இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதிக் கிறீஸ்தவர்கள் பூசையைத் தவிர்ப்பதை விட, தங்கள் உயிரை இழக்கவும் தயாராக இருந்தார்கள்

ஆப்ரிக்காவிலுள்ள அலூட்டா என்னும் ஊரில், பேரரசனின் கட்டளைப்படி, கிறீஸ்தவத் தேவாலயங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன, கிறீஸ்தவ வழிபாடு தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையையும் மீறி, ஆண்களும் பெண்களுமான அநேக கிறீஸ்தவர்கள் பூசை காண்பதற்காக ஒரு தனி வசிப்பிடத்தில் கூடியிருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அஞ்ஞானிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்களைக் கைது செய்து, பொதுச் சந்தை கூடும் இடத்தில் நீதிபதிக்கு முன்பாக அவர்களை இழுத்து வந்தார்கள். 

கைதிகளின் உடமைகளோடு இருந்த பூசைப் புத்தகமும், இன்னும் பல புத்தகங்களும், பொதுவான கேலி பரிகாசத்தின் மத்தியில், அந்தச் சந்தைப்பகுதியில் வளர்க்கப்பட்ட நெருப்பில் வீசியெறியப் பட்டன. ஆயினும் அவை எரிந்து போகவில்லை. ஏனெனில் தீச்சுவாலைகள் அவற்றை நெருங்குமுன், திடீரென ஒரு பெருமழை பொழியத் தொடங்கி, அந்தப் பெருநெருப்பை முழுவதுமாக அணைத்து விட்டது. 

இந்த நிகழ்ச்சியால் வெகுவாகத் தாக்குண்ட நீதிபதி, முப்பத்து நான்கு ஆண்களும், பதினேழு பெண்களும் அடங்கிய அந்தக் கைதிகளின் கூட்டம், பேரரசனால் தீர்ப்பிடப் படுமாறு, அவர்களைக் கார்த்தேஜ் நகரத்திற்கு அனுப்பிவிட்டான். 

இந்தக் கிறீஸ்தவர்கள் மிகுந்த சந்தோஷ உற்சாகத்தோடு வழி நெடுக சங்கீதங்களையும், பக்திப்பாடல்களையும் பாடிக் கொண்டு சென்றார்கள். பேரரசனின் முன்னிலையில் அவர்கள் கொண்டு வரப்பட்ட போது, அவர்களை வழிநடத்தி வந்த அதிகாரி : "பேரரசரே, குறும்புத்தனமுள்ள இந்தக் கிறீஸ்தவர்கள் அலூட்டா பட்டணத்தில் எங்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். அங்கே இவர்கள் உமது கட்டளையை மீறி, தங்கள் பொய்த் தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்" என்று அறிவித்தான். 

பேரரசன் உடனடியாக ஒரு கிறீஸ்தவரின் ஆடைகளை உரியச் செய்து, சித்திரவதைச் சட்டத்தில் அவரைப் பிணைத்து, அவரது தசை கூர்மையான கொக்கிகளால் கிழிக்கப்படச் செய்தான். அதன்பின் எஞ்சியவர்களில் ஒருவரான டெலிக்கா என்ற கிறீஸ்தவர் உரத்த சாத்தமாக அரசனை நோக்கி, "கொடுங்கோலனே, ஏன் ஒருவரை மட்டும் தனியாகச் சித்திரவதை செய்கிறாய்? நாங்கள் எல்லோருமே கிறீஸ்தவர்கள் தான், அவரைப் போலவே நாங்களும் பூசை கண்டோம்" என்று கத்தினார். 

பேரரசன் இந்த மனிதருடைய ஆடைகளையும் உரியச் செய்து, அதே வாதைகளுக்கு உள்ளாக்கினான். "உங்களை இப்படிக் கூட்டமாகக் கூடச் செய்தவன் யார்?" என்று அவன் கேட்க, "குருவாகிய சாத்துர்னினுஸும் நாங்கள் அனைவருமேதான். ஆனால் இதன் காரணமாக எங்களை இப்படி வாதிப்பதன் மூலம் நீர் நீதி முழுவதற்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர் என்பதை நினைவில் கொள்ளும்" என்று பதில் வந்தது. 

"நீங்கள் நம் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உங்கள் பொய்த் தேவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க வேண்டும்" என்று பேரரசன் கூற, டெலிக்கா பதிலுக்கு, "என் சர்வேசுரனுடைய கட்டளைகளுக்கு முரண்பாடான எந்த ஒரு கட்டளைக்கும் நான் கீழ்ப்படியத் தேவையில்லை. இதற்காக நான் சாகவும் தயாராக இருக்கிறேன்" என்றார். ஆகவே, இந்த வேதசாட்சிகளின் கட்டுக்களை அவிழ்த்து, அவர்களை உணவோ, பானமோ இன்றி சிறையில் தள்ளும்படி அரசன் உத்தரவிட்டான்.

