இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரணம் இனிமேல் மாற்றக் கூடாதபடி கட்டிவிடும் முடிவில் பயங்கரம்.

மரணத்திலுள்ள சந்தேகத்திலேயும் பயங்கரம்; அது ஒறுத்துப் பாராமற் செய்யும் அழிவிலேயும் பயங்கரம். ஆனால் ஆகப் பெரும் பயங்கரத்துக்குக் காரணம் என்னவானால், மரணமானது, இனி ஒரு போதும் நம்மால் மாற்றிக்கொள்ளக் கூடாமல், நமது கதிக்கு முடிவு கட்டிவிடுவதுதான்.

"மனிதன் ஒரே தரம் மரிக்க வேணும் என்று... நியமிக்கப் பட்டிருக்கிறது'' என்ற வேத வாக்கியத்தை ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் “செத்தால் பிழைக்க அறியான்''. நமக்குச் சாவு ஒன்றே ஒன்றுதான். அந்தச் சாவுதான் நமது கதியையும் தீர்த்து முடிவு கட்டிவிடும். சாகும் வேளை சருவேசுரனுக்குப் பிள்ளையாய், சுத்தமாய் இருந்தால், நித்திய மோட்ச பாக்கியம். சாகும்வேளை பிசாசுக்கு அடிமையாய், பாவத்தோடு இருந்தால், ஊழியுள்ள கால நரக வேதனை. இத் தீர்வை மாறாத தீர்வை. செத்தவன் மறுபடி உயிர்த்து வந்து தான் செய்த பிழையை மாற்றிக்கொண்டு பெயர்ந்து ஒருக்காற் சாக முடியாது.

''மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும் '' (பிரசங். 11; 3) புண்ணியவானாய்ச் செத்தவன் புண்ணியவான் தான்; பாவியாய்ச் செத்தவன் பாவிதான். இனி மாற்றம் இல்லை. அல்லாமலும் சீவியத்துக்கு ஏற்றதே மரணம். சரிந்த பக்கத்துக்குத் தானே மரம் விழும். கிழக்கே சரிந்த மரம் மேற்கே விழாது. சீவியகாலத்திலே மனந்திரும்பாதவர்கள் மரணவேளையிலும் மனந்திரும்புவது இல்லை.

தாம் எத்தனையோ அற்புத சகாயங்களினால் அருட்டி அருட்டி, எத்தனையோ புத்திமதிகளினால் ஏவி ஏவிக்கொண்டு வந்தும், தேடித் தேடித் திரிந்தும் தமக்குச் செவிகொடாமல் மூர்க்கராய் நின்ற யூத சனங்களைப் பார்த்து ஆண்டவர் வசனிப்பார்: "நீங்கள் என்னைத் தேடுவீர்கள், தேடியும் உங்கள் பாவத்திலேதான் சாவீர்கள், நான் போகிற இடத்துக்கு வர உங்களாற் கூடாது'' என்றார் (அருளப். 8; 21). மனந்திரும்புவது என்றால் நினைத்த நினைத்த உடனே அடையக்கூடிய ஒரு ஆத்தும நிலை அல்ல. அது ஒரு பரம வரம். சருவேசுரனுடைய விசேஷ அருள் இல்லாமல், ஒரு பாவி மனந்திரும்புவது ஒருபோதுங் கூடாது. அந்த அருளுமோ ஒரு அற்புதமான அருள். எவ்விதமான அற்புதம் என்று எண்ணுகிறீர்கள்? சின்னஞ் சிறு அற்புதம் அல்ல.

அர்ச். சின்னப்பர் இஸ்பிரீத்துசாந்து சருவேசுரனின் வாக்கியமாக எழுதி வைத்ததைக் கேளுங்கள் : “எவர் கிறீஸ்துநாதரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரோ அந்தத் தேவ வல்லமையை விசுவசிக்கிற நீங்களும் அந்த விசுவாசத்தினால் அவரோடு கூட உயிர்த்தெழுந்தவர்களாகிறீர்கள்'' ( கொ லோ. 2; 12). தேவ குமாரனை மரித்தவர்களிடத்திலிருந்து உயிர்ப்பித்தது அற்புதங்களின் மேலான அற்புதம்; தேவ வல்லமையின் விசேஷ செயல். நம்மைப் பாவ மரணத்திலிருந்து எழும்பப் பண்ண அப்படிப்பட்ட ஒரு மகா அற்புதம் வேண்டுமாம்.

