இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தனித் தீர்வையின் கணக்கு ஒப்பிப்பு இனிமேல் இல்லை என்ற வரையறையோடு நடக்கப் போகிறது.

ஆத்துமம் யேசுநாதசுவாமியுடைய சமுகத்தில் நிற்கவே, அவருடைய திருமுக மண்டலத்திலிருந்து வீசுகிற ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் உள்ள பரம வெளிச்சத்திலே அது தன்னுடைய சீவியம் முழுதையும் ஒரு கணப் பொழுதிலே கண்டு கொள்ளும்.

''அக்காலத்தில் நாம் எருசலேமை விளக்குக் கொண்டு சோதிப் போம்'' (சொப்போ . 1; 12) என்று எழுதப்பட்டபடியே, கர்த்தர் தமது வெளிச்சத்திலே ஆத்துமம் என்கிற எருசலேமின் சகல மூலை முடுக்குகளும் வெளிப்படச் செய்வார். நாம் இவ்வுலக பராக்கு கவலைகளிலே அமிழ்ந்தி இருக்கும் மட்டும், நமது ஆத்துமத்தின் உண்மையான நிலைபத்தை அறிந்துகொள்ள மாட்டாமல் இருக்கிறோம். ஆத்துமத்தின் முகத்தை உற்றுப் பார்க்க நமக்கு அவகாசமும் இல்லை, மனமும் இல்லை. பாவசங்கீர்த்தனத்துக்கு ஆயத்தம் பண்ணும் வேளைகளிலுங்கூட, ஆசாபாசங்களின் மொய்ப்பினால், முற்றாக மனந்திரும்பிவிட வேணும் என்று ஆவல் கொள்ளாததினால், நம்முடைய கணக்கில்லாத மீறுதல்களை எல்லாம் நாம் கண்டுபிடிப்பதும் இல்லை; கண்டு பிடித்தாலும் பாவத்தின் பயங்கரமான அவலட்சணத்தை, நன்றி கேட்டை, பாரப் பழியை ஆயிரத்தில் ஒரு பங்குதானும் உணர்வதும் இல்லை.

ஆனால், நடுத் தீர்க்க எழுந்தருளியிருக்கிற நம் ஆண்டவருடைய உண்டாக்கப்படாத பரம சோதியான வெளிச்சம் நம்முடைய ஆத்துமத்தின் மூலை முடுக்குகள் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பாய்ந்து பிரகாசித்து இருதயத்தின் அந்தரங்கங்களை எல்லாம் வெளியாக்கும்போது, சகலமும் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். நாம் ஒரு முன்னிருட்டு இரவிலே வீதியிற் போகும் வேளையில், எதிரே போவோர் வருவோரைக் கூடத் தெரியாமல், ஒரு உன்னிப்பைப் பிடித்து நடந்துகொண்டிருக்கிறோம். இதோ சடுதியாய் ஒரு மோட்டர்க்கார் வருகிறது. அதின் வெளிச்சம் பக்கென்று தெரு முழுதையும் மூட, தெருவோ திண்ணையோ வேலியோ விராயோ மரங்களோ தடிகளோ எல்லாம் வெளிப்பட, தெருவின் சிறு கற்கள் தானும் எவ்வளவு துலக்கமாய்த் தெரிகிறது!

அதுபோலவே, ஆண்டவருடைய திரு முகப் பிரகாசமும், முன் நமக்கு மறைந்திருந்த சகலத்தையும் ஒரு கணப் பொழுதிலே வெளியாக்கிவிடும். அந்த வெளிச்சத்தின்முன் ஒன்றும் மறைவாயிருக்க முடியாது. பழைய ஏற்பாட்டிலே சருவேரன் திருவுளம் பற்றியிருக்கிறபடி : ''இருதயமோ சகலத்திலும் துட்டத்தனமுள்ளதும் திருக்கு முருக்குள்ளதும் ஆனது. அதின் உள்ளாந்தரத்தை அறிய யாராலே முடியும்? கர்த்தராகிய நாமே இருதயங்களை ஆராய்ந்து உள் இந்திரியங்களைப் பரிசோதிக்கிறவர்; நாமே ஒவ்வொருவனுக்கும் அவனவன் நடப்புக்கும் அவனவன் கிரியைகளின் பலனுக்குத் தக்கதைக் கொடுக்கிறவர்'' (யெரே. 17; 9-10). ஆகையால் அவருடைய சுயஞ் சோதியான பிரகாசத்தில் எல்லாம் மறைவில்லாமல் காட்டப்படும்.