இதனிடையே, சிறைக் கைதிகளில் ஒருவனுடைய சகோதரனும், அஞ்ஞானியுமாகிய ஒருவன் முன்னே வந்து, தாத்திவுஸ் என்பவன் விக்டோரியா என்னும் பெயருள்ள தன் சகோதரிக்குத் தவறான புத்திமதி கூறி, அவளைப் பூசை காணச் செய்து விட்டதாகக் குற்றஞ் சாட்டினான். ஆனால் விக்டோரியா தானே இதற்குப் பதில் சொன்னாள்: "எந்த மனிதனுடைய வற்புறுத்தலாலும் அல்ல, மாறாக, என் சொந்த சுயாதீன சித்தத்தின்படியே நான் திவ்விய பலி பூசையில் பங்குபெறும்படி அந்த வீட்டுக்குச் சென்றேன்; ஏனெனில் நான் ஒரு கிறீஸ்தவப் பெண், நான் கிறீஸ்துநாதரின் திருச்சட்டத்தைப் பின்பற்றுகிறேன் என்பதுதான் எனக்கு எதிரான குற்றம்" என்றாள் அவள். 

அவளுடைய சகோதரன் அவளை நோக்கி, "உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. ஒரு முட்டாளைப் போல நீ பேசுகிறாய்" என்றான். அதற்கு அவள், "நான் முட்டாள் அல்ல, மாறாக, நான் ஒரு கிறீஸ்தவள்" என்றாள். பேரரசன் அதன்பின் அவளிடம், தன் சகோதரனோடு வீடு திரும்ப அவளுக்கு விருப்பமா என்று கேட்டான். ஆனால் அவளோ, "கிறீஸ்துவின் திருப்பெயரின் நிமித்தமாகத் துன்புறுபவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகள்; அவர்களை நான் கைவிடப் போவதில்லை, ஏனெனில் நானும்தான் பூசை கண்டேன், நானும் தான் அவர்களோடு சேர்ந்து திவ்விய நன்மை வாங்கினேன்" என்றாள். 

அவள் தன் சகோதரனின் புத்திமதியைக் கேட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு பேரரசன் அவளை வற்புறுத்தினான், ஏனெனில் அவள் சிறந்த அழகியாயிருந்ததாலும், அவ்வூரின் முதன்மையான குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவளாக இருந்ததாலும், அவளைக் காப்பாற்ற அவன் விரும்பினான். ஆனால் அதில் தனக்கு அற்பமேனும் வெற்றி கிடைக்கவில்லை என்று கண்டு, அவளைச் சிறையில் அடைக்க அவன் உத்தரவிட்டான். 

அதன்பின் அவளை சந்தித்து, அவள் தன் விசுவாசத்தைக் கைவிடச் செய்யும்படி எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தான். இந்தக் கன்னிகையின் பெற்றோர் அவளுடைய விருப்பத்திற்கு மாறாக அவளுக்குத் திருமணம் செய்ய விருப்பம் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவள் ஓர் உயர்ந்த ஜன்னலிலிருந்து வெளியே குதித்துத் தப்பித்து, குருவாகிய சாத்தார்னினுஸிடம் சென்று, அர்ப்பணக் கன்னியருள் ஒருத்தியாகத் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.

இறுதியாக அந்தக் கொடுங்கோலன் குரு சாத்தார்னினுஸிடமே பேசி, அரச சட்டத்திற்கு எதிராக, வழிபாட்டுக்காக அவர் அந்த மக்களைக் கூட்டினாரா என்று விசாரித்தான். "கடவுளின் தெய்வீக வழிபாட்டிற்காக, அவருடைய கட்டளைப்படியே நான் அவர்களை ஒன்று கூட்டினேன்'' என்று சாத்தார்னினுஸ் பதிலளித்தார். 

"நீர் ஏன் அப்படிச் செய்தீர்?" என்று பேரரசன் கேட்க, "ஏனெனில் திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுப்பது எங்கள் மேல் சுமந்த கடமை" என்று குரு பதிலளித்தார். அவருடைய தூண்டுதலாலும், வற்புறுத்தலாலுமே இந்த மக்கள் அந்த நோக்கத்திற்காக ஒன்றுகூடினார்களா என்று அரசன் கேட்டபோது, அது உண்மைதான் என்றும், தாம்தான் அந்தப் பூசையை நிறைவேற்றியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 

நீதிபதி அதன்பின் அவர் நிர்வாணமாக்கப்படவும், அவரது குடல்கள் அவரது தசை வழியாக வெளியே தெரியும் வரை கொக்கிகளால் அவருடைய உடலைக் கிழிக்குமாறும் தண்டனைத் தீர்ப்பிட்டான். அதன்பின் அவர் மற்றக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இருண்ட சிறைக்கூடத்திற்குள் அவரும் தள்ளப்பட்டார்.