இந்த அபூருவமான அற்புதத்தை, மகத்தான அற்புதத்தை சருவேசுரன் ஆருக்குச் செய்வார்? சீவிய காலமெல்லாம் தம்மை அவமதித்துக் கொண்டு, சீவியகாலமெல்லாம் தமக்கு நன்றிகேடு இழைத்துக் கொண்டு வந்த ஒருவனுக்குச் செய்வாரா? மூர்க்கமாய் நிற்கிற பாவிகளின் இருதயத்தைக் கடினப்படுத்துவோம் என்று அல்லவோ அவர் திருவுளம் பற்றியிருக்கிறார் (யாத். 7; 3 )! அப்படிப் பட்ட பாவியின் இருதயத்தைக் கடைசி நேரத்தில் இளகப்பண் ணுவார் என்று எப்படி நம்பியிருக்கலாம்? இது எவ்வளவு பயங்கரமான நிலைபரம் என்று பாருங்கள்.

பாவியானவன் சாகும் வேளையில் மனந்திரும்ப நினைத்தாலும் மனந்திரும்புதலின் வரம் அவனுக்கு அருளப்படாமற் போகக் கூடும். கண்ணீர் விட்டு அழுதாலும் மனஸ்தாபம் இல்லாமற் போகக் கூடும். ''சருவேசுரனுக்கு ஏற்ற துக்கம் நிலைமாறாத, இரட்சணியத்துக்கு ஏற்ற மனஸ்தாபத்தை உண்டாக்கும். உலகத்துக்கு உரிய துக்கமோ மரணத்தை உண்டாக்கும்'' என்றது வேத வாக்கியம் (2 கொரிந். 7; 10).

இப்படியே ஆண்டவரைக் காட்டிக்கொடுத்த சதிமானத் துரோகியும் துக்கப்பட்டான். துக்கப்பட்டும், மனந்திரும்பவில்லை. ஆண்டவரை மும்முறை மறுதலித்த பேதுருவானவர் துக்கப்பட்ட போது அவருக்கு மனந்திரும்பும் வரம் கிடைத்தது. யூதாஸ்கரியோத்து துக்கப்பட்டபோது அந்த வரம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ''நான் குற்றம் இல்லாதவரைக் காட்டிக் கொடுத்தேனே '' என்று சொல்லிக்கொண்டு, அடங்காத கிலேசத்தினால் ஓடிப் போய் பப்பரப் புளியிலே நான்று கொண்டு இறந்தான். அவனுடைய வயிறு வெடித்து குடல் புறப்பட்டுச் சரிந்தது. ஆத்துமமோ மனந்திரும்பாத பாவிகளின் உபத்திரவ இருப்பிடத்துக்குப் போயிற்று.

இப்படியே, உள்ள நாள் எல்லாம் சருவேசுரனுக்கு மாறாய் நடந்து கொண்டு வந்து கடைசி நேரத்தில் மனந்திரும்பலாம் என்றிருந்தவன், தன் சீவிய காலம் தன் கையிலிருந்து பறிந்து போவதையும், தனக்கோ மனஸ்தாப வரம் கிடையாமல் இருப்பதையும், தனக்கு இனி வேறொரு சீவிய காலம் இல்லாமல் மரணத்தோடே எல்லாம் தலைக்கட்டி விடப்படுவதையும் காணும் போது கொள்ளும் பயங்கரத்துக்கு இணை இல்லை. அதை உங்களுக்கு எடுத்துக் காட்ட போதிய உவமை இல்லை. அந்தப் பயங்கரம், தானே தனக்கு இணையானது. அது வெளியே தோற்றாத ஒரு பயங்கரம். ஆகையால், எந்த உவமையாலும் அதை விளக்கக் கூடாமல் இருக்கும். வெளியே தோற்றாதது என்றேன்.

எத்தனை பேர் வெளிக்கு நல்ல மரணம் அடைகிறவர்கள் போலக் காணப்பட்டும் நித்திய கேட்டுக்கு உரிய முடிவை அடைகிறார்கள்! மரணப் படுக்கையிலே குருவானவர் வந்து அவஸ்தைப் பூசுதல் செய்வதையும், சவத்தை வெகு துக்க ஆடம்பரங்களோடும் திருச்சபைப் பாடல்களோடும் கோவிலுக்குக் கொண்டுபோய்க் கடைசிச் சடங்குகள் எல்லாம் சரிவர நிறைவேற்றுவதையுங் கொண்டு, நாம் ஒரு முடிவும் சொல்லத்தக்கதாய் இராது. பல முறையும், அவஸ்தைப் பூசுதலும் சாச்சடங்குகளும் இனசனர்களாலே சாத்திரப்படிக்கு நிறைவேற்றப்படுகிறது என்றதையும் ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

கோவிற் சாமானும் சங்கையான அடக்கமும் இல்லாமற் போய்விடுமே என்றதற்காக குருவானவரை அவஸ்தைப் பூசுதலுக்குக் கொண்டுவரத் துரிதப்படுகிறவர்களும் உண்டு. சாச்சடங்கெல்லாம் சட்டவட்டமாய் நடந்த போதிலும், இறந்தவன் மெய்யாக மனந்திரும்பாமல், அதாவது நன் மரண வரம் என்ற கடைசிப் பிரசாதத்தை அடையாமல், இறந்திருக்கக் கூடும். நாம் இங்கே சவத்தைப் பூசித ஆசாரத்தோடு பூமதானம் பண்ண, அங்கே ஆத்துமம் நெருப்புக் கிடங்கிலே புதைக்கப்படக் கூடும். எல்லாம் முடிந்ததே! அந்த ஆத்துமத்தின் கதி நித்தியத்துக்கும் முத்திரையிடப்பட்டதே! இது எவ்வளவு அங்கம் பதறி உளம் நடுங்கச் செய்கிற ஒரு நினைவு!