பாவவாளனின் (பாவியின்) ஆத்துமமான து தன்னைத் தானே உள்ளபடி காணும்போது, தனது உலக சீவியம் முழுதையும் ஒரு கண்ணாடியிற் பார்ப்பது போலத் தெரிசிக்கும் போது, அந்தப் பாவியை, எல்லாம் அறிந்தவரான நடுவர் முன்னே குற்றஞ்சாட்ட வழக்காளியும் தேவையில்லை, சாட்சியும் தேவையில்லை. அங்கு தரணிமாருக்கும் இடமில்லை, சனுப் பேசுவோருக்கும் இடமில்லை. பாவியுடைய விளக்கமும் தீர்ப்பும் வேறு எவருடையவும் உதவியில்லாமல், ஆண்டவர் முன்னிலையிலே, ஒரு கைநொடிப் பொழுதுக்குள்ளே, இமை கொட்டி விழிக்கிற நேரத்துக்குள்ளே நடந்து முடிந்துபோம்.

ஆனா லும் அந்த விளக்கத்தின் நுணுக்கமான, வரையறைவான விபரத்தை நாம் உணர்ந்துகொள்ளத் தக்கதாக, மனுஷனுடைய சன்ம சத்துருவான பிசாசு, தான் சீவிய காலமெல்லாம் ஏமாற்றி தன்னுடைய வழியிலே நடப்பித்த பாவியை அந்தக் கடைசி நேரத்திலேயும் கைவிடாமற் பின் சென்று, தன்னோடு தீக்கிடங்கில் இழுத்துக்கொண்டு போய்விட ஆயத்தமாய் வந்து நிற்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.

பிசாசுக்கு அந்நேரம் வாய் திறந்து பேச உத்தரவு கிடைக்குமானால், அது ஆண்டவரை நோக்கி : '' சருவேசுரனே எழுந்தருளும் உம்முடைய வியாச்சியத்தை நடுக்கேட்டுத் தீர்த்தருளும் '' (சங். 73; 22). தேவரீர் சம்மனசுகளாய் இருந்த எங்களை ஒரே ஒரு ஆங்காரத்தின் பாவத்துக்காக நித்திய நரகத்திலே தள்ளி விட்டீர். தேவரீர் எங்களுடைய பாவத்தைப் போக்க ஒன்று செய்ததும் அல்ல; எங்களை மனந்திரும்பிவர அழைத்ததும் அல்ல. ஆனால் எத்தனையோ தோஷ துரோகங்களைச் செய்த மனுஷனுக்காக தேவரீரும் மனுஷனாகிக் கணக்கில்லாத பாடுபட்டதும் அல்லாமல், அவன் குணப்பட எத்தனையோ வழிகளையும் உண்டுபண்ணி, அவனுக்கு ஒரு முடிவில்லாமல் நன்மையின் மேல் நன்மையும் செய்து கொண்டு வருகிறீர். இந்தப் பாவியோ தனக்காகச் சிலுவையிலே தொங்கின தேவரீரைப் புறக்கணித்துப் போட்டு, தனக்கு தேவரீர் பொழிந்தருளின உபகாரங்களை எல்லாம் மறந்துவிட்டு, தன்னைக் கெடுக்கிறதற்கே உள்ள நாளெல்லாம் உத்தியோகமாய்த் திரிந்த என்னைத்தான் வேணுமென்று நடந்திருக்கிறான். உம்முடைய சுத்தமான கற்பனைகளையெல்லாம் முரட்டுத்தனமாய் மீறிப் போட்டு, என்னுடைய துட்ட ஏவுதல்களுக்குத்தான் செவி கொடுத்திருக்கிறான். இவன் தேவரீருடைய பிள்ளை என்று சொல்லப்படுகிறதற்கு எள்ளளவும் பாத்திரம் இல்லாதவன்; எனக்குத்தான் என் றும் உரிமையான அடிமை. ஆனபடியால், நீதியுள்ள சருவேசுரனே, இவனை என் கையிலே தந்துவிடும் தந்துவிடும் '' என்று சொல்லுவதாகும்.