அடுத்ததாக, கைதிகளில் ஒருவரான எமெரிக்குஸ் என்பவர் (இவர் பிற்பாடு அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்றார்.) பேரரசனின் முன்பாகக் கொண்டு செல்லப்பட்டார். அவர் யாரென்று அரசன் விசாரித்தபோது, தாம்தான் இந்தக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் என்றும், ஏனெனில் தம் வீட்டில்தான் பூசை நடைபெற்றது என்றும், தம் சகோதரர்களின் நிமித்தமாகத் தாமே அதைச் செய்ததாகவும், ஏனெனில் திவ்விய பலிபூசை அவர்களிடமிருந்து விலக்கப்படக் கூடாது என்றும் அவர் பதிலளித்தார். இதன்பின் இவரும் முந்தினவர்கள் பெற்ற அதே தண்டனையைப் பெற்றார். 

அதன்பின் பேரரசன் எஞ்சியிருந்த கைதிகளிடம் பேசி, "உங்கள் சக கிறீஸ்தவர்களுக்குத் தரப்பட்ட தண்டனையை நீங்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வீர்கள் என்றும், அவர்களைப் போல நீங்களும் உங்கள் உயிர்களை அலட்சியம் செய்ய மாட்டீர்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்றான். ஆனால் அவர்களோ ஒரே குரலாக: "நாங்கள் கிறீஸ்தவர்கள்; இரத்தம் சிந்த வேண்டியிருந்தாலும், கிறீஸ்துநாதரின் திருச்சட்டத்தின்படி நடப்பதென்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்கள். 

அவர்களில், தனக்கு முன் இருந்த ஃபெலிக்ஸ் என்னும் பெயருள்ள ஒரு மனிதரைத் தனியே அழைத்து பேரரசன் அவனிடம் : "நீ ஒரு கிறீஸ்தவனா என்று நான் கேட்கவில்லை, மாறாக, பூசை நடந்தபோது நீ அங்கே இருந்தாயா என்று தான் கேட்கிறேன்'' என்று பேரரசன் கூற, "இந்தக் கேள்வி முற்றிலும் அவசியமற்றது, திவ்விய பலிபூசை இன்றி ஒரு கிறீஸ்தவன் பிழைத்திருக்க முடியாது. பூசை நிறைவேற்றப்பட்ட சமயத்தில் நாங்கள் பக்தியோடு ஒன்றுகூடி, எங்கள் ஜெபங்களை ஒப்புக்கொடுத்தோம் என்று நான் துணிவோடு ஒப்புக்கொள்கிறேன்" என்று பதிலளித்தார் ஃபெலிக்ஸ். இதைக் கேட்டதும் அந்தக் கொடுங்கோலன் எத்தகைய கோபவெறி கொண்டான் என்றால், அவன் அந்தப் புனித வேத சாட்சியைத் தரையில் தள்ளி, அவரை அடித்தே கொல்லும்படி செய்தான்.

கைதிகள் அனைவரும் மிகவும் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பின், அவர்கள் ஒன்றாக ஒரு பெரிய இருட்டறைக்குள் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு உணவு எதுவும் வழங்கப்படக் கூடாதென்று சிறைக்காவலர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டு அவர்களுடைய உறவினர்கள் உணவுப் பொருட்களோடு அவர்களைத் தேடி வந்தார்கள். ஆனால் சிறைக் காவலர்கள் அவர்களைச் சோதனையிட்டு, எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து பரித்துக் கொண்டு, அவர்களை இழிவாகவும் நடத்தினார்கள். இந்த மனிதத் தன்மையற்ற கொடுங்கோலன் தன் காட்டுமிராண்டித்தனத்தை சற்றும் தளர்த்திக் கொள்ளவேயில்லை. இவ்வாறு, கிறீஸ்துநாதரின் இந்த ஊழியர்கள் சிறையில் பசியாலும் தாகத்தாலும் இறந்து போகும்படி அப்படியே விட்டுவிடப்பட்டார்கள்.

பண்டைய பதிவேடுகளிலிருந்து பரோனியுஸ் எடுத்து எழுதியுள்ள இந்த நிகழ்ச்சி, ஆதித் திருச்சபையில் பூசை நிறைவேற்றப்பட்டு வந்ததையும், விசுவாசிகள் அதில் பங்குபெற்றதையும் சந்தேகத்திற்கு இடமின்றி எண்பிக்கிறது. 

முதல் நூற்றாண்டின் பக்தியுள்ள கிறீஸ்தவர்கள் பூசை காணாதபடி தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி, கொடூரமான வாதையையும், மிகக் கொடிய மரணத்தையும் அனுபவிக்க சித்தமாயிருக்கும் அளவுக்கு, அவர்கள் திவ்விய பலி பூசையின் பேரில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்கள் என்பதையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். 

இந்தப் பக்திப் பற்றுதல் எங்கிருந்து வந்தது? பூசையின் இராஜரீகப் புண்ணியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பிலிருந்தும், அதன் கனிகளில் பங்குபெற வேண்டுமென்ற அவர்களது பலமான ஆசையில் இருந்தும் அது வந்தது. அவர்களுடைய முன்மாதிரிகை நமக்கு ஒரு பாடமாக இருந்து, இன்னும் அதிக பக்தியோடும், நம் ஆன்மாக்களுக்கு இன்னும் அதிக பலனோடும் பூசை காண நம்மைத் தூண்டுவதாக.