இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இல்லறக் கடமைகள் - புருஷனும் பெண்சாதியும்.

பிரியமான கிறீஸ்தவர்களே, நாம் எல்லாம் ஆண்டவருடைய நீதியாசனத்தின் முன்னே ''அவரவர் சரீரத்தால் செய்த நன்மைக்கும் தன்மைக்கும் தக்க பலனை அடையும்படிக்கு வெளிப்பட வேண்டிய '' (2 கொரிந். 5; 10) அந்த மகா கலக்கடியான நாளிலே நல்ல கணக்குக் கொடுத்து தேவ ஆசீர்வாதம் பெற வேணுமானால், இப்போது நம்மை நாம் தாமே நடுத் தீர்த்துக்கொள்ள வேணும் என்றேனே. இதற்காக அவரவர் தங்கள் பல பல கடமைகளையும் ஆராய்ந்து அறிந்து, இன்ன இன்ன காரியத்தில் தவறினோம் என்று கண்டு, மெய்யான மனஸ்தாபப்பட்டு, இனித் தவறாமல் நடப்போம் என்று கெட்டியான தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டியது.

இன்றைக்கு, இல்லறத்தவர்கள் அதாவது புருஷன் பெண்சாதியாய் இருக்கிறவர்கள் நிறைவேற்றவேண்டிய காரியங்களை, அநுசரிக்க வேண்டிய புண்ணியங்களைச் சுருக்கமாய் விசாரிப்போம்.

1. புருஷனுடைய கடமைகளை வேதாகமத்திலே அர்ச். சின்னப்பர் ஒரே ஒரு வாக்கியத்தில் அடக்கிக் காட்டியிருக்கிறார். அதாவது : ''புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்பு கூருங்கள்" (எபே. 5; 25). இந்த அன்பின் தன்மையைத்தான் அவர் மேலும் விபரித்து : ''புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்புகூர வேண்டும். தன் மனைவியில் அன்பு கூருகிறவன் தன்னில் தான் அன்பு கூருகிறான். ஏனெனில் மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு மனைவியுடன் இசைந்து இருவரும் ஒரே மாமிசமாயிருப்பார்கள்'' என்ப னவாக வசனிக்கிறார் ( 28, 31-ம் வச.).

பெண்சாதி மேல் மெய்யான அன்பு, சத்திய வேதத்துக்கு அடுத்த அன்பு, கிறீஸ்துநாதர் நிமித்தமாய் உள்ள அன்புதான் புருஷனுடைய கடமை. இது மிருகங்களுட்போல ஆசாபாசத்தினால் உண்டாகிற ஒரு அன்பாய் இருப்பது போதாது; வெறும் மனக் கிளர்ச்சியால், உருக்கத்தால் மாத்திரம் வெளிப்படுகிற ஒரு அன்பாய் இருப்பதும் போதாது. இந்த அன்பு, விசேஷமாய், பெண்சாதியை மதித்துச் சங்கை பண்ணுவதிலே, அவளுக்கு வேண்டிய சகல உதவி ஒத்தாசைகளையும் செய்வதிலே, அவள் குறைகளைச் சகிப்பதிலே காட்டப்படவேண் டியது.

புருஷன் தன் பெண்சாதியை மதித்துச் சங்கிக்க வேணும். ''பெண்சாதியானவள் புருஷனின் ஆட்சியின் கீழ் இருப்பாள்'' என்றது (சனிப். 3; 16) தேவ நியமனமே ஆனாலும், அவள் இவனுக்கு அடிமையல்ல. எல்லாத்திலும் சரிசமானம் ஆனவள்; இளைய சகோதரம் போன்ற கூட்டாளி ஆனவள். அர்ச். அம்புறோசியார் வசனித்திருக்கிற பிரகாரம், ஆதியிலே ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட ஏவாள் என்னும் மனைவி '' அவருக்கு ஆண்டவளாயல்ல, அடிமையாயல்ல, துணைவியாகவே'' கொடுக்கப்பட்டாள். ஆனாலும் பெண்சாதியோ சரீர இயற்கையினாலே பெலவீனமுள்ளவள்.

