இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

செபம் என்னும் நூலேணி

பிரியமான கிறிஸ்தவர்களே, நம்முடைய ஈடேற்றத்துக்கு இன்றியமையாத வழிவகை ஒன்று இருக்கிறது. அந்த வழிவகையைக் கையாடினதினாலே தான், இப்போது மோட்ச ராச்சியத்திலே பேரின்பக் கடலில் மூழ்கியிருக்கிற புண்ணியவாளர்கள் எல்லாரும் அந்தப் பாக்கியமான இராச்சியத்திற் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த வழிவகையை அசட்டைபண்ணிக்கொண்டு வந்ததினாலேதான், எத்தனையோ ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பாவிகள் நரக அக்கினிக் கிடங்கிலே அழுந்தி, இவ்வளவு அவ்வளவு என்று இல்லாத துன்ப துயர உபத்திரவங்களின் நடுவே குளறிக் கூச்சலிட்டுக் கொண்டு கிடக்கிறார்கள்.

நான் சுட்டிப் பேசும் வழி வகை என்னவானால், செபமேயாம். செபந்தான் நாம் பரலோக ராச்சியத்துக்கு ஏக, அனந்த கருணையுள்ள பிதாவினால் தரப்பட்டிருக்கிற நூலேணி என்று சொல்லலாம். சரியாகச் செபம் செய்வோர் தப்பாமல் ஈடேறுவார்கள். செபத்தை அலட்சியம் பண்ணுகிறவர்களோ நித்தியமாய்க் கெடுவார்கள். ஆதலால், செபத்தின் அவசியத்தையும், சரியாய்ச் செபஞ் செய்யும் விதத்தையும் இப்போது சுருக்கமாய் யோசிப்போம்.

1. செபம் நமக்கு அவசியம். ஏனென்றால், முதன்முதல், தன்னைப் படைத்துக் காப்பாற்றி, தனக்கு இந்தப் பூலோகத்தில் உள்ள சகல பொருட்களையும் உபகாரமாய்த் தருகிற சகல நன்மைச் சுரூபியான பிதாவுக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துவது மனிதனுடைய பாரமான கடமை. இந்தக் கடமையை இடையிடையே ஆவது செலுத்தாமல் ஒருவன் நெடுங்காலம் மிருகம் போலத் திரிந்தால், அது கனமான பாவமே ஆகும்.

தம்மைத் தோத்திரியாமல் விட்ட பாதகத்தைப்பற்றித்தானே சருவேசுரன் பழைய ஏற்பாட்டிலே: ''மாடு தன் எசமானையும் கழுதை தன் ஆண்டவனின் முன்னிட்டியையும் அறியும் ; இசிரவேலோ அறிவில்லாமலும், என் சனம் உணர்வில்லாமலும் இருக்கிறது'' என்று இசையாஸ் தீர்க்கதரிசியின் வாயினால் முறையிடுகிறார் (இசை. 1; 3).

''உப்பிட்டாரை உள்ளளவும் நினை'' என்றது தமிழ்ப் பழமொழி. சருவேசுரன் நமக்கு உப்பு மாத்திரம் இட்டவரா? நம்முடைய சரீரத்தைக் கை-கால் முதலிய அவயவங்களோடும், நமது ஆத்துமத்தைப் புத்தி தன்னிட்டம் முதலிய தத்துவங்களோடும் தந்தவரும் அவர்; கண்ணை மடல் காப்பது போல, நம்மை ஓயாமல் காத்துவருகிறவரும் அவர்; அம்மட்டோ! நமக்காகப் பாடுபட்டு நம்மை மீட்டெடுத்தவரும் அவர். நமக்குள் அன்போடு வாசம்பண்ணி நம்மை நல்வழியில் நடத்தியருளுகிறவரும் அவர். இவ்விதமே, நமக்குச் சகலமும் ஆனவருக்கு நன்றியறிந்திருந்து தோத்திரம் பண்ணாமல் விடலாமா ?

