இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய சேசு தம் சரீர வடிவத்தில் விசுவாசிகளில் சிலரால் மட்டுமின்றி, அஞ்ஞானிகளாலும் காணப்பட்டிருக்கிறார்

அஞ்ஞானிகளான சாக்ஸனியர்களைக் கிறீஸ்தவ விசுவாசத் திற்கு மனந்திருப்பப் பேரரசர் சார்ல்மேனால் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்ட முயற்சிகளை ஆல்பெர்த்துஸ் க்ரான்ஷியுஸ் என்பவர் விரிவாக விவரிக்கிறார். 

ஒரு தடவைக்கும் அதிகமாக, அவர் தமது படைகளைக் கொண்டு அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார், விக்கிரக வழிபாட்டை அனுசரிப்பதை அவர்கள் கைவிடச் செய்ய அவர் மீண்டும் மீண்டும் அவர்களை வற்புறுத்தி வந்தார் என்றாலும், தங்கள் தலைவனாகிய விற்றேக்கின் என்பவனது தலைமையின் கீழ் அவர்கள் மீண்டும் தங்கள் கிறீஸ்தவ விசுவாசத்திலிருந்து தவறிப் போனார்கள். 

ஒரு தபசு காலத்தின் போது, பேரரசர் பன்னிரண்டாவது தடவையாக, ஒரு பெரும் படைக்குத் தலைமை தாங்கி அவர்களது நாட்டிற்குள் நுழைந்தார். உயிர்ப்புத் திருநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அரச சேனையின் வீரர்கள் அனைவரும் தேவத்திரவிய அனுமானங்களைப் பெறவும், தங்கள் பாளையத்தில் இந்தத் திருநாளைப் பக்தியோடு கொண்டாடவும் தங்களை ஆயத்தம் செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் சாக்ஸனியத் தலைவனாகிய விற்றேக்கின் கிறீஸ்தவச் சடங்கு முறைகளைக் காணும் விருப்பத்தோடு ஜெர்மானியப் பதுங்குகுழிகள் இருந்த பகுதிக்குச் சென்றான். யாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாதபடி, அவன் ஒரு பிச்சைக்காரனைப் போல கந்தைகள் அணிந்து மாறுவேடத்தில் அங்கு சென்றான். அங்கே நடந்து கொண்டிருந்த எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து, தன்னால் முடிந்த வரை எல்லாத் தகவல்களையும் சேகரித்துக் கொண்டான். 

பெரிய வெள்ளியன்று எப்படிப் பேரரசரும், எல்லா வீரர்களும் துக்கம் கொண்டாடும் தோற்றத்துடன் இருந்தனர் என்பதையும், எப்படி அவர்கள் கடுமையான உபவாசம் அனுசரித்தனர், எப்படி நீண்ட நேரம் ஜெபத்தில் கழித்தனர் என்பதையும், பெரிய சனிக்கிழமையன்று, அவர்கள் எப்படிப் பாவசங்கீர்த்தனம் செய்து, உயிர்ப்புத் திருநாளன்று திவ்விய நன்மை உட்கொண்டார்கள் என்பதையும் அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். 

பூசை நடந்து கொண்டிருந்தது. தேவ வசீகரத்தின் நேரத்தில், குருவானவரின் கரங்களில் மிகவும் அழகிய குழந்தை ஒன்று தவழ்வதை அவன் தெளிவாகக் கண்டான். தேவ குழந்தையின் காட்சி அவனை இது வரை அவன் அனுபவித்திராத ஒரு பெரும் மகிழ்ச்சியாலும், சந்தோஷத்தாலும் நிரப்பியது. 

பூசையின் எஞ்சிய பாகத்தின் போது, குருவானவரிடமிருந்து தன் கண்களை அகற்ற அவனால் முடியவில்லை. போர் வீரர்கள் திவ்விய நன்மை உட்கொள்ளச் சென்ற போது, குருவானவர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதே அழகிய குழந்தையைத் தருவதையும், அவர்கள் ஒவ்வொருவரும் அந்தக் குழந்தையை உட்கொள்வதையும் கண்டபோது அவனது ஆச்சரியம் எல்லை கடந்தது. 

எல்லோரும் ஒரே விதமாக அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை. சிலரிடம் அந்தக் குழந்தை வெளிப்படையான மகிழ்ச்சியோடு சென்றது. வேறு சிலரிடமிருந்து அவர் திரும்பிக் கொண்டார், தம்மால் முடிந்த வரை அவர்கள் தம்மை உட்கொள்ளாமல் அவர் தடுத்தார். ஆயினும் கட்டாயத்தினால் மட்டும் அவர் அவர்களிடம் சென்றார்.

