இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பூலோக வாழ்வைப் புதுப்பிக்கிறார்

நாம் திவ்விய பலிபூசையின் மாபெரும் பரம இரகசியங்களை மிகுந்த கவனத்தோடு கண்டு தியானித்து, பூசை நிறைவேற்றும் குருவானவர் சேசுக்கிறீஸ்துநாதரின் பிரதிநிதி என்ற முறையில், மகிழ்ச்சியின் உடைகளைத் தரித்துக் கொண்டு, இரட்சகரின் வாழ்வு மற்றும் மரணத்தின் அற்புதமான பரம இரகசியங்களை நம் கண்களுக்கு முன்பாக மீண்டும் நிகழச்செய்கிறார் என்ற உண்மையை நம் மனங்களின் மீது அழுத்தமாகப் பதித்துக் கொள்வோம் என்றால், இந்த ஆறுதல் தரும் காட்சியில் பங்குபெற ஆவல் கொண்டு, பூசைக்கு முதல் மணி அடித்தவுடனேயே தேவாலயத்தை நோக்கி நாம் விரைந்து செல்வோம். 

ஏனெனில், சாஞ் செஸ் கூறுவது போல, ''இந்தப் புனிதமான நாடகத்தில், நம் இரட்சகரின் பேறுபலன்கள் நம்மீது பொழியப்படுகின்றன, நமக்கே சொந்தமாகத் தரப்படுகின்றன.''

நம் கண்கள் விசுவாசத்தால் ஒளிர்விக்கப்படும் என்றால், இந்தப் புனிதமான காட்சி ஒரு தீவிரமான மகிழ்ச்சியைக் கொண்டு நம்மை நிரப்பும். ஏனெனில் திவ்விய பலிபூசை கிறீஸ்துநாதரின் ஒட்டு மொத்த வாழ்வினுடையவும் ஒரு சுருக்கமான தொகுப்பாகவும், அதில் அடங்கியுள்ள சகல பரம இரகசியங்களுடையவும் புதுப்பித்தலாகவும் இருக்கிறது--உண்மையில் அது கடந்த கால நிகழ்வுகளின் ஒரு கற்பனையான சித்தரிப்பாக இல்லாமல், கிறீஸ்துநாதர் இந்த பூமியில் இருந்தபோது செய்தவையும், துன்புற்றவையுமான அனைத்தும் நிஜமாகவும், உள்ளபடியும் மீண்டும் நிகழும் காரியமாக இருக்கிறது.

இவ்வாறு திவ்விய பலிபூசையில், அணையாடைகளில் பொதியப்பட்டவராக இடையர்கள் கண்ட அதே தேவ குழந்தையை நாம் காண்கிறோம். ஆயினும் இன்னும் தாழ்மையான வடிவத்தில், அதாவது அப்ப, இரச வடிவத்தில் நாம் அவரைக் காண்கிறோம்; ஆம், மூன்று அரசர்களால் ஆராதிக்கப்பட்டவர்களும், சிமியோன் தீர்க்கதரிசியின் கரங்களால் ஏந்தப்பட்டவருமான அதே குழந்தையானவர் இப்போது பீடத்தின் மீது நமக்கு முன்பாக இருக்கிறார். 

அவர்கள் செய்தது போல நாமும் அவரைப் பக்தியோடு ஆராதிக்கலாம், அன்போடு அரவணைத்துக் கொள்ளலாம். பூசை தொடர்ந்து நிகழும்போது, சுவிசேஷம் நமக்குப் போதிக்கப்படுகிறது. உண்மையில் குருவானவரின் குரலைத்தான் நாம் கேட்கிறோம், ஆனாலும் அந்த வார்த்தைகள் கிறீஸ்துநாதர்தாமே அவற்றைக் கூறுவதற்கு நிகரான வலிமையைக் கொண்டுள்ளன.

மேலும், கலிலேயாவின் கானாவூரில் அவர் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கிய புதுமையை விடப் பெரிதான ஒரு புதுமையை அவர் செய்வதை நாம் காண்கிறோம். இங்கேயோ அவர் திராட்சை இரசத்தைத் தமது திரு இரத்தமாக மாற்றுகிறார். 

பூசையில் கடைசி இராப்போஜனத்தின் காட்சி மீண்டும் நிகழ்த்தப்படுகிறது, ஏனெனில் அப்பமும், திராட்சை இரசமும் முன்பு எப்படி மாறியதோ, அப்படியே இங்கும் மாறுகின்றன. கிறீஸ்துநாதர் குருவானவரின் கரத்தால் கொல்லவும் பட்டு, அவரால் மகா உன்னத சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கவும் படுகிறார். 

இது பற்றி சுவாமி சாஞ்செஸ் எழுதும் போது, "திவ்விய பலிபூசையால் ஆதாயம் பெற ஆசை கொள்பவன் வெறுமனே பக்தியோடு அதில் பங்கு பெறுவதன் மூலம், இந்த எல்லாப் பரம இரகசியங்களையும் தான் நேரடியாகக் கண்டது போல, நேரடியாக பாவ மன்னிப்பையும், தேவ வரப்பிரசாதக் கொடையையும் பெற்றுக் கொள்ள வல்லவனாக இருக்கிறான்" என்று கூறுகிறார். 

இவ்வாறு, இந்த மேலான வழிபாடு எவ்வளவு பயனுள்ளது என்பதையும், அதில் பங்கு கொள்பவர்கள் எவ்வளவு அதிகமான நன்மைகளை சம்பாதித்துக் கொள்கிறார்கள் என்பதை யும் நாம் காணலாம்.