இதனாலேதான் தலைமை அப்போஸ்தலரான சம்பேதுருவானவர் : ''புருஷர்களே மனைவியானவள் பெலவீனப் பாண்டமாயிருக்கிறபடியால்... அவளுக்குச் செய்ய வேண்டிய சங்கையைச் செய்யுங்கள்'' என்று புத்தி கூறுகிறார் (1 பேது. 3; 7). இதற்கு மாறாக, பெண்சாதியை வேலைகாரிபோல் நடத்தி, எடி பிடி என்று அவமதித்துப் பேசி, அடித்து உதைத்து மிதித்து, ''எதிரி ஏழையென்றால் கோபஞ் சண்டாளன்'' என்றதற்கு இணங்க, தன் கோபத்துக்கு இடங் கொடுக்கிற கணவனும் சத்தியவேத போதகத்துக்கு ஒத்து நடப்பவனோ? இப்படிப்பட்ட நடையுள்ளவனுடைய குடும்ப வாழ்க்கை "அன்றிலும் பேடையும் போல '' என்று தமிழில் சொல்லுகிற அந்நியோன்னிய சமாதான வாழ்க்கையோ? அல்ல அல்ல. ''காடையும் புழுதியும் போல'' , '' நாயும் பூனையும் போல '' என்று குறிக்கப்படுகிற நரக வீட்டு வாழ்க்கைதானே. பெண்சாதியை அடித்து உதைக்கிறவன் ஆண்பிள்ளை அல்ல. அவளைப் புத்தியாலும் நட்பாலும் கைக்குள் விழுத்தி வசப்படுத்தி ஆளுகிறவனே ஆண்பிள்ளை.

''நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நற் பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை". பெண்சாதியை நல்லவள் ஆக்குகிறவனும் பொல்லாதவள் ஆக்குகிறவனும் புருஷன் தான். ''இருக்கிறவன் சரியாய் இருந்தால் சிரைக்கிறவன் சரியாய்ச் சிரைப்பான்''. பெண்சாதியின் குணத்தை அறிந்து அதற்கு ஏற்றபடி நடத்தினால், அவளைத் தன்வசம் ஆக்கிப் போடலாம். அப்படிச் செய்யாமல், சீறிச் சினந்து ஆக்கினை பண்ணினால் நட்புக் கெட்டுப்போம். நட்புக் கெட்டால் எவ்விதத் தாறு மாறுகளுக்கும் வழி திறந்துவிட்டது ஆகிவிடும் ; குடும்பத்திற் பிரிவு, விசுவாசக துரோகம் முதலான பல கேடுகளுக்குக் காரணம் ஆகிவிடும். உத்தம புருஷனானவன் பெண்சாதியைத் தனக்குக் கீழ்ப் பட்டவளாய்ப் பாவிக்கிறதற்கு மாறாய், அவளைத் தன்னுடைய மதி மந்திரியாக வைத்து, அவளோடு அளவளாவி யோசித்துக்கொண்டு தான் என்ன கருமத்தையுஞ் செய்வான். மதிப்பு மதிப்பைப் பிறப்பிக்கும். சங்கைக்குப் பதில் சங்கை கிடைக்கும். பெண்சாதியை நீ மதித்து நடத்தினால், அவளும் உன்னை மேலாக மதிப்பாள். அவளுக்கு நீ பண் ணுகிற சங்கையை அவள் மூவிரட்டியாய் உனக்குப் பண்ணுவாள். இது அனுபவத்திலே கண்ட காரியம்.

பெண்சாதியிடத்தில் மெய்யான அன்புள்ள புருஷன் அவளை மதித்துச் சங்கிப்பான். மேலும் அவளுக்கு வேண்டிய சகல உதவி ஒத்தாசைகளையுஞ் செய்து, அவளை ஆதரித்துக் காப்பாற்றுவான். பெண்சாதிக்கு அவசியமானவைகளை மாத்திரமல்ல, அவள் நிலை பரத்துக்குத் தகுதியானவைகளையும் தேடிக் கொடுப்பது புருஷனுடைய கடமை. ஊணும் நடபடியான உடையும் கொடுத்தாற் போதாது. இவைகள் தான் அவசியமானவைகள். இவைகளோடு தன் தன் அந்தஸ்துக்குத் தகுந்த நல்ல ஆடை ஆபரணங்களையும் இயன்ற வரையில் சம்பாதித்துக் கொடுக்கவேண்டியது. இதிலே மிதமிஞ்சின செலவும் ஆகாது ; ஈப்பிணித்தனமும் ஆகாது.

வருவாய்க்கு மேலாகச் செலவு பண்ணி, தன் நிலைபரத்துக்கு மேற்பட்ட தீன் வகைகளை, உடுப்புக்களை, நகை நட்டுக்களை வாங்கி ஆராதூரித்தனமாய் நடப்பதும் தவறு. உண்ணாமல் உடாமல் பெண்சாதிக்குப் படிபோட்டுக் கசவஞ்சித்தனம் பண்ணுவதும் தவறு. சில புருஷன்மார், தாங்கள் வெளியே பெரும் தீனிக்காரராய் குடிவெறியராய்த் திரிந்து, வீட்டிலே மனையாளைப் பட்டினி கிடத்திவிடுவார்கள். வேறு சிலர், பெண்சாதி சரீரத்தைப் பிழிந்து பாடுபட்டு உழைத்து வரப் பண்ணி, தாங்கள் படுத்திருந்து கொள்ளுவார்கள். இவையெல்லாம் படு பாதகமான அநியாயங்கள்.

பெண்சாதியும் சில தடவைகளில் கூட உழைப்பது கடமையாகலாம். ஆனால், புருஷன் சும்மா இருக்க அவளே புருஷனுக்கு உழைத்துக் கொடுப்பது என்ற முறை ஒருபோதும் இல்லை. புருஷன்தான் பெண்சாதிக்கு உழைத்துக் கொடுத்து அவளைச் சீராய்ச் சிறப்பாய் வைக்க வேண்டியவன். அவளைத் தன் சொந்தச் சரீரம்போற் பார்க்க வேண்டும் என்று சம் பாவுலுவானவர் வசனித்தாரே. இப்படி நடத்துகிற புருஷன் அவளை எவ்விதத்திலும் வருத்தமாட்டான். தன்னையே வருத்தி அவளைச் சுகமாய் இருக்கப்பண்ணுவான். அவள் நோய்வாய்ப்பட்டிருக்கும் வேளைகளில் விசேஷமாய் அவளுக்குத் தனது உள் அன்பைக் காண்பிப்பான். எதிரிடையான நேரங்களிலேதான் அல்லவோ அவரவருடைய உண்மையான நேசப்பற்றுதல் வெளிப்படுவதாகும்!

துன்ப துரிதவேளைகளிலேபோல, பெண்சாதி தன் பெலவீனத்தால் குற்றங்குறை செய்கிற வேளைகளிலேயும் புருஷனுடைய உண்மையான நேசம் வெளிப்பட வேணும். அதெப்படியென்றால், அக்குறை குற்றங்களைச் சகித்து நடப்பதினாலேதான். வேலை மிகுதியால், அல்லது வருத்தத்தால், அல்லது சுபாவமான வெடுவெடுப்புக் குணத்தினால், அல்லது காரிய பாகம் அறியாமையினால் அவள் சில வேளைகளில் சொல்லுகிற புத்தியீனமான சொற்களை, செய்கிற தவறுகளை புருஷன் கண்சாய்த்து நடத்திக்கொள்ளவேணும். எல்லாத்திலும் ஒருவகையான போக்கும் அபிப்பிராயமும் உள்ள இரண்டு பேர் வந்து சந்திப்பது அருமையில் அருமை.

அவளுடைய குணம் உனக்குப் பிடியாவிட்டால், பல காரியங்களில் உன்னுடைய குணமும் அவளுக்குப் பிடியாது. அவளிடத்தில் உள்ளது போலவே உன்னிடத்திலும் நீ அறியாத குறை குற்றங்கள் எத்தனையோ உண்டு. உன் மனைவியிடத்தில் மெய்யான அன்பு உனக்கு உண்டானால், அவளுடைய பெலவீனத்தை ஒருபோதும் எடுத்துப் பிடிக்க மாட்டாய் ; பாராட்டமாட்டாய். அன்பு உண்டானால் எல்லாத்தையும் சகித்துக்கொள்வாய். வேதாகமத்திலே எழுதியிருக் கிறபடி : ''அன்பு நீடிய சாந்தமும் தயவும் உள்ளது. அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் '' (1 கொரிந். 13, 4-7). சத்தியவேத புருஷன்மாரே, நீங்கள் உங்கள் மனைவிகளில் உண்மையான அன்பு கூர்ந்தீர்களானால் உங்கள் கடமைகளெல்லாம் நிறைவேறியதாகும்.

2. இனி, பெண்சாதியுடைய கடமைகளையும் சம்பாவுலுவானவர் சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருக்கிறார். அவர் வசனிப்பது: ''பெண்சாதிமார் வீட்டைப் பராமரிக்கிறவர்களும் மதுர குணமுள்ளவர்களும் புருஷன்மாருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாய் இருக்க வேண்டும்'' என்கிறார் (தீத்து. 2; 5). இந்த மூன்று லட்சணங்களும் ஒன்றைவிட ஒன்று அதிக முக்கியமானதாகிக் கடைசியில் நிற்பது பிரதானமானதாய் இருக்கிறபடியால், அதைத்தான் முதல் எடுத்து விரிப்பது தகுதி.

பெண்சாதி புருஷனுக்குக் கீழ்ப்பட வேண்டியது. இந்தப் போதகத்தை அர்ச். சின்னப்பர் வேறோர் இடத்திலும் சொல்லுகிறவராகி: ''மனைவிகளே கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்'' (எபே 5; 22 ) என்றார்.

கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல் : இதிலே பெண்சாதிமாரே, உங்களுடைய அமைச்சலின் விசேஷ இலட்சணம் காட்டியிருக்கிறது. ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் காட்டுகிற சிரவணத்தை நீங்கள் உங்கள் புருஷன்மாருடைய கட்டளைகளுக்குக் காட்டவேண்டியது! அவருடைய சந்நிதியில் செய்ய வேண்டிய ஆசாரத்தைப் புருஷன்மாருக்குச் செய்ய வேண்டியது. மனைவி புருஷனோடு சமத்துவமுள்ளவள், அவனோடு ஏக சரீரம் போல் உள்ளவள் என்றது மெய். ஆனாலும் அவனே தலைவன். தலைக்கு உரிய மேல் இடத்தை, தலைக்கு உரிய ஆசாரத்தை சரீரம் கொடுக்க வேண்டியது. சருவேசுரனுடைய திருக் கற்பனைகளுக்கு மாறான காரியங்களில் அல்லாமல், மற்று எல்லாவற்றிலும் பெண்சாதி புருஷனுடைய சொல்லுக்கு அடங்கி, வேண்டாவெறுப்போடு அல்ல முழு மனதோடும் உண்மையான அன்போடும், ஆண்டவருக்கு அமைவது போல், அவனுக்கு அமைய வேண்டியது.

இந்த உண்மையான அன்பு மதுரகுணத்தைப் பிறப்பிக்கும். புருஷன் பெண்சாதிமாருடைய கடமைகளைப்பற்றி வேத வாக்கியமாய் எழுதிய அர்ச். சின்னப்பர் கணவனுக்கு அன்பையும் மனைவிக்கு மது குணத்தையும் கடமையாக வைத்த காரணம் என்ன? மனைவிக்கு அன்பு வேண்டாமா? கணவனுக்கு மது குணம் அவசியமில்லையா? இந்தக் கேள்விக்கு மறுமொழி என்னவென்றால், பெண்பாலார் அன்பிலே வாரப்பாடு உள்ளவர்கள். புருஷனில் அன்பு கூருங்குணம், கொடியானது மரத்தைத் தாவுவது போல அவனைத் தாவிச் சார்ந்திருக்கும் குணம், மனைவியிடத்திலே இயல்பாக உதித்துவிடும்.

ஆனால், இயல்பிலேதானே பெண்கள் நாக்கு வளைப்பிலே கூடினவர்கள். ஆனபடியால், சொல்லுவதையும் சொல்லும் இடத்தையும் அறிந்து சொல்லாமல், கதை வளர்த்துக்கொண்டிருப்பார்கள். இதினாலேதான் மனைவி புருஷனை பலமுறையும், தன் வகைப்பிழையான வார்த்தைகளால் கோபம் மூட்டுகிறவள் ஆகிறாள். அவன் முற்கோபியாய், துட்டனாய் இருக்கிறபடியால், தான் கடுகடுத்துப் பேசுகிறது என்ற நியாயம் பொருந்தாது. எவ்வளவு கடுங்கோபக்காரனான புருஷனும், எவ்வளவு கல் நெஞ்சத்துட்டனான புருஷனும் பெண்சாதி மதுரமாய்ப் பேசினால் இளகிவிடுவான். ''மெதுமையான பிரத்தி உத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ் சொற்களோ கோபத்தை எழுப்பிவிடும்'' என்றது வேதவாக்கியம் (நீதிமொ. 15; 1).

நல்ல மனைவியானவள் எவ்வித சண்டாளனான கணவனையும் தன் மதுர குணத்தினால் மாற்றி, சற்குணனாய், புனிதமுள்ளவனாய் வரப் பண்ணிப்போடுவாள். அர்ச். அகுஸ்தினாரின் தாயாகிய சுத்தமான மோனிக்கம்மாள் இப்படியே செய்தாள் என்று சரித்திரத்தில் வாசிக்கிறோம். அவளுடைய புருஷனான பத்திற்க்கு நெறி கெட்ட ஒரு துட்டன். மிருகத்தன்மை கொண்டவன். மோனிக்கம்மாள் ஒருபோதும் அவனை வாயினாற் கடிந்து கொள்ளாமல், தனது உத்தமமான, அமைச்சலான நல் நடக்கையே அவனைக் கண்டிக்கும்படி விட்டுவிடுவாள். அவனைக் கோபம் மூட்டத்தக்க வார்த்தை ஒன்றையும் சொல்லாமல், எப்போதும் மதுரமாய்ப் பேசி, அவனுடைய மனந்திரும்புதலுக்காக ஓயாமல் கண்ணீரோடும் பிரார்த்தித்துக்கொண்டு வருவாள். அவன் அநியாயமாய்க் கோபித்துக்கொள்ளும் வேளைகளில் மறுத்து ஒரு நியாயமுஞ் சொல்லாமல், அவன் ஆறியிருக்கும்போது தான் உள்ள நியாயத்தை எடுத்துக் காட்டுவாள். இதனால் சிங்கம் போல் இருந்தவனைப் பிற்காலம் செம்மறி போல் வரப் பண்ணுகிறவள் ஆனாள்.

புருஷன் சொற்கேட்டு நடக்க வேண்டியவளான மனைவி, வீட்டுக் கருமங்களை எல்லாம் தானே தலைவியாக நின்று பார்க்கக் கடமை பூண்டிருக்கிறாள். தமிழிலே ''மனைவி'' என்ற சொல்லுக்கு: மனைக்கு அதாவது வீட்டுக்கு உரியவள் என்று கருத்து. இல்லாள் என்றதும் அதே கருத்து உள்ள சொல். இல் என்றால் வீடு. இல்லாள் வீட்டுக்காரி, வீட்டைப் பராமரிக்கிறவள். இல்லத்தைத் துப்புரவாக வைக்கிறது, தட்டு முட்டுகள் பானை சட்டிகளைக் கவனமாய்ப் பாவிக்கிறது, வாய்க்கு இதமான சோறு கறி ஆக்குகிறது, தின்பண்டங்களுக்கு உரிய வரவு செலவுகளைக் கராக்கியாய்ப் பார்க்கிறது-இவை எல்லாம் மனைவியுடைய கடமைகள்.

பொருள் பண்டங்களைச் சிதறவிட்டு, வீண் செலவுகளால் வரும்படியை அழித்து, வீட்டை, அடுக்களையை, முற்றத்தை குப்பை கூளங்களால் அழுக்குப்பட வைத்துக்கொண்டிருக்கும் பெண்சாதியால் குடும்பத்திலே ஓயாமல் சச்சரவுகள் அடிபிடிகள் நடந்துகொண்டிருக்கும். பெண்சாதி வீட்டிலே இருந்து, வீட்டுக் கருமங்களை நன்றாய்ப் பார்த்துக்கொண்டுவந்தால் புருஷனோடு தேனும் பாலும் போல் வாழலாம். வீட்டிலே இருப்பதைப்பற்றிச் சொன்னேன். அயல் வீட்டுக்கு ஓடி ஓடிப்போய்க் கதைத்துக்கொண்டிருக்கும் பெண் நல்ல பெண்சாதியாய் இருக்க மாட்டாள். ''தாய்வீடு ஓடிய பெண்''ணைப் பற்றித் தமிழ்ப் பழமொழி சொல்லுகிற குறையை அறிவீர்கள். உத்தம பெண்சாதி தாய் வீட்டுக்குத்தானும் ஓடித்திரியாள். தன் வீட்டிலிருந்து, தன் வீட்டைப் பராமரித்து, தன் புருஷனை நேசித்து, அவனுக்கு ஊழியம் பண்ணுவதையே சகல பாக்கியமும் ஆகக் கொண்டு நடப்பாள்.

தங்கள் கடமைகளைச் சரியாய் அறிந்து, சரியாய் அனுசரிக்கிற புருஷனும் பெண்சாதியும் சருவேசுரனுக்கு ஏற்ற உத்தம குடும்பமாக வாழ்வார்கள். அவர்களுடைய வீடு பரலோக வீட்டின் சங்கடப்படலைபோல் இருக்கும், அவர்கள் அன்னியோன்னியமான அன்போடு ஒன்றித்திருந்து, ஒருங்கு கூடிச் சருவேசுரனைத் துதித்து, சரீரப் பாதுகாப்பிலும் ஆத்தும அலுவல்களிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நடந்து பரலோகவாழ்வு அடைவார்கள்.

ஆமென்.