இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் ஆண்டவரின் பிறப்பின் புதுப்பித்தலால் பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியும், பூலோகத்திற்குக் கொண்டு வரப்படும் ஆசீர்வாதங்களும்

இந்த பக்திக்குரிய பரம இரகசியத்தைச் சரியான விதத்தில் விளக்கிக் கூறுவதற்கு, நமக்கு தேவதூதர்களின் புத்திக்கூர்மை தேவைப்படுகிறது. ஏனெனில் அது மனித புத்திக்கு எட்டாததாக இருக்கிறது. அது மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்குத் தரும் மகிழ்ச்சியை நம்மால் அற்பமேனும் புரிந்து கொள்ள முடியாது. 

ஆயினும் தமத்திரித்துவத்தின் மூன்று தேவ ஆட்களும் தங்களிலேயே முழுவதும் போதுமானவர்களாக இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் மற்ற இருவருக்கும் தம் சொந்த வாக்குக்கெட்டாத பேரின்பத்தை வழங்குகிறார்கள் என்பது நம் பரிசுத்த வேதத்தின் சாத்தியங்களுள் ஒன்றாக இருக்கிறது. 

பரிசுத்த வேதாகமம் சிருஷ்டிக்கப்படாத ஞானமாகிய தேவசுதனைப் பற்றிப் பின்வரும் வார்த்தைகளில் பேசுகிறது: "(அது) நித்தியப் பிரகாசத்தின் ஒளியுமாய், கடவுளின் மகத்துவத்தின் மாசில்லாத கண்ணாடியுமாய், அவரது நன்மைத்தனத்தின் சாயலுமாய் இருக்கிறது” (ஞான. 7:26). 

இந்தக் கண்ணாடி நித்தியத்திலிருந்தே பரலோகப் பிதாவின் கண்களுக்கு முன்பாக இருந்து வருகிறது; அதில் அவர் தாமே முற்றிலும் தெளிவாகப் பிரதிபலிக்கப்படுவதைக் காண்கிறார், அவர் அதில் அளவற்ற திருப்தி காண்கிறார். ஏனெனில் அதில் அவர் எப்போதும் தமது மட்டற்ற வல்லமையையும், இராஜரீக தெய்வீக இலட்சணங்களையும் அவை உள்ளபடியும், நித்தியத்திற்கும் அவை இருக்கப் போகிறபடியும் இப்போது காண்கிறார். இனி என்றென்றும் காண்பார். 

தம்மைப் பற்றிய அறிவும், இந்தத் தெய்வீகக் கண்ணாடியின் தொடர்ச்சியான காட்சி தியானமும் அவரது அளவற்றதும், உத்தமமானதுமாகிய பெருமகிழ்ச்சியின் சாராம்சமாக இருக்கின்றன. இவ்வாறு, மற்ற அனைத்துமே இல்லாதிருந்தாலும், இந்த ஒன்று மட்டுமே நித்தியத்திற்கும் அவரது உத்தமமான மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கப் போதுமானதாக இருக்கும்.

இந்த மாசில்லாத கண்ணாடி கிறீஸ்துநாதரின் பிறப்பின் பரம இரகசியத்தில் ஒரு புதியதும், வேறுபட்டதுமான முறையில் நித்தியப் பிதாவுக்கு முன்பாக வைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த தெய்வீகக் கண்ணாடி அப்போது நம் மனுஷீகமாகிய ஆடையைத் தரித்துக் கொண்டு, மிக அபூர்வமானவையும், விலையேறப் பெற்றவையுமான அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல, சகல புண்ணியங்களாலும், பூரணத்துவங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. 

அதைக் கண்டு தியானிப்பது, (மனித முறைப்படி பேசும் போது) நித்தியப் பிதாவுக்கு ஒரு புதிய இன்பத்தைத் தருகிறது. இந்த இன்பத்தில் மோட்சவாசிகள் அனைவருமே அவரோடு பங்கு பெற்றார்கள். இதன் காரணமாக, தங்களது அபரிமிதமான, உயிருள்ள பேரின்பத்தில், இந்த பாக்கியம் பெற்ற அரூபிகள் தங்கள் குரல்களை உயர்த்தி, க்ளோரியா இன் எக்ஸ்செல்சிஸ் தேயோ என்னும் இனிமையான பாடலைப் பாடுகிறார்கள். 

அந்தப் பாடலின் உத்தமமான இனிமை பக்தியுள்ள இடையர்களை உரைக்கவியலாத மகிழ்ச்சியால் நிரப்பியது. க்ளோரியா முடிவதற்கு முன், சம்மனசுக்களின் படையணிகள் பெத்லகேமுக்கு இறங்கி வந்து, புதிதாய்ப் பிறந்திருக்கும் தேவ குழந்தையானவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, தங்கள் இராஜரீக ஆண்டவர் என்ற முறையில் அவருக்குத் தங்கள் தாழ்மையுள்ள சங்கை வணக்கத்தைச் செலுத்தினார்கள்.

கிறீஸ்து பிறப்பின் இரவில் நிகழ்ந்த இவையெல்லாம் இன்னும் கூட, அனுதினமும், ஒவ்வொரு பூசையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அப்போது, சர்வேசுரனுடைய தலைப்பேறான திருச்சுதன் குருவின் கரங்களில் மீண்டும் மனிதனாகிறார், அவருடைய வார்த்தைகளைக் கேட்டுப் புதிதாய்ப் பிறக்கிறார். 

இவர் தேவ வசீகர வார்த்தைகளால் இருத்தலுக்குள் கொண்டு வரப்படும் ஒரு புதிய கிறீஸ்துநாதர் அல்ல; இங்கே அவருடைய ஆள்தன்மை ஒன்றுக்கு மேற்பட்டதாக அதிகரிப்பதில்லை; மாறாக, முன்பு தாம் இல்லாதிருந்த ஓரிடத்தில் அவர் இப்போது ஆள்தன்மையில் பிரசன்னமாவது மட்டுமே நிகழ்கிறது. 

உண்மையில் அவர் ஒரே ஒரு கிறீஸ்துநாதராக மட்டுமே இருக்கிறார். ஒரே ஒருவராகவும், பிரிக்கப்பட முடியாதவருமாகவே என்றென்றும் நிலைத்திருக்கிறார், ஆனால் இந்தப் பிரசன்னம் வெறும் ஞான முறையில் நிகழ்வதல்ல, மாறாக, அவர் மெய்யாகவே பலிபீடத்தில் எழுந்தருளியிருக்குமாறு அது சரீர ரீதியாகவும் நிகழ்கிறது. 

வசீகரிக்கப்பட்ட தேவ அப்பமும், இரசமும் தங்கள் குணங்களை இழக்காதிருக்கும் வரையிலும் அவர் அவற்றில் பிரசன்னமாகியிருக்கிறார். ஆயினும், தேவ அப்பமும், திவ்விய இரசமும் தங்கள் குணங்களை இழக்கும் போது, அவற்றினுள் இருந்த கிறீஸ்துநாதரின் சுய பிரசன்னம் நீங்கிப் போகிறது, ஒருவேளை அவர் வேறு எந்த இடத்திலும் இல்லாமல், அந்த அப்ப, இரசக் குணங்களுக்குள் மட்டுமே இருந்திருப்பார் என்றால், அவருடைய இருத்தலே நின்று போய்விட்டது என்றும், பரலோகத்திலும், பூலோகத்திலும் கிறீஸ்துநாதர் என்பவர் இல்லை என்றும் சொல்லக் கூடிய அளவுக்கு அவரது பிரசன்னம் திவ்விய அப்ப, இரசத்திலிருந்து முழுமையாக நீங்கிப் போகிறது.

இனி, சர்வேசுரனுடைய இந்தத் தலைப்பேறான திருச்சுதன், குருவானவரின் வார்த்தையைக் கேட்டு மீண்டும் பிறக்கும் போது, சகல தேவ இலட்சணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தப் பிரகாசமுள்ள கண்ணாடி குருவானவரால் எழுந்தேற்றம் செய்யப் பட்டு, அவராலும், மக்களாலும் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும்போது, பரலோகப் பிதா உணரும் மகிழ்ச்சி எப்பேர்ப்பட்டதாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 

நிச்சயமாக, அது அவரது பிறப்பின் இரவில் தமது நேசப் பிரிய குமாரனில் அவர் உணர்ந்த மகிழ்ச்சிக்கு நிகரானதாகவே இருக்கிறது. ஏனெனில் இப்போது போல, அப்போதும் அவர் தம்முடைய இதே திருச்சுதனைக் கண்டு, அவரைப் பற்றி, "என் நேச குமாரன் இவரே, இவர் பேரில் நான் பூரண பிரியமாயிருக்கிறேன்" (மத். 3:17) என்று அவர் கூறினார். 

இதில் ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு, கிறீஸ்துநாதரின் பெத்லகேம் பிறப்பின் போது, அவர் அழியக்கூடிய ஒரு சரீரத்தால் உடுத்தப்பட்டிருந்தார்; ஆனால் இப்போது, திவ்விய பலிபூசையில், அவர் தமது மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் அழகுப்படுத்தப் பட்டிருக்கிறார். அவரது ஐந்து திருக்காயங்களும் விலைமதிக்கப் படாத மணிக்கற்களைப் போல ஜொலிக்கின்றன. அப்போது அவர் காணக்கூடிய, சடத்தன்மையுள்ள சரீரத்தோடு பிறந்தார்; இப்போதோ, அதற்கு நேர்மாறாக, அவர் ஞான முறையிலும், அதற்குச் சற்றும் குறைவுபடாதபடி உண்மையான விதத்திலும் பிறக்கிறார்.