அந்தப் பாவியுடைய துன்மாதிரிகையினால், துர்ப்புத்திகளினால், அசட்டைத்தனத்தினால், ஏவுதலினால் கெட்டு நாகத்தில் விழுந்த நிர்ப்பாக்கிய ஆத்துமாக்கள் அந்நேரம் ஆண்டவருடைய நீதியாசனத்தின் முன் வந்து நின்று முறைப்பாடு சொல்ல இடங்கிடைக்குமானால், அப்படிப்பட்டவர்கள் மகா புலம்பலோடு கூக்குர லிட்டு : “நீதியுள்ளவரே, முகம் பாராத நித்திய கடவுளே, சத்திய சுரூபியே, இவன்தான் எங்களைப் பாவஞ் செய்ய ஏவிவிட்டவன்; எங்களைப் பாவத்திலே விழுத்தினவன். இவனுடைய நடக்கையைக் கண்டுதான் நாங்கள் தீய வழியில் நடக்கத் தொடங்கினோம்; செங்குத்தான நரகப் பாதையில் இறங்கினோம். இவனுடைய சொல்லைக் கேட்டுத்தான், நாங்கள் தேவதுரோகம் பண்ணத் துணிந்தோம். இவன் எங்கள் ஆத்துமத்தைக் கெடுத்தான். மாசில்லாததாய் இஸ்பிரீத்து சாந்து சருவேசுரனின் பரிசுத்த ஆலயமாய் இருந்த எங்கள் இருதயத்தை இவன் தான் பிசாசின் இருப்பிடம் ஆக்கினான். பாவம் அறியாத எங்களுக்கு இவன் தான் பாவத்தைப் பழக்கினான். எங்கள் இரத்தப்பழி இவன் தலைமேல் விழுந்திருக்கிறது. ஆனபடியால், எங்களுக்குக் கிடைத்திருக்கிற தாங்க முடியாத அகோர நரகத் தண்டனையை இவனுக்குக் கொடுக்க வேணும். நாங்கள் விழுந்திருக்கிற அவியாத நெருப்புக் கிடங்கிலே இவனும் விழ உத்தரவு பண்ண வேணும், பண்ண வேணும்'' என்று கேட்டு நிற் பார்கள்.

மாடு ஆடு, நாய் குதிரை முதலிய வாய்விடாச் சாதிகளுக்கு அவ்வேளை வாய் திறந்து பேச வல்லமையும் புத்தியும் கொடுக்கப் படுமானால், அதுகளும் கறுமுதல் உறுமுதல்களோடு முறைப் பட்டு : “எங்களையெல்லாம் மனுஷனுடைய பாவிப்புக்காகப் படைத்துக் கொடுத்தருளின சருவ தயாபரமுள்ள கடவுளே, இவன் எங்களைக்கொண்டு நன்றாக வேலை செய்வித்து, எங்களுடைய புரோசனத்தை எல்லாம் எடுத்து அனுபவித்துக்கொண்டு, தேவரீர் செய்த உபகாரங்களுக்கு எவ்விதத்திலாவது நன்றி பாராட்டாமல், தேவரீருக்கு தன் வாழ்நாளெல்லாம் துரோகமே பண்ணியிருக்கிறான். இவனை எங்கள் கண்காணாத இடத்திலே தள்ளிவிட்டு, நீதிப்படியே சகல உலகமும் கேட்டுக் கிடுகிடுக்கத்தக்க தண்டனையை இவனுக்குக் கொடும் கொடும்'' என்று கதறும்.

சூரியனும் சந்திரனும், நிலமும் நீரும், காற்றும் நெருப்பும் வாய்விட்டுப் பேசக் கூடுமானால், இந்த உயிரற்ற பொருட்களும் சருவலோக நாயகருக்கு முன் வந்து தண்டன் இட்டு நின்று : அகில சராசரங்களுக்கும் கர்த்தாவே, தேவரீருடைய சித்தத்தின்படியே நாங்கள் இவனுக்கு வெயிலைக் கொடுத்தோம்; குளிர் நிலவை எறித்தோம்; இவனைத் தாங்கி, பயிர்களை, தவசதானியங்களை, கனிவர்க்கங்களை இவனுக்கு உதவினோம். இவனுக்கு வேண்டிய வேண்டிய போது எல்லாம் போசனமும் பானமும் ஆனோம். அனலும் குளிர்ச்சியும் அளித்தோம். இவைகளைப் பெற்றுக் கொண்டு, எங்கள் கண்முன்பாகவும் எங்களை அநியாயமாய்ப் பாவித்துக்கொண்டும், இவன் தேவரீருக்குச் செய்த சுவாமித் துரோகங்களின் பேரிலே தேவரீர் பழி வாங்குவது தான் நீதி நீதி '' என்று ஓலமிடுவதாகும்.

