இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதர் தேவத்திரவிய அனுமானத்தில், திவ்விய பலிபூசையில் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகப் பலியாக்கப்படுகிறார்

இலத்தின் மொழி வார்த்தையாகிய இம்மொலாரே, அதாவது "கொல்லப்படுதல், பலியாக்கப்படுதல்" என்ற பொருள் தரும் வார்த்தையைத் திருச்சபை பூசையின் சாதாரண பாகத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறது. 

"கிறீஸ்துநாதர் தமது ஆள்தன்மையில் ஒரே ஒரு முறை பலியாக்கப்பட்டார். ஆனால் தேவத்திரவிய அனுமானத்தில், அல்லது திவ்விய பலிபூசையில் அவர் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகப் பலியாக்கப்படுகிறார்" என்று அர்ச். அகுஸ்தினார் கூறும் போது அவரும் இதே வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 

இந்த வார்த்தை மிகவும் தனிப்பட்டது; இது பீடத்தின் மீது பலி மிருகங்கள் கொல்லப்படுவதையும், பலியிடப் படுவதையும் குறிக்கப் பயன்பட்டது. இப்போது, பூசையைப் பற்றிப் பேசும்போதும் இதே வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், கிறீஸ்துநாதர் குருவின் வார்த்தையாலோ, ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தின் எழுந்தேற்றத்தாலோ மட்டுமின்றி, பலிச் செம்மறிக் குட்டியாக, அவர் பரம இரகசியமான முறையில் துன்பப்படுகிறார், கொல்லப்படுகிறார் என்பதைக் குறித்துக் காட்ட திருச்சபை விரும்புகிறது. இதை விவரித்துக் காட்ட நாம் முயல்வோம்.

அர்ச். சிப்ரியன், "நாம் ஒப்புக்கொடுக்கும் பலி கிறீஸ்துவின் திருப்பாடுகள் ஆகும்” என்கிறார். இதன் மூலம் அவர் சொல்ல வந்தது என்னவென்றால்: நாம் பூசை நிறைவேற்றும்போது, கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளில் நிகழ்த்தப்பட்டதை மீண்டும் நாம் நிகழச் செய்கிறோம். 

அர்ச். கிரகோரியார் இந்த சத்தியத்தை இன்னும் அதிக எளிமையாக எடுத்துரைக்கிறார்: ''கிறீஸ்துநாதர் மறுபடியும் இறக்க வில்லை என்றாலும், அவர் பூசைப் பலியில் ஒரு பரம் இரகசிய முறையில் நமக்காக மீண்டும் பாடுபடுகிறார்" என்று அவர் கூறுகிறார். 

தியோடோரேயும் இதே அளவு எளிமையோடு, "சிலுவையின் மீது ஒப்புக்கொடுக்கப்பட்ட பலியைத் தவிர வேறு எந்தப் பலியையும் நாம் இப்போது ஒப்புக்கொடுக்கவில்லை" என்று கூறுகிறார்.

இதற்கு ஆதாரமாகப் வேறு பல ஞான அதிகாரிகளின் மேற்கோள்களை இங்கு தருவது எளிது. ஆனால் சுருக்கம் வேண்டி, நாம் அவற்றை இங்கு தராமல், திருச்சபையின் தவறாவரமுள்ள சாட்சியத்தோடு நிறுத்திக் கொள்வோம். அது திவ்விய இஸ்பிரீத்து சாந்து திருநாளுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறுக்கான அமைதி மன்றாட்டில் (பாரம்பரியப் பூசையில், பலிப் பாகத்திற்கு முந்திய முகவுரைக்கு சற்று முந்திய ஜெபங்கள் அமைதி மன்றாட்டுக்கள் (Secreta - Secrets) எனப்படும். இவை பூசைக்குப் பூசை மாறும்.) 

