இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தனித் தீர்வையின் கணக்கு வரையறை.

''உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி'' (லூக். 16, 2).

மரணம் எவ்வளவு நிச்சயமோ, மரணத்தின் பின் நடக்கப் போகிற தனித்தீர்வையும் அவ்வளவு நிச்சயம். யாராவது தான் என்று கூடியும் ஒருநாட் சாகவேணும் என்றதை மறுக்கக் கூடுமா? பித்துப் பிடித்தவர்கள் ஒழிய, வேறு ஒருவரும் தாங்கள் ஒருநாட் சாகவே சாகவேணும் என்பதைத் தட்டிப் பேசமாட்டார்கள்.

இனி, சாவு என்றது என்ன? ஆத்துமமானது சரீரத்தை விட்டுப் பிரிந்து போவதுதானே. பிரிந்த ஆத்துமம் தன்னைப் படைத்தவரிடத்திலே தனது சீவியத்தின் கணக்கைக் கொடுக்கப் போகாமல் விட முடியாது. இவ்வித கணக்குக் கேட்டலுக்குத்தான் தனித்தீர்வை என்ற பெயர் திருச்சபையில் வழங்கும். இதைச் சும்மா தீர்வை என்று சொல்லாமல், தனித்தீர்வை என்று சொல்லுவது என்னத்திற்காக என்றால், அவரவர் செத்த உடனே சொல்லப்படுகிற தீர்வையைத் தவிர, உலக முடிவிலே சகல மனுஷருக்கும் பொதுவான ஒரு தீர்வையும் நடப்பதாகும்.

ஆதலால், உடனுக்குடனே அவரவருக்கு நடக்கும் தீர்வைக்கு தனித்தீர்வை என்றும், கடைசி நாளிலே சகலருக்கும் ஒருங்கே வரப்போகிற பயங்கரமான நடுவுக்கு பொதுத்தீர்வை என்றும் பெயர் சொல்லப்படும். மனுஷனை உண்டாக்கிக் காப்பாற்றி அவனுக்குக் கணக்கில்லாத நன்மைகளைச் செய்துகொண்டுவருகிற அளவில்லாத வல்லமை உள்ள கர்த்தாவாகிய சருவேசுரன், தாம் உலகத்திலே தமக்குப் பணிவிடை செய்ய வைத்த ஊழியனாகிய மனுஷனிடம் கணக்குக் கேளாமல் விடமாட்டார். ''உன் உக்கிராணக் கணக் கை ஒப்புவி'' என்ற வேத வாக்கியம் இறந்து போகிற ஒவ்வொரு ஆத்துமத்துக்கும் சொல்லப்படாமற் போகாது. நாம் ஒவ்வொருவரும் பிந்தியோ முந்தியோ நமது சீவிய காலத்தின் கணக்கை ஆண்டவரிடம் ஒப்பிக்கப் போகவே போக வேண்டும்.

இந்தக் கணக்கு ஒப்பிப்போ (1) தப்பாமல் ஒரு நாள் நடக்கப் போகிறது. (2) இனிமேல் இல்லை என்ற வரையறையோடு நடக்கப் போகிறது. இப்போது நான் எடுத்துச் சொன்ன இந்த இரண்டு பிரிவிலேயும் அல்லது துறையிலேயும் இன்றையில் மாலைப் பிரசங்கம் அடங்கும். தனித்தீர்வையைப் பற்றிய தியானம், பிரியமான கிறிஸ்தவர்களே, உங்களுடைய ஆத்துமங்களுக்கு மிகவும் பிரயோசனமானது; உங்கள் ஈடேற்ற அலுவலுக்கு எவ்வளவோ உதவியானது.

நேரத்தோடு உங்களை நீங்களே நியாயந் தீர்த்துக் கொண்டால், நீங்கள் ஆண்டவருடைய நீதியாசனத்தின் முன் போய் நிற்க வேண்டிய அந்தத் திகில் உறுத்துகிற நேரத்திலே மனச் சமாதானம் நிறைந்த நம்பிக்கையோடு கணக்குக் கொடுக்கத் தக்கவர்கள் ஆவீர்கள். உங்கள் கணக்கைப் பார்த்து வைக்கிற அலுவலைப் பின் போட்டுப் பின் போட்டுக்கொண்டு வந்தாலோ, முழுக் கணக்கையும் தப்பாமல் ஆதியோடு அந்தமாய், கடைசித் தரமாய்த் தீர்க்க வேண்டிய அந்த நேரத்தில், சொல்ல முடியாத கவலைகொண்டு ஊழியுள்ள காலத் துயரத்தை அடைய வேண்டி வரும்.

ஆதலால் உங்களால் இயன்ற முழு ஊக்கத்தோடும் தாழ்மையான செப குணத்தோடும் இந்தப் பிரசங்கத்தைத் தயவாய்க் கேளுங்கள். சருவேசுரனும் அவருடைய திருமாதாவும் இந்தப் பிரசங்க வேளையில் உங்களுக்கும் எனக்கும் வேண்டிய சகல அனுக்கிரக உதவிகளையும் பண்ணுவார்களாக!(பிரியதத்தம்)