இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார்

கிறீஸ்துநாதரின் வாழ்வின் அனைத்து பரம இரகசியங்களிலும், நாம் தியானிக்கும் போது அதிகமான பலன் தரக் கூடியதும், வேறு எதையும் விட நம் ஆராதனைக்கு அதிக உரிமையுள்ளதுமான பரம இரகசியம் அவரது கசப்பான திருப்பாடுகளையும், திருமரணத்தையும் தவிர வேறு எதுவுமில்லை. இவற்றின் வழியாகவே நம் இரட்சணியம் நிறைவேற்றப்பட்டது. நம் ஆண்டவரின் திருப்பாடுகளை தியானித்து, வணங்குபவர்கள் ஒரு செழிப்பான சம்பாவனையைப் பெற்றுக் கொள்வார்கள் என்று திருச்சபைத் தந்தையர்கள் கூறுகிறார்கள். 

இதைச் செய்வதற்குப் பல்வேறு முறைகள் உள்ளன. ஒவ்னொறும் தனக்கேயுரிய முறையில் பலனளிக்க வல்லது, ஆனால் பக்தியோடு பூசை காணும் வழியை விடச் சிறந்த வழி வேறு ஏதுமில்லை. ஏனெனில் அப்போது திருப்பாடுகள் உண்மையாகவே புதிதாக அனுபவிக்கப்படுகின்றன, அவை நம் நன்மைக்காக மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன, இதன் காரணமாக, பூசையில் கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளை அதிக எளிதாக நம்மால் தியானிக்க முடியும், அதை அதிக தத்ரூபமாக நாம் கண்டுதியானிக்க முடியும்.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரின் திருப்பாடுகள் புதுப்பிக்கப்படுகின்றன என்பது அனைவரும் தெளிவாக அறிந்ததுதான். அதிலுள்ள ஒவ்வொன்றும் திருப்பாடுகளை நினைவுபடுத்துகிறது, அதைச் சுட்டிக் காட்டுகிறது. அவற்றில் முதலாவதாக, தொடர்ச்சியாக, நம் கண்களைச் சந்திக்கும் சிலுவை அடையாளம். 

பீடக் கல்லில் ஐந்து சிலுவைகள் செதுக்கப்பட்டுள்ளன. அதை அபிஷேகம் செய்யும் போது, மேற்றிராணியார் அதன்மீது நூறு தடவைகளுக்கும் மேலாக சிலுவை அடையாளம் வரைந்தார். பரிசுத்த பாத்திரங்களும், குருத்துவ உடைகளும் எல்லாமே சிலுவை அடையாளத்தால் குறியிடப்பட்டுள்ளன. பூசை நிறைவேற்றப்படும் போது, குருவானவர் பதினாறு தடவைகள் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்கிறார். பலிப் பொருட்களை இருபத்தொன்பது தடவைகள் அதே அடையாளத்தைக் கொண்டு ஆசீர்வதிக்கிறார். 

இப்படி சிலுவை அடையாளம் இடைவிடாமல் பயன்படுத்தப்படுவது கிறீஸ்துநாதரின் இரத்தப்பலியையன்றி வேறு எதைக் குறித்துக் காட்ட முடியும்? அது, பூசையில் கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளும், திருமரணமும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன, பீடத்தின் மீது அவை புதுப்பிக்கப்படுகின்றன என்பதையே காட்டுகிறது.

நம் ஆண்டவர் கடைசி இராப் போஜனத்தில், "இதை என் நினைப்புக்காகச் செய்யுங்கள்" என்று நேரடியாகவே கூறினார் என்றாலும், திவ்விய பலிபூசை என்பது வெறும் ஞாபகார்த்தமல்ல, மாறாக, அது கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளின் புதுப்பித்தல் ஆகும். 