"ஆண்டவரே, இந்தப் பலி நிறைவேறும்போதெல்லாம், எங்கள் இரட்சணியத்தின் அலுவல் நிறைவேற்றப்படுவதால், இந்தப் பரம இரகசியங்களை நாங்கள் தக்க விதமாய்ப் பெற்றுக் கொள்ள எங்களுக்குக் கிருபை செய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்'' என்று ஜெபிக்கிறது.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது : நம் இரட்சணிய அலுவல் எதுவாக இருக்க முடியும்? இதற்கு ஒவ்வொரு குழந்தையும் கூட பதில் சொல்ல முடியும். ஏனெனில், "எதைக் கொண்டு நாம் இரட்சிக்கப்படுகிறோம்?" என்று நாம் அவர்களிடம் கேட்டால், "கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் வழியாக" என்று அவர்கள் பதில் சொல்வார்கள். இவ்வாறு, இந்த அலுவல் ஒவ்வொரு பூசையிலும் நிறைவேறுகிறது என்று திருச்சபை அறிக்கையிடும் போது, கிறீஸ்து நாதரின் திருப்பாடுகள் ஒவ்வொரு பூசையிலும் புதுப்பிக்கப்படுகின்றன என்பது விளங்குகிறது. 

இதே உண்மையைச் சில வேதசாட்சிகளின் திருநாள் (நவம்பர் 8) அமைதி மன்றாட்டிலும் நாம் காண முடிகிறது: ''ஆண்டவரே, உமது அபரிமிதமான ஆசீர்வாதம் எங்கள் பேரில் இறங்கி வந்து, எங்கள் காணிக்கைகளை உமக்கு ஏற்புடையவையாகவும், அவை எங்களுக்கு இரட்சணியத்தின் தேவத்திரவிய அனுமானமாகவும் இருக்கச் செய்வதாக."

திவ்விய பலிபூசையினால் மீண்டும் நாம் மீட்டு இரட்சிக்கப் படுகிறோம் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தைகள் புரிந்து கொள்ளப் படக்கூடாது. மாறாக, பூசையில் நம் இரட்சணியத்தின் கனிகள் நமக்கு வழங்கப்படும்படியாக என்ற அர்த்தத்தில் இவை புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதையே திருச்சபை மற்றொரு இடத்தில், "இரட்சணியத்தின் பலன் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தின் வழியாக நமக்குத் தரப்படுவதாக'' என்று கூறுகிறது.

"நம் இரட்சணியத்தின் புதுப்பித்தலேயன்றி, பூசை என்பது வேறு என்ன?" என்று மற்றொரு எழுத்தாளர் கேட்கிறார். மோலினா அழகிய வார்த்தைகளில் இதே சத்தியத்தை விளக்குகிறார்: ''ஒப்புக் கொடுக்கப்படும் வேறு எந்தப் பலியையும், காணிக்கையையும் விட திவ்விய பலிபூசை அளவற்ற விதமாக மேலானதாக இருக்கிறது, ஏனெனில் அது நம் இரட்சணியத்தின் வெறும் சாயல் அல்ல, மாறாக, அது பரம இரகசியத்தில் பொதியப்பட்ட அந்த இரட்சணிய அலுவலாகவும், அதன் உண்மையான நிறைவேற்றமாகவும் இருக்கிறது." 

இங்கு மேற்கோள்களாகத் தரப் பட்ட சாட்சியங்கள், திவ்விய பலிபூசை கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் புதுப்பித்தலாக இருக்கிறது என்பதையும், கடவுளின் மென்மையான செம்மறிப்புருவையானவர் பரம இரகசிய முறையில் ஒவ்வொரு பூசையிலும் புதிதாகப் பலியாக்கப்படுகிறார் என்பதையும் உறுதிப்படுத்தப் போதுமானவை. பின்வரும் நிகழ்ச்சி இந்த சத்தியத்திற்கு நல்லதொரு விளக்கமாக இருக்கிறது.