கிறீஸ்தவர்களே, தோத்திரச் செபம் நமது ஈடேற்றத்துக்கு முழுதும் அவசியம். இதனோடு பரிகாச்செபமும் வேணும். அதாவது: செய்த பாவத்துக்கும் நன்றிகேட்டுக்கும் பொறுத்தி கேட்கிற செபம். நாமெல்லாம் சிறு வயதுக்குள்ளே பெரிய பாவங்களைக் கட்டிக்கொண்ட பாதகர்கள் அல்லவோ!

சருவேசுரன் நம்மை நீதிப்படி தண்டிக்கச் சித்தமானால், இது வரையில் அடி நரகத்திலே கிடந்து அழுந்தவேண்டிய அக்கிரமிகள் அல்லவோ! இந்தப் பாவங்களுக்கு நாம் பொறுதி அடைய வேண்டுமானால், ஓயாமலே பரம தயாநிதியினுடைய இரக்கத்தை மன்றாடிப் பாவப் பரிகாரஞ் செய்ய வேண்டியவர்கள் ஆகிறோம். "ஆண்டவரே, உமக்கே துரோகஞ் செய்தேன் ; உமது சமுகத்திற் தின்மையைப் பண்ணினேன். என் பாவமோ எப்போதும் என் கண் முன்பாக நிற்கிறது''. இரக்கமுள்ளவரே ''என்னுடைய அக்கிரமங்களை மேலும் மேலும் கழுவி என்னைச் சுத்தமாக்கியருளும் என் பாவ சுபாவத்தை மாற்றியருளும்'' என்று இப்படி இராச தீர்க்கதரிசியோடு (சங்கீதம் 50) இடைவிடாமல் மன்றாட வேண்டியவர்கள் ஆகிறோம். இதுதான் பிராயச்சித்தச் செபம். இந்தச் செபம் இல்லாமலோ எமக்குப் பாவப் பொறுத்தல் கிடையாது.

இதுமட்டும் அல்ல, நமக்கு வேண்டிய விசேஷ வரப்பிரசாதங்கள், இவ்வுலகத்துக்கு உரிய விசேஷ உதவிகள், முதலான தேவ சகாயங்களை அடைவதற்குப் பிரார்த்தனைச் செபமும் அவசியம். அதாவது: சருவேசுரன் தாம் படைத்தவர்களுக்கெல்லாம் அருமையான பிதாவாய் இருக்கிறபடியால், சகலருடைய சரீரப் பிழைப்புக்கும் ஆத்தும ஈடேற்றத்துக்கும் அவசியமாய் உள்ள வழக்கமான உதவிகளையும் வரப்பிரசாதங்களையும் சகலருக்கும் தந்தருளுகிறார். ''அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்களுக்கும் அநீதியுள்ளவர்கள்ளுக்கும் மழை பெய்யப் பண்ணுகிறார் '' (மத். 5; 45). ஆனால் வழக்கத்துக்கு மேற்பட்ட விசேஷ சரீர உதவிகளையும் விசேஷ வரப் பிரசாதங்களையும் பெற வேண்டியபோதெல்லாம் நாம் செபம் பண்ணிக் கேட்பது அவசியம். விசுவாசத்தோடு கேட்கும் பொழுதோ, கேட்பது எல்லாம் கிடைக்கும் என்பது ஆண்டவருடைய திரு வார்த்தைப்பாடு.

“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் '' (மத். 7; 7-3). கேளாமல் விடுவோமானால் நமக்கு வேண்டிய விசேஷ உதவிகள் கிடையாமற் போய்விடும். நாமெல்லாம் எத்தனை பாவச் சோதனைகளில் அகப்பட்டு வருந்துகிறோம்! ஞான காரியங்களில் எவ்வளவு அசமந்தம் உள்ளவர்களும் பத்தி வேகம் இல்லாதவர்களுமாய் இருக்கிறோம்!

