இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு கையளித்து ஒப்புக்கொடுக்கும் விலை மதிக்கப்படாத பலி

கடவுள் சம்மனசுக்களைப் படைத்தபோது, தமது அதியபரிமித செல்வ வளத்திலும், தாராளத்திலும், மாபெரும் அர்ச்சியசிஷ்டதனத்தாலும், வேறு பல மகிமையுள்ள இலட்சணங்களாலும் அவர்களை நிரப்பினார். 

மேலும், தமது தேவசிநேகத்தால் மட்டுமே தூண்டப்பட்டவராக, பல நல்ல மனிதர்களையும், பிரசித்தமான அர்ச்சியசிஷ்டவர்களையும் கூட, அவர்களது பிறப்பிலிருந்தே அசாதாரணமான கொடைகளாலும், வரங்களாலும் நிரப்பியிருக்கிறார்; எல்லா வற்றிற்கும் மேலாக, மகா பரிசுத்த கன்னிகையின் படைப்பின் போதும், அவர்களது வாழ்நாள் முழுவதிலும், அவர்களை அசாதாரணமான வரங்களாலும், சலுகைகளாலும், மிக அபரிமிதமான உத்தம இலட்சணங்களாலும் நிரப்பினார். 

ஆனால் கிறீஸ்துநாதரின் மகா பரிசுத்த மனுஷீகத்திலோ, அது சிருஷ்டிக்கப்பட்டபோது இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் எண்ணற்ற விதமாக அதற்குத் தந்த அளவிட முடியாத வரப்பிரசாத சலுகைகள் மற்றும் பரலோக நன்மைகள் தவிர, மேற்சொன்ன எல்லாக் கொடைகளும், வரப்பிரசாதங்களும் ஒன்றாகச் சந்திக்கின்றன. 

இதன் காரணமாக, நம் ஆண்டவரின் மனுஷீகம் மனித புத்திக்கெட்டாத அளவுக்கு எவ்வளவு மேன்மையுள்ளது, எவ்வளவு உன்னதமானது, எவ்வளவு மகிமையானது என்றும், அது தன்னில் எத்தகைய ஆழங்காண முடியாத உன்னத இலட்சணங்களின் பெருங்கடலை உள்ளடக்கியுள்ளது என்றும் நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.

கிறீஸ்துநாதரின் மகா பரிசுத்தமுள்ளதும், உயர்த்தப்பட்டதுமாகிய மனுஷீகமே மகா உன்னத குருவும் சர்வேசுரனுடைய ஏக பேறானவருமாகிய திருச்சுதன் தினமும் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசையிலும் மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு கையளித்து ஒப்புக்கொடுக்கும் விலை மதிக்கப்படாத பலியாக இருக்கிறது. 

அவர் இதை மட்டும் தனியாக ஒப்புக்கொடுக்கவில்லை. இதே பரிசுத்த மனுஷீகத்தில் மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் அதிமிக சங்கைக்காகவும், மகிமைக்காகவும் முப்பத்து மூன்று ஆண்டுகளாகத் தாம் செய்தவையும், அனுபவித்தவையுமான அனைத்தையும் அவர் ஒப்புக் கொடுக்கிறார். 

அதாவது, தமது உபவாசங்கள், கண்விழிப்புகள், ஜெபங்கள், பயணங்கள் அனைத்தையும், தமது தபசுகள், போதனைகள், ஒறுத்தல்கள் அனைத்தையும், தமக்கு எதிரான கலாபனைகள், அவதூறு, அவமானம், நிந்தைகள் அனைத்தையும், வேதனைகள், கசையடிகள், முள்முடி, திருக்காயங்கள், மற்றும் தாம் அனுபவித்த சகல வாதைகளையும், மன வேதனைகளையும், தமது கண்ணீர், இரத்த வியர்வை, தமது விலாவிலிருந்து வழிந்த தண்ணீர், தமது இரத்தமாகிய செந்நிறக் கடல் ஆகிய அனைத்தையும் சேர்த்து அவர் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறார். 

நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசையிலும் இவை அனைத்தையும் அவர் மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு முன்பாக வைத்து, பூலோகத்தில் தமது பரிசுத்த வாழ்வின் போதும், தமது கசப்பான பாடுகளின் போதும் தாம் எப்படி இவற்றை ஒப்புக்கொடுத்தாரோ, அதற்குச் சற்றும் குறையாத விதத்தில் அவர் திவ்விய பலி பூசை ஒவ்வொன்றிலும் ஒப்புக் கொடுக்கிறார்.

ஆனால் கிறீஸ்துநாதர் தமது பரிசுத்த மனுஷீகத்தைத் தனியாக அன்றி, தமது தெய்வீகத்தோடு ஒன்றித்து ஒப்புக்கொடுத்ததில்தான் இந்தப் பலியின் அடிப்படையான மதிப்பு அடங்கியுள்ளது. 

ஏனெனில் திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரின் தெய்வீகமல்ல, மாறாக, அவருடைய மனுஷீகம்தான் பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது, என்றாலும் இப்படி ஒப்புக்கொடுக்கப்படும் பலியை உத்தமமானதாக்குவது தேவ-மனித ஒன்றிப்புதான். இந்த ஒன்றிப்பின் வழியாகவே அவரது மனுஷீகம் தெய்வீகத் தன்மையைப் பெறுகிறது, அது அளவற்ற வரப்பிரசாதப் பொக்கிஷங்களால் செறிவூட்டப்பட்டு, விலைமதிக்கப்பட முடியாத ஒரு மதிப்பைப் பெற்றுக் கொள்கிறது. 

இவ்வாறு, இரட்சகர் ஒவ்வொரு திவ்விய பலிபூசையிலும் மகா உன்னத சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கும் பலி எவ்வளவு அளவற்ற மதிப்புள்ளதாக இருக்கிறது என்பதை நாம் தீர்மானிக்கிறோம். ஏனெனில் அவர் தமது மனுஷீகத்தை அற்புதமானதும், புரிந்து கொள்ளப்பட முடியாததுமான முறையில் ஒப்புக் கொடுக்கிறார்.

இறுதியாக, கிறீஸ்துநாதர் தமது மனுஷீகத்தை, மோட்சத்தில் அது இப்போது இருப்பது போல, மகிமைப்படுத்தப்பட்டதாக அல்லாமல், பீடத்தின் மீது அது இருக்கும் தாழ்மையான வடிவில் தான் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார் என்பதை நாம் கண்டு பிடிக்கத் தவறக் கூடாது. 

மோட்சத்திலுள்ள சம்மனசுக்கள் சேசுக் கிறீஸ்துநாதருடைய மகிமைப்படுத்தப்பட்ட மனுஷீகத்திற்கு முன்பாக நடுநடுங்குகிறார்கள். அதே மனுஷீகம் நம் பலிபீடங்களின் மீது தாழ்மையான நிலையில் இருப்பதைக் காணும்போது, அவர்கள் பெரும் அதிசய உணர்வால் வாயடைத்துப் போகிறார்கள். 

இங்கே அது -- சிறைப்படுத்தப்பட்டது போல -- அப்ப, இரசத்தின் குணங்களுக்குள் மறைந்திருக்கிறது. ஏனெனில் இந்த வெளியரங்க வடிவங்கள் நமதாண்டவரின் பரிசுத்த மனுஷீகத்தை எவ்வளவு நெருக்கமாகச் சூழ்ந்திருக்கின்றன என்றால், அவை வேறொரு இடத்திற்கு அவை எடுத்துச் செல்லப்பட்டால், அதுவும் அவற்றோடு எடுத்துச் செல்லப்படுகிறது. 

