இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பக்தியோடு பூசை காண்பதன் மூலம் நம் பாவங்களுக்குரிய தண்டனையை பெருமளவுக்கு நம்மிடமிருந்து அகற்றி விடலாம்

வாசகர்களே, கல்வாரியில், மரித்துக் கொண்டிருக்கும் உங்கள் இரட்சகரின் திருச்சிலுவையின் கீழ் நீங்கள் நின்று கொண்டிருந் திருப்பீர்கள் என்றால், எவ்வளவு மேலான வரப்பிரசாதங்களையும், ஞானப் பொக்கிஷங்களையும் நீங்கள் அங்கிருந்து சுமந்து சென்றிருப்பீர்கள்! 

கல்வாரியில் மரிக்கிற உங்கள் இரட்சகரின் பிரசன்னத்தில் இருப்பது போன்ற அதே உணர்வோடு பூசையிலும் நீங்கள் பங்கு பெறுவீர்கள் என்றால், அதற்கு எந்த விதத்திலும் குறையாத பெரும் ஞான செல்வங்களை நீங்கள் உங்களுடையதாக்கிக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக, மடாதிபதியான ரூப்பர்ட் கூறுவதாவது: "தாம் சிலுவையில் தொங்கிய போது, கிறீஸ்துநாதர் தம்மிடம் வந்த அனைவருக்கும் பாவ மன்னிப்பைத் தந்தருளியது போலவே, அப்ப இரசத்தின் குணங்களின் கீழ் தங்கியிருக்கும்போதும், அவர் அதில் பங்குபெறும் எல்லா விசுவாசிகளுக்கும் அதே பாவ மன்னிப்பைத் தந்தருளுகிறார்.'' 

பக்தியோடு பூசை காண்பதன் மூலம் நம் பாவங்களுக்குரிய தண்டனையை நாம் பெருமளவுக்கு நம்மிடமிருந்து அகற்றி விடலாம் என்ற நம்பிக்கையை இந்த வார்த்தைகள் நமக்குத் தருகின்றன.

சுவாமி செஞ்ஞேரியின் எழுத்துக்களில் இந்தக் காரியம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது: "சிலுவைப் பலி பொதுவில் பாவ மன்னிப்பைப் பெற்றுத் தந்தது. திவ்விய பலிபூசையில் கிறீஸ்துவின் திரு இரத்தப் பலன் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அது வழங்கப்படுகிறது. தமது மரணத்தாலும், பாடுகளாலும் தாம் சம்பாதித்த செல்வ வளங்களைக் கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் நமக்குப் பகிர்ந்தளிக்கிறார். அவரது மரணம் ஒரு கருவூலமாக இருக்கிறது, பூசை அதைத் திறக்கும் திறவுகோலாக இருக்கிறது." 

இவ்வாறு, நாம் பூசைக்குச் செல்லும் போது, கிறீஸ்துநாதர் அளவற்ற ஞான சேமிப்புகள் அடங்கிய தமது கருவூலத்தின் திறவுகோலை நம் கரங்களில் தந்து, அதற்குள் நுழையவும், நம் இருதய பக்தியின் அளவுக்கேற்ப, வரப்பிரசாதங்களை அள்ளிச் செல்லவும் நம்மை அனுமதிக்கிறார்.

இதே நூலாசிரியர் தொடர்ந்து: "ஆகவே, பூசை செய்வது அல்லது காண்பதன் உண்மையான பொருள் என்பதைக் கண்டுணருங்கள். பூசை வைப்பது, முன்பு மனுக்குலம் முழுவதற்காகவும் மரித்தவராகிய சர்வேசுரனை, அவர் தனித்தனியாக ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரித்தார் என்பது போல, எனக்காகவும் உங்களுக்காகவும் அவரை மீண்டும் மரிக்கச் செய்வதற்குச் சமமானது" என்று கூறுகிறார். 

கிறீஸ்தவ வாசகரே, இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்; கிறீஸ்துவின் மீதுள்ள அன்பிற்காக நீங்கள் பூசை காணும்போது, அவர் அதற்கு வெகுமதியாக உங்களுக்குக் காண்பிக்கும் அளவற்ற நேசத்தைத் தியானியுங்கள். உங்கள் ஊழியத்திற்கு அவர் எவ்வளவு தாராளமாக சம்பாவனை அளிக்கிறார் என்றால், உங்களுக்காகத் தம் உயளிரைத் தரவும், உங்கள் மீது தமது மரணத்தின் பேறுபலன்களைப் பொழியவும் அவர் தயாராக இருக்கிறார். 

அவர் உங்களுக்காக உண்மையாகவே ஞான முறையில் மரிக்கிறார், தமக்கு சாத்தியமானாலும் சரி, அவசியமானாலும் சரி, முன்பு போலவே மீண்டும் உங்களுக்காக சரீர ரீதியாக மீண்டும் மரிக்கவும் அவர் தயாராகவே இருக்கிறார்.

