இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் ஆண்டவருடைய வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் முக்கியமான பரம இரகசியங்கள் மீண்டும் நிகழ்கின்றன

திவ்விய பலிபூசையின் பரம இரகசியங்கள் தொடர்பாக, எல்லாவற்றிற்கும் மேலாக நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரு காரியம் உண்டு. 

பூசைப் பலியின் நம் ஆண்டவருடைய வாழ்வு மற்றும் திருப்பாடுகளின் முக்கியமான பரம இரகசியங்கள் மீண்டும் நிகழ்கின்றன, அவை நம் கண்களுக்கு முன்பாக மீண்டும் ஸ்தாபிக்கப் படுகின்றன. "கிருபை தயாபம் நிறைந்த கர்த்தர் தம்முடைய அற்புதங்களின் ஞாபத்தை ஏற்படுத்தினார்" (சங். 110:4) என்று தமது தீர்க்க தரிசனத் தொனியில் தாவீது கூறும்போது, அவர் இதையே முன்னுரைக்கிறார். 

இந்த வார்த்தைகளில், நம் பலிபீடங்களின் மீது நிகழும் பரிசுத்த பலியையே தாம் குறிப்பிடுகிறார் என்பதில் நாம் எந்த சந்தேகமும் கொள்ளக் கூடாது என்பதற்காக, அவர் மற்றொரு சங்கீதத்தில், "உமது பீடத்தைச் சுற்றி வந்து, அங்கு உமது துதிகளின் சப்தத்தைக் கேட்டு, உமது அதிசயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்" (சங்.25:6,7) என்று அவர் கூறுகிறார். 

இதே காரியம் கிறீஸ்துநாதரால், தேவ நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டபோது மீண்டும் குறித்துக் காட்டப்பட்டது. எப்படியெனில், அவர் தம் அப்போஸ்தலர்களிடம், 'மனுக்குல இரட்சணிய அலுவலை நிறைவேற்றிய பிறகு, நான் உங்களை விட்டுப் பிரிந்து, என் பரலோகப் பிதாவிடம் செல்ல வேண்டிய நேரம் இப்போது நெருங்கிக் கொண்டிருப்பதால், புதிய ஏற்பாட்டின் ஒரே பலியாக, திவ்விய பலிபூசையை நான் ஸ்தாபிக்கிறேன். நீங்கள் என்னை ஒருபோதும் மறந்து போகாதபடியும், மாறாக, எப்போதும் உங்கள் ஞாபகத்தில் என்னை வைத்திருக்கும்படியும், இந்தப் பூசையில் என் முழு வாழ்வு மற்றும் என் திருப்பாடுகளின் பரம இரகசியங்கள் அனைத்தும் மீண்டும் நிகழ்த்தப்பட்டு, விசுவாசிகள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் வைக்கப்படும்' என்று சொல்வது போன்ற அதே விதத்தில், "இதை என் நினைப்புக்காகச் செய்யுங்கள்" என்று கூறினார்.

இனி, இந்த வார்த்தைகளில் உள்ள உண்மையை நாம் எண்பித்து, கிறீஸ்துநாதரின் வாழ்வு மற்றும் பாடுகளின் பரம இரகசியங்கள் அனைத்தும் எப்படி திவ்விய பலிபூசையில் அடங்கியுள்ளன என்று எண்பிப்போம். 

எல்லாவற்றிற்கும் முன்பாக, மனிதாவதாரத்தின் ஆராதனைக்குரிய பரம இரகசியம் வெறுமனே கண்களுக்கு முன்பாகக் காட்டப்படாமல், உள்ளபடியே அது மீண்டும் பீடத்தின் மீது நிகழ்கிறது. 

ஏனெனில் மகா பரிசுத்த கன்னிகை தேவ சுதனின் மனிதாவதாரத்தின் முக்கியக் கருவியாகத் தான் இருக்குமாறு, தன் சரீரத்தோடும், ஆத்துமத்தோடும் தன்னை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்த அதே முறையிலும், இஸ்பிரீத்து சாந்துவின் செயலால் வார்த்தையானவர் அவர்களில் மாம்சமான அதே முறையிலும், குருவானவர் பரலோகப் பிதாவுக்கு அப்பத்தையும், இரசத்தையும் ஒப்புக்கொடுக்கிறார். 

தேவ வசீகர வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டவுடன் இவை அதே இஸ்பிரீத்து சாந்துவின் வல்லமையால் கிறீஸ்துநாதருடைய மெய்யான சரீரமாகவும், மெய்யான இரத்தமாகவும் மாறுகின்றன. 

இவ்வாறு, மனிதாவதாரத்தின் தெய்வீகப் பரம இரகசியம் புதுப்பிக்கப்படுகிறது. தேவனின் திருமாதா தனது கன்னிமைச் சரீரத்தில் கிறீஸ்துநாதரைத் தாங்கியிருந்தது போலவே, குருவானவர் உண்மையாகவே அவரைத் தம் கரங்களில் தாங்கியிருக்கிறார். இது புதுமைகளில் எல்லாம் மிகப் பெரியதும், பெரும் வியப்புக்குரியதுமான புதுமை அல்லவா?

இதே முறையில், சேசுக்கிறீஸ்துநாதரின் ஆராதனைக்குரிய பிறப்பின் பரம இரகசியமும் பூசையில் புதுப்பிக்கப்பட்டு, நம் கண்களுக்கு முன்பாக வைக்கப்படுகிறது. 

ஏனெனில், கிறீஸ்துவானவர் மகா பரிசுத்த கன்னிகையிடமிருந்து தமது மனித இருத்தலைப் பெற்றுக் கொண்டது போலவே, குருவானவரின் வார்த்தையைக் கேட்டு, அவர் மனுஷீக வஸ்திரமணிந்தவராக பூமியின் மீது மீண்டும் இறங்கி வருகிறார். 

பூசை நிறைவேற்றும் குரு தேவ வசீகரத்தின் கடைசி வார்த்தைகள் தம் உதடுகளைக் கடந்த மாத்திரத்தில், உண்மையாகவே மனிதனாக அவதரித்த சர்வேசுரனை அபிஷேகம் செய்யப்பட்ட தமது கரங்களில் ஏந்துகிறார். 

இதற்குச் சான்றாக, அவர் முழந்தாளிட்டு, தமது சர்வேசுரனும், சிருஷ்டிகருமானவரைத் தாழ்ச்சியோடு ஆராதிக்கிறார்; அவரை பக்தி வணக்கத்தோடு எழுந்தேற்றம் செய்து, மகிழ்ச்சியோடு தேவாலயத்தில் கூடியிருக்கும் மக்களுக்கு அவரைக் காண்பிக்கிறார். 

புதிதாய்ப் பிறந்த பச்சிளம் தேவ பாலனை ஆராதிக்க வந்த இடையர்களுக்கு அவருடைய பரிசுத்த மாதா, அணையாடைகளில் பொதியப்பட்டிருந்த அவரைக் காண்பித்தது போலவே, குருவானவரும் அதே கிறீஸ்து பாலனை, உண்மையில் அணையாடைகளில் அன்றி, அப்ப இரசத்தின் குணங்களுக்குள் மறைந்தவராக மக்களுக்குக் காண்பிக்க, அவர்கள் தங்கள் ஆண்டவரும், தேவனுமானவரைக் கண்டு ஆராதித்து வணங்குகிறார்கள். 

இருதய பூர்வமான அன்போடும், வணக்கத்தோடும் இதைச் செய்பவர்கள், பக்தியுள்ள இடையர்கள் செய்ததை விட மேலான விசுவாசச் செயல் ஒன்றைச் செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் கிறீஸ்துநாதரின் மனுஷீகத்தைக் கண்டு, அவரது தெய்வீகத்தில் விசுவாசம் கொண்டனர். ஆனால் நாமோ, அப்ப, இரசத்தின் வெளித் தோற்றங்களை மட்டுமே காண்கிறோம், என்றாலும் அவற்றிற்குப் பின்னால் கிறீஸ்துநாதரின் தெய்வீகமும், மனுஷீகமும் மறைந்திருக்கின்றன என்று நாம் உறுதியாக விசுவசிக்கிறோம்.

மூன்று அரசர்களால் ஆராதிக்கப்பட்டவரும், சிமியோனால் கரங்களில் ஏந்தப்பட்டவரும், தேவாலயத்தில் நித்திய பிதாவுக்குக் காணிக்கையாகத் தமது திவ்விய அன்னையால் ஒப்புக்கொடுக்கப் பட்டவருமான அதே தேவ குழந்தையானவர் திவ்விய பலிபூசையிலும் பிரசன்னமாகியிருக்கிறார். 

இந்தப் பரிசுத்த மனிதர்களின் முன்மாதிரிகையை நாமும் கண்டுபாவித்து, கிறீஸ்துநாதருக்கு ஏற்புடைத்தான முறையில் அவரை வழிபட்டு, நித்திய சம்பாவனை ஒன்றை சம்பாதித்துக் கொள்ள முடியும். 

மேலும், கிறீஸ்துநாதர் தமது குருவின் வாயைக் கொண்டு நம் ஆன்மாக்களின் நன்மைக்காகவும், இரட்சணியத்திற்காகவும், தமது பரிசுத்த சுவிசேஷத்தை அறிக்கையிடுவதை நாம் கேட்கிறோம். 