இப்படியே படைப்புண்ட வஸ்துக்களெல்லாம் தனக்கு எதிராக எழுந்து சாட்சி சொல்லுவது போலிருக்கச்சே, பாவியின் மனச்சாட்சிதானே அவனை இடித்திடித்துக் கண்டித்துக் கொண்டிருக் கும். '' இருளில் மறைந்திருக்கிறவைகளையும் அவர் பகிரங்கமாக்கி இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார் '' (1 கொ ரிந். 4; 5) என்று வேத புத்தகத்திலே அறிவிக்கப்பட்ட பயங்கரமான நேரம் அவ்வேளை தான் அல்லவோ! அப்போது பாவியுடைய நன்றிகெட்ட இருதயத்தின் யோசனைகளும் வெளியரங்கமாகும்; அளவில்லாத அன்புமயமான ஆண்டவருடைய திருவிருதயத்தின் யோசனைகளும் வெளியரங்கமாகும். பாவி தன்னுடைய முழுச்சீவிய காலத்தினும் சகல பழி பாதகங்களையும் அக்கிரமங்களையும் ஒருமிக்கக் காண்பான்.

தன்னுடைய இருதயத்திலே இதுவரைக்கும் தனக்குங்கூட முழுதும் எட்டாமல் இருந்தவைகளாகிய வஞ்சகங்களை கட்டுகளை, காய்மகாரங்களை எரிச்சல்களை, கோபக் குரோதங்களை வன்ம வயிரங்களை, ஆங்கார இறுமாப்புகளை பொருள் வாஞ்சைகளை, மோக துர்க்கந்த இச்சைகளை கல்நெஞ்சுத்தனங்களை எல்லாம் கண்டு அஞ்சுவான். அவன் வாக்கினாற் கிரியையினாற் செய்த சகல பாவ நிஷ்டூரங்களும், சூழ்ச்சமாய் இரகசியமாய்ப் பண்ணின சகல வெட்கக் கேடுகளும், பிறருக்கு இழைத்த சகல அநியாயங்கள் தீராமைகள் ஆத்தும நட்டங்களும் எல்லாம் வரிசை வரிசையாய் அவன் கண்முன்பே , சித்திரக்காரன் வரைந்து துலாம் பரமாய்க் காட்டிய படங்கள் போல, வடிவெடுத்து நிற்கக் கண்டு நெஞ்சு உட்குவான்.

தான் எட்டிலே தப்பிலே செய்த புண்ணியங்கள் என்று எண்ணி வைத்துக்கொண்ட கிருத்தியங்களும் அவ்வேளையே தங்கள் தங்கள் சுய சாயலோடு தோற்றுவதாகும். அந்தக் கிருத்தியங்கள் உண்மையான புண்ணியங்கள் அல்ல, உலக ஒப்பாசாரத்துக்காக புகழ்ச்சிக்காகப் பண்ணின , தேவசிநேக முகாந்தரமில்லாத, சுபாவத்துக்கு மேலான பலன் ஒன்றும் அற்ற, வீண் கிருத்தியங்களாம், போலிப் புண்ணியங்களாம் என்றது அப்போதுதான் வெளிவரும். ஐயோ! என் புண்ணியம் எல்லாம் கனவிற் கைப்பற்றின கருந்தனம் போல ஆச்சுதே. நான் முழுதும் வெறுவிலியாய், பாவக் குஷ்டம் என்கிற அருவருப்பினாலே தான் மூடப்பட்டவனாய்ப் போனேனே! என்னுடைய மீட்பர் இதுவரையும் எனக்குக் காட்டி வந்த அன்பையும் ஆதரவையும் பார்த்தால், ஏங்கித் திகைக்கிறேனே. அவருடைய "அன்பின் அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் இன்னதென்று '' (எபே. 3; 18 ) இதுவரையும் உணராமற்போனேனே என்று கலங்க மலங்கி உணர்வழிந்து நிற்பான்.

