்நானத்தின் வழியாக, நாம் திருச்சபையின் உறுப்புகளாக ஆக்கப் பட்டு, சம்மனசுக்களைப் போல் அழகாக அலங்கரிக்கப்பட்டோம். மாசற்றதாயிருக்கும் ஓர் ஆன்மாவின் மீது கிறீஸ்துநாதர் கொண்டுள்ள அன்பு, பூலோக மணவாளி ஒருத்தி எவ்வளவு அழகானவளாயிருந்தாலும் கூட, அவள் மீது மணவாளன் கொள்ளும் அன்பை விடப் பாரதூரமான அளவுக்கு, மிக அப்பாற்பட்டதாக இருக்கிறது. 

ஆகவே, அந்த ஆத்துமத்தை விட்டுப் பிரிய முடியாதவராக அவர் இருக்கிறார். அதற்கு மாறாக, உலகம் முடியும் வரை எந்நாளும் அதனோடு இருப்பதாக அவர் அறிக்கையிடுகிறார். 

ஆயினும், கண்களுக்குப் புலப்படாத முறையில்தான் அவர் தம் மணவாளியாகிய தமது திருச்சபையோடு தங்கியிருக்கிறார். அவளோடு அவருக்குள்ள ஐக்கியம் சடப்பொருள் சார்ந்ததாக இராமல், ஞான ரீதியான ஒழுங்குக்குச் சொந்தமானதாயிருக்கிறது, அது விசுவாசத்தால் விளைவிக்கப்படுவதாக இருக்கிறது, ஏனெனில் இது பற்றி அவர் ஓசே தீர்க்கதரிசியின் வாயிலாக, "உன்னை முடிவில்லாக் காலத் துக்கும் மணம் முடிப்போம்; நீதியையும், நியாயத் தன்மையையும், இரக்கத்தையும், தயாளத்தையும் (பரிசமாகத் தந்து) உன்னைத் திருமணம் செய்வோம். விசுவாசத்தில் உன்னை விவாகம் செய்து கொள்வோம்; நீயும் நாமே ஆண்டவரென அறிந்து கொள்வாய் " (ஓசே. 2:19-20) என்று கூறுகிறார். 

இனி, கிறீஸ்துநாதர் விசுவாசத்தில் திருச்சபையைத் திருமணம் செய்து கொள்வதால், அவர் தமது மணவாளியோடு மறைவான விதத்தில் நிலைத்திருப்பது அவசியமாகிறது. அதாவது, விசுவாசிகளின் ஆத்துமங்கள் விசுவாசத்தை அனுசரிக்கும்படியாகவும், அதன் மூலம் மோட்சத்தில் செழுமையான ஒரு வெகுமதியைப் பெற்றுக்கொள்ளும் படியாகவும் அவர் அவர்களோடு நிலைத்திருப்பது அவசியமாகிறது.

3. சேசுக்கிறீஸ்துநாதர் திருச்சபையின் மணவாளராக இருப்பதால், அவர் தம் மணவாளியை ஆண்டு வழிநடத்துவதும், அவளது பிழைப்புக்குத் தேவையானதைத் தருவதும், அவளது பாதுகாப்பிலும் நலனிலும் அவர் அக்கறை கொள்வதும் தகுதியானதாக இருக்கிறது. இதையும், இது போக இன்னும் பல காரியங்களையும் அவர் திவ்விய பலிபூசையிலும், தேவத்திரவிய அனுமானங்களிலும் செய்து, அதன் மூலம் தம்மைக் கருணையும், பிரமாணிக்கமும் உள்ள நேசர் என்றும், காலத்திலும், நித்தியத்திலும் தமது மணவாளிக்குத் தேவையான எதுவும் அவளிடம் குறைவுபட அனுமதிக்காதவர் என்றும் தம்மை எண்பிக்கிறார்.

கிறீஸ்தவனே, நீ சாவானப் பாவத்தில் வாழ்கிறாய் என்றால், நீ பசாசுக்கு இரையாகவும், சாத்தானின் அடிமையாகவும் இருக்கிறாய் என்பதை நினைவில் வைத்துக் கொள். ஆனால் நீ தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் இருக்கிறாய் என்றால், நீ சேசுக்கிறீஸ்துநாதரின் மணவாளியாகவும், அவரால் நேசிக்கப்படுபவனாகவும், உன் இரட்சணியத்திற்கு அவசியமான சகல நன்மைகளையும் தாராளமான அளவில் அவரிடமிருந்து பெற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறாய். 

திவ்விய பலிபூசையில் எவ்வளவு எண்ணற்ற வரப்பிரசாதங்களையும், நன்மைகளையும் இந்த அன்புள்ள மணவாளர் உனக்குத் தந்தருளுகிறார்! புண்ணியத்தை சம்பாதிக்கவும், உன் இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எத்தனை எண்ணற்ற வழிகளை அவர் உன் கைக்கெட்டும் துரத்தில் வைக்கிறார்! தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலும், பக்திப் பற்றுதலோடும், தியான உணர்வோடும் நீ பூசை காணும் ஒவ்வொரு முறையும், நம் ஆண்டவர் தமது கருணையுள்ள நேசத்தில், 77-க்கும் குறையாத வரப்பிரசாதங்களிலும் பலன்களிலும் நீ பங்குபெறச் செய்கிறார். 

இதைப்பற்றி நீ அதிசயிக்கலாம். ஆனாலும், நாம் தொடர்ந்து காட்ட இருப்பது போல, இது உண்மை! இந்த வரப்பிரசாதங்களைப் பட்டியலிடுவது, ஒருவேளை அவற்றில் விசுவாசம் கொள்ளவும், அவற்றை அடையாளம் கண்டு கொள்ளவும் உனக்கு உதவலாம்.