இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் தேவாலயங்கள் கடவுளின் இல்லம்

நம் தேவாலயங்கள் கடவுளின் இல்லம்" என்று அழைக்கப்படுகின்றன. இவை உண்மையாகவே அப்படி இருக்கின்றன, ஏனெனில் கடவுள்தாமே அவற்றில் தங்கி வாசம் செய்கிறார், அவர் அவற்றில் எப்போதும் காணப்படக் கூடியவராக இருக்கிறார். 

அங்கே அவர் எண்ணற்ற சம்மனசுக்களின் படையணி ஒன்றால் எப்போதும் சூழப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள், அவரை ஆராதிக்கிறார்கள், வழிபடுகிறார்கள், போற்றித் துதிக்கிறார்கள், நம் ஜெபங்களை அவருக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். பிதாப்பிதாவாகிய யாக்கோபின் காட்சியில் இது நிழலாகக் காண்பிக்கப்பட்டது. 

வெட்டவெளியான நாட்டுப் புறத்தில், இரவின் களைப்பால் மேற்கொள்ளப்பட்டு, அவர் படுத்து உறங்கினார். அப்போது பூமியின் மீது ஓர் ஏணி ஊன்றப்பட்டிருப்பதை அவர் கண்டார். அதன் உச்சி மோட்சத்தை எட்டியிருந்தது. இந்த ஏணியின் வழியாக தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். அதன் உச்சியில் யாக்கோபு கடவுளையே கண்டார். 

அவர் தம் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அச்ச நடுக்கம் கொண்டவராக, "இந்த இடம் எவ்வளவோ பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடும், பரலோகத்தின் வாசலுமாகவே இருக்கிறது!" என்றார் (ஆதி.28:16,17). மேலும் அவர் தாம் தலைக்கு வைத்துப் படுத்திருந்த கல்லை எடுத்து, அதன்மீது எண்ணெய் வார்த்து, அதைப் பலிபீடமாக நாட்டி வைத்தார். தாம் திரும்பி வந்தபோது, அவர் அதன் மீது கடவுளுக்குப் பலி செலுத்தினார். 

அது பரிசுத்த எண்ணெயாலும், க்றீஸ்மா தைலத்தாலும் அபிஷேகம் செய்யப்பட்ட பீடத்துடன் கூடிய கிறீஸ்தவ தேவாலயத்திற்கு மாதிரிகையாய் இருக்கிறது. இந்தக் கிறீஸ்தவ தேவாலயத்தைக் குறித்து, நாம் உண்மையாகவே, "இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடும், பரலோகத்தின் வாசலுமாகவே இருக்கிறது!" என்று நாம் சொல்ல முடியும். ஏனெனில் இங்கே சம்மனசுக்கள் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருக்கிறார்கள், அவர்கள் நம் மன்றாட்டுக்களை மோட்சத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். 

நம் தேவாலயங்கள், இசையாஸ் தீர்க்கதரிசியின் வழியாகக் கடவுள் எதைப் பற்றிப் பேசினாரோ, அந்த ஸ்தலமாகவே இருக்கின்றன: ''நாம் நமது மக்களைப் பரிசுத்த மலையின் மேல் கூட்டிப் போய், ஜெப ஆராதனை ஆலயத்தில் அவர்களை மனம் மகிழச் செய்வோம்; நமது பீடத்தினின்று அவர்கள் ஒப்புக் கொடுக்கும் தகனப்பலிகளும், வெட்டுப்பலிகளும் நமக்கு இன்பமுடையவையாய் இருக்கும்; ஏனெனில் நமது ஆலயமானது சகல மக்களினங்களுக்கும் ஜெப ஆராதனை ஸ்தலம் என்று அழைக்கப்படும்" (இசை. 56:7).

இதெல்லாவற்றிலிருந்தும் நாம் நம் தேவாலயங்களின் புனிதத்துவத்தையும், நாம் அவற்றிற்குச் செலுத்த வேண்டிய சங்கை மரியாதையையும் நாம் அறிந்து கொள்கிறோம். அவை சர்வேசுரனுடைய இல்லமாக இருப்பதாலும், கிறீஸ்துநாதர் திவ்விய நற்கருணையில், எண்ணற்ற சம்மனசுக்களால் சூழப்பட்டவராக, தம் ஆளுமையில் அவற்றினுள் வசிப்பதாலும், எப்படி நாம் போதுமான அளவுக்குப் பக்தியுள்ளவர்களாக இருப்பது என்றும், ஜெபத்தில் கருத்தூன்றியிருப்பது என்றும் அறியாதிருக்கிறோம். 

நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இருந்தால், அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு தேவாலயத்திற்குள் நாம் அச்ச நடுக்கத்தோடு பிரவேசிப்போம். ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தில் பிரசன்னமாகியிருக்கும் கிறீஸ்துநாதரை மிக ஆழ்ந்த வணக்கத்தோடு நாம் வழிபடுவதோடு, அங்கே இருக்கும் பரிசுத்த சம்மனசுக்களின் உதவியையும் நாம் கேட்க வேண்டும். 

இதுவே தாவீதின் வழக்கமாக இருந்தது. 'சம்மனசுக்களின் சமூகத்தில் நான் உமக்குக் கீர்த்தனம் பண்ணுவேன்" என்று அவர் பாடுகிறார் (சங்.137: 2). ஆகவே, தேவாலயத்தில் கவனமின்றி இருப்பதும், வேறு எந்த வழியிலாவது, அவமரியாதையான நடத்தையின் மூலம் கடவுளை வேதனைப் படுத்துவது, தேவ மகத்துவத்திற்கு இழுக்காகவும், கடவுளின் திரு இல்லத்திற்கு அவசங்கையாகவும் இருக்கிறது. 

தேவாலயத்தினுள் பிரவேசிக்கும் போது, தேவையற்ற எந்த ஒரு வார்த்தையையும் உச்சரியாமலும், கேளாமலும் இருப்போம் என்றும், நம்மைச் சுற்றிலும் பராக்குப் பார்க்க மாட்டோம் என்றும், இதற்கு மாறாக, மரியாதை வணக்கத்தோடு நடந்து கொள்வோம் என்றும், பக்தியோடு ஜெபித்து, நம் தேவனாகிய ஆண்டவரை ஆராதிப்போம் என்றும், நம் பாவங்களை சங்கீர்த்தனம் செய்து, தேவ இரக்கத்தை இரந்து மன்றாடுவோம் என்றும் உறுதியான பிரதிக்கினை செய்வோமாக.

மேலும், குருக்கள் மற்றும் குருநிலையினரின் ஆடம்பர அபிஷேகத்திலிருந்தும் திவ்விய பலிபூசை எவ்வளவு உன்னத மகத்துவமுள்ளது என்று நாம் அறிந்து கொள்ளலாம். (பாரம்பரிய குருத்துவ அபிஷேக ரீதிப்படி) ஒவ்வொரு குருவும் திவ்விய பலிபூசை நிறைவேற்ற அதிகாரம் பெறுவதற்கு முன் ஏழு குருத்துவப் பட்டங்களைப் பெற வேண்டும். 

முதல் நான்கு சிறிய பட்டங்கள், அவற்றைப் பெறுபவர் திருச்சபையின் ஊழியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதையும், அவர் பூசை வைக்கும் குருவுக்கு உதவி செய்யலாம் என்பதையும் குறித்துக் காட்டுகின்றன. ஆனால் அவை இரசக் கிண்ணம், அப்பத்தட்டு, திருமேனித் துகில் அல்லது சுத்திகரத் துகில் போன்றவற்றைத் தொடும் அளவுக்கு உரிமையை வழங்குவதில்லை. இவற்றிற்கு, ஐந்தாவது பட்டம், அதாவது உபதியாக்கோன் பட்டம் பெறப்பட வேண்டும்.

உபதியாக்கோனும், தியாக்கோனும், குருவும் மட்டுமே பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் திருப்பாத்திரங்களைக் கையாளவும், அவற்றைச் சுத்திகரிக்கவும் உரிமை பெற்றிருக்கிறார்கள். 

திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படுவதற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் நுணுக்கமான விதத்தில் சுத்திகரிக்கப்பட்டு, நல்ல நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவை தேவ வழிபாட்டில் அனைத்திலும் உயர்ந்த ஒரு செயலில் பயன்படுத்தப்படுகின்றன, அவை நம் ஆண்டவரின் மகா பரிசுத்த திருச்சரீரத்தாலும், திரு இரத்தத்தாலும் தொடப்படுகின்றன. 

முறையான, சுத்தமான உடுப்புகளும், பாத்திரங்களும் பயன்படுத்தப்படாமல் இருப்பது, அல்லது இந்த நோக்கத்திற்காக விசுவாசிகள் குருவுக்குத் தேவையான நிதி உதவியைத் தருவதிலிருந்து பின்வாங்குவது ஆகியவை பெருமளவுக்கு நம் பிரலாபத்திற்குரியவையாக இருக்கின்றன.