நிற்கிறவேளையிலே, நீதிபரராய் எழுந்தருளியிருக்கிற ஆண்டவரும் தனக்குத் தீர்வை சொல்லப் போகிறதைக் கண்டு : ஐயோ என்னைப் படைத்தவரின் திருவாயால் புறப்படப்போகிற நடுத்தீர்வை வசனத்தை நான் எப்படிச் சகிப்பேன்! வானமே, நீ முகடு இடிந்து கொட்டுண்டு என்னை நிருமூலம் ஆக்கிவிடாயோ? பருவதங்களே, நீங்கள் என் பேரில் விழுந்து என்னை நசுக்கி அரைத்து இல்லாமற் பண்ணிவிட மாட்டீர்களோ? சமுத்திரங்களே, நீங்கள் அலை மோதிப் புரண்டு உங்கள் வெள்ளத்திலே என்னை மூழ்கடித்து விழுங்கிவிட மாட்டீர்களோ? என்று பாவி அங்கலாய்த்துப் பதகளிக்கிற நேரத்திலே, யூதா கோத்திரத்தின் சிங்கம் என்கிற தேவ நடுவர் அவனைப் பார்த்து வசனிப்பார்:

“நன்றி கெட்ட பாவீ, சதிமானத் துரோகீ, உன்னை நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து அனந்த கருணையால் உண்டாக்கினோம். உனக்கென்று எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்த ஒரு பூலோகத்தை ஆயத்தப்படுத்தி, அதில் உன்னை சீராய்ச் சிறப்பாய் இருத்தி, உன்னை எமது கண் மணி போலப் பாவித்துக் காத்து நடத்திவந்தோம். உன்னை நித்தியமான மோட்ச பேரின்பத்திலே பங்கு பற்றப் பண்ண என்று, உனக்கு நமது தேவ சாயலான ஒரு அழியாத ஆத்துமத்தைக் கட்டளையிட்டோம். உனக்கு நல்ல முன்மாதிரிகை காட்டவும் உன் பாவப் பொறுத்தலுக்கு வழி திறந்துவிடவும் என்று, நாமே பூலோகத்தில் மனுஷ சுபாவம் எடுத்து எழுந்தருளிவந்து மனுஷருள் ஒரு மனுஷனாய்ச் சீவித்தோம். உனக்காகச் சொல்லி முடியாத வேதனைகளையும் நிந்தை அவமானங்களையும் பட்டோம். நம்முடைய பாடுகளுக்கு அடையாளமாக இன்றைக்கும் நாம் தரித்திருக்கிற ஐந்து திருக்காயத் தழும்புகளையும் இதோ! பார். உனக்காக நாம் சீவனையும் விட்டு உயிர்த்தெழுந்தருளி, உன்னை ஈடேற்ற வழியிலே நடத்தும்படியாக சத்திய திருச்சபையையும் உண்டாக்கி, அதில் உன் பாவப் பொறுதிக்கும் புண்ணிய விருத்திக்கும் ஆக தேவதிரவிய அனுமானங்களையும் திவ்விய போதகம் பண்ணும் அதிகாரத்தையும் வைத்தருளினோம். நீயோ, பாவீ, உன்னை உண்டுபண்ணின சகல நன்மைச் சுரூபியான சருவேசுரனை மதியாமற்போனாய். அவருக்கு ஓயாமற் தோத்திர நமஸ்காரங்களைப் பண்ணுங் கடமையைக் கை விட்டாய். உலகம் சரீரம் பிசாசு என்னும் மூன்றையுமே உன் கடவுளாகப் போற்றினாய். நீயே உனக்கு எசமான் என்றது போல நமது கற்பனைகளைப் பறுவாய் பண்ணாமல் இருந்தாய். திருச்சபையின் ஏற்பாடுகளையுங் கடந்தாய். சிந்தனை வாக்கு கிரியை மூன்றாலும் நம்மை எதிர்த்தாய். நம்முடைய அளவில்லாத இரக்கத்தின் அடையாளமான பச்சாத்தாப தேவதிரவிய அனுமானத்தினால் நீ பயன் அடையாமற் போனாய். பாவப் பற்றுதலோடே இருந்து கொண்டு, பாவச் சமயங்களை விலக்க மனமில்லாத நிலைபரத்திலே கள்ளப் பாவசங்கீர்த்தனஞ் செய்து நம்மை அவமதித்தாய். நம்முடைய இணையில்லாத அன்பின் தேவதிரவிய அனுமானமாகிய சற்பிரசாதத்தையும் சுத்தமில்லாத மனதோடு பெற்று உன்னுடைய தீர்வையை நீயே விழுங்கிக் கொண்டாய். உனக்கு ஓயாமல் நன்மைகளுக்கு மேல் நன்மை செய்து கொண்டுவந்த நம்மை உன் இருதயத்துக்குள்ளே மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைவதையே சீவிய காலம் எல்லாம் உனது தொழிலாகக் கொண்டு நடந்தாய். எத்தனையோ முறை என் குருமாருடைய புத்தி போதகங்கள் வழியாய், நல்ல வாசிப்புக்கள் வழியாய், உன் மனதிலே ஸ்பிரீத்து சாந் துவானவர் எழுப்பின நல்ல ஏவுதல்களின் வழியாய் நாம் உன்னை நோக்கிக் கைகளை விரித்தோம். நீ நம்முடைய விரித்த கைகளைத் தட்டிவிட்டு, பிசாசின் ஏவுதல்களுக்கும் உன் சரீர இச்சைகளுக்குமே இடங்கொடுத்தாய். நாம் உனக்குச் செய்ய வேண்டியதாய் இருந்தும் செய்யாமல் விட்டது என்ன? நீயோ, பாவீ, நமக்குச் செய்யாத நிஷ்டூரங்களை எல்லாம் செய்தாய். உன்னுடைய நித்திய கேட்டின் தீர்ப்பை நீயே எழுதிக்கொண்டாய். ஆகையால் சபிக்கப் பட்டவனே, நம்மை விட்டு அகன்று, பிசாசுக்கும் அவன் தூதர்களுக்கும் என் று ஆயத்தம் பண்ணியிருக்கிற நித்திய நரக அக்கினியிற் போய் விழக் கடவாய்!

