இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதரின் பிறப்பு ஞான முறையில் பூசையில் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது

கிறீஸ்துநாதரின் பிறப்பு ஞான முறையில் பூசையில் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது என்று பரிசுத்த திருச்சபையும் கூட நமக்குக் கற்பிக்கிறது. 

ஏனெனில் கிறீஸ்துமஸ் நாளன்று தேவதூதர்கள் பாடிய அதே ஸ்துதிப் பாடலைப் பூசை நிறைவேற்றும் குருவின் உதடுகளிலும் அது வைக்கிறது: "உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது" (லூக். 2:14). 

இந்த வார்த்தைகள் நம் செவிகளில் ஒலிக்கும் போது, இடையர்களிடம், "இதோ, எல்லா ஜனத்துக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதேதெனில்: இன்று ..... கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றி, முன்னிட்டியில் கிடத்தியிருக்கக் காண்பீர்கள்'' என்று தேவதூதர் கூறிய வார்த்தைகளை நாமும் கேட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். 

நம் காவல் சம்மனசானவர் நம்மிடம்: "என் குழந்தாய், அக்களிப்பாயாக, ஏனெனில் இப்போது, இந்தப் பூசையில், உன் இரட்சகர் உன் இரட் சணியத்திற்காக வந்து பிறக்கப் போகிறார்; திவ்விய அப்பத்தின் தோற்றத்தில் நீ அவரை உன் சொந்தக் கண்களால் காண்பாய்" என்று சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

நம் காவல் தூதர் இதை நம்மிடம் சொல்லவில்லை என்றாலும், நம் விசுவாசம் இதை நமக்குக் கூறுகிறது என்பதால், நாம் அகமகிழ்ந்து களிகூர வேண்டாமா? நாம் உண்மையாகவே இதை விசுவசிப்போம் என்றால், தங்கள் சரீரக் கண்களால் அவரைக் காணச் சலுகை பெற்றவர்கள் செய்தது போல, அதே வணக்கத்தோடும், பாசத்தோடும் திவ்விய பலிபூசையில் நாமும் தேவ பாலனை ஆராதிப்போம்.

திருச்சபைத் தந்தையரின் சரித்திரத்தில், பிளேகுஸ் என்னும் ஒரு குருவைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இவர் வழக்கமாக மிகுந்த பக்தியோடு பூசை நிறைவேற்றி வந்தார். கிறீஸ்துநாதர் அப்ப, இரசமாகிய மூடுதிரையின் கீழ் எந்த விதத்தில் பீடத்தில் வந்து பிரசன்னமாகிறார் என்று அறிந்து கொள்ள அவர் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். 

அங்கே தம் ஆண்டவரின் மெய்ப் பிரசன்னத்தில் அவர் எந்த விதத்திலும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் நற்கருணை சேசுவின் மீது அவருக்கு இருந்த பேரன்பு, தமது சரீரக் கண்களால் அவரைக் காண வேண்டும் என்ற விருப்பத்தை அவரில் தூண்டிக் கொண்டேயிருந்தது. 

ஒரு நாள் அவர் பூசை செய்து கொண்டிருந்தபோது, எழுந்தேற்றம் முடிந்தவுடன் இந்த ஆசை எவ்வளவு பலமாக அவருக்குள் எழுந்தது என்றால், அவர் தம் முழங்கால்களில் விழுந்து, "சர்வ வல்லபராகிய தேவனே, சிமியோன் தம் கரங்களில் சேசுக்கிறீஸ்துநாதரை ஏந்தியது போல, நானும் என் கண்களால் அவரைக் கண்டு, என் கரங்களால் அவரைத் தொடும்படியாக, அடியேன் தகுதியற்றவனாயினும், அவரை சரீர வடிவத்தில் காண எனக்கு அருளும்படி உம்மை மன்றாடுகிறேன்" என்று ஜெபித்தார். 

அவர் இப்படி ஜெபித்துக் கொண்டிருக்கையில், இதோ, தேவதூதர் ஒருவர் அவரது ஒரு புறத்தில் தோன்றி, அவரிடம்: "இதோ, கிறீஸ்துநாதர் தமது திருமாதாவின் மடியில் ஒரு குழந்தையாக எப்படி இருந்தாரோ, அதே சரீர வடிவத்தில் அவர் இங்கே பிரசன்னமாகியிருப்பதைப் பாரும்" என்றார். 

இந்த வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன குருவானவர் தம் தலையை நிமிர்த்திய போது, அங்கே, திருமேனித் துகிலில், ஓர் அழகிய குழந்தையின் வடிவில் சர்வேசுரனுடைய திருச்சுதன் படுத்திருப்பதையும், தம்மை அவர் புன்னகையோடு உற்றுநோக்கி, அவர் தம்மைத் தூக்கிக் கொள்ளுமாறு கேட்பது போல, அவரது சின்னஞ்சிறு கரங்களைத் தம்மை நோக்கி நீட்டுவதையும் கண்டார். 

