இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதர் ஏன் திவ்விய பலிபூசையில் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார் என்பதற்கான காரணம்

கிறீஸ்துநாதர் எதற்காகத் தமது கசப்பான திருப்பாடுகளை அனுபவித்தார் என்பதற்கான காரணம், சேசுசபைக் குருவாகிய சுவாமி செஞ்ஞேரியின் பின்வரும் வார்த்தைகளை விட சிறப்பாக வேறு எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்பட இயலாது: 

'கிறீஸ்துநாதர் பூலோகத்தில் இருந்தபோது, தாம் கசப்பான பாடுகளை அனுபவித்த பிறகும், பல கோடிக்கணக்கான மனிதர்கள், அவர்களுக்காகத் தாம் விலைக்கு வாங்கிய இரட்சணியத்தில் பங்குபெற மாட்டார்கள் என்பதையும், அதன் காரணமாக, அவர்கள் நித்திய அழிவுக்குச் செல்வார்கள் என்பதையும், தமது தெய்வீக சர்வ வல்லமையால் அவர் தீர்க்கதரிசனமாகக் கண்டார். 

நம் மூத்த சகோதரராகிய அவர் நம் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பிலும், நம் இரட்சணியத்தைப் பற்றிய தமது தாகத்திலும், அவர் தம்மையே தமது பரலோகப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து, தாம் சிந்திய கண்ணீர்த் துளிகளும், தமது இரத்த நாளங்களிலிருந்து பாய்ந்த திரு இரத்தமும், தமது பற்றுதலுள்ள ஜெபங்களும், பெருமூச்சுகளும் தேவ நீதியின் கடுமையைத் தணித்து, இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் ஆன்மாக்கள் சேதமாய்ப் போவதைத் தடுக்க ஒரு வழியை ஏற்படுத்தும்படி தேவ தயவையும், நேசமுள்ள கருணையையும் தூண்டும்படியாக, மூன்று மணி நேரம் மட்டுமல்ல, மாறாக கால முடிவு வரையிலும் சிலுவையில் தொங்கி வேதனைப்படத் தாம் சித்தமாயிருப்பதாகத் தம் பிதாவுக்கு முன்பாக அறிக்கையிட்டார்."

கிறீஸ்துநாதர் உலக முடிவு வரையிலும் சிலுவையின் மீது தொங்கிக் கொண்டிருக்கத் தயாராக இருந்ததாக, அர்ச். பொனவெந்தூரும் தமது "தியானங்களில் கூறுகிறார். மற்ற வேத வல்லுனர்களும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும், உலகம் முழுவதற்காகவும் தாம் அனுபவித்த எல்லாவற்றையும் ஒரே ஒரு பாவியின் நிமித்தமாகக் கூட தாம் மீண்டும் முழுவதுமாக அனுபவிக்கத் தயாராக இருப்பதாக நமதாண்டவரும் அநேக அர்ச்சியசிஷ்டவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

இறுதி நாள் வரையிலும் சிலுவையின் மீது தமது திருப்பாடுகளை நீட்டிக்க இரட்சர் கூறிய திட்டத்தை நித்தியப் பிதா ஏற்றுக் கொள்ளவில்லை; மூன்று மணி நேர சிலுவைப் பாடுகள் அளவுக்கு மீறி, மனிதனை இரட்சிக்கப் போதுமானவையாக இருந்தன; அனைத்தையும் காண்பவராகிய அவர், கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் பேறுபலன்களில் பங்குபெறத் தவறியவன் யாராயினும், தன் ஆத்தும இழப்பிற்குத் தன்னை மட்டுமே குற்றம் சொல்ல முடியும் என்பதை அறிந்திருந்தார்.

கிறீஸ்துநாதர் மனிதனின் மீது கொண்ட மாபெரும் நேசத்தின் வேகத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, பிதாவானவரின் இந்தத் தீர்ப்பு அதை மேலும் அதிகரிக்கவும், நித்திய சாபத்திலிருந்த பரிதாபத்திற்குரிய பாவிகளாகிய நம்மை மீட்டு இரட்சிப்பதுமாகிய அவரது ஆசையை பலப்படுத்தவும் மட்டுமே உதவியது. 

ஆகவே, அவர் தமது தெய்வீக ஞானத்தில், தமது மரணத்திற்குப் பின்பும் பூமியின் மீது தங்கியிருக்கவும், தமது இரட்சணியப் பாடுகளைத் தொடரவும், சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது தாம் செய்தவாறு, மனிதனுக்காக இடைவிடாமல் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருக்கவும் அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். இந்த அற்புதமான வழி என்ன? 

