இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் நமதாண்டவர், பூமியின் மீது தாம் வாழ்ந்த வாழ்வின் பரம இரகசியங்களை மீண்டும் நிகழச் செய்யும் முறை

கிறீஸ்துநாதர் பூமியில் இருந்தபோது அவர் செய்ததும், ஒரு சுருக்கமான வடிவத்தில் தினமும் நிகழ்த்தும்படி அவர் தம் அப்போஸ்தலர்களுக்கும், அவர்களது ஸ்தானாதிபதிகளுக்கும் கட்டளையிட்டதுமான மாபெரும் வழிபாட்டுச் செயல் இதுவே. 

"திவ்விய பலிபூசை நம் ஆண்டவரின் வாழ்வின் ஒரு சுருக்கமான தொகுப்பு: அவர் பூமியில் வாழ்ந்த முப்பத்து மூன்று ஆண்டுகளின் போது அவர் செய்தவற்றின் ஒரு குறுகிய, அரைமணி நேர மறுநிகழ்வு" என்று ஃபோர்னேருஸ் என்பவர் கூறுகிறார். 

இவ்வாறு, பூசை காண வாய்ப்புப் பெற்றுள்ள நாம், நமதாண்டவரின் காலத்தில் வாழ்ந்தவர்களைப் போல -- அல்லது அவர்களை விட அதிகமாக -- பாக்கியம் பெற்றவர்களே. ஏனெனில் அவர்களால் ஒரே ஒரு பூசையைத்தான் காணவும், கேட்கவும் முடிந்தது. அதுவே மிக நீண்டதாக இருந்தது. ஆனால் நாமோ, ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட பூசைகளைக் காணலாம், நம்முடைய பங்கிற்கு மிகக் கொஞ்சமே செலவு செய்து, கிறீஸ்துநாதரின் வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் அபரிமிதமான கனிகளில் நாமும் பங்கு பெறலாம். 

திவ்விய பலிபூசையில் நமதாண்டவர், பூமியின் மீது தாம் வாழ்ந்த வாழ்வின் பரம இரகசியங்களை மீண்டும் நிகழச் செய்யும் முறை மேலும் விளக்கும் விதமாக, நாம் பின்வரும் நிகழ்ச்சியை இங்கே விவரிப்போம். கானாப்ராய் நகரத்தின் துணை மேற்றிராணியாரான கேண்டிம்பிராத்தின் தாமஸ் என்பவரின் எழுத்துக்களில் இது காணப்படுகிறது.

1267-ம் ஆண்டு, துவேயைச் சேர்ந்த ஒரு குருவானவர், அர்ச். அமாத்துஸ் கோவிலில், உயிர்ப்பு விழா அன்று திவ்விய நன்மை வழங்கிக் கொண்டிருந்த போது, திவ்விய அப்பங்களில் ஒன்று தரையில் விழ விட்டு விட்டார். அவர் மலைத்துப் போகும் விதமாக, அந்த திவ்விய அப்பம் தரையிலிருந்து மேலே எழும்பி, அந்தரத்தில் நின்றது. அதைத் தம் கரத்தில் எடுத்த குருவானவர் பீடத்திற்கு அதை எடுத்துச் சென்று, அங்கே அதன் முன் முழந்தாளிட்டு, தாழ்ச்சியோடு அதை ஆராதித்து, கிறீஸ்துநாதருக்குச் செய்யப்பட்டு விட்ட இந்த அவசங்கைக்காக அவரிடம் மன்னிப்பை இரந்து மன்றாடினார். 

ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தை அவர் பக்தியோடு கண்டு தியானித்துக் கொண்டிருந்தபோது, அந்த திவ்விய அப்ப வடிவம் மறைந்து, ஓர் அழகிய குழந்தையின் வடிவம் தோன்றியதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். அவரது உணர்ச்சி எவ்வளவு பெரிதாக இருந்தது என்றால், கேவுதல்களையும், அழுகையையும் அடக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை.

ஆலயத்தில் இருந்த குருநிலையினர் நடந்தது என்ன என்று காணும்படி நெருங்கி வந்தார்கள். அப்போது அவர்களும் அந்த அழகிய குழந்தையைக் கண்டார்கள். இந்தக் காட்சியால் ஆழமாகத் தொடப்பட்டவர்களாக, அவர்கள் சந்தோஷக் கூக்குரல்களை எழுப்பத் தொடங்கினார்கள். 

அதன்பின் கூடியிருந்த விசுவாசிகள் தங்கள் பங்கிற்கு, அந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்காக பீடத்தை நெருங்கி வந்தார்கள். பீடத்தின் மீது கிறீஸ்துநாதரின் மெய்ப் பிரசன்னத்திற்கு இது மிக ஆணித்தரமான அத்தாட்சியாக விளங்கியது. ஆனால் இதோ, மற்றொரு அற்புதமான மாற்றம் நிகழ்ந்தது. 

குருநிலையினர் கண்டதை மக்களால் காண முடியவில்லை. ஏனெனில் அவர்கள் ஒரு மென்மையான குழந்தையைத் தான் கண்டிருந்தார்கள். ஆனால் இப்போது கிறீஸ்து அவர்களுக்கு முன் ஒரு மனிதனின் வடிவத்தில் தமது தேவ மகத்துவப் பேரொளியுடன் நின்றார். அச்சமும், பிரமிப்பும் அனைவரையும் ஆட்கொண்டது. இந்தக் காட்சியைக் காண ஆவலோடு திரண்டு வந்த மக்களைக் கொள்ள முடியாமல் ஆலயம் திணறியது. 

நம் ஆண்டவர் நீண்ட நேரமாக, இவ்வாறு தமது பரிசுத்த மனுஷீகத்தில் காணக்கூடிய விதமாக நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவர் தமது மனித வடிவத்தை மறைத்துக் கொண்டார். அந்தப் புதுமை அப்பம் தேவ நற்கருணைப் பேழையில் அந்தக் குருவால் சேமிக்கப்பட்டது.

நிகழ்ந்தது பற்றிய அறிக்கை எங்கும் பரவி, மேற்றிராணியாரின் செவிகளை அடைந்தது. இனி நடந்ததை அவர் விவரிக்கிறார். அவர் உடனே துவே நகரம் சென்று, ஆலயக் காப்பாளரிடம் தாம் கேள்விப்பட்டது உண்மைதானா என்று வினவினார். 

காப்பாளர் அவருக்கு மறுமொழியாக, "கிறீஸ்துநாதர் திவ்விய அப்பத்தில் ஏராளமான மக்களுக்குக் காணப்பட்டார் என்பது மட்டுமல்ல, மாறாக, அவர் தமது மனித உருவத்தில் இன்னும் கூட பலருக்குத் தோன்றுகிறார்" என்று கூறினார். 

இனி மேற்றிராணியாரின் வார்த்தைகளில் நடந்ததை விவரிப்போம் : "அப்போது, அதே காட்சியை நானும் காண வேண்டும் என்ற தகிக்கிற ஆசை என்னை ஆட்கொண்டது. அந்தப் புதுமை அப்பத்தை எனக்குக் காட்டும்படி நான் காப்பாளரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

நாங்கள் ஒன்றாக தேவாலயத்திற்குச் சென்றோம், ஆண்டவர் மீண்டும் தோன்றுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் கூட்டம் ஒன்று எங்களைப் பின் தொடர்ந்தது. காப்பாளர் அச்ச நடுக்கத்தோடு தேவ நற்கருணைப் பேழையைத் திறந்து, அந்தப் புதுமை அப்பத்தை வணக்கத்தோடு வெளியே எடுத்து, அதைக் கொண்டு மக்களை ஆசீர்வதித்தார். 

அப்போது, என்ன அதிசயம்! இதோ அவர்கள் எல்லோரும் உரத்த சத்தமாக, "சேசு! சேசு!'' என்று சத்தமிடத் தொடங்கினார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று நான் கேட்ட போது, "நம் ஆண்டவரும் இரட்சகருமானவரை நாங்கள் எங்கள் சரீரக் கண்களால் காண்கிறோம்" என்று அவர்கள் பதில் கூறினார்கள். ஆனால் நான் எதையும் காணவில்லை. திவ்விய அப்பத்தை மட்டுமே நான் கண்டேன். இதன் காரணமாக, நான் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானேன். ஏனெனில் என்னுடைய ஏதோ ஒரு பாவம், என் இரட்சகரைக் காண என்னைத் தகுதியற்றவனாக்கி விட்டது என்று நான் நினைத்தேன். 

ஆகவே, நான் என் மனச்சான்றை ஆராய்ந்தேன். ஆயினும் என்னை நான் கடிந்து கொள்ளக் கூடிய விசேஷமான பாவம் எதையும் நான் என்னில் காணவில்லை. ஆகவே கண்ணீர் மல்க, எனக்குத் தம்மைக் காண்பிக்கத் தயை புரியும்படி நான் நம் ஆண்டவரிடம் உருக்கமாக மன்றாடினேன். என் மன்றாட்டை அவர் ஏற்றுக்கொண்டார்; அங்குள்ள பலர் காணச் சலுகை பெற்றிருந்தது போல, ஒரு சிறு குழந்தையின் வடிவத்தில் அல்லாமல், முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் வடிவத்தில் நான் நம் ஆண்டவரைக் கண்டேன்.