இந்தச் சோதனைகளைச் செயித்து, தேவ நேசத்திலே வளருவதற்குச் செபம் இல்லாமல் முடியுமா? இதனாலே தான் நம்முடைய பரம குருவாகிய ஆண்டவரும் : “செபஞ் செய்யுங்கள் ...ஒயாமல், சலியாமற் செபம் பண்ணுங்கள்... சோதனையில் உட்படாதபடிக்கு விழித்திருந்து செபம் பண்ணுங்கள்'' என்று பல முறையும் திருவாக்கினால் வற்புறுத்தினது மாத்திரம் அல்ல (லூக். 18;1- மத். 26; 41), தம்முடைய திரு நடக்கையாலும் போதித்தருளினார்.

எத்தனை முறை தனித்திருந்து செபம் பண்ணும்படியாக அவர் வனாந்தரத்துக்குச் சென்றார்! பகல் முழுதும் பாவிகளைத் தேடி தமது பூவிலும் மெல்லிய சீர் பாதம் நோக நடந்து திரிந்தபின், இரா முழுதும் பலநாள் செபத்திலே போக்கினாரே. ஆண்டவரைப் பின்பற்றி, அவருடைய அடியார்களான பத்தியுள்ள விசுவாசிகளும் நாள்தோறும் நெடும் தியாலம் செபத்தில் செலவழிப்பார்களே. ஆதலால் நாமும் செபம் பண்ண வேண்டும். சருவேசுரன் நமக்குச் செய்த, செய்து வருகிற ஒப்பில்லாத நன்மைகளுக்குத் தோத்திரமாகச் செபம் பண்ணவேண்டும். நம்முடைய பாவக்கடன் முற்றாகத் தீரச் செபம் பண்ண வேண்டும். நமக்கு அவசியமாயிருக்கிற எத்தனையோ இகபர நன்மைகளை அடையும்படியாகச் செபம் பண்ண வேண்டும். செபம் இல்லாமல் நமக்கு அவசியமான விசேஷ வரப்பிரசாதங்களை அடைந்துகொள்ளமாட்டோம். செபம் இல்லாமல் ஈடேறமாட்டோம்."

2. இனி, நாம் செபம்பண்ண வேண்டிய உத்தமமான முறை என்ன? முதலிலே, ஓயாமற் செபம்பண்ணவேண்டும் என்று ஆண்டவர் கற்பித்தாரே, அதற்குக் கருத்தென்ன? இடைவிடாமல் கோவிலுக்குள்ளே இருந்து செபம் சொல்லிக்கொண்டுவர வேணுமா? வேலையெல்லாம் விட்டுப்போட்டு முழங்காலிலே நின்று கொள்ளவேண்டுமா? அதல்ல ஆண்டவருடைய கற்பனையின் கருத்து.

அர்ச். சின்னப்பர் கொரிந்து நகரத்திலிருந்த புதுக்கிறீஸ்தவர்களுக்கு எழுதின முதல் நிருபத்தில்: "நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் சருவேசுரனுடைய தோத்திரத்துக்காகச் செய்யுங்கள் '' என்று வசனித்தபடியே (1 கொரி. 10; 31), நம்முடைய சகல கிருத்தியங்களையும் வேண்டுதலோடு கூட சருவேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பதும் மெய்யான செபமாகும். இப்படியே 'எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப்பட்டாலும் சருவேசுரனிலே மனதை வைத்துக் கொண்டு அடிக்கடி அவரை நோக்கி மனவல்லயச் செபங்களைச் சொல்லி வருவோமானால், ஓயாமற் செபம்பண்ணுகிறவர்கள் ஆவோம்.

ஒரு பத்தியுள்ள நூலாசிரியர் கோழியைக்கொண்டு ஒரு உவமையைக் காட்டுகிறார். அதெப்படியென்றால்: கோழி தண்ணீர் குடிக்கும்போது என்ன செய்கிறது? ஒருக்கால் குனிந்து சொண்டினால் தண்ணீர் அள்ளுகிறது. பிறகு நிமிர்ந்து தண்ணீரை விழுங்குகிறது. தண்ணீர் குடிக்கும் நேரமெல்லாம், அது, கீழே நோக்கிக் குனிவதும் மேலே நோக்கித் தலையை எடுப்பதுமாக இருக்கும். இப்படியே, நீங்களும் யாதொரு வேலையிற் கையிட்டிருக்கும் போது, அதிலே மனதை முழுதும் அமிழ்ந்த விடாமல், இடைக்கிடை மேல் நோக்கி: நேசமுள்ள பிதாவே உமக்குத் தோத்திரம்! ஆண்டவரே என் பாவங்களைப் பொறும்! யேசுவே எனக்கு உம்முடைய தூய நேசத்தைத் தாரும்! என்று இது முதலான பற்றுதலுள்ள மன்றாட்டங்களைப் பண்ணுவது ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் கணக்கில்லாத நன்மைகளைக் கொண்டுவருகிற உத்தம வழக்கமாகும்.