அதுதான் திவ்விய பலிபூசை. அதில் சிலுவையின் மீது அவர் பரம இரகசிய முறையில் அனுதினமும் தொடர்ச்சியாகப் பாடுபடுகிறார், நமக்காகத் துன்பப்படுகிறார், நமக்காக மன்றாடுகிறார், தடுக்கப்பட முடியாத அவசரத்தோடு நம் நிமித்தமாக வரப்பிரசாதத்திற்காகவும், இரக்கத்திற்காகவும் கடவுளை மன்றாடுகிறார்.

திவ்விய பலிபூசையின் மீது தான் கொண்டிருந்த பெரும் பக்திக்காகப் புகழ் பெற்றவளாகிய அர்ச் கோலெட்டின் வரலாற்றில் பின்வரும் சம்பவம் எழுதப்பட்டுள்ளது: ஒரு முறை தன் ஆன்ம குரு நிறைவேற்றிக் கொண்டிருந்த பூசையில் அவள் பங்கு பெற்றுக் கொண்டிருந்தபோது, தேவ வசீகர வேளையில் : "ஓ என் தேவனே! என் சேசுவே! ஓ சம்மனசுக்களே, புனிதர்களே, ஓ மனிதர்களே , பாவிகளே, நாம் பார்ப்பவையும், கேட்பவையுமான இவை எப்பேர்ப்பட்ட அதிசயங்களாக இருக்கின்றன!" என்று அவள் சொல்வதை அருகிலிருந்தவர்கள் கேட்டார்கள். 

பூசை முடிந்தபின் அவளது ஆன்ம குரு அவளிடம் பூசை நேரத்தில் இப்படி உரத்த குரலில் அவள் பேசியதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, அவள் இப்படிப் பதிலளித்தாள்: "சுவாமி, நீங்கள் திவ்விய அப்பத்தை எழுந்தேற்றம் செய்தபோது, நான் சிலுவையின் மீது கிறீஸ்துநாதரைக் கண்டேன், அவரது விலைமதிக்கப்படாத திருக்காயங்களிலிருந்து திரு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது; அதே சமயத்தில், அவர் தமது நித்தியப் பிதாவை நோக்கி: "நான் என் சிலுவையின்மீது தொங்கிக் கொண்டிருக்கிற இந்த மாமிசத்தாலான சரீரத்தைக் கண்ணோக்கும். இந்தச் சரீரத்தில்தான் நான் மனுக்குலத்திற்காகப் பாடுபட்டேன். என் காயங்களைப் பாரும், நான் சிந்திய இரத்தத்தைப் பாரும், என் துன்பங்களை சிந்தித்துப் பாரும், என் மரணத்தை சிந்தித்துப் பாரும். இவற்றையெல்லாம் பாவிகளை இரட்சிப்பதற்காகவே நான் அனுபவித்தேன். இப்போது, அவர்களது அக்கிரமத்தின் காரணமாக, நீர் அவர்களை நித்திய அழிவிற்குத் தீர்ப்பிட்டு, பசாசிடம் அவர்களைக் கையளிப்பீர் என்றால், என் கசப்பான பாடுகளுக்கும், என் கொடூர மரணத்திற்கும் நான் என்ன கைம்மாறைப் பெற்றுக் கொள்வேன்? சபிக்கப்பட்ட பாவிகள் எனக்கு நன்றி செலுத்துவதில்லை; அதற்கு மாறாக, அவர்கள் நித்திய காலத்திற்கும் என்னை சபித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்றால், என் துன்பங்களுக்கு நன்றியறிதலாக அவர்கள் நித்திய காலமும் என்னைப் போற்றிப் புகழ்ந்து, மகிமைப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆகவே, என் நிமித்தமாக, இந்தப் பாவிகளை மன்னித்தருளும். ஓ என் பிதாவே, நித்திய சாபத்திலிருந்து அவர்களைக் காத்துக்கொள்ளும்" என்று கூறியதை நான் கேட்டேன்" என்றாள்.

இதன் மூலம், திவ்விய பலிபூசையில் நம் ஆண்டவர் எவ்வளவு ஏக்கத்தோடு நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதையும், நம்மீது இரக்கம் காட்டும்படி அவர் எப்படித் தம் பரலோகப் பிதாவை மன்றாடுகிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். 

ஏனெனில் --திவ்விய பலிபூசை அவரது திருப்பாடுகளின் புதுப்பித்தலாக இருப்பதால் --பூசை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சிலுவையின் மீது நிகழ்ந்த காரியம் மீண்டும் முழுமையாக நிகழ்த்தப்பட வேண்டும். சிலுவையின் மீது, சேசுநாதர் உரத்த சத்தமாக, "பிதாவே, இவர்களை மன்னித்தருளும், அதேதெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்'' (லூக். 23:34). 

