இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார்

முந்தின அத்தியாயத்தில், திவ்விய பலிபூசையின் பரம இரகசியங்கள் மிகச் சுருக்கமாக மட்டும் தொட்டுக் காட்டப்பட்டன. இப்போது, நாம் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, அதை அதிக நுணுக்கமாக ஆராய்ந்து, அதிக முழுமையான விதத்தில் அதை விளக்கிக் கூறுவோம்.

மனிதாவதாரமாகிய பக்திக்குரிய பரம இரகசியமே முதலில் நம் கவனத்தைக் கவர்கிறது. பூசை நிறைவேற்றப்படும் ஒவ்வொரு முறையும் தேவசுதனின் மனிதாவதாரம் புதுப்பிக்கப்படுகிறது என்று நிரூபிப்பதற்கு, அறிஞரும், பக்திமானுமாகிய மார்ஷான்ஸியுஸ் என்பவரின் சாட்சியத்தை ஆதாரமாகத் தந்து இந்த விளக்கத்தைத் தொடங்குகிறேன். 

"பூசை என்பது, கிறீஸ்துநாதரின் மனிதாவதாரம், பிறப்பு, வாழ்வு, துன்பங்கள், மரணம், மற்றும் அவர் நமக்காகச் செய்து முடித்த மீட்புச் செயல் ஆகியவற்றின் முழுமையான மறு நிகழ்வு அல்லது அதை விட, அவற்றின் புதுப்பித்தலேயன்றி, வேறு என்ன?" என்று அவர் கேட்கிறார். 

அற்புதமான ஓர் அறிக்கை இது, ஏறக்குறைய நம் புத்திக்கு எட்டாதது. எனவே சிலர் ஒருவேளை இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, இது உண்மை என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்காக, இந்த அத்தியாயத்தில், திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படும் போதெல்லாம் கிறீஸ்துநாதர் எந்த முறையில் புதிதாக மனித அவதாரமாகிறார் என்று காண்பிப்போம்.

நித்திய வார்த்தையானவர் மனிதனின் நிமித்தமாகவும், அவனுடைய இரட்சணியத்திற்காகவும் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, இஸ்பிரீத்து சாந்துவின் செயலால் மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் திருவுதரத்தில் மனுவுருவாகி, நம் மனித சுபாவத்தைத் தம் மீது எடுத்துக் கொண்டபோது, கடவுள் தமது கருணையுள்ள அன்பில் மனுக்குலத்தின் மீது பொழிந்த நன்மை எவ்வளவு உயர்ந்ததாகவும், எவ்வளவு பரந்ததாகவும், எவ்வளவு உரைக்கப்பட இயலாததாகவும் இருந்தது என்பதை நாம் அறிவோம். 

விசுவாசப் பிரமாணத்தில், "இஸ்பிரீத்து சாந்துவினாலே பரிசுத்த கன்னி மரியம்மாளிடத்தில் மாமிசமாகி மனிதனானார்'' (எத் இன்கார்னாத்துஸ் எஸ்த் தே ஸ்பீரித்து சாங்க்தோ , எக்ஸ் மரியா விர்ஜினே, எத் ஹோமோ ஃபாக்த்துஸ் எஸ்த்) என்ற வார்த்தைகளைச் சொல்லும் போது, இந்த மனித புத்திக்கெட்டாத பரம இரகசியத்தையே குருவானவர் ஆராதிக்கிறார். இவ்வார்த்தைகளைச் சொல்லும்போது அவர் வெறுமனே தலைபணிவது மட்டுமின்றி, அச்சவணக்கத்தோடு முழந்தாளிட்டு, சகல நன்மைகளையும் தருகிறவர் இவ்வளவு ஆழமாகத் தம்மைத் தாழ்த்திக் கொண்டதற்காக குரு அவருக்கு நன்றி செலுத்துகிறார்.

ஒவ்வொரு வருடமும், ஆகமன காலம் முழுவதும் விசுவாசிகள் அனைவரும் இந்த அளவற்ற தெய்வீக நன்மையை தியானிக்க வேண்டும் என்றும், மனிதாவதாரப் பரம இரகசியத்தை பக்தியோடு ஆராதிக்க வேண்டுமென்றும், நாம் உண்மையாகவே கடமைப்பட்டுள்ளபடி, கடவுளின் நன்மைத்தனத்திற்காக அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்தவும் வேண்டுமென்று பரிசுத்த திருச்சபை தனது ஞானத்தில் நமக்கு உத்தரவிடுகிறது. 

ஏனெனில், இவ்வாறு மனிதனாக அவதரித்ததில், கிறீஸ்துநாதர் நமக்காக எத்துணை பெரிய வரப்பிரசாதங்களை சம்பாதித்தார், தமது மனித சரீரத்தில் எவ்வளவு மேலான காரியங்களைச் செய்தார், எவ்வளவு அதிகமாகத் தம் சரீரத்தில் அவர் துன்புற்றார் என்றால், அவருக்கு உரிய விதத்தில் நன்றி செலுத்துவதற்கு நித்தியம் கூடப் போதாததாகவே இருக்கும்.

