இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நரகத் தீர்வை காலாதி காலமும் தீராத கவலை.

''மோசம் போகாதேயுங்கள்; சருவேசுரன் பரிகாசத்துக்கு இடமானவர் அல்ல. மனுஷன் எதை விதைத்திருப்பானோ அதையே அறுப்பான்'' (கலாத். 6; 7, 8).

மனுஷர் தங்களைப் படைத்த சருவேசுரனை மறந்து, அவருடைய திருக் கற்பனைகளைப் பொருட்படுத்தாமல், பாவ அக்கிரமச் சேற்றிலே புரண்டு அவருக்குத் துரோகிகளாய்ச் சீவிக்கவும் துணிகிறார்களே. இது எப்படி ஆகும்? இதற்குக் காரணம் என்ன? ஒரு முக்கியமான காரணம் என்னவானால், அவர்கள் தங்களுக்கு வரப்போகிற கெடுதிகளை எதிர்முகப்படுத்திக் கண்டுகொள்ளாததுதான்;

பாவத்தின் சம்பளமாகிய (ரோம. 6; 23) மரணமும், அதைப்பற்றிய நடுத்தீர்வையும், அதற்குக் கிடைக்கப்போகிற தண்டனையாகிய நரக கதியும் தப்பாமல் வருகிற காரியங்கள் என்கிற நிச்சய உணர்வு அவர்களுக்குப் பிறவாததுதான். பின் கட்டாயம் நடக்கப்போகிற செய்திகளை அவர்கள் யோசிப்பதும் இல்லை; மனதினாற் கண்டு உணர்வதும் இல்லை. அதினாலேதான் இவ்வளவு பயங்கரமான அசட்டைத்தனத்தோடு சீவிக்கிறார்கள்; திடாரிக்கத்தோடு தேவ கற்பனைகளை மீறுகிறார்கள். ஏன்?

சிலர் நரகத்தைக் கண்டதார்? மோட்சத்தைக் கண்டதார்? என்றும் வாய் கூசாமற் சொல்வார்களே. பாவ மயக்கம் அவர்களுடைய மனக் கண்ணை மறைத்துப்போடுகிறது. தாங்கள் சொல்லுவது இன்னது என்று தானும் அவர்களுக்குத் தெரிகிறது இல்லை. இப்படியே, சாராய வெறிகொண்டவன், கோப வெறிகொண்டவன் தனக்குத் தூக்கு வரப்போகிறதை யோசியாமல் என்ன வந்தாலும் வரட்டும் என்று சொல்லிக்கொண்டு கொலை பாதகத்தைச் செய்வான். பின்பு பிடிபட்டு நீதித்தலத்தில் தனக்கு மரணத் தீர்வை கிடைக்கும்போது தான் அவனுக்குப் புத்தி திரும்பிவரும்.

கொலைத் தீர்ப்புச் சொன்னவுடனே சில கொலைகாரர், முன்னே அவ்வளவு வீரத்தோடு, வருகிறது எல்லாம் வரட்டும் என்று சபதஞ் சொன்னவர்கள், அறிவு கெட்டு விழுகிறதைக் கண்டிருக்கிறோம். தூக்கைக் கண்டத்தார்? என்றது போல விண் மண் ஒன்றையும் பாராமல் படுபாதகம் செய்தவர்கள், கொலைத் தீர்ப்புப் பெற்று மறியற் கூடத்திலே இருக்கும் போது, இரவு பகலாய்க் கண்ணீர் சொரிந்து உண்ணவும் உறங்கவும் மனம் இல்லாமல் தீராக் கவலையினால் சரீரம் உருகி உருகி வாடிக்கொண்டுவரக் கண்டிருக்கிறோம். எல்லாம் யோசனை இல்லாமையினால் வருகிற கேடு.

பிரியமான கிறீஸ்தவர்களே, நாம் பாவிகளுடைய தண்டனைத்தலமாகிய நரகம் என்னும் ஒரு பாதாளம் உண்டு என்ற உண்மையைக் கண்முன்பாக வைத்துக்கொள்ளவேணும். அர்ச். கிறீசோஸ்தம் அருளப்பர் சொல்லியிருக்கிறபடி: ''நரகத்தைக் கண்முன் வைத்துக்கொள்ளுகிறவர்கள் எவர்களோ அவர்கள் அந்த அக்கினிக் கிடங்கில் விழுவது இல்லை. நரகத்தைப் பறுவாய் பண்ணாதவர்கள் எவர்களோ அவர்கள் அந்தத் தீர்வைக்குத் தப்பிக்கொள்வது இல்லை ''.

ஆகையால், இன்றைப் பிரசங்கத்தில் நாம் 1-வது பாவிகள் ஒருபோதும் நரகத்துக்குத் தப்பிக்கொள்ளமாட்டார்கள் என்றும், 2-வது அவர்கள் அந்த அக்கினித் தலத்திலே அடையப் போகிற கவலை ஊழியுள்ள காலமுந் தீராக் கவலை என்றும் தேவகிருபையால் தெளிவிப்போம். உங்களால் இயன்ற முழுக் கவனத்தோடும் இந்தப் பிரசங்கத்தைக் கேளுங்கள். உங்களுக்கும் எனக்கும் மனத் தெளிவையும் ஞான வெளிச்சத்தையும் தந்தருள வேணும் என்று சருவேசுரனைப் பிரார்த்தியுங்கள்.

(பிரியதத்தம்).