இந்தத் தோற்றத்தின் அனைத்தையும் கடந்த பேரழகில் இரட்சகரை சற்று நேரம் தரிசித்துக் கொண்டிருந்த பின், அவர் எனக்குக் காட்டிய கருணையின் காரணமாக, என் இருதயம் சந்தோஷத்தாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த போது, இதோ, மற்றொரு மாற்றம் நிகழ்ந்தது. நான் எனக்கு முன்பாக, அவரைத் துயரங்களின் மனிதனாகக் கண்டேன். 

அவர் முள்முடி அணிந்தவராகவும், இரத்தத் தாரைகள் ஒழுகி, தமது திருமுகத்தை மறைத்ததால் உருக்குலைந்திருக்கிற முகத்தோடும் எனக்குத் தோன்றினார். இந்த மகா துயரமுள்ள காட்சி தந்த பரிதாப உணர்வால் மேற்கொள்ளப்பட்டவனாக, என் மீட்பரின் துன்பங்களைப் பற்றி நான் மனங்கசந்து அழுதேன்; எந்த அளவுக்கு உயிரோட்டமுள்ள விதத்தில் அவரது துன்பங்களை நான் உணர்ந்தேன் என்றால், அவருடைய திருச்சிரசில் சூட்டப்பட்டிருந்த முட்கள் என் சென்னிகளைக் குத்தித் துளைப்பது போல எனக்குத் தோன்றியது. 

அதே சமயத்தில் ஒரு குழப்பமான முணுமுணுப்பொலி கூடியிருந்தவர்களிடையே எழுந்தது. ஏனெனில் அவர்களில் ஒவ்வொருவரும் அதே கணத்தில் ஏதோ வித்தியாசமான ஒன்றைக் கண்டார்கள். சிலர் ஓர் அழகிய குழந்தையாக அவரைக் கண்டார்கள், வேறு சிலர் அழகியதொரு சிறுவனாகக் கண்டார்கள், இன்னும் சிலர் ஒரு சிறுவன் என்ற நிலையிலிருந்து வளர்ச்சி பெற்ற மனிதன் என்னும் நிலைக்கு அவர் மாறிக் கொண்டிருக்கும் விடலைப் பருவத்தில் அவரைக் கண்டார்கள். மேலும் சிலர் அவரது திருப்பாடுகளின் நேரத்தில் அவர் இருந்த தோற்றத்தில் அவரைக் கண்டார்கள். 

மக்களின் இருதயங்களைக் கலக்கிய உணர்வுகளையும், அவர்களது நெஞ்சங்களில் தூண்டப்பட்ட உணர்ச்சிகளையும், அவர்களுடைய கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்த் துளிகளையும் வாசகரின் கற்பனைக்கே நான் விட்டு விடுகிறேன். ஏனெனில் அவற்றை விளக்க வார்த்தைகளால் இயலாது."

இந்த அழகிய, உற்சாகமூட்டுகிற, ஆறுதல் தருகிற உண்மைக் கதை, இவ்வளவு நெகிழ்ச்சியூட்டுவதாகிய ஒரு காட்சியைக் காண சலுகை பெற வேண்டும் என்ற விருப்பத்தையும், இந்தப் பல்வேறு தோற்றங்களில் இரட்சகரை நம் சரீரக் கண்களால் காணும் வரப்பிரசாதம் நமக்கும் அருளப்பட வேண்டும் என்ற ஆசையையும் நம்மில் தூண்டாமலிருக்க முடியாது. 

அத்தகைய காட்சிகள் நமக்குக் கிடைத்தால், நாம் அனுபவித்திருக்கக் கூடிய மகிழ்ச்சியும் ஆறுதலும், இனிமையும் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! 

ஓ ஆண்டவராகிய சேசுவே, திவ்விய அப்பத்தில் சரீர வடிவத்தில் உம்மை நான் ஒருபோதும் கண்டதில்லை என்றாலும், நீர் அங்கே பிரசன்னமாயிருக்கிறீர் என்றும், பூமியின் மீது நீர் எடுத்துக் கொண்ட பல்வேறான தோற்றங்களில் நித்திய பிதாவுக்கு முன்பாக நீர் உம்மையே சமர்ப்பிக்கிறீர் என்றும் நான் உறுதியாக விசுவசிக்கிறேன்.