சாக்ஸனியத் தலைவன் தான் கண்டவையும், இதுவரை கேள்விப்பட்டிராதவையுமான இந்த அதிசயங்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது என்று தெரியாமல் திகைத்தான். பூசை முடிந்தவுடன் அவன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, பூசை கண்ட வீரர்கள் திரும்பிச் செல்லுகையில் அவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரர்கள் நடுவே போய் நின்று கொண்டான். பேரரசர் ஒவ்வொரு பிச்சைக்காரனுக்கும் தம் கரத்தாலேயே பிச்சை கொடுத்தார். 

தனக்குரிய நாணயத்திற்காக விற்றேக்கின் தன் கரத்தை நீட்டிய போது, பேரரசரின் ஊழியர்களில் ஒருவன் அவனது ஒரு விரலின் வித்தியாசமான அமைப்பை வைத்து அவன் விற்றேக்கின் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டான். ஆகவே, அவன் தன் அரச எஜமானரிடம் இரகசியமாக, "இது சாக்ஸனியத் தலைவனான விற்றேக்கின்தான்; அவனுடைய வளைந்த விரலை வைத்து நான் அவனைக் கண்டுபிடித்தேன் " என்று அறிவித்தான்.

பேரரசர் அந்த அந்நியனைத் தம் கூடாரத்தில் தமக்கு முன்பாகக் கொண்டு வரச் செய்து, சாக்ஸனியத் தலைவனாகிய அவன் ஏன் ஒரு பிச்சைக்காரனைப் போல மாறுவேடத்தில் வர வேண்டும் என்று கேட்டார். விற்றேக்கின் தான் ஓர் ஒற்றன் என்று கருதப்பட்டு, கடுமையாக நடத்தப்படக் கூடும் என்ற கடுமையான அச்சத்திற்கு உள்ளானான். ஆகவே, அவன் பேரரசரிடம் உண்மையைக் கூறினான்: "என் மீது கோபமாயிராதேயும். கிறீஸ்தவ வழிபாடு பற்றி மேலும் நன்றாக அறிந்து கொள்வதற்காக மட்டுமே நான் இப்படிச் செய்தேன்'' என்றான் அவன். 

பேரரசர் அதன்பின், அவன் என்ன கண்டான் என்று விசாரிக்க, விற்றேக்கின் பதிலுக்கு, "நான் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராதவையும், கேட்டிராதவையுமான அதிசயங்களைக் கண்டேன். அவை என் புத்திக்கு மிகவும் அப்பாற்பட்டவையாக இருந்தன" என்றான். 

அதன்பின் அவன் பேரரசரிடம் பெரிய வெள்ளியன்றும், பெரிய சனியன்றும் தான் கவனித்த காரியங்கள் என்னென்ன என்றும், அன்று காலையில் பூசையில் தான் கண்டது என்ன என்றும் எடுத்துக் கூறி, இந்தப் பரம இரகசியங்களைத் தனக்கு விளக்கிக் கூறும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டான். 

கடவுள் ஒரு சில அர்ச்சியசிஷ்டவர்களுக்கு மட்டுமே தந்துள்ள ஒரு வரப்பிரசாதத்தை, அதாவது தேவ அப்பத்தில், தேவ குழந்தையைக் காணும் பாக்கியத்தை, இந்தப் பிடிவாதமுள்ள அஞ்ஞானிக்கும் தந்தார் என்பதைக் கேட்டுப் பேரரசர் மிகுந்த வியப்புக்குள்ளானார். 

அதன்பின் அவர் சாக்ஸனியத் தலைவனிடம், பெரிய வெள்ளியன்று தாங்கள் உபவாசம் இருந்ததற்கும், தாங்கள் பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்விய நன்மை உட்கொண்டதற்குமான காரணங்களை விளக்கிக் கூறினார். விற்றேக்கினின் இருதயம் எவ்வளவு ஆழமாகத் தொடப்பட்டது என்றால், அவன் அன்றே விக்கிரக வழிபாட்டை அடியோடு துறந்து, கிறீஸ்தவ விசுவாசத்தை ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டான். 

போதிய அளவுக்கு ஞான உபதேசம் கற்றுக்கொண்டபின் அவன் ஞானஸ்நானம் பெற்றான். அதன்பின் அவன் சில குருக்களைத் தன்னோடு தன் மக்களிடம் அழைத்துச் சென்றான். அவர்களது ஊழியத்தால், சாக்ஸனிய நாடு படிப்படியாக கிறீஸ்துநாதரிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.

