இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பக்தியோடு பூசை செய்கிற அல்லது காண்கிற அனைவருக்கும் அந்தப் பரலோக செல்வங்கள் அனைத்தையும் அவர் பகிர்ந்தளிக்கிறார்

பிரான்சிஸ்கன் சபையின் பதிவேடுகளில் முத். ஆல்வெர்னியோ அருளப்பர் என்பவர் அசாதாரண பக்தியோடு பூசை காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எந்த அளவுக்கு என்றால், அவர் அடிக்கடி, தமது பலவீனமான சத்துவங்களால் தாங்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய, வாக்குக் கெட்டாத இனிமையை அவர் அடிக்கடி அனுபவித்து வந்தார். 

ஒரு முறை, தேவமாதாவின் பரலோக ஆரோபணத்தன்று, அவர் பாடற்பூசை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அவர் பூசையைத் தொடங்கிய மாத்திரத்தில், அவரது ஆத்துமம் எப்பேர்ப்பட்ட மிகப் பரவசமான பேரின்ப வெள்ளத்தால் நிரப்பப்பட்டது என்றால், தாம் தொடங்கிய தெய்வீகச் செயலைத் தம்மால் முடிக்க முடியாமல் போய் விடுமோ என்று அவர் பயந்தார். அவர் எதிர்பார்த்தபடியே தான் நிகழ்ந்தது. 

ஏனெனில், தேவ வசீகரத்திற்கு வந்தபோது, கிறீஸ்து நாதர் மனித சுபாவத்தை எடுத்துக் கொள்ளும்படி மோட்சத்திலிருந்து அவரை இழுத்து வந்ததும், திவ்விய பலிபூசையில் அதே செயலைப் புதுப்பிக்கும்படி தொடர்ந்து அவரைத் தூண்டுவதுமான அவரது அளவுகடந்த பேரன்பு இந்த நல்ல குருவின் மீது பொழியப்பட, அவரது இருதயம் அவருக்குள் உருகிப் போனது. அவரது பலம் அவரைக் கைவிட்டது, தேவ வசீகர வார்த்தைகளை அவரால் முடிக்க முடியாமல் போனது. 

மடத்துப் பாதுகாவலரான குரு இதைக் கவனித்து, மற்றொரு குருவோடு பீடத்திற்கு விரைந்து வந்து, அவர் தேவ வசீகரத்தை முடிக்க அவருக்கு உதவினார். மற்ற துறவிகளும், ஆலயத்தில் கூடியிருந்த மற்றவர்களும் மிகுந்த எச்சரிக்கை உணர்வு அடைந்தார்கள். ஏனெனில் குருவானவர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்தார்கள். 

நீண்ட நேரத்திற்குப் பிறகு, தமது பலத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு, அவர் தேவ வசீகர வார்த்தைகளைச் சொல்லி முடித்தார். அப்போது இதோ, அவர் தம் கரங்களில் பிடித்திருந்த தேவ அப்பம் புன்னகை தவழும் ஒரு சிறு குழந்தையாக மாறியது. முத். ஆல்வியெர்னோ அருளப்பர் அப்போதுதான் பிறந்த குழந்தையாக, தேவ பாலன் தமது குருத்துவக் கரங்களில் தவழ்வதைக் கண்டார்! 

அந்தக் கணத்தில், நமக்காக மனிதனானதிலும், தினமும் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிப்பதிலும் நமதாண்டவர் கொண்டுள்ள ஆழ்ந்த தாழ்ச்சி பற்றிய எத்தகைய கூர்மையான அறிவு அவருக்குக் கொடுக்கப்பட்டது என்றால், இந்த அறிவு அவரால் தாங்க முடியாததாக இருந்தது; அவருடைய உடல் பலம் தளர்ந்து போக, அவர் கீழே விழப் போனபோது, பாதுகாவலரான குருவும், சகோதரர்கள் சிலரும் அவரைத் தங்கள் கரங்களில் தாங்கிக் கொண்டார்கள். என்றாலும் திவ்விய நன்மை வரைக்கும் அவர் மிகவும் சிரமப்பட்டு பூசையைத் தொடர்ந்து நிறைவேற்றினார். 

ஆனால் தேவ வசீகரம் செய்யப்பட்ட தேவ அப்பத்தையும், இரசத்தையும் உட்கொண்டபோது, அவர் முற்றிலுமான உணர்வற்றுப் போய் விட, அவர்கள் அவரைத் திரு வஸ்திரசாலைக்குள் சுமந்து வந்தார்கள். அங்கே சில மணி நேரம் அவர் இறந்து விட்டவரைப் போல அப்படியே கிடந்தார். உண்மையில், அவரது இழப்பு பற்றி மக்கள் ஏற்கனவே புலம்பியழத் தொடங்கி விட்டார்கள். 