ஆனால் தமது ஆழ்ந்த வணக்கத்தின் காரணமாக, குருவானவர் இதைச் செய்யத் துணிவு கொள்ளவில்லை. என்றாலும் சம்மனசானவர் அவரிடம் : "நீர் சில கணங்களுக்கு முன் அப்ப வடிவத்தில் கண்ட தேவ சுதனாகிய சேசுநாதர் இவரே; இவர் தாம் உண்மையில் இருக்கிறபடியே இப்போது பிரசன்னமாகியிருக்கிறார்; அஞ்சாதீர், எழுந்து, உம் கரங்களில் அவரை ஏந்திக் கொள்ளும், உம் இரட்சகராகிய சர்வேசுரனில் உமது இருதயம் மகிழ்ந்து களிகூர்வதாக'' என்று சொல்வதை அவர் கேட்டார். 

இந்த வார்த்தைகளால் துணிவு பெற்ற அவர் முழங்காலிட்ட நிலையிலிருந்து எழுந்து, நடுங்கும் கரங்களால் திவ்விய குழந்தையைத் தூக்கி, அவரைப் பிரியத்தோடு வருடி சீராட்டினார். அதன்பின் அவரைத் திருமேனித் துகிலின்மீது கிடத்தி விட்டு, மீண்டும் முழந்தாளிட்டு, அவரை தேவ நன்மையில் தாம் உட்கொள்ளவும், பூசையை முடிக்கவும் ஏதுவாகத் முந்தின அப்ப வடிவத்தை எடுத்துக் கொள்ளுமாறு அவர் திவ்விய பாலனிடம் தாழ்ச்சியோடு மன்றாடினார். 

இந்த ஜெபத்திற்குப் பிறகு அவர் எழுந்து நின்றபோது, மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தை மீண்டும் வசீகரம் செய்யப்பட்ட அப்ப வடிவத்தில் கண்டு, ஒப்பற்ற பக்தியோடும், ஆராதனையோடும் அவரை உட்கொண்டார்.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் வெறும் கற்பனையில் மட்டுமோ, அல்லது வெறும் ஞான முறையில் மட்டுமோ அன்றி, நிஜமாகவும், உண்மையாகவும், சரீர ரீதியாகவும், பெத்லகேமில் தேவமாதா பெற்றெடுத்தவரும், மூன்று அரசர்களால் ஆராதிக்கப்பட்டவருமான அதே கிறீஸ்து பாலனாக வந்து பிரசன்னமாகிறார் என்று நாம் அறிந்து விசுவசிக்குமாறு இந்த நிகழ்ச்சி இங்கே தரப்பட்டுள்ளது. 

அங்கே இருந்தது போலவே இங்கும் அவருடைய முகம் அணையாடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது, அதாவது நம் கண்களால் நாம் காணும் வசீகரிக்கப்பட்ட அப்பத்தின் வெளி வடிவத்தால், அவரது முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெளி வடிவங்களுக்குப் பின்னால் மறைந்தவராகப் பீடத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிற மென்மையான அந்தக் குழந்தையை நாம் நம் விசுவாசத்தின் உள்ளரங்கப் பார்வையால் மட்டுமே கண்டுணர முடியும். 

நம் ஆண்டவர் மெய்யாகவே இந்தத் தாழ்மையான வடிவத்தின் கீழ் மறைந்திருக்கிறார் என்று இந்த விசுவாசம் ஐயத்திற் கிடமின்றி உறுதியாக நம்புகிறது. அவர் ஏன் இப்படி நம் பார்வையிலிருந்து தம்மை மறைத்துக் கொள்கிறார் என்பதற்கான காரணங்கள் பல. 

அவற்றில் முக்கியமானது என்னவெனில், இவ்வளவு முக்கியமான காரியத்தில் நம் விசுவாசத்தைச் செயல்படுத்துவதற்கு நமக்கு வாய்ப்புத் தரும்படியாகவும், பூசை காணும் ஒவ்வொரு முறையும் பேறுபலனைச் சம்பாதித்துக் கொள்ள நமக்கு உதவும்படியாகவுமே. நம் ஆண்டவர், தமது சொந்தப் பிரசன்னத்தில் நமக்குள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்துமாறு, பக்தியுள்ள கிறீஸ்தவர்களையும் -- அதை விட அதிகமாக, யூதர்களையும் அவிசுவாசிகளையும் கூட--சரீர வடிவில் தம்மைக் காண அனுமதித்திருக்கிறார் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை நாம் தர முடியும். இங்கே ஒன்றை மட்டும் நாம் தருவோம்.