திரிதெந்தின் பொதுச்சங்கத்தில் பரிசுத்த திருச்சபை இப்படிப் போதிக்கிறது: "திவ்விய பலிபூசை சிலுவைப் பலியின் வெறும் ஞாபகார்த்தம் மட்டுமே என்று சொல்பவன் எவனும் சபிக்கப்படக் கடவான்." அந்தச் சங்கத்தின் அதே அமர்வில் (22, அத். 2), "பூசையில் நிறைவேற்றப்படும் இந்தத் தெய்வீகப் பலியில், முன்பு சிலுவையாகிய பீடத்தில் தம் இரத்தத்தைச் சிந்தி தம்மைப் பலியாக்கிய அதே கிறீஸ்துநாதர்தான் அடங்கியிருக்கிறார், அவர் பலிபீடத்தில் இரத்தம் சிந்தாத முறையில் மீண்டும் பலியாக்கப்படுகிறார்" என்று அறிக்கையிடப்படுகிறது.

இதைத் தவிர வேறு அதிகாரபூர்வமான போதனை எதுவும் இல்லையென்றே வைத்துக் கொண்டாலும் நம் மனங்களைத் திருப்திப்படுத்தவும், அவற்றிலிருந்து எல்லா சந்தேகங்களையும் அகற்றவும் இதுவே போதுமானது. ஏனெனில் இஸ்பிரீத்து சாந்துவின் வழிகாட்டுதலின் கீழ் கத்தோலிக்கத் திருச்சபை கற்பிப்பதும், நாம் ஏற்றுக் கொள்ளும்படி நம் முன் ஸ்தாபிப்பதுமான காரியத்தை உறுதியாக விசுவசிக்கவும், எந்த விதத்திலும் அதற்கு முரண்படாமல் இருக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். 

இப்போது, சிலுவையின் மீது வேதனையுள்ள முறையில், தமது இரத்தத்தைச் சிந்தி தம்மையே பலியாக்கிய அதே கிறீஸ்துநாதர், இப்போது திவ்விய பலிபூசையில் உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறார், அவர் புதிதாக, ஆனால் இரத்தம் சிந்தாத, வேதனையற்ற முறையில் மீண்டும் பலியாகிறார் என்று திருச்சபை அறுதியிட்டுப் போதிக் கிறது.

இதற்குச் சான்றாகவும், இதை உறுதிப்படுத்தும்படியாகவும் திருச்சபை மேலும் வலியுறுத்துவதாவது: "ஏனெனில் பலியாகிறவர் ஒருவரே, சிலுவையில் முன்பு தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்தவரே இப்போது குருக்களின் ஊழியத்தைக் கொண்டு தம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறார், ஒப்புக்கொடுக்கும் முறை மட்டும் தான் வேறுபட்டுள்ளது." 

அதாவது, சிலுவைப் பலி மற்றும் பூசைப் பலி ஆகிய இரண்டு பலிகளிலும் ஒரே பலிப்பொருளானவர்தான் ஒப்புக் கொடுக்கப்படுகிறார், பலிகளை ஒப்புக்கொடுப்பவரும் இவை இரண்டிலும் ஒருவர்தான், அதே கிறீஸ்துநாதர்தான்; ஆனால் அவர் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கும் முறைதான் இந்த இரண்டு பலிகளிலும் வேறு வேறாக உள்ளது. 

சிலுவையின் மீது அவர் வாதிப்போரின் கரங்களால் மரணத்திற்குக் கையளிக்கப்பட்டார் என்றாலும், உண்மையில் அவர்தான் தம்மையே இரத்தப் பலியாக ஒப்புக்கொடுத்தார்; பீடத்தின் மீதும் அவர்தான் தம்மையே ஒப்புக் கொடுக்கிறார் என்றாலும், இந்த முறை அவர் குருக்களின் கரங்களாலும், அவர்களது ஊழியத்தின் வழியாகவும் ஒப்புக்கொடுக்கப் படுகிறார், அவர்களால் இரத்தம் சிந்தாத முறையில் அவர் பலியாக்கப் படுகிறார்.