சருவ வல்லமை உள்ள தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தருமானவர் திருவுளம்பற்றின இத் தீர்வை பாவியின் செவியில் விழும் போது உண்டாகும் திகிலை என்னென்று வருணிப்போம்! ஆயிரம் வானங்கள் ஒருமிக்கக் கோடை இடி இடித்துக் காது செவிடுபடச் சப்தித்த திடுக்காட்டம் என்போமோ? சந்திர சூரியர்களும் நட்சத்திரங்களும் தங்கள் தங்கள் இடம் பெயர்ந்து கொலுகொலுத்து அல்லோல கல்லோலமாய் ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்து உகாந்த கால அக்கினியாய் முழாசிய பயங்கரம் என்போமோ? பாவி படும் திகில் எவ்வித வருணிப்புக்கும் எட்டாததாய் இருக்கும்.

அவ்வேளை இதோ ! நரக பாதாளம் வாய் திறந்து அவனை விழுங்கிக்கொள்ளப் போகிறது. தேவ நடுவருடைய தீர்ப்பின் மேல் இனி வேறு தீர்ப்பு இல்லை. தீர்ப்புச் சொன்ன நொடிக்குள்ளே தண்டனை ஆரம்பம் ஆகிவிடும். பாவியானவன் யாரை நோக்கிக் கையெடுப்பான்? யாருடைய அடைக்கலத்தைத் தேடி அடைவான்? தன்னைத் தானே சபித்துத் திட்டிக்கொண்டு : ஐயோ கெட்டேன். என் தேவ நடுவரே, சுயஞ் சீவியரான கடவுளே '' தேவரீர் நீதிபரர், உமது நியாயத் தீர்ப்புக்கள் நீதியானவைகள் '' (சங். 118; 137). என் ஆங்காரத்தினால், என் நன்றி கெட்ட தனத்தினால், என் மிருகத்துக்கு ஒப்பான நடையினால் நானே என் கதியை ஆயத்தப்படுத்திக்கொண்டேன். ஆனந்த மோட்ச வீடே, சுத்தமானவர்கள் பேரின்பத்தில் மூழ்கி இருக்கும் வாசஸ்தலமே, உன்னை அடையும்படி உண்டாக்கப் பட்ட நான் என் கெறுவத்தால் உன்னை என்றென்றைக்கும் எனக்கு இல்லாமற் பண்ணிக் கொண்டேனே. உன் பளிங்கு மயமான புறச் சுவர்களையாவது, மாணிக்க கசிதமான வாசற் படியையாவது என் கண்ணால் ஒருக் கால் பார்க்கப் பெற்றேனில்லையே. ஆள நீளம் அறியாத நரக பாதாளமே, அவியாத அக்கினிக் கிடங்கே, ஓயாமற் பிசாசுகள் ஊளையிட்டுக் குறைத்துக்கொண்டு இருக்கும் பாழ் பட்ட தலமே, நீயே ஊழியுள்ள காலமும் எனக்கு இருப்பிடம் ஆகப் போகிறாய்! என்று கதறி உதறி பதறிக்கொண்டு தீ நரகிற் போய் விழுவான்.

பிரியமான கிறிஸ்தவர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இப்படியே ஒருநாள் சருவேசுரனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டி வரும். நீங்கள் பாவத்தில் மூர்க்கராய் மரித்தால், தேவ இஷ்டப் பிரசாதம் இல்லாத நிலைபரத்தில் மரணத்திரை உங்கள் மேல் விழுந்தால், இப்படியே ஒருநாள் உங்களை நீங்களே திட்டிக்கொண்டு நித்தியமான அக்கினிக் கிடங்கிலே போய் விழவேண்டி வரும். எல்லாக் கேடுகளிலும் கொடியதான இந்த மகா கேட்டை, எல்லா நிர்ப்பாக்கியங்களிலும் அதிகப் பயங்கரமான இந்த நிர்ப்பாக்கியத்தை எது விதத்திலும் நீங்கள் விலக்கிக்கொள்ள வேணும். அதெப்படி? 

இப்போது நீங்களே உங்களைக் கணக்குக் கேட்டுக்கொண்டால், அப்போது நல்ல கணக்கு ஒப்பிக்கத்தக்கவர்கள் ஆவீர்கள். இப்போது உங்களுக்கு நீங்களே கண்டிமையாய் நடுத் தீர்த்துக்கொண்டால், அப்போது ஆண்டவர் உங்களுக்குச் சனுவான நடுச் சொல்வார். நினைவினால், பேச்சினால், செய்கையினால் நீங்கள் கட்டிக்கொண்ட சகல பாவங்களையும் தேவ உதவியோடே யோசித்துக் கண்டுபிடித்து, அவைகளுக்காக மெய்யான மனஸ்தாபப்பட்டு, அதாவது அவைகளை முற்றாக வெறுத்து, அவைகளில் உங்களை விழுத்தாட்டிய பாவச் சமயங்களை விலக்கி, நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுங்கள். 

இதுதான் மரணங் கிட்டின நேரம் பண்ணுகிற கடைசிப் பாவ சங்கீர்த்தனம் என்று சொல்லத்தக்கதான ஒரு உத்தமமான பாவ சங்கீர்த்தனத்தைப் பண்ணிவிடுங்கள். இனிமேல் நடுத்தீர்வையைப் பற்றிய ''பயத்தோடே இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் நடந்துகொண்டுவாருங்கள் ' ( 1 பேதுரு. 1; 17 ). நடுத் தீர்வையின் நினைவு, அதின் பயம் உங்கள் மனதின் அடித்தளத்திலே எப்போதும் தங்குமானால், ஒரு போதும் மனம் பொருந்திப் பாவத்தில் விழ மாட்டீர்கள். தவறி விழுந்தாலும், அதில் நிலைக்க மாட்டீர்கள். எப்போதும் சுத்த மனச்சாட்சியோடு இருப்பீர்கள். உங்களைச் சருவேசுரன் தமது நடுத்தீர்வைக்கு அழைக்கும் போது பயத்தோடு அல்ல தளராத நம்பிக்கையோடு அவர் சமுகத்திற் போவீர்கள். நீதிபரராகிய அவரும் உங்களை '' என் பிதாவினால் ஆசீர் வதிக்கப்பட்டவனே, ஆசீர்வதிக்கப்பட்டவளே, உலகம் உண்டானது முதல் உனக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற மோட்ச ராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வருவாயாக'' என்று உளங் குளிர, பேரின்பம் பொழியத் திருவாய் மலர்ந்தருளுவார்.ஆமென்.