ஆனால் அதிசயங்களில் எல்லாம் பேரதிசயமே! கிறீஸ்து நாதர் ஒரே முறையில், வெறுமனே மனிதனாவதோடு திருப்தியடையவில்லை. நாளுக்கு நாள், மணிக்கு மணி, தமது நித்தியப் பிதாவும், இஸ்பிரீத்து சாந்துவும் காலங்களுக்கு முன் இந்தப் பரம இரகசியத்தை கண்டு தியானிப்பதில் அடைந்த திருப்தியைப் புதுப்பித்து, அதை அதிகரிக்கும்படியாக, அவர் தமது தெய்வீக ஞானத்தின் முழுமையில், பூசையாகிய பக்திக்குரிய பரம இரகசியத்தை உருவாக்கி, ஸ்தாபித்து வைத்தார். 

அதில் அவருடைய மனிதாவதாரம் நிஜத்தில் மீண்டும் நிகழ்வது போலவே புதுப்பிக்கப்படுகிறது; அதை விட மேலாக, ஒரு பரம இரகசிய முறையில் என்றாலும், அது மீண்டும் உண்மையாகவே நிகழ்கிறது. இதற்குக் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரபூர்வமான சாட்சியம் நமக்கு இருக்கிறது. 

ஏனெனில், பெந்தேகோஸ்தே திருநாளுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறு அமைதி மன்றாட்டில்: "இந்தப் பலி நிறைவேறும்போதெல்லாம் நமது இரட்சணிய அலுவலும் நிறைவேற்றப்படுகிறது" என்று நாம் வாசிக்கிறோம். இந்த வார்த்தைகள், "நமது இரட்சணிய அலுவலும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது" என்று இல்லை, மாறாக, அவை, "நமது இரட்சணிய அலுவலும் நிறைவேற்றப்படுகிறது” என்று இருக்கிறது. இந்த இரட்சணிய அலுவல் சேசுக்கிறீஸ்துநாதரின் மனிதாவதாரமும், பிறப்பும், திருப்பாடுகளும், திருமரணமுமேயன்றி வேறு என்ன? இவை எல்லாம் பூசை நிறைவேற்றப்படும் ஒவ்வொரு முறையும் உண்மையாகவே நிறைவேற்றப்படுகிறது, புதுப்பிக்கப்படுகிறது.

இதற்கு அர்ச். அகுஸ்தீனாரும் சாட்சியம் கூறுகிறார்: ''யாருடைய கரங்களில் கிறீஸ்துநாதர் மீண்டும் மனிதன் ஆகிறாரோ, அந்த குருவானவரின் மகிமை எத்துணை மேலானது! ஓ, குருவானவர் என்னும் கருவியின் வழியாக பிதாவாகிய சர்வேசுரனாலும், இஸ்பிரீத்து சாந்துவினாலும் மிக அதிசயமான முறையில் நிகழ்த்தப் படுகிற பரலோகப் பரம இரகசியமே!" என்று அவர் கூறுகிறார். 

"அப்பம் எப்படி கிறீஸ்துநாதரின் திருச்சரீரமாக மாற்றப்படுகிறது என்று என்னிடம் கேட்கப்படுமானால், இஸ்பிரீத்து சாந்துவானவர் குருவானவரின் மீது நிழலிட்டு, கன்னிமாமரியின் திருவுதரத்தில் தாம் நிகழ்த்திய அதே செயலை இந்தத் தேவத்திரவிய அனுமானத்தின் பொருட்களிலும் செய்கிறார் என்று நான் பதில் சொல்வேன்" என்று அர்ச். தமாஸின் அருளப்பர் கூறுகிறார். 

மேலும், "கடவுள் மோட்சத்திலிருந்து நம் பலிபீடங்களின் மீது இறங்கத் தயைபுரியும் போது, முன்பு மோட்சத்திலிருந்து இறங்கி வந்து நம் மனித சுபாவத்தைத் தம்மீது ஏற்றுக் கொண்டதை விட மதிப்புக் குறைந்த செயலைச் செய்வதாகத் தோன்றவில்லை" என்ற வார்த்தைகளில் அர்ச் பொனவெந்தூரால் இதே காரியம் மிகத் தெளிவாக அறிக்கையிடப்படுவதை நாம் காண்கிறோம். 

இந்தப் பக்திச்சுவாலகருக்கு ஒப்பான வேதபாரகரின் வியக்கத்தக்க வார்த்தைகளின் பொருளை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வார்த்தைகள், 2000 வருடங்களுக்கு முன் கிறீஸ்துநாதர் மனிதனான போது அவர் செய்தது போன்ற அதே பெரும் புதுமையை அவர் ஒவ்வொரு பூசை யிலும் செய்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றன.

இது வண.அலானுஸ் தரூப் என்பவரால் உறுதிப்படுத்தப் படுகிறது. அவர் நம் இரட்சகர் பேசும் விதமாகப் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறார்: "சம்மனசானவரின் மங்கள வார்த்தை ஒலித்தபோது, நான் ஒருமுறை மனிதனானேன். அப்படியே ஒவ்வொரு பூசையிலும், தேவத்திரவிய அனுமான முறையில் நான் மீண்டும் மனிதனாகிறேன்.'' 

அதாவது, மரியாயே வாழ்க என்ற வார்த்தைகள் ஒலித்தவுடன், இஸ்பிரீத்து சாந்துவானவர் மாமரியை நிழலிட்டதன் வழியாக தேவ வார்த்தையானவர் மாம்சமானது போல, அதே தேவ வார்த்தையானவர், வசீகர வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டவுடன், குருவானவரின் கரங்களில் மனிதனாகிறார். வேறுபட்ட ஒரு முறையில்தான் அவர் மனிதனாகிறார் என்பது உண்மைதான், என்றாலும், அதே தெய்வீக வல்லமையின் வழியாகவே அவர் மனிதனாகிறார்.

இங்கே நாம் அர்ச். அகுஸ்தினாரோடு சேர்ந்து, "யாருடைய கரங்களில் கடவுள் மீண்டும் மனிதனாகிறாரோ, அந்த குருவானவரின் மேன்மை எவ்வளவு பெரியது!" என்று நாம் வியந்து கூறலாம். இத்துடன் நாம் தொடர்ந்து, "யாருடைய இரட்சணியத்திற்காக சேசுக்கிறீஸ்துநாதர் தினமும் பூசையில் ஒரு பரம இரகசிய முறையில் மீண்டும் மனிதனாகிறாரோ, அந்தக் கத்தோலிக்கனின் மேன்மை எத்துணை பெரிது!" என்று கூறலாம். 

"சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்தார்" (அரு. 3:16) என்ற சுவிசேஷம் கூறுவதைப் புரிந்து கொள்ள இது நமக்கு உதவுகிறது. ஓ நம்மீது நம் சர்வேசுரன் கொண்டுள்ள சிநேகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்றால், ஒவ்வொரு நாளும் அவர் மீண்டும் மோட்சத்திலிருந்து இறங்கி வந்து, மீண்டும் நம் நிமித்தமாக மனிதனாக அவதரிக்கிறார் என்ற உண்மை நமக்கு எப்பேர்ப்பட்ட இனிய ஆறுதலாக இருக்கிறது! இவ்வாறு நமக்குத் தரப்படுகிற ஆறுதலில் நாம் எவ்வளவாக மகிழ்ந்து களிகூர வேண்டியவர்களாக இருக்கிறோம்!

கிறீஸ்துநாதர் அநுச்சாரத்தில், பின்வரும் பகுதியை நாம் காண்கிறோம்: "நீ பூசை செய்தால், அல்லது கண்டால், உனக்கு அது எப்படிக் காணப்பட வேண்டுமென்றால், அதே நாளில் கிறீஸ்துநாதர் பரிசுத்த கன்னிகையின் திருவுதரத்தில் முதல் முறை இறங்கி மனிதனானது போல...... அவ்வளவு மேன்மையானதாகவும், புதியதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் காணப்பட வேண்டும்" (பிரிவு 4, அத். 2). 

கிறீஸ்துநாதர் இப்போதுதான் முதன்முறையாக மனிதனானார் என்றாலோ, தேவ குழந்தையானவரின் திருமாதாவிடமிருந்து அவர் பிறப்பார் என்று நாம் கேள்விப்பட்டாலோ, அது எந்த அளவுக்கு உரைக்கப்பட இயலாத தேற்றரவாக நமக்கு இருக்கும்! அப்போது கிறீஸ்துநாதரை ஆராதிக்கவும், அவரிடம் வரப்பிரசாதத்தையும் இரக்கத்தையும் மன்றாடவும் அவரிடம் விரைந்து செல்லாதவன் யார் இருக்க முடியும்? 

அப்படியானால், இப்போது நம் பலிபீடங்களின் மீது பரம இரகசிய முறையில் அவர் மீண்டும் மனிதனாவதால், பூசை காண அதே மகிழ்ச்சியோடு நாம் விரைய வேண்டாமா, அதே ஏக்கத்தோடு அவரது இரக்கத்தையும், மன்னிப்பையும் மன்றாட வேண்டாமா? 

நாம் அப்படிச் செய்யாதிருப்பதன் காரணம் நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இல்லை என்பதும், அதன் காரணமாக, கடவுளின் இந்த மாபெரும் கொடையை நாம் உண்மையாகவே மதித்துப் போற்றவில்லை என்பதும்தான்.