ஆனால் அவர் மீண்டும் தன்னுணர்வு பெற்ற போது, அவரது சகோதரர்கள், அவர் பீடத்தருகில் மயங்கி விழும் அளவுக்கு என்ன நடந்தது என்று தங்களுக்குச் சொல்லும்படி கடவுளின் அன்பின் நிமித்தமாக அவரைக் கேட்டுக் கொண்டார்கள். 

அவர்களுடைய தொந்தரவைத் தாங்க முடியாதவராக, அவர் பதிலளித்தார்: "தேவ வசீகரத்திற்கு முன்பாக, கிறீஸ்துநாதரின் அன்பைப் பற்றி நினைத்தேன். அது கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மனிதனாகும்படி அவரைத் தூண்டியது, இப்போது திவ்விய பலிபூசையில் தினமும் புதிதாக மனிதனாக அவதரிக்குமாறு அது அவரைத் தூண்டுகிறது. இதைப் பற்றி நான் சிந்தித்ததும், என் இருதயம் மெழுகைப் போல உருகுவதையும், என் அவயவங்கள் பலமற்றுப் போவதையும் நான் உணர்ந்தேன். 

இதனால் என்னால் நேராக நிற்கவோ, ஜெபத்தின் வார்த்தைகளை உச்சரிக்கவோ முடியாமல் போனது. மிகுந்த முயற்சியோடு நான் அவற்றை உச்சரித்தபோது, மேற்கொண்டு என் கரங்களில் திவ்விய அப்பத்தை அல்ல, மாறாக, ஓர் அழகிய குழந்தையை நான் கண்டேன். அந்தக் குழந்தையின் காட்சியே என் ஆத்துமத்தை ஊடுருவி, என் உடல் பலத்தை வற்றிப் போகச் செய்யப் போதுமானதாயிருந்தது. ஆகவே நான் மயக்கமுற்று, அன்பின் இனிய பரவச நிலைக்குள் விழுந்தேன்.'' 

பரிதாபத்திற்குரிய பாவிகளாகிய நமக்காகவும், நம் இரட்சணியத்திற்காகவும் அவர் தமது மனிதாவதாரத்தின் பரம இரகசியத்தைத் தினமும் புதுப்பிப்பதாலும், அந்தப் பரம இரகசியத்தின் கனிகளை அளவற்ற விதமாக அபரிமிதமான நமக்கு வழங்குவதாலும், நம்மீது அவர் நம் ஆண்டவர் வெளிப்படுத்தும் ஆழங்காண முடியாத நேசத்தைப் பிறர் அறியச் செய்யும்படி, இந்தப் புனித குரு தாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விவரித்துக் கூறியது இதுதான்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து, பரலோகப் பேரின்பம் முழுவதற்கும் ஆதாரமானவர் நம் பீடங்களின் மீது இறங்கி வரத் தயைசெய்யும் போது, எத்தகைய ஒரு பெரும் மகிழ்ச்சி பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்கி வருகிறது என்பதை நாம் கண்டு பிடிக்கலாம். அர்ச்சியசிஷ்டவர்கள் இந்தப் பேரின்பத்தை அடிக்கடி சுவைத்து மகிழ்ந்தார்கள். 

அதிக பக்தியோடும், தியானத்தோடும், அதிக உயிருள்ள விசுவாசத்தோடும் நாம் பூசையில் பங்கு பெறுவோம் என்றால், நாமும் அதைச் சுவைக்க சலுகை பெறலாம். பூசை காண்பவர்கள் கிறீஸ்துநாதரின் முதல் மனிதாவதாரத்தின் பேறுபலன்களில் பங்குபெறுபவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பதால், கிறீஸ்துவின் மனிதாவதாரத்தின் இந்தப் புதுப்பித்தல் நமக்கு எத்தகைய பெரும் ஆதாயமாக இருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். 

கிறீஸ்துநாதர் இவ்வாறு ஆழ்ந்த விதமாகத் தம்மையே தாழ்த்திக் கொள்வதால், அவர் கடவுளின் நீதியுள்ள கோபத்தை அமர்த்துவதோடு, நாம் மிகவும் தகுதி பெற்றிருக்கும் தண்டனையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார். அவர் நம்மீது பொழிந்துள்ள எல்லா நன்மைகளுக்கும், குறிப்பாக, நம் நிமித்தமாக திவ்விய பலிபூசையை ஏற்படுத்தி, அதில் தம் மனிதாவதாரத்தை மட்டுமின்றி, தமது வாழ்வு மற்றும் மரணத்தின் சகல பரம இரகசியங்களையும் கூட அவர் புதுப்பிப்பதற்காகவும் அவருக்குப் போதுமான அளவு நன்றி செலுத்த நம்மால் முடியாது. அனுதினமும், அல்லது முடிந்த வரை அடிக்கடியும் பக்தியோடு பூசை காண்பதையும், நாம் பெற்றுக்கொண்ட இரக்கங்களுக்கு நன்றியறிதலாக அதை மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு ஒப்புக்கொடுப்பதையும் விட, அவருக்கு நன்றி செலுத்த நமக்கு வேறு சிறந்த வழியில்லை.