இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பூசையில் ஒப்புக்கொடுக்கப்படும் திவ்விய பலியின் விலையேறப்பெற்ற தன்மை

திவ்விய பலிபூசையின் உன்னத மகத்துவத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள அனைத்தும், பூசையில் மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படும் பலிப்பொருளின் பெரும் மதிப்பை எடுத்துரைக்கப் போதுமானது அல்ல. 

"எந்தக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்" (எபி. 8:3). ஆகவே, கிறீஸ்துநாதர் தமது பிதாவால் பிரதான குருவாக ஏற்படுத்தப்பட்டிருப்பது போல, அவர் அவசியமாக, பலியிடுவதற்கு ஒரு பலிப்பொருளையும் கொண்டிருக்க வேண்டும். 

கிறீஸ்துநாதர் பீடத்தின் மீது பலி ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது என்று அப்போஸ்தலர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அதைப் பற்றி நாமே சிந்தித்துக் கொள்ளுமாறு அவர் விட்டு விடுகிறார். ஆகவே, கிறீஸ்துநாதர், பிரதான குரு என்ற முறையில், பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கும் பலிப் பொருள் எது என்ற கேள்விக்கு நாம் வருவோம்.

இந்தப் பலிப்பொருள் கீழ்த்தரமான ஒரு காணிக்கையாக இல்லாமல், அளவற்றதும், விலை மதிக்கப்பட முடியாததுமான மதிப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அளவற்றவராகிய தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட அது தகுதியற்றதாக இருக்கும். ஏனெனில் பலி யாருக்கு ஒப்புக்கொடுக்கப் படுகிறதோ, அவருடைய மகத்துவ மேன்மைக்குத் தகுதியுள்ளதாக அந்தப் பலியின் உன்னத மகத்துவமும் இருக்க வேண்டும். 

ஒரு பேரரசனுக்குத் மதிப்பற்றதும், இழிவானதுமான ஒரு பரிசைத் தருபவன், அவனிடமிருந்து நன்றியறிதல்களைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவனுடைய கோபத்தையும் வெறுப்பையும்தான் சம்பாதித்துக் கொள்வான். 

இனி, சர்வ வல்லபரான சர்வேசுரன் பரலோகத்தையும், பூலோகத்தையும் சிருஷ்டித்து ஆண்டு நடத்துபவர் என்பதை நாம் அறிவோம். அவர் உலக அரசர்கள், பிரபுக்கள் அனைவரையும் விட பாரதூரமான அளவு உயர்ந்தவராக இருக்கிறார். அவரைப் பற்றி ஞானியானவர் சொல்வதைக் கேளுங்கள்: "உள்ளபடி உமது திருச்சமூகத்தில் பூலோகம் தராசில் சிறு கனத்தைக் கொடுக்கும் சிறு மணியைப் போலவும், பூமியில் விழும் அதிகாலைப் பனியின் ஒரு துளியைப் போலவும் இருக்கிறது" (ஞான. 11:23). 

உலகம் முழுவதுமே கூட கடவுளின் பார்வையில் ஒரு பனித்துளிக்கு நிகரானதாக இருக்கிறது என்றால், இந்த உலகம் முழுவதும் அவரது தெய்வீக மகத்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படும்படி தகுதியுள்ளதாக எதுதான் காணப்பட முடியும்? தெய்வீகமான ஒரு பலிப் பொருளைத் தவிர, மோட்சத்திலோ, இங்கே பூமியிலோ, கிறீஸ்துநாதர் மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்குத் தகுதியுள்ளதும், ஏற்புடையதுமான பலியாக வேறு எதைத்தான் ஒப்புக்கொடுக்க முடியும்?

ஆக, திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் சர்வ வல்லப தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் பலி என்ன என்று நினைக்கிறீர்கள்? இதைக் கேட்டு அதிசயப்படுங்கள்! 

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அளவற்றதாகிய தெய்வீகத்திற்குத் தகுதியுள்ளதாக, அவர் ஒரு பரிசை, ஒரே ஒரு பரிசைத்தான் கண்டுபிடித்தார். அது பரிசுத்தமும், மாசற்றதுமான அவரது புனித மனுஷீகம் மட்டுமே, அதாவது, அவரது ஆராதனைக்குரிய திருச்சரீரமும், திரு இரத்தமும், பூரண மாசற்றதனமுள்ளதாகிய அவரது திரு ஆத்துமமுமே. 