மேலும், பிதாவாகிய சர்வேசுரன் இந்தத் தெய்வீகக் கண்ணாடியைக் கண்டு தியானிப்பதில் மட்டும் இன்பம் காண வில்லை, மாறாக, இந்தக் கண்ணாடி, அவருடைய சொந்த, உயிருள்ள, பூரண பிரியத்திற்குரிய திருச்சுதனாக இருக்கிறது. 

இவர் மகனுக்குரிய வாஞ்சையுடனும், பாசத்துடனும் அவரை நேசிக்கிறார், அவருக்கு உரைக்க இயலாத பேரின்பத்தை வருத்துவிக்கிறார். சேசுக்கிறீஸ்துநாதரில் தெய்வீகம் கண்டடைகிற மகிழ்ச்சியானது, சம்மனசுக்களின் துதிகளிலிருந்தும், அர்ச்சியசிஷ்டவர்களின் ஆராதனையிலிருந்தும், விசுவாசிகளின் வழிபாட்டிலிருந்தும் அது பெற்றுக் கொள்ளும் மகிழ்ச்சியை விடப் பாரதூரமான அளவுக்கு மேம்பட்டதாக இருக்கிறது. 

ஏனெனில் தேவ சுதன் என்னும் ஒரே தேவ ஆளில், தெய்வீகத்தோடு ஒன்றிக்கப்பட்டுள்ளதும், அதனால் தெய்வீகமாக்கப்பட்டுள்ளதுமான கிறீஸ்துநாதரின் மனுஷீகம் மட்டுமே தெய்வீகத்தின் அளவற்ற மகத்துவத்திற்குத் தகுதியான ஸ்துதி புகழ்ச்சியையும், நேசத்தையும், மகிமையையும் செலுத்த வல்லதாக இருக்கிறது. 

கிறீஸ்துநாதர் அர்ச். மெட்டில்டாவுக்கு வெளிப்படுத்தியுள்ளது போல, அவர் மட்டுமே தமது பலி எப்படி விசுவாசிகளின் நன்மைக்காக எப்படி பீடத்தின் மீது அனுதினமும் ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்பதை முழுமையாக அறிந்திருக்கிறார். இதே முறையில், அனுதின திவ்விய பலிபூசையில் தெய்வீகம் எப்படி அதற்கு உரிய முறையில் போற்றித் துதிக்கப்பட்டு, மகிமைப்படுத்தப் படுகிறது என்பதையும் அவர் மட்டுமே அறிந்திருக்கிறார். 

இதை அவர் எந்த அளவுக்கு அழகான, வியக்கத்தக்க முறையில் நிறைவேற்றுகிறார் என்றால், பக்திச்சுவாலகரோ, ஞானாதிக்கரோ, பரலோகத்திலுள்ள வேறு எந்த வல்லமையுமோ இதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை, அல்லது இன்னும் மேலாக, இதுபோன்ற செயலை அவர்களால் செய்ய முடிவதுமில்லை. 

பரலோக சேனைகள் அனைத்தும் இதைப் பிரமிப்போடும், பெரும் வியப்போடும் பார்க்கிறார்கள்; தங்கள் புத்தியால் இந்த அளவற்ற பேரின்பத்தின் மூலாதாரத்தின் ஆழத்தை அளந்து பார்க்க அவர்களால் முடிவதில்லை. இது தினமும் ஆயிரக்கணக்கான பூசைகளில் மீண்டும் நிகழ்த்தப்படுவதால், தினமும் நிறைவேற்றப்படும் பூசைகளிலிருந்து மகா பரிசுத்த தமத்திரித்துவம் பெற்றுக் கொள்ளும் மகிழ்ச்சியின் அளவையும், மகிமையையும் எடுத்துரைக்க யாரால் முடியும்?

என் தேவனே, இந்த மகிழ்ச்சியைப் பற்றிய நினைவில் நான் பக்தியார்வம் கொண்டு அக்களிக்கிறேன், என் இருதயபூர்வமான சங்கை வணக்கத்தைக் கொண்டு அதை அதிகரிக்க முயல்வதிலும் நான் மகிழ்ச்சி கொள்வேன். சேசுவே, திவ்விய பலிபூசையில், என் நிமித்தமாகப் பரிசுத்த தமத்திரித்துவத்தை நேசிப்பதிலும், அவரை மகிமைப்படுத்துவதாலும், என் நிமித்தமாக, நான் செலுத்தத் தவறிய நேசம் மற்றும் ஆராதனையின் கடனை நீரே செலுத்துவதாலும், என் பங்கை நீரே செய்து முடிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறேன்.