இதே முறையில் அவர் பீடத்தின் மீதிருந்தும் கூக்குரலிட்டு, உண்மையில் எல்லாப் பாவிகளுக்காகவும், அதிக விசேஷமாக, பூசையில் பங்குபெறுபவர்களுக்காகவும் மன்னிப்பை மன்றாடுகிறார். அவருடைய கூக்குரல் சத்தம் எவ்வளவு வல்லமையும், வற்புறுத்தலும் உள்ளதாக இருக்கிறது என்றால், அது மேகங்களை ஊடுருவி, நித்தியப் பிதாவின் திரு இருதயத்தைச் சென்றடைகிறது. 

இவ்வாறு கிறீஸ்துநாதர் பரிந்து பேசுபவர் என்னும் தமது பதவியின் அலுவலை நிறைவேற்றுகிறார்; அர்ச். அருளப்பர் கூறுவது போல, "நீதி பரராகிய சேசுக்கிறீஸ்துநாதர் பிதாவினிடத்தில் நமக்கு மனுப் பேசுகிறவராயிருக்கிறார்; நம்முடைய பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தப் பலியாய் இருக்கிறார்" (1 அரு. 2:1-2). 

"அவரே (நமக்காக) மரித்தவர். பின்னும் அவரே உயிர்த்தெழுந்தவர்; அவரே சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறவர்; நமக்காகப் பரிந்து பேசுகிற வரும் அவரே'' (உரோ. 8:34). மோட்சத்தில் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார், ஆனால் அதிக விசேஷமாக, பீடத்தின் மீதிருந்து அவர் நமக்காக மனுப்பேசுகிறார். ஏனெனில் அங்கே அவர் தமது குருத்துவ அலுவல்களைச் செயல்படுத்துகிறார். அர்ச். சின்னப்பர் கூறுவது போல, மனிதர்களுடைய பாவங்களுக்காகப் பலிகள் செலுத்துவது குருவானவருடைய கடமையாக இருக்கிறது (எபி.5:1).

அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியனும் பின்வரும் வார்த்தைகளில் இதே சாட்சியத்தைத் தருகிறார்: "கிறீஸ்துநாதர் பீடத்தின் மீது பலியாக்கப்படும்போது, தமது பரிந்து பேசுதலால் நாம் நித்திய வாதையிலிருந்து இரட்சிக்கப்படும்படியாக, அவர் தம் பிதாவிடம் பேசுகிறார். தம் திருச்சரீரத்தின் காயங்களை அவருக்குக் காட்டு கிறார்." 

பீடத்தின் மீதிருந்து கிறீஸ்துநாதர் செய்யும் ஜெபங்களால் நமக்கு எவ்வளவு அதிகமான நன்மை செய்யப்படுகிறது! அவரது ஜெபங்களால் விலக்கப்பட்டிருக்கவில்லை என்றால், எவ்வளவு அதிகமான பேரழிவுகள் நமக்கு நேரிட்டிருக்கும்! கிறீஸ்துநாதர் தமது பரிந்து பேசுதலால் நரகத்திலிருந்து தங்களை இரட்சித்திருக்கா விட்டால், இப்போது மோட்சத்தில் இருக்கும் பாக்கியவான்களில் எத்தனை கோடிப் பேர் நித்திய வாதையின் ஸ்தலத்தில் இருந்திருப்பார்கள்! 

ஆகவே, நாம் அவரது பரிந்து பேசுதலில் ஒரு பங்கைப் பெற்று, தீமையிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையோடும், நாமாக அடைய முடியாத நன்மைகளை அந்த சர்வ வல்லமையுள்ள மனுப்பேசுகிறவரின் வழியாகக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்னும் நம்பிக்கையோடும், நாம் அடிக்கடியும், மகிழ்ச்சியோடும் பூசை காணச் செல்வோமாக.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் ஏன் தமது திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார் என்பதற்கான முதன்மையான காரணத்தை நாம் இப்போது பார்த்து விட்டோம்; சிலுவையின் மீது தாம் தொங்கிய போது செய்தது போலவே, முடிந்த வரை அதிகப் பலனோடு நமக்காகப் பரிந்து பேசத் தம்மால் இயலும்படியாகவும், தமது திருப்பாடுகளின் காட்சியால் தமது நித்திய பிதா நம்மேல் தயவும் இரக்கமும் கொள்ளச் செய்யும்படியாகவுமே அவர் இப்படிச் செய்கிறார்.