ஓயாமற் செபம்பண்ணுவது என்றது இதுதான். இது தவிர, நாம் நாள்தோறும் குறித்த நேரங்களில், விசேஷமாய் காலை மாலைகளில், சிற்சில வாய்ச்செபங்களையும் சொல்லவேணும். நாள் தோறும் வாய்ச் செபமாவது சொல்லாத நாள் இல்லாத நாள் என்று எண்ணிக்கொள்ள வேணும். அல்லாமலும், கூடுமான அளவில் மனச்செபமும் செய்வது உத்தமம். மனச்செபத்துக்குத் தியானம் என்று பெயர். தியானஞ் செய்யும் முறையைத் தியானப் புத்தகங்களிலிருந்து, அல்லது அறிந்தவர்கள் மூலமாய்ப் பழகிக் கொள்ளலாம்.

நம்முடைய செபங்களிலெல்லாம் பத்தியும் விசுவாசமும் விளங்க வேண்டியது. விசேஷமாய், நாம் கேட்கிற மன்றாட்டுக்கள் கிடைக்க வேண்டுமானால், அவைகளை மிகுந்த தாழ்மையோடும் விசுவாசத்தோடும் விடாப்பிடியோடும் செய்யவேண்டும். அர்ச். யாகப்பர் வசனித்திருக்கிறபடி: ''சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு அலைகிற கடல் அலைக்கு ஒப்பாவான். அப்படிப்பட்டவன் ஆண்டவரிடத்தில் எதையாவது கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினையாதிருப்பானாக'' ( யாகப். 1; 6-7 ).

தாழ் மையோடு, விசுவாசத்தோடு, விடாப்பிடியோடு செய்யும் செபமோ தேவ சமுகத்தில் வல்லமையுள்ளது. அப்படிப்பட்ட செபத்தைச் சருவேசுரன் தள்ள மாட்டார். இதற்கு உதாரணமாக அர்ச். மத்தேயு சுவிசேஷத்திலிருந்து (15-ம் அதி.) ஒரு சிறு சரித்திரம் எடுத்துச்சொல்லுகிறேன், கேளுங்கள்.

நம்முடைய திவ்விய கர்த்தர் இப்பூவுலகத்தில் இருந்த காலத்தில், ஒரு நாள் தீர் சீதோன் பட்டணங்களின் திசையாய்ப் போய்க்கொண்டிருக்கையில், அப்புறங்களில் குடியிருந்த ஒரு கானானிய அக்கியான ஸ்திரி, தன்னுடைய மகள் பிசாசு ஆவேசத்தினால் நோய்வாய்ப்பட்டிருந்ததினால் வருந்திக்கொண்டிருந்தவள், ஆண்டவர் அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் ஓடிவந்து : ஆண்டவரே! தாவீதின் குமாரனே! என் மேல் இரங்கும்; என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப் படுகிறாள் என்று மன்றாடினாள்.

ஆண்டவர், அவளைப் பரிசோதிக்கும்படியாக, ஒன்றும் சொல்லாமலே நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அவளும் பின்தொடர்ந்து பின் தொடர்ந்து வருகிறாள். இதைக் கண்ட சீஷர்கள் : ஆண்டவரே இவள் ஏன் பிறகாலே இழுபட்டுக்கொண்டு வருகிறாள் ! இவளுக்குச் சொல்லுகிறதைச் சொல்லி அனுப்பிவிடுமேன் என்கிறார்கள். இரக்கமே தமது சுய ரூபமாகக் கொண்ட நம்முடைய கர்த்தர் இன்னமும் அவளைச் சோதிக்கும்படியாக: நாம் யூத சனங்களுக்குள்ளே காணாமற்போன ஆடுகளைத் தேடி வந்தோம் ஒழிய இந்த மனுஷியைப் போல அஞ்ஞானிகளுக்காக வரவில்லை என்று கடின வசன மாய்ச் சொல்லிப்போட்டு வழி நடக்கிறார்.

கானானிய ஸ்திரியோ இதைக் கேட்டும் மனம் தளராமல், முகத்தைச் சுளித்துக்கொண்டு திரும்பி விடாமல், எட்டி நடந்துவந்து ஆண்டவருடைய பாதத்தின் முன் விழுந்து : ஆண்டவரே எனக்கு இரங்கும் ! என் மகளைக் குணமாக்கும்! என்று விண்ணப்பிக்க, மீண்டும் எம் அரிய இரட்சகர் அவளைப் பார்த்து : பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுகிறதோ என்று அதட்டுகிறார். பாருங்கள், கிறீஸ்தவர்களே, ஆண்டவர் அந்த மனுஷியை ஒரு நாய் என்றது போல சொல்லாமற் சொல்கிறாரே. யூதர் தான் பிள்ளைகள், நீங்கள் நாய்கள்; யூதருக்கு நாம் நன்மை செய்ய வந்தோம் ஒழிய அஞ்ஞானிகளாகிய உங்களுக்குச் செய்ய அல்ல என்றபடி அல்லவோ சொல்லுகிறார்!

ஆனால் அந்த தாழ்மையுள்ள ஸ்திரி, விசுவாசம் நிறைந்த அந்த மனுஷி, விடாப்பிடியுள்ள அந்த வீரத் தாய் சொன்ன மறுமொழியைக் கேளுங்கள்: மெய்தான் ஆண் டவரே, நாங்கள் நாய்கள் தான்; யூதர் பிள்ளைகள் தான்; ஆனால்ஆனால், நாய்க்குட்டிகளும் தங்கள் எசமான்களின் மேசையிலிருந்து விழும் துண்டு துகள்களைத் தின்னுமே என்று இந்த விதமாய்த் தாழ்மையோடு விடை சொல்லவே, இனி ஆண்டவருடைய இரக்கப் பெருக்கத்தைத் தடுக்க முடியாது. அவர் அவள் மேல் திருக் கண் சாத்தி: ஸ்திரியே உன் விசுவாசம் பெரிது; நீ விரும்பிக் கேட்டது. இதோ கிடைத்தது; உன் மகள் சுகமாகி விட்டாள் என்கிறார். உடனே பிசாசு பிடித்தவள் குணப்பட்டவள் ஆனாள்.

இப்படியே, நீங்களும், அத்தியந்த தாழ்மையோடும், தளம்பாத விசுவாசத்தோடும், விடாப்பிடியாயும் மன்றாடினால் உங்கள் மன்றாட்டுத் தப்பாமலே கேட்கப்படும். இந்தப் பாக்கியமான ஞான ஒடுக்க நாட்களிலே நீங்கள் முக்கியமாய்க் கேட்க வேண் டிய மன்றாட்டு ஒன்று உண்டு. அதாவது: உங்கள் ஆத்துமத்தின் உண்மையான நிலையை நீங்கள் கண்டுகொண்டு முற்றாக மனந்திரும்பிவிட வரந்தரவேணும் என்ற மன்றாட்டு. இந்த மன்றாட்டை அடிக்கடி பண்ணுங்கள் ; தக்க மனப் பக்குவங்களோடு பண்ணுங்கள். பண்ணினால், இரக்கமுள்ள ஆண்டவர் உங்களுக்கு மெய்யான மனந்திரும்புதலின் வரத்தைத் தந்து, இவ்வுலகத்திலே நீங்கள் தமக்கு நல்லூழியம் செய்யப் பண்ணி, மறு லோகத்திலே உங்களுக்குத் தமது பேரின்ப திருமுக தரிசனத்தையும் அளித்தருளுவார்.

ஆமென்.