நம் திவ்விய மாதா ஒரு முறை பிரசித்தி பெற்ற கடவுளின் ஊழியர் ஒருவரிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்: "திவ்விய பலிபூசையில் பங்கு பெறுவோருக்கு என் திருக்குமாரன் காட்டும் சிநேகம் எவ்வளவு பெரியது என்றால், தேவைப்பட்டால், ஒவ்வொரு தனி மனிதனும் எத்தனை முறை பூசை கண்டிருக்கிறானோ, அத்தனை முறை, ஒவ்வொருவருக்காகவும் மரிக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் இதற்கு அவசியமில்லை, ஏனெனில் அவரது பேறுபலன்கள் அளவற்றவையாக இருக்கின்றன." 

இது எவ்வளவு ஆச்சரியத்திற்குரியதாக இருக்கிறது என்றால், இதை நம்புவது கடினமாகத் தோன்றும்; ஆயினும் இது கிறீஸ்துநாதரின் அளவற்ற சிநேகத்திற்குப் பொருத்தமானதாக இருக்கிறது. அது தினமும் ஒரு முறை மட்டுமல்ல, மாறாக, பல்லாயிரம் தடவைகள் ஞான முறையில் பரிதாபத்திற்குரிய பாவிகளுக்காகத் தம்மையே பலியிடும் படியாக அவரைத் தூண்டுகிறது. 

ஆகவே, பக்திப் பற்றுதலோடு பூசை காணவும், மானசீகமாகக் கிறீஸ்துவோடு கல்வாரிக்குச் சென்று, அவரது திருப்பாடுகளின் போதும், திருமரணத்தின் போதும் அவர் அருகில் இருக்கப் பிரதிக்கினை செய்வோம். கிறீஸ்துநாதர் அனுசாரத்தின் ஆசிரியர் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், இதையே செய்யுமாறு நம்மைத் தூண்டுகிறார். "நீங்கள் பூசைப் பலி நிறைவேற்றும்போதெல்லாம், அல்லது பூசை காணும் போதெல்லாம், அதே நாளில் கிறீஸ்துநாதர் முதல் முறை சிலுவையில் தொங்கி, மனிதர்களின் இரட்சணியத்திற்காகப் பாடுபட்டு மரித்தது போல, அந்தப் பூசைப்பலி மிக மேன்மையாகவும், புதிதாகவும், மகிழ்ச்சியானதாகவும் காணப்பட வேண்டும்" (நான்காம் பிரிவு, அதி. 2). 

ஆம், பூசை காணும் ஒவ்வொருவருக்காகவும் அவர் ஞான முறையில் உண்மையாகவே துன்புற்று மரிக்கிறார், அதுவும் மனுக்குலத்திற்காக சிலுவையின் மீது தம் திருச்சரீரத்தில் தம்மையே பலியாக்குவதில் தாம் கொண்டிருந்த அதே நேசத்தைத் தமது பூசைப் பலியிலும் அவர் வெளிப்படுத்துகிறார்.

தேவ சுதனாகிய சேசுக்கிறீஸ்துநாதர் முன்பு உலகம் முழுமைக்காகவும் காணக்கூடிய விதமாய் மரித்தது போல, பூசை காண்பவர்களுக்காக ஞான முறையில் மரிக்கிறார் என்பது எத்தகைய ஆழங்காண முடியாத தேவசிநேகமாக, எவ்வளவு மட்டற்ற வரப் பிரசாதமாக இருக்கிறது! இது நமக்கு எவ்வளவு ஆதாயமாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்கிறது! நாம் பெற்றுக்கொள்ளும் பேறு பலன்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கின்றன! 

நீ முன்பு கல்வாரியின்மீது இருந்து, தேவ சுதனுடைய கடைசி மரண அவஸ்தையில் அவரது துன்பங்களைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்திருப்பாய் என்றால், உன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்கும் என்று நீ நினைக்க மாட்டாயா? உனக்காக மரித்த தமது பிரிய சுதனின் பொருட்டு நேசமுள்ள பிதாவானவர் சந்தேகமின்றி, மனஸ்தாபமுள்ள பாவியாகிய உன் பாவங்கள் அனைத்தையும், அவற்றிற்குரிய , தண்டனைகளையும் மன்னித்திருப்பார். 

நல்லது. அப்படியிருக்க, திவ்விய பலிபூசையிலும் நீ இதே மன்னிப்பைக் கேட்டு மன்றாடலாம். ஏனெனில் முன்பு தாம் துன்புற்றதும், கல்வாரியின் மீது மரித்ததுமான அதே பரிசுத்த மனுஷீகத்தோடு அவர் மெய்யாகவே பலிபீடத்தின் மீதும் பிரசன்னமாயிருக்கிறார்.