சாக்ஸனியர்களின் மனந்திரும்புதலுக்குக் காரணமான இந்த உண்மைக்கதை, தேவ வசீகரம் செய்யப்பட்ட திவ்விய அப்பத்தில் குழந்தை சேசு மெய்யாகவே பிரசன்னமாகியிருக்கிறார் என்றும், அவர் தம் சரீர வடிவத்தில் விசுவாசிகளில் சிலரால் மட்டுமின்றி, அஞ்ஞானிகளாலும் காணப்பட்டிருக்கிறார் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி எண்பிக்கிறது. 

நமது பாவகரமான பார்வையிலிருந்து அவர் தமது மகிமைப்படுத்தப்பட்ட திருச்சரீரத்தின் வார்த்தைக்கு எட்டாத பேரழகை மறைக்கிறார். என்றாலும், அந்தப் பேரழகு பிதாவாகிய சர்வேசுரனுடைய கண்களுக்கும், மோட்சவாசிகள் அனைவரின் கண்களுக்கும் மறைவாயிருப்பதில்லை: அதற்கு மாறாக, ஒவ்வொரு பூசையிலும் அது எத்தகைய உரைக்கப்பட இயலாத அழகோடு அவர்களுடைய காட்சிக்கு வைக்கப்படுகிறது என்றால், மகா பரிசுத்த தமத்திரித்துவம் அதனால் மகிமைப்படுத்தப்படும் அதே வேளையில், கடவுளின் திருமாதாவும், சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் வார்த்தைகளால் போதிய அளவுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியாலும், சந்தோஷத்தாலும் நிரப்பப்படுகிறார்கள். 

ஏனெனில் கிறீஸ்துநாதர் வண. ஆலானுஸ் என்பவரிடம் சொன்னதாகக் கூறப்படுவது போல, திவ்விய பலி பூசையை விட அதிகமாகக் கடவுளை மகிமைப்படுத்துவதும், அவரது திருமாதாவை அக்களிக்கச் செய்வதும், அர்ச்சியசிஷ்டவர்களின் பேரின்பத்தை அதிகரிப்பதும் வேறு எதுவுமில்லை.

இந்தப் பச்சிளங் குழந்தையைப் பரிசுத்த சம்மனசுக்கள் காணும்போது, அவர்கள் அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அவரை ஆராதிக்கிறார்கள். "கடவுளின் சகல தூதர்களும் அவரை ஆராதிப்பார்களாக'' (எபி. 1:6) என்று அர்ச். சின்னப்பர் இதைப் பற்றியே கூறுகிறார். 

கிறீஸ்து பிறந்த இரவில், பிதாவாகிய சர்வேசுரன் தமது ஏக பேறான திருச்சுதனை முதல் முறையாக உலகிற்குக் கொண்டு வந்தார்; ஆனால் பூசை நிறைவேறும் போதெல்லாம், அவர் தம் திருச்சுதனைப் புதிதாக உலகிற்கு, நம் பீடங்களின் மீது கொண்டு வருகிறார். இவர் நமக்காகத் தம்மைப் பலியாக்கி, தமது பிறப்பின் கனிகளை நமக்குத் தந்தருள்வதற்காகப் பிதா இப்படிச் செய்கிறார். 

அப்போது, சம்மனசுக்கள் தாழ்ந்து பணிந்து, அவரை ஆராதிக்கிறார்கள். திருச்சபையும் இதையே தன் முகவுரையில், "தேவரீருடைய தேவ மகத்துவத்தைத் தூதர்கள் துதிக்கின்றனர்; நாதகிருத்தியர் ஆராதிக்கிறார்கள்; சத்துவர்கள் கண்டு நடுநடுங்குகிறார்கள்; பரமண்டலங்களும், பலமண்டலங்களிலுள்ள பலவத்தர்களும், பாக்கியவான்களான பக்திச்சுவாலகரும் ஒன்றுகூடி சந்தோஷம் கொண்டாடுகிறார்கள்" என்று கூறுகிறது. 

இவ்வாறு, அவர் பிறந்த இரவில், "உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது" என்று அவர்கள் பாடினார்கள். 

நாமும் கூட, பரலோக சேனைகளோடு சேர்ந்து, பரலோகத்திலிருந்து புதிதாக வந்து, நம் இரட்சணியத்திற்காக ஒரு பச்சிளங் குழந்தையின் உருவத்தை எடுத்துக் கொள்பவரும், தாம் நமக்காக சம்பாதித்த பேறுபலன்களில் அபரிமிதமான ஒரு பங்கைப் பூசையில் பங்குபெறும் அனைவருக்கும் தந்தருள்பவருமான தேவ பாலனைப் போற்றித் துதித்து, மகிமைப்படுத்துவோம்.