இந்த வெளிக் குணங்கள் நீடித்திருக்கும் வரை, அது அவற்றின் கீழ் பிரசன்னமாயிருக்கிறது. எந்த அழியக் கூடிய சக்தியளம் அவற்றிடமிருந்து அதைப் பிரிக்க முடியாது. இவ்வளவு சிறிய, இவ்வளவு தாழ்மையான, இவ்வளவு கீழான வடிவத்தின் கீழ் கிறீஸ்துநாதர் தம்மையே மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்குக் கையளிக்கிறார், பரலோக சேனைகள் முழுவதும் ஆழ்ந்த பிரமிப்புக்கு உள்ளாகும் விதத்தில் அவர் தம்மை ஒப்புக் கொடுக்கிறார்.

கிறீஸ்துநாதரின் மகிமையுள்ள மனுஷீகம் இப்படித் தாழ்த்தப் படுவதைக் காண்பது மகா பரிசுத்த தமத்திரித்துவத்திடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? 

பிதாவாகிய சர்வேசுரனுடைய பூரண பிரியத்துக்குரிய திருச்சுதன் இப்படி அளவற்ற விதமாகத் தம்மைத் தாழ்த்திக் கொள்வதன் மூலம் அளவில்லாத மகிமையைத் தமது பிதாவுக்குச் செலுத்துகிறார். இது திவ்விய பலிபூசைக்கு ஒரு மாபெரும் பலனைத் தருகிறது. 

ஏனெனில் இந்த வழியில்தான் இந்த தெய்வீகப் பரம இரகசியம் நிறைவேற்றப்படுகிறது. இது இரட்சணியத்தின் ஆதாரமாகவும், மனுக்குலத்திற்குப் பெரும் நன்மை விளைவிப்பதாகவும் இருக்கிறது. இந்த மனுக்குலத்திற்காகவே இந்த மகா பரிசுத்த பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது. 

உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள துன்புறும் ஆத்துமங்களுக்கு அது தரும் ஆறுதலும், நிவாரணமும் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுடைய இளைப்பாற்றிக்காகவும், விடுதலைக்காகவும் பூசை அடிக்கடி நிறைவேற்றப்படுகிறது.

திவ்விய பலிபூசையை இன்னும் உயர்வாக நாம் மதித்துப் போற்றவும், அதிக மகிழ்ச்சியோடும், அதிக ஆழமான பக்தியோடும் முன்னை விட அடிக்கடி அதில் நாம் பங்கு பெறச் செய்யவும் இந்த அளவு நமக்கு உதவக் கூடும். 

ஏனெனில் அன்றாடம் ஒப்புக் கொடுக்கப்படும் பூசைகள் தேவ வரப்பிரசாதத்தின் ஆயுதங்களாகவும், தேவ இரக்கத்தின் ஊற்றாகவும் இருக்கின்றன. நாம் பக்தியோடு அவற்றில் பங்கு பெறும்போது. அவை சர்வ வல்லமையுள்ள பாவப் பரிகாரப் பலியாகவும் இருக்கின்றன. 

இதன் காரணமாக, நம் நிமித்தமாக, அனுதினமும், அல்லது இன்னும் மேலாக, ஒவ்வொரு மணிவேளையிலும், பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு அவர் தம்மையே நமக்காக ஒப்புக்கொடுக்கும் இந்தப் பலன்மிக்க, நன்மைகள் நிறைந்த திவ்விய பலிக்காக நாம் நம் ஆராதனைக்குரிய இரட்சகருக்கு இருதய பூர்வமான நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். 

தேவ வரப்பிரசாதங்களை சம்பாதிக்கவும், அவரது இரக்கத்தின் கோட்டையை, ஒரு பேச்சு வகைக்கு, புயலைப் போல நாம் முற்றுகையிடவும் நமக்கு உதவுகிற இவ்வளவு வலிமையுள்ள ஓர் ஆயுதத்தை நமக்குத் தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்த உண்மையாகவே நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.