இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதர் எந்த விதத்தில் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார்? இந்தச் செயலில் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என்னென்ன?

கிறீஸ்துநாதர் எந்த விதத்தில் தமது மனிதாவதாரத்தைப் புதுப்பிக்கிறார் என்றும், இந்தச் செயலில் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என்னென்ன என்றும் நாம் இப்போது சிந்திப்போம். 

தேவ வசீகரத்திற்கு முன்பாக, குருவானவர் அப்பத்தைத் தம் கரங்களில் ஏந்தும் போது, அவர் ஓர் அப்பத் துண்டை மட்டும்தான் கையில் வைத்திருக்கிறார்; ஆனால் தேவ வசீகர வார்த்தைகளை அவர் உச்சரித்தவுடன், அதே கணத்தில் அந்த அப்பம் தெய்வீக வல்லமையால் கிறீஸ்துநாதரின் உண்மையான சரீரமாக மாறுகிறது. இரத்தமின்றