இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பலி பீடம் அர்ப்பணிக்கப்படுதல்

பவனி முக்கிய பீடத்தை அடைந்தவுடன், மேற்றிராணியார் பீடத்தில் உள்ள கல்லறை எனப்படும் பிளவில் க்றீஸ்மா தைலத்தைக் கொண்டு ஐந்து முறை சிலுவை அடையாளங்களை வரைகிறார். 

அதன்பின் அருளிக்கங்கள் உள்ள பெட்டியை அதனுள் வைத்து, அவற்றிற்குத் தூபமிட்டு, அந்த சேமிப்பறை அல்லது கல்லறையை ஏற்கனவே மந்திரிக்கப்பட்டுள்ள ஒரு கல்லாலும், இதற்காகத் தயாரித்து வைக்கப்பட்டுள்ள சாந்தாலும் மூடுகிறார். 

அதன்பின் அவர் பீடத்திற்குத் தூபமிட்டபின், தூபக்கலசத்தை ஒரு குருவிடம் கொடுக்கிறார். குரு பீடத்தைச் சுற்றி வந்து, அதன் ஒவ்வொரு பாகத்திற்கும் தூபமிடுகிறார். இதனிடையே மேற்றிராணியார் ஆயத்தக்காரர்களின் தைலத்தைக் கொண்டு பீடத்தின் மேற்பகுதியில் மத்தியில் ஒன்றும், நான்கு மூலைகளில் ஒவ்வொன்றுமாக மொத்தம் ஐந்து சிலுவை அடையாளங்களை வரைகிறார்; தண்ணீரை மந்திரிக்கும் போது பயன்படுத்திய அதே வார்த்தைகளைச் சொல்லி, அவர் அந்தச் சிலுவைகளுக்குத் தூபமிட்டபின், பீடத்தைச் சுற்றி வந்து, அதற்குத் தூபமிடுகிறார். 

குறிக்கப்பட்ட ஜெபமும், சங்கீதமும் சொல்லப்பட்ட பிறகு, அவர் மீண்டும் பீடத்தின் மீது ஐந்து சிலுவைகளை வரைந்து அதை அபிஷேகம் செய்தபடி, "இந்தப் பலிபீடம் ஆசீர்வதிக்கப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டு, மந்திரிக்கப்படுவதாக'' என்று சொல்கிறார். அதன்பின் அவர் மீண்டும் சிலுவைகளுக்கும், முழு பீடத்திற்கும் தூபமிடுகிறார். 

இந்தச் சடங்கு, குருநிலையினரால் சங்கீதங்கள் பாடப்பட, மீண்டும் ஒரு முறை செய்யப்படுகிறது. இறுதியாக மேற்றிராணியார் முழு பீடத்தின் மீதும் எண்ணெயும், க்றீஸ்மா தைலமும் வார்த்து, தம் கரத்தால் அதைப் பரப்புகிறார். அதன்பின் அவர் ஆலயத்தின் உட்புறத்தைச் சுற்றி நடந்து, சுவர்களின் மீது பன்னிரண்டு சிலுவைகளை வரைந்து அவற்றை அபிஷேகம் செய்து, "பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்துவின் பெயராலே இந்த தேவாலயம் அர்ச்சிக்கப்பட்டு மந்திரிக்கப் படுவதாக...'' என்ற ஜெபத்தைச் சொல்கிறார். 

அதே சமயம் ஒவ்வொரு சிலுவைக்கும் மும்முறை தூபமிடுகிறார். பீடத்திற்குத் திரும்பி வந்து, தூபத்தை மந்திரித்து, ஐந்து சிலுவைகள் வரையப்பட்டுள்ள இடங்களில் ஐந்து தூபத் துகள்களை இடுகிறார், மெழுகு வர்த்திகளைக் கொண்டு ஐந்து சிறு சிலுவைகளை வரைந்து, மெழுகு வர்த்திகளைப் பற்ற வைக்கிறார். அவை எரிந்து கொண்டிருக்கும் போது, அவர் குருநிலையினர் அனைவரோடும் முழந்தாளிட்டு, "வேனி க்ரேயாத்தோர் ஸ்பீரித்துஸ்" -"இஸ்பிரீத்துசாந்துவே, வாரும்" என்ற பாடலைப் பாடுகிறார். 

அதன்பின் மேலும் சில ஜெபங்களும், ஒரு முகவுரையும் சொல்லப்படுகின்றன. குருநிலையினர் பெற்றுக் கொள்ளப்பட்ட வரப்பிரசாதங்களுக்கு நன்றியறிந்த தோத்திரமாக 57-ம் சங்கீதத்தைப் பாடுகிறார்கள்; மேற்றிராணியார் பீடத்தின் மேற்பரப்புக்குக் கீழே க்றீஸ்மா தைலத்தால் சிலுவை அடையாளம் வரைந்து, மேலும் சில, அதிக நீளமான ஜெபங்களைச் சொல்கிறார். 

அதன்பின் அவர் உரொட்டியாலும், உப்பாலும் தம் கைகளைத் துடைத்தபின், தண்ணீரில் அவற்றைக் கழுவுகிறார். குருநிலையினர் லினன் துகிலால் பீடத்தைத் துடைத்து, ஒரு பீடத் துணியால் அதை மூடி, முடிந்த வரையிலும் அதை அழகுபடுத்துகிறார்கள். அதே வேளையில் சங்கீதங்களும், பதில் மொழிகளும் பாடப்படுகின்றன. முடிவாக, மேற்றிராணியார் பீடத்திற்கு மும்முறை தூபமிட்டு, ஆடம்பர பொந்திஃபிக்கல் பாடற்பூசையை நிறைவேற்றத் தொடங்குகிறார்.

ஒரு கோவில் மந்திரிப்புச் சடங்கில் பங்கு பெறும் யாரும், அதில் செய்யப்படும் பல்வேறு சடங்குகளையும், தைல அபிஷேகங்கள், ஆசீர்வாதங்கள், ஜெபங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கண்டு, தங்கள் வியப்பை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்காமல் உண்மையில் திணறித்தான் போவார்கள். 

இவை எல்லாவற்றிற்கும் நோக்கம் என்ன? மகா உன்னத சர்வேசுரனுக்கு அங்கு ஒப்புக்கொடுக்கப்படும் உன்னத, பரிசுத்த பலிக்குத் தகுதியான தேவாலயமாக அந்தக் கோவிலை ஆக்குவதும், பரம இரகசிய முறையில் கடவுளின் மாசற்ற செம்மறிப் புருவையானவர் தம்மையே பலியாக்கும் பீடங்களை அர்ச்சித்து, மந்திரிப்பதுமே இந்தச் சடங்குகளின் நோக்கமாகும்.

நம் தேவாலயங்கள் மற்றும் பீடங்களின் புனிதத் தன்மையையும், நாம் அவற்றிற்குத் தர வேண்டிய பெரும் வணக்கத்தையும் எந்தக் கிறீஸ்தவனும் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இது போதுமானது. 

சாலமோனின் தேவாலயம் கிறீஸ்தவ தேவாலயத்தின் வெறும் நிழலாகவும், மாதிரியாகவும் மட்டுமே இருந்தது. என்றாலும் யூதர்களாலும், புறஜாதியாராலும் அது எந்த அளவுக்கு மதித்து வணங்கப்பட்டது! இவ்வளவு ஆடம்பரமான முறையில் அர்ச்சிக்கப்பட்டுள்ள நம் தேவாலயங்கள் எந்த அளவுக்கு இன்னும் அதிகமாக நம்மால் மதித்து வணங்கப்பட வேண்டும்! 

3 அரசர் ஆகமத்தில் சாலமோன், தமது தேவாலயப் பிரதிஷ்டையின் போது, இரண்டு இலட்சத்து இருபதாயிரத்துக்குக் குறையாத காளைகளையும், ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டு கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார் என்று நாம் வாசிக்கிறோம். 

