உன் கடைசி முடிவுகளை ஞாபகப் படுத்திக்கொள்ளுவாயானால் என்றென்றுமே பாவஞ் செய்ய மாட்டாய் (எக்கிளே. 7; 40).
பிரியமான கிறிஸ்தவர்களே, ஒரு பரிசுத்த தபோதனர் சகலருக்கும் நன்மை செய்யக் கூடிய ஒரு நற்புத்தியைச் சொல்லிவருவார்: அதாவது: '' நீ காலையில் எழும்பும்போது, இன்றிரவு வரைக்கும் நான் சீவனோடு இருப்பேனோ தெரியாது என்று எண்ணிக் கொள். மாலையில் நித்திரைக்குப் போகும் வேளையில், காலை மட்டும் இருப்பேனோ தெரியாது என்று சொல்லிக்கொள்'' என்பார்.
மரணத்தின் நினைவால் உண்டாகும் நன்மையை முற்கால அஞ்ஞானிகளும் அறிந்திருந்தார்கள். மசிடோனிய தேச அரசனான பிலிப்பு என்பவர்: ''அரசரே நீர் ஒரு மனுஷன்; நீரும் சாக வேண் டும் என்ற நினைவோடு நடந்துகொள்ளும்'' என்று தனக்கு ஒவ்வொரு நாட் காலையிலும் நினைப்பூட்டுவதற்கு ஒரு பணியாளை நியமித்திருந்தார். சாவை நினைந்து கொள்ளாமையினாலேதான், அநேகர் சருவேசுரனையும் தங்கள் ஆத்துமத்தையும் கவனியாமல் தாறுமாறாய் நடந்துகொண்டுவருகிறார்கள்.
சாவு, இழவு, மரணம் என்ற சொற்களையே அமங்கலமான சொற்கள் என்று தள்ளிவைத்து விடுகிறார்கள். சாவின் நினைவு அவர்களுக்குத் திடுக்காட்டம் உண்டாக்குகிறது. சாவை நினைத்தால் திருந்தி நடக்க வேணும், அந்த நினைவை எப்போதும் அகல வைத்துக் கொண்டுவந்தால் மனம் போன போக்கெல்லாம் போகலாம், என்ன துட்டாட்டத்தனத்தையுஞ் செய்யலாம் என்று எண்ணிக்கொள்ளுவார்கள். பாவப் பழக்கங்களிலே நன்றாய் வேர் ஊன்றுகிறதற்கு அதுதான் கை கண்ட உபாயம். இதற்கு மாறாக, மரணத்தின் நினைவு பாவத்தின் நினைவைத் தடுத்து வைக்கும்; பாவத்திலே நிலைக்கவும் விடாது.
இதினாலே தான் "உன் கடைசி முடிவுகளை ஞாபகப் படுத்திக் கொள்ளுவாயானால் என்றென்றுமே பாவஞ் செய்ய மாட்டாய்'' என்று பரிசுத்த வேதாகமம் நமக்குப் புத்தி புகட்டுகிறது.
மரணத்தைப் போல் நல்ல உபதேசி இல்லை. மரணத்தின் நினைவு நம்முடைய பாவங்களுக்காக நாம் மனஸ்தாபப்பட்டுத் தவம் பண்ணச் செய்யும். அதின் நினைவு, நாம் சகல புண்ணியங்களையும் தேடிச் செய்யும்படியாக நம்மை எப்போதும் தூண்டிக்கொண் டிருக்கும். மரணத்தை ஊன்றி நினைக்கத் திடுக்காட்டம் உண்டு படும் என்றது மெய்தான். இந்தத் திடுக்காட்டமே நம்முடைய ஞான நித்திரையில் இருந்து நம்மைத் தட்டி எழுப்பி, நமது ஆத்தும ஈடேற்றமாகிய ஒரே அலுவலைச் சுறுசுறுப்போடு பார்க்கும்படி நம்மை ஏவி விடுவதற்கு முதற்றாமான வழியாகும்.
உண்மையில், மரணத்திலே இனிமேல் இல்லை என்ற ஒரு பயங்கரம் இருக்கவே இருக்கிறது. (1) மரணத்தில் உள்ள அதோ இதோ என்ற சந்தேகத்திலும் பயங்கரம்; (2) அது ஒறுத்துப் பாராமற் பண் ணும் பார அழிவிலும் பயங்கரம்; (3) அது, இனிமேல் மாற்றக் கூடாதபடி, கட்டிவிடும் முடிவிலும் பயங்கரம். இந்த மூவிதமான பயங்கரத்தையும் மூன்று பிரிவாக வகுத்துப் பேச விரும்புகிறேன்.
பிரியமான கிறிஸ்தவர்களே, நீங்கள், சகலருக்கும் வரப்போகிற இந்தக் கடைசி நேரத்தின் மூவித பயங்கரத்தையும் நன்றாகக் கண்டு உணர்ந்து கொள்ளுவீர்களாகில், மெய்யாகவே மனந்திரும்பினவர்கள் ஆகிவிடுவீர்கள்; பாவத்தை என்றென்றும் பகைத்து புண்ணியத்திலே நிலை கொள்ளுவீர்கள். ஆதலால், இந்தப் பிரசங்கத்தை நான் அருளோடு பண்ணி முடிக்கவும், நீங்கள் ஆத்தும பலனோடு கேட்கவும் தக்கதாக, சருவ தயாபர சருவேசுரனையும் அவருடைய திருத்தாயாரையும் பிரார்த்திக்கக் கடவோம். (பிரிய தத்தம்).