இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மோட்சத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை விடவும் ஒப்பற்ற அளவுக்கு மிக அதிகமான மகிழ்ச்சி ஒரே ஒரு பூசையின் காரணமாக உண்டாகிறது

கிறீஸ்துநாதர் அதிசயமானதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான ஒரு முறையில் இந்த அழியக்கூடிய மனித வடிவங்களை எடுத்துக் கொண்டது போலவே, ஒவ்வொரு பூசையிலும் அவர் தமது வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் பரம இரகசியங்கள் அனைத்தையும், பூமியில் அவை நிகழ்ந்த விதமாகவே பிதாவாகிய சர்வேசுரனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கும், தமது திவ்விய மாதாவுக்கும், சகல சம்மனசுக்கள் மற்றும் அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் காட்டி, அவர்களை அளவில்லாதபடி திருப்திப் படுத்துகிறார். 

இவ்வாறு, உலகில் நிகழும் வேறு எந்த ஒரு நற்செயல் அல்லது வழிபாட்டுச் செயலின் காரணமாக, மோட்சத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை விடவும் ஒப்பற்ற அளவுக்கு மிக அதிகமான மகிழ்ச்சி ஒரே ஒரு பூசையின் காரணமாக அங்கே உண்டாகிறது.

இந்த மகிழ்ச்சிக்கு கிறீஸ்துநாதரின் வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் உயிரோட்டமுள்ள மறு நிகழ்வின் காட்சி மட்டுமல்லாமல், பூசையில் தெய்வீகத்திற்குப் பரிசுத்த மனுஷீகம் செலுத்தும் சங்கை மரியாதையும் காரணமாகிறது. 

ஏனெனில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசையிலும், தமது தெய்வீகத்தின் சர்வ வல்லமையோடும் தமது மனுஷீகத்தின் முழு பலத்தோடும், தமது மனித இருதயத்தின் முழு வலிமையோடும், கிறீஸ்துநாதர் ஆராதனைக்குரிய தமத்திரித் துவத்திற்கு சங்கை மரியாதையும், துதிபுகழ்ச்சியும், நேசமும், ஆராதனையும், மகிமையும் செலுத்துகிறார். 

எவ்வளவு பக்திக்குரியதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான ஒரு முறையில் அவர் இதைச் செய்கிறார் என்றால், தெய்வீகத்திற்கு மோட்சத்தில் உள்ள சகல சம்மனசுக்களும், பூமியிலுள்ள சகல அர்ச்சியசிஷ்டவர்களும் செலுத்தும் மகிமை, கிறீஸ்துநாதர் அந்த தெய்வீகத்திற்குச் செலுத்துகிற மகிமைக்கு அளவற்ற விதமாகத் தாழ்ந்திருக்கிறது. 

இவ்வாறு, திவ்விய பலிபூசை என்பது எவ்வளவு உயர்ந்த வழிபாட்டுச் செயல் என்பதையும், நாம் பூசை செய்யும், அல்லது காணும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு அதிகமாக கடவுளின் தயவைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்த அத்தியாயத்தை முடிக்குமுன், பூசையிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய மாபெரும் ஆதாயத்தைப் பற்றியும், ஞான அனுகூலங்களைப் பற்றியும் நாம் சிந்திப்போம். 

நம் திவ்விய இரட்சகர், தாம் பூமியில் உழைத்து வந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில், பேறுபலன்களின் ஒரு மிக விஸ்தாரமான திரட்டு ஒன்றைச் சேர்த்து வைத்தார். அதைத் தமக்காக அல்லாமல், தம் மக்களாகிய நமக்காக சேர்த்து வைத்தார். 

அவருடைய வேலைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை . இதற்கு சாட்சியமாக, "என் பிதாவானவர் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்" (அரு. 5:17) என்று அவரே கூறுகிறார். 

அவர் தொடர்ந்து இப்படி வேலை செய்து வருவது, இன்னும் அதிகப் பேறுபலன்களை சம்பாதிப்பதற்காக அல்ல, மாறாக, தாம் நமக்காகச் சம்பாதித்து வைத்துள்ளதைப் பெற்றுக்கொள்ள நம்மைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவதற்காகவே. இதற்காக, நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசையிலும் அவர் தம் பரிசுத்த வாழ்வைப் புதுப்பிக்கிறார். 

ஒவ்வொரு பூசையிலும், தாம் செய்து முடிக்க முப்பத்து மூன்று ஆண்டுகள் பிடித்த காரியங்களைப் புதிதாக அவர் நிகழ்த்துகிறார். நித்திய பிதாவோடு நாம் மறு ஐக்கியமாகும்படி செய்வதற்காக, இதை அவர் அவருக்குக் கையளிக்கிறார். இதனால் கடவுள் மிக மகிழ்ச்சியடைகிறார். 

நம் மீறுதல்களைப் பற்றிய அவரது கடுங்கோபம் தணிக்கப்படுகிறது. சேசுநாதர் நம் கடன்களைத் திருப்பிச் செலுத்துமாறு, கடவுளுக்குத் தம் பேறுபலன்கள் முழுவதையும் ஒப்புக்கொடுக்கிறார். நாம் பூசை காணும் போது, அதன் மூலம் நாம் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படியாக, நம்மால் எவ்வளவு அதிகமாகப் பெற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு பேறுபலன்களை அவர் நம்மீது பொழிகிறார்.

ஆகவே, கிறீஸ்தவனே, உனக்காக உழைத்து, உனக்காக மிகச் செழிப்பான திரவியங்களைச் சேர்த்து வைத்திருக்கும் உன்னுடைய இந்த உண்மையான நண்பருக்கு நன்றி செலுத்து. நீ ஏற்றுக்கொள்ளப் படுமாறு இந்தப் பொக்கிஷங்களை ஒப்புக்கொடுப்பதிலும், அவற்றை உன் மீது இலவசமாகப் பொழிவதிலும் அவர் உனக்குக் காட்டுகிற மாபெரும் சிநேகத்தை ஒப்புக்கொள். 

இந்தச் செல்வ வளங்களின் ஒரு பெரும் பங்கை உனக்குரியதாக்கிக் கொள்ளுமாறு, முடிந்தால் தினமும் பூசை காண முயற்சி செய். உன் ஆன்மாவுக்காக எவ்வளவு எளிதாக செல்வம் சேர்க்க உன்னால் முடியுமோ, அவ்வளவு எளிதாக, உலக செல்வங்களை உன்னால் சேர்க்க முடிந்தால், அப்போது, உடல் வேதனைகளைப் பற்றியோ, நேர விரயத்தைப் பற்றியோ நீ கவலைப்பட மாட்டாய். 

அப்படியிருக்க, நித்தியப் பொக்கிஷங்களைப் பொறுத்த வரை நீ ஏன் இவ்வளவு அக்கறையற்றவனாகவே நிலைத்திருக்கிறாய், ஏன் உன் அசட்டைத் தனத்தால் உன் பிடியிலிருந்து அவை நழுவிவிட அனுமதிக்கிறாய்? 

கடவுள் உன் குருட்டுத்தனத்தை ஒளிர்வித்து, உன் சோம்பலை விழிப்புள்ள அக்கறையாக மாற்றி, உண்மையான பக்தியார்வத்தைக் கொண்டு உன்னை ஏவித் தூண்டுவாராக் இந்த மகிழ்ச்சியான மாற்றம் நிகழும்போது, நீ அடிக்கடியும், உன் ஆன்மாவின் ஆதாயத்திற்காகவும் பூசை காண்பாய்.