இம்மிருகங்கள் அனைத்தும் குருக்களால் கொல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பீடத்தின்மீது துண்டுகளாக வைக்கப்பட்டன. அரசர் உரத்த சத்தமாக ஜெபித்தபோது, வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, இந்தப் பலிமிருகங்களைச் சுட்டெரித்தது. தேவாலயம் முழுவதும் ஒரு மேகத்தால் நிரப்பப்பட்டது. ஆண்டவரின் மகிமை மேகத்தில் தோன்றியது. நெருப்பையும், ஆண்டவரின் மகிமையையும் கண்ட மக்கள், பேரச்சத்தால் நிரப்பப்பட்டவர்களாக, முகங்குப்புற விழுந்து ஆண்டவரை ஆராதித்தார்கள். 

அதன்பின் சாலமோன் அரசர் இஸ்ராயேலர் அனைவரும் காண உயரமாயிருந்த ஓர் இடத்தில் நின்று, மோட்சத்தை நோக்கித் தம் கரங்களை விரித்து: "கடவுள் மெய்யாகவே பூமியில் வாசம் பண்ணுவாரோ? வானங்களும், வானாதிவானங்களும் உம்மைக் கொள்ளக் கூடாதென்றால், நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” என்றார் (3 அரசர். 8: 27).

இதைக் கண்டு யார்தான் பிரமிப்படையாமலும், அந்தப் புனித தேவாலயத்தின் மகத்துவத்தைச் சரியானபடி புரிந்து கொள்ள தன்னால் முடியாது என்று உணராமலும் இருக்க முடியும்? என்றாலும், அந்த தேவாலயம் நம் தேவாலயங்களின் ஒரு மாதிரியும், சாயலுமாக மட்டுமே இருந்தது. 

அங்கே உடன்படிக்கைப் பேழை மட்டுமே இருந்தது. அதில் பழைய வேதப் பிரமாணத்தின் இரண்டு கற்பலகைகளும், ஒரு கூடை மன்னாவும், காய்ந்த பின்னும் பூத்துக் குலுங்கிய ஆரோனின் கோலும் மட்டுமே இருந்தன. 

யூதர்களின் பலிகள் வெறும் மிருகங்கள் மட்டுமே. அவை கொல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன. இவை தவிர, அப்பம், திராட்சை இரசம் போன்றவையும் காணிக்கைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டன. 

ஆனால் நம் தேவாலயங்களோ ஒப்பற்ற அளவாக மேலான ஆடம்பரமுள்ள முறையில் மேற்றிராணிமாரால் அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அவை பரிசுத்த எண்ணெயாலும், க்றீஸ்மா தைலத்தாலும் அபிஷேகம் செய்யப்படுகின்றன. அவை பரிசுத்த தீர்த்தத்தால் தெளிக்கப்பட்டு மந்திரிக்கப்படுகின்றன, தூபத்தால் தூபமிடப்படுகின்றன, அவை பல முறை சிலுவை அடையாளத்தால் அர்ச்சிக்கப்பட்டு, இறுதியாக, மகா பரிசுத்த திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுக்கப்படுவதன் மூலம் புனிதமாக்கப்படுகின்றன. 

உடன்படிக்கைப் பேழைக்குப் பதிலாக, நாம் நம் தேவாலயங்களில் தேவநற்கருணைப் பேழையைக் கொண்டிருக்கிறோம். அதில் மெய்யான பரலோக அப்பம், பீடத்தின் ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானம், கிறீஸ்துநாதரின் திருச்சரீரமும், திரு இரத்தமும் தொடர்ந்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 

சாலமோனின் தேவாலயத்திற்கு சங்கை செலுத்துவது சரியானது என்றால், கடவுள் தமது ஆள்தன்மையில் வாசம் செய்கிற, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நம் தேவாலயங்களுக்கு இன்னும் எவ்வளவு அதிக சங்கை மரியாதை செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்!