பூசை தொடர்ந்து நிகழும்போது, அவர் தமது அற்புதமான வல்லமையைச் செயல்படுத்தி, திராட்சை இரசத்தைத் தமது புனித இரத்தமாக மாற்றுவதைப் பார்க்கிறோம். இது கானாவூரில் நிகழ்ந்ததை விடப் பாரதூரமான அளவுக்கு மிகப் பெரும் புதுமையாகும். அங்கே அவர் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார். அல்லது நாம் அவரைக் கடைசி இராப் போஜனத்தின் போது, அப்ப, இரசத்தைத் தமது சொந்த சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றுவதை நாம் பார்க்கிறோம். 

இறுதியாக, எழுந்தேற்றத்தின் போது, சிலுவையின் மீது உயர்த்தப்படும் கிறீஸ்து நாதரை நாம் காண்கிறோம். நம் ஞானப் புலனாகிய செவியைக் கொண்டு, "பிதாவே, இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்" (லூக். 23:34) என்று அவர் நமக்காகப் பரிந்துபேசுவதை நாம் கேட்கிறோம். 

"இவர்கள் அறியாதிருக்கிறார்கள்," அதாவது, தங்கள் மீறுதல்களைக் கொண்டு உமது தெய்வீக மகத்துவத்தை எவ்வளவு ஆழமாக இவர்கள் நிந்தித்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள். உண்மைதான், நம் ஊனக் கண்களைக் கொண்டு நாம் இந்தக் காரியங்கள் அனைத்தையும் காண்பதில்லை; சுபாவத்திற்கு மேலான விசுவாசத்தின் ஒளியால் நாம் அவற்றைப் பகுத்துணர்கிறோம், தங்கள் சரீரக் கண்களைக் கொண்டு அவரைக் கண்டவர்கள் பெற்றுக் கொண்டதை விட மேலான ஒரு வெகுமானத்தை இந்த நம் விசுவாசத்தைக் கொண்டு நாம் பெற்றுக்கொள்கிறோம். "காணாமலே விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" (அரு. 20:29) எனற நமதாண்டவரின் அதிகாரத்தைக் கொண்டு இதை நாம் அறிந்திருக்கிறோம். 

இந்தப் பரம இரகசியங்கள் அதிக உயர்வானவையாகவும், அதிகம் புரிந்து கொள்ளப்பட முடியாதவையாகவும் இருப்பதால், நம் விசுவாசம் அதிகப் பேறுபலன்களை சம்பாதிக்கக் கூடியதாக இருக்கிறது, பரலோகத்தில் நமக்குரிய வெகுமதி அதிகப் பெரியதாக இருக்கும்.

மேலும், திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர், "இதோ, நான் உலக முடிவு பரியந்தம் எந்நாளும் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத். 28:20) என்று கூறிய முற்றிலும் உண்மையானதும், ஆறுதலளிப்பதுமான வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். 

தமது தெய்வீகத்தின் பலனாக அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். ஆனால் இந்த வார்த்தைகள் அவரது தெய்வீகத்தை மட்டும் குறிப்பதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, அவர் தமது பரிசுத்த மனுஷீகத்தையும் இவை குறிக்கின்றன. 

இந்த மனுஷீகம் பூசையிலும், பீடத்தின் ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்திலும் அவர் பிரசன்னமாகி, நம்முடனே கூட வாசமாயிருக்கிறார். அங்கிருந்தபடி எல்லாக் காலங்களிலும் நம் ஜெபங்களைக் கேட்கவும், நம் தேவையில் நமக்கு உதவி செய்யவும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார். 

மேலும், பீடத்தின் ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தில் தாம் இருப்பது போல, பூசையில் கிறீஸ்துநாதர் தமது ஆள்தன்மையில் மட்டும் பிரசன்னமாகியிருப்பதில்லை. அவர் அங்கே நமது பலிப் பொருளாகவும், நமது மத்தியஸ்தராகவும், நம் பாவங்களுக்குரிய பரிகாரமாகவும் இருக்கிறார். 

ஏனெனில் கிறீஸ்துநாதர் தமது பதவியின் உரிமையால் தமது குருத்துவ அலுவல்களைப் பூசையில் செயல்படுத்துகிறார் என்பதால், அர்ச். சின்னப்பர் கூறுவது போல, முன்பு சிலுவையின் மீது அவர் தம்மைத்தாமே தமது பரலோகப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தது போல, மனிதர்களுடைய பாவங்களுக்காக அவருக்கு இப்போதும் தம்மை ஒப்புக்கொடுக்குமாறு, "காணிக்கைகளையும் பாவங்களுக்காகப் பலிகளையும் செலுத்தும்படிக்கு'' (எபி. 5:1), இந்தக் குருத்துவப் பதவி அவருக்குச் சொந்தமானதாயிருக்கிறது.