பிரியமானவர்களே, இதுவரைக்கும் நான் எடுத்துச் சொன்ன மூன்று விதமான பயங்கரமும் உங்களுக்கு வராமல் நீங்கள் பாக்கியமாய்ச் சீவித்து பாக்கியமாய் மரிக்க விரும்பினால், இன்றைக்கே உலக ஆசைகளையும் சரீர இச்சைகளையும் வீண் சங்கை வெகுமானங்களையும் வெறுத்து சருவேசுரனுக்கு நல்ல ஊழியம் பண்ணத் தொடங்கிக்கொள்ளுங்கள். மரணம் நிச்சயம் ஆகையால், அதைப் பற்றிய நினைவைப் பின்னுக்குப் பின்னுக்குப் போட்டு வையாமல், ஒவ்வொரு நாளும் அந்த நினைவோடு நடந்து ஆயத்தமாயிருங்கள்.

நடக்கையிலோ இருக்கையிலோ கிடக்கையிலோ பிறரோடு
நான் நீ என்ன 
உடற்றலிலோ உண்கையிலோ உடுக்கையிலோ உயிர் போவது
உணரேன் மாய 
விடக்கையிலோடு உறவாக்கி அறம் புரியேன் பொதுத் தீர்வை
விளம்புங் காலம் 
இடக்கையிலோ வலக்கையிலோ நிற்பவனாவேன் கருணை
எம் பிரானே 

என்று பயத்தோடு இருங்கள். உலகத்தில் இருந்தாலும் உங்கள் நடபடி எல்லாம் பரலோகத்தை நாடி இருக்கும்படியாக நடந்து கொள்ளுங்கள். உலக பொருட்களையும், சரீரத்தின் விலக்கப்படாத இன்பங்களைத் தானும் பற்றில்லாத விதமாய்ப் பாவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

இவைகளோடு நீங்கள் 'ஓடும் புளியம்பழமும் போல'' ஊடாடி வர வேண்டியது. எல்லாத்தையும் தேவ தோத்திரத்துக்காக ஆண்டு அனுபவிக்கிறது ஒழிய, அவைகளிலே நீங்கள் அமிழ்ந்தி முக்குளித்துப் போகப்படாது. செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பித் தவத்துக்கு உரிய கிரியைகளைச் செய்து புண்ணியஞ் சம்பாதிப்பதைப் பின் போட வேண்டாம்.

நாளை நாளை என்று சொல்லிக் கொண்டு வந்தால் அந்த 'நாளை '' ஒரு நாளும் வராது. நாமும் காத்திராத மரணத்துக்கு உள்ளாகி, இந்தப் பிரசங்கத்திலே காட்டின மூவித பயங்கரத்துக்கும் ஆளாகி விடுவோம். நன்மையான காரியம் ஒன்றையும் நாளைக்கு என்று வைக்கப்படாது. நாளை நம்முடையது அல்ல, இன்று தான் நம்முடையது. அஞ்ஞான சாஸ்திரிகளும். இதை வற்புறுத்தியிருக்கிறார்கள்.

நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும்

என்றது ஒரு தமிழ் வாக்கியம். பின் போட்டு வைத்தாலோ மனந் திரும்பாமல் மரிக்கிற பெரும் ஆபத்து, நித்தியமும் அழுதழுது புலம்ப வேண்டிய ஆபத்து வந்து சூழும்.

பின் போட்டு வைக்கப் பண்ணுவதெல்லாம் பிசாசின் தந்திர சூழ்ச்சியான சோதனை. இந்தப் படா வஞ்சனையான துர்ப்புத்திக்கு இணங்காமல், இன்றைக்கே மனந்திரும்பி ஆண்டவருடைய திருப்பாதத்தை அடையக் கடவோம். அளவில்லாத இரக்கமுள்ள பிதாவானவர் நம்முடைய பாவங்களைப் பொறுத்து, நாம் தம்மை நேசித்து சேவிக்கிறதற்கு வேண்டிய வரப்பிரசாதங்களை ஏராளமாய்த் தந்து, நம்மைத் தம்முடைய பாதைகளிலே நடத்தி, நமக்குப் பயங்கரம் இல்லாத நல்ல மரணந் தந்து, ஒருநாள் தமது திருமுக தரிசனத்தையும் அளித்தருளுவார்.

ஆமென்.