பக்தியுள்ள கர்த்தூசியரான டெனிஸ், திவ்விய பலிபூசையில் நம் ஆண்டவரிருடைய வாழ்வின் பரம இரகசியங்களின் மறு நிகழ்வை விளக்குகிறார். "பூமியின் மீது கிறீஸ்துநாதர் நடத்திய வாழ்வு முழுவதும் ஒரு மிக நீண்ட பூசையாக இருக்கிறது. அதில் அவரே பீடமாகவும், குருவாகவும், பலிப்பொருளாகவும் இருக்கிறார்" என்று அவர் கூறுகிறார்.

நமதாண்டவர் தமது திருமாதாவின் திருவுதரத்தில் நம் பார்வையிலிருந்து மறைந்தவராக, நம் சரீரத்தையும், அழியக்கூடிய நமது மனுஷீகமாகிய ஆடையையும் அணிந்து கொண்டபோது, அவர் குருத்துவ உடைகளை அணிந்து கொண்டார் என்று சொல்லப்படலாம். 

திருவஸ்திர சாலையிலிருந்து பீடத்திற்கு வரும் குருவாக, தாம் பிறந்த இரவில், தம் திருத்தாயாரின் திருவுதரத்திலிருந்து அற்புதமான முறையில் வெளியே வந்த அவர், உலகில் இவ்வாறு பிரவேசித்ததும், பூசையின் தொடக்கமாகிய பிரவேச வாக்கியத்தைத் தொடங்கினார். 

முன்னிட்டியில் அவர் வெளியிட்ட அழுகைச் சத்தங்களே கீரியே எலேயிஸோன் ஆகும். இடையர்களுக்குத் தோன்றி, பெத்லகேமின் தொழுவம் வரைக்கும் அவர்களோடு சேர்ந்து வந்த சம்மனசுக்களால் க்ளோரியா பாடப்பட்டது. 

நமக்காகக் கடவுளை மன்றாடியபடி, அவர் ஜெபத்தில் இரவைக் கழித்தபோது, அவர் ஒப்புக்கொடுத்த மன்றாட்டுக்களை சபைச் செபங்கள் குறிக்கின்றன. 

நிருபமானது, மோயீசனுடையவும், தீர்க்கதரிசிகளுடையவும் தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் போதித்து, அவை எப்படித் தம்மில் நிறைவேறின என்பது பற்றி அவர் தந்த போதனைகளைக் குறிக்கிறது. 

யூதேய நாடு முழுவதும் சுற்றித் திரிந்து, தமது தெய்வீக போதனையை அவர் அறிக்கையிட்டபோது, அவர் பரிசுத்த சுவிசேஷத்தை வாசித்தார். 

பரிகாரப் பலிப்பொருளாக, மனுக்குலத்தின் மீட்புக்காகப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு அவர் தம்மை அனுதினமும் காணிக்கையாக்கியதை ஒப்புக்கொடுத்தல் ஜெபம் குறிக்கிறது. 

அவர் பிதாவாகிய சர்வேசுரனுக்கு அனுதினமும் செலுத்திய துதி புகழ்ச்சியையும், மனிதனின் மீது பொழியப்பட்ட நன்மைகளுக்காக அவர் செலுத்திய நன்றியறிதலையும் முகவுரை குறிக்கிறது. 

"தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! சர்வேசுரனுடைய நாமத்தினால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! உந்நதங்களில் ஓசன்னா !'' (மத்.21:9) என்று எபிரேய மக்கள் குருத்து ஞாயிறன்று அவரை வாழ்த்தி ஆர்ப்பரித்தபோது, சாங்க்துஸ் பாடப்பட்டது. 

கடைசி இராப் போஜனத்தில், அவர் அப்பத்தையும், இரசத்தையும் தமது திருச்சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றிய போது, தேவ வசீகரம் நிகழ்ந்தது. 

அவர் சிலுவையில் உயர்த்தப்பட்டு, சம்மனசுக்களுக்கும், மனிதர்களுக்கும் காட்சிப் பொருளாகத் தம்மை ஆக்கிக் கொண்ட போது, திவ்விய நற்கருணை எழுந்தேற்றம் நிகழ்ந்தது. 

சிலுவையின் மீது அவர் உச்சரித்த ஏழு திருவாக்கியங்களைப் பரலோக மந்திரம் குறிக்கிறது; அப்பம் பிட்கப்படுதல், அவரது பரிசுத்த ஆத்துமமும், சரீரமும் பிரிக்கப்பட்டதைக் குறிக்கிறது. 

செந்தூரியனும், அவனோடு இருந்தவர்களும் தங்கள் மார்பில் அறைந்து கொண்டு, "மெய்யாகவே இவர் தேவ குமாரனாயிருந்தார்" (மத். 27:54) என்ற போது, ஆஞ்ஞஸ் தேயி அவர்களால் சொல்லப்பட்டது. 

நம் ஆண்டவரின் மரித்த திருச்சரீரம் தைலங்கள் பூசப்பட்டு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதை திவ்விய நன்மை உட்கொள்ளுதல் குறிக்கிறது. 

பூசையின் முடிவில் வழங்கப்படும் ஆசீர்வாதம், அவர் தாம் மோட்சத்திற்கு எழுந்தருளிச் செல்வதற்கு முன் தம் சீடர்களுக்குத் தந்த ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது.