இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கத்தோலிக்கப் பூசை விளக்கம் - திவ்விய பலிபூசைக்கு மோசமான எதிரி

அப்போஸ்தலர்கள் காலம் தொடங்கி, தற்காலம் வரை திவ்விய பலிபூசைக்கு பரிதாபத்திற்குரிய மார்ட்டின் லூத்தரை விட அதிகம் மோசமான எதிரி வேறு யாரும் இருந்ததில்லை. அவன் இந்தத் தெய்வீகப் பரம இரகசியத்தைத் தாக்கியது மட்டுமின்றி, அதை வெளிப்படையாகக் குற்றம் சாட்டவும் செய்தான். 

இதை அவன் தானாகவோ, அல்லது முதன்முதலாகத் தான் விசுவாசத்தை மறுதலித்தபோதோ செய்யவில்லை. மாறாக, பிந்தைய ஒரு காலத்தில், பசாசின் தூண்டுதலாலேயே அவன் இப்படிச் செய்தான். உண்மையில், பசாசின் மாய்கையில் அகப்பட்ட அவன், தன் போதனை பசாசிடமிருந்தே வருகிறது என்பதைத் தானே ஒத்துக் கொண்டான். 

பசாசு நன்மையானதை எல்லாம் வெறுப்பவன் என்றும், வேறெதையும் அன்றி, தீமையை மட்டுமே மனுக்குலத்திற்குக் கற்றுக் கொடுப்பவன் என்றும் லூத்தர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்றாலும், அவனுடைய ஆலோசனைப்படியே அவன் பூசையை "விக்கிரக வழிபாட்டுச் செயல்" என்று சொல்லி அதை ரத்துச் செய்தான். 

மேலும், பூசையானது விக்கிரக வழிபாடு தொடர்பானதாக இருந்தால், பசாசு அதை எதிர்த்திருக்காது, அதை அழித்து விட வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை, அதற்கு மாறாக, பசாசு பூசை பக்தியை வளர்த்திருக்கும், அதைப் போற்றிப் புகழ்ந்திருக்கும் என்பதையும் லூத்தர் சிந்தித்திருக்கலாம். 

ஏனெனில் அதிகப் பூசைகள் வைக்கப் படும்போது, லூத்தரின் கொள்கைப்படி, அதிகமான விக்கிரக வழிபாட்டுச் செயல்கள் செய்யப்பட்டிருக்கும், மகா உன்னதருக்கு இன்னும் பெரிதான அவசங்கை செய்யப்பட்டிருக்கும்.

இந்த விதத்தில் சாத்தான் லூத்தரன் சபையினரிடமிருந்து மட்டுமின்றி, அவனுக்குப் பின் எழுந்த ப்ரொட்டஸ்டாண்ட் சபைகள் அனைத்திடமிருந்தும் பலன் மிக்க திவ்விய பலிபூசையை அகற்றி விட்டான். இதன் மூலம் சரிசெய்யப்பட முடியாத ஒரு பெரும் தீமையை அவன் அவர்களுக்குச் செய்து விட்டான். 

உண்மையில், இந்த பக்திக்குரிய பரம இரகசியத்தை அவர்கள் எந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கும்படி அவன் செய்து விட்டான் என்றால், நாம் ஹைடல்பர்க் கால்வினிய ஞான உபதேசத்தில் வாசிப்பது போல, பூசை என்பது சிலுவைப் பலியின் மறுதலிப்பு என்றும், அது சபிக்கப்பட்ட விக்கிரக ஆராதனை என்றும் அவர்கள் அறிக்கையிடுகிறார்கள். 

இத்தகைய பயங்கரமான தேவநிந்தை ஒவ்வொரு பக்தியுள்ள இருதயத்தையும் கடும் அச்சத்தால் நிரப்பவும், ஒவ்வொரு நல்ல கிறீஸ்தவனும் தன் செவிகளை மூடிக்கொள்ளச் செய்யவும் போதுமானது. இத்தகைய தேவதூஷணங்களை மறுத்துப் பேச நாம் அதிக நேரம் ஒதுக்கப் போவதில்லை; அவற்றை அடியோடு மறுக்க ஒரே ஒரு வாதம் போதுமானதாக இருக்கும்.

இந்தத் தப்பறையான கொள்கைகள் உண்மையாக இருக்கும் என்றால், அப்போஸ்தலராக இருந்தாலும் சரி, வேதசாட்சியாக இருந்தாலும் சரி, கிறீஸ்துநாதரின் காலத்திலிருந்து ஒரே ஒரு மனிதன் கூட இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. 

பரிசுத்த அப்போஸ்தலர்களும், குருத்துவத்தில் அவர்களுடைய வழிவந்தவர்களாகிய அனைவரும் திவ்விய பலிபூசை நிறைவேற்றி, அதை மகா உன்னத சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்; எல்லாப் பரிசுத்த வேத சாட்சிகளும், ஸ்துதியர்களும் பக்தியோடு பூசை கண்டார்கள், தேவ வழிபாட்டின் அனைத்திலும் மேலான செயலாக அவர்கள் அதை மதித்தார்கள். 

இனி, திவ்விய பலிபூசை விக்கிரக வழிபாட்டுத் தன்மை யுள்ளதாகவும், கிறீஸ்துநாதரின் ஏக பலியை மறுதலிப்பதாகவும் இருந்திருக்குமானால், பரிசுத்த அப்போஸ்தலர்களும், விசுவாசிகள் அனைவருமே விக்கிரக வழிபாட்டுப் பாவம் கட்டிக் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்; அவர்கள் தேவ மகத்துவத்தை மிகக் கடுமையான முறையில் நோகச் செய்து, தங்களை நித்திய சாபத்திற்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்கியிருப்பார்கள். 

புத்தியுள்ள எந்த ஒரு மனிதனும் இப்படிப்பட்ட வாதத்தை நம்பமாட்டான் என்பதால், கால்வினிய போதனை உண்மையானது என்று எந்த மனிதனும் நம்பமாட்டான். கால்வினும், லூத்தரும் சொன்னவற்றைக் கேட்பதை விட, அர்ச். ஃபுல்ஜெந்த்ஸியுஸ் (468-533) சொல்வதை நாம் கேட்போம். 

"கடவுளின் ஏகபேறான திருச்சுதன் நமக்காக மனிதனானார், நமக்காக அவர் தம்மையே சர்வ வல்லபப் பிதாவுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார், இந்த சர்வேசுரனுக்கே கத்தோலிக்கத் திருச்சபை இப்போது உலகம் முழுவதிலும், விசுவாசத்தோடும், தேவசிநேகத்தோடும் இடைவிடாமல் அப்ப, இரசப் பலியை ஒப்புக்கொடுத்து வருகிறது என்ற சத்தியத்தை விடாமல் பற்றிக் கொள், ஒருபோதும் அதில் சந்தேகம் கொள்ள உன்னை நீ அனுமதியாதே" என்று அவர் கூறுகிறார். 

நம் நம்பிக்கைக்கு அதிகம் தகுதியுள்ளவர் யார்--திருச்சபையைச் சேர்ந்த ஒரு பரிசுத்தமான, ஞான வெளிச்சம் பெற்ற போதகரா, அல்லது கால்வின் மற்றும் லூத்தர் போன்ற, விசுவாசத்தை மறுதலித்த இருவரா?

அறிஞரான க்ளூனியின் இராயப்பர் வேறு சில பதிதர்களுக்குக் கூறிய வார்த்தைகள் லூத்தருக்கும் பொருந்தும்: "உங்கள் போதனை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால், அதாவது, கிறீஸ்தவர்கள் திவ்விய பலிபூசை அழிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது என்றால், தேவ கடுஞ்சினத்தின் காலத்தில் ஒருபோதும் நிகழாத காரியம், இந்த வரப்பிரசாத காலத்தில் நிகழ்ந்திருக்கும்: கடவுள் பூமியின் மீது ஒருபோதும் ஆராதிக்கப்பட்டிருக்க மாட்டார். 

ஆகவே, கடவுளின் எதிரிகளே, கடவுளின் திருச்சபை தன் இருத்தலுக்கு ஒரு தெய்வீகப் பலி அத்தியாவசியம் என்றும், இந்தப் பலியில், இரட்சகரின் திருச்சரீரத்தையும், இரத்தத்தையும் தான் ஒப்புக்கொடுப்பதாகவும், இந்த ஒரே பலியை மட்டுமே தான் ஒப்புக் கொடுப்பதாகவும், தமது மரணத்தின் போது, இரட்சகர் செய்த காரியத்தை, இந்தப் பலி ஒப்புக்கொடுக்கப்படும் போதெல்லாம் தான் செய்வதாகவும் சொல்லும்போது, அது சொல்வதைக் கேளுங்கள்.''

ஆகவே, அந்தப் பரிதாபத்திற்குரிய பதிதர்களுக்கு நேரிட்ட அதே காரியம் நமக்கும் ஏற்படாதபடி நாம் எச்சரிக்கையா யிருப்போமாக. ஏனெனில் அவர்களை உரைக்க இயலாத அளவுக்கு காயப் படுத்துமாறு, தீயவன் திவ்விய பலிபூசையை அவர்களிடமிருந்து கொள்ளையடித்து விட்டான்; ஆனால் கத்தோலிக்கர்களாகிய நம்மிடமிருந்து பூசையை விலக்குவதில் தான் வெற்றி பெற முடியாததால், இந்தப் பரிசுத்த பலியின் உன்னத மகத்துவத்தையும், அதன் அளவற்ற வல்லமையையும் நாம் முழுமையாக அறிந்து, அதைப் போற்றிக் கொண்டாடாதபடி, அவன் பெருமளவுக்கு நம்மைக் குருடாக்கி விட்டான். 

சாத்தானின் தந்திரங்களின் காரணமாகவே, ஒரு நீண்ட காலத்திற்கு, இந்தத் தெய்வீகப் பரம இரகசியம் மிக அரிதாகவே பிரசங்கக் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அதைப் பற்றி வெகு குறைவாகவே எழுதவும் பேசவும்பட்டது. இவ்வாறு கத்தோலிக்கர்கள் பூசை காண்பதில் அலட்சியமுள்ளவர்களாக ஆனார்கள், அல்லது பக்தியில்லாமல் பூசை கண்டார்கள்.

இந்தத் தீமையைத் தடுக்கும் ஒரு வழியாக, ஆத்துமங்களைத் தங்கள் பொறுப்பில் கொண்டுள்ளவர்கள் அடிக்கடி திவ்விய பலி பூசையைப் பற்றிப் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று திரிதெந்தின் பொதுச்சங்கம் கட்டளையிட்டது. 

திருச்சபையின் இந்த ஆணை பின்வருமாறு: "பங்குக் குருக்களும், ஆன்மாக்களைத் தங்கள் பொறுப்பில் கொண்டுள்ளவர்களாகிய அனைவரும், பூசை நிறைவேற்றப்படும்போது, தாங்கள் நேரடியாகவோ, அல்லது மற்றவர்களைக் கொண்டோ, அன்று வாசிக்கப்படும் வாசகங்களில் ஒரு பகுதியை விளக்கிக் கூற வேண்டும் என்று இந்தப் பரிசுத்த சங்கம் ஆணையிடுகிறது; மேலும், மற்றவைகளிடையே, குறிப்பாக ஆண்டவரின் நாட்களிலும், திருநாட்களிலும் இந்த மகா பரிசுத்த பலி பற்றிய ஏதாவது ஒரு பரம இரகசியத்தை அவர்கள் விளக்கிக் கூற வேண்டும்" (அமர்வு 22, அத். 8). 

மக்கள் திவ்விய பலிபூசையின் பெரும் மதிப்பை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அதை நேசிப்பதோ, உரிய முறையில் அதை மதிப்பதோ இல்லை; வார நாட்களில் அவர்கள் பூசைக்குப் போவதேயில்லை, ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் கூட, அவர்கள் மிக அடிக்கடி அசட்டைத்தனமாகவும், சங்கை வணக்கம் இல்லாதவர்களாகவும், மேலோட்டமானவர்களாகவும் இருக்கிறார்கள்; வெறும் போலிக் காரணங்களுக்காகவும், மிக அற்பமான மனவுறுத்தல் கூட இல்லாமலும் அவர்கள் பூசையைத் தவிர்த்து விடுகிறார்கள்.

ஆனால் திவ்விய பலிபூசையின் மிகப் பரந்த நன்மைத்தனத்தையும், மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றால், இந்த விலை மதிக்கப்படாத பெரும் பொக்கிஷத்தை மிக உயர்வாக மதித்துப் போற்றுவதிலும், அதை இன்னும் ஆழமாக நேசிப்பதிலும், அதிக பக்தி வணக்கத்தோடு இந்த தெய்வீகப் பலியில் பங்குபெறு வதிலும் அவர்கள் தவறவே முடியாது. 

பீடத்தின் இந்த பக்திக்குரிய பரம இரகசியத்தை விட அதிக முக்கியமானதும், அதிக ஆறுதல் அளிப்பதும், அதிகப் பயனுள்ளதுமான வேறு எந்தப் பரம இரகசியமும் கத்தோலிக்கத் திருச்சபையில் இல்லை. இந்த சத்தியம் சரியான முறையில் அறிந்து கொள்ளப்படும் என்றால், வார நாட்களில் இன்னும் அதிகமானோர் பூசைக்குச் செல்வதை நாம் காண முடியும் என்பது உறுதி.