இதைப் பற்றி அர்ச். க்றிசோஸ்தோம் கூறுவதாவது: "கிறீஸ்துநாதரே குருவாகவும், பலிப்பொருளாகவும் இருந்தார், இருக்கிறார்; ஆவியின்படி அவரே குருவாகவும், மாம்சத்தின்படி அவரே பலிப்பொருளாகவும் இருக்கிறார். அவரே பலியிடுபவராகவும், பலிப்பொருளாகவும் இருக்கிறார்.'' 

அர்ச். அகுஸ்தினாரும் சங். 16-ன் மீதான தமது விளக்கத்தில் ஏறக்குறைய இதே காரியத்தைக் கூறுகிறார்: "கிறீஸ்து மட்டுமே குருவாகவும், அதே சமயம் பலிப் பொருளாகவும் இருந்தார், ஏனெனில் அவர் வேறெதையுமன்றி, தம்மைத்தாமே பலியிட்டார்' என்கிறார் அவர். 

ஏனெனில் பரலோக, பூலோகத்தில் அடங்கிய அனைத்து திரவியங்களும் ஒன்று சேர்ந்தாலும், மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்குப் பலியிடப்படத் தகுதியுள்ளதாக ஒரு பலிப் பொருளும் காணப்படவில்லை.

கிறீஸ்துநாதரின் புனித மனுஷீகம் தெய்வீக சர்வ வல்லபத்தின் அனைத்திலும் மேலானதும், அனைத்திலும் உன்னதமானதுமான கைவேலையாக இருந்தது. இதை சர்வேசுரனுடைய திருமாதாவே அர்ச். பிரிஜித்தம்மாளுக்குப் பின்வரும் தெளிவான வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்: "இருப்பவையும், இது வரை இருந்துள்ளவையுமான சகல பொருட்களிலும், கிறீஸ்துநாதருடைய புனித மனுஷீகத்தைப் போல மதிப்புமிக்கதும், விலையேறப் பெற்றதும் வேறு எதுவுமில்லை ." 

ஏனெனில் கடவுளின் அதியபரிமிதத் தாராளமுள்ள திருக்கரம், அவரது திருச்சுதனின் மனித சுபாவத்தை, இன்னும் அதிகப் பெரியதும், மேன்மையுள்ளதுமாகிய எதுவும் அதில் சேர்க்கப்பட முடியாது என்னும் அளவுக்கு, வரப்பிரசாதம், புண்ணியம், அர்ச்சியசிஷ்டதனம், ஞானம் -- ஒரே வார்த்தையில் கூறுவதானால், பூரண உத்தமதனம் -- ஆகியவற்றின் செல்வமிக்கதும், எண்ணப்பட இயலாததுமான பொக்கிஷங்களால் நிரப்பினார். 

இதற்குக் காரணம், அபூர்வமானவையும், விலைமதிக்கப்பட முடியாதவையுமான கொடைகளைப் பொழிவதில் கடவுளின் வல்லமை வரம்புக்குட்பட்டது என்பது அல்ல, மாறாக, கிறீஸ்துநாதரின் மனித சுபாவம் தன்னிடமுள்ளவற்றை விட அதிக மேலான எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதுதான். 

மகா பரிசுத்த தேவ அன்னை நம் கற்பனைக்கும் எட்டாத அழகையும், பரிசுத்ததனத்தையும், உத்தம மகத்துவத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள், என்றாலும் கிறீஸ்துநாதருடைய மகா பரிசுத்த மனுஷீகத்தோடு ஒப்பிடும்போது, அவர்கள் நண்பகல் சூரியனுக்கு முன் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீப்பந்தமாக மட்டுமே இருக்கிறார்கள். 

இந்த மகா உன்னத மகத்துவத்தின் காரணமாக, கிறீஸ்துநாதருடைய பரிசுத்த மனுஷீகமானது பூமியின் மீது அழிந்து போகும் பக்தியுள்ள மனிதர்களால் மட்டுமல்ல, மாறாக, பரிசுத்த சம்மனசுக்களாலும் ஆராதிக்கப்படுகிறது; மனுக்குலத்தின் சிரசானவர் என்ற முறையில், கிறீஸ்துநாதர் வேறு எந்த சிருஷ்டியையும் விட பாரதூரமான அளவுக்கு அப்பாற்பட்டிருக்கும் விதத்தில், தமது மனித சுபாவத்தை எவற்றைக் கொண்டு உடுத்தியிருக்கிறாரோ, அந்த உயர்த்தப்பட்ட வரப்பிரசாதங்கள் மற்றும் உத்தம இலட்சணங்களின் பலனாக, மோட்சத்தில் அவரது மனித சுபாவமும் இடைவிடாத ஆராதனைக்குரியதாக, கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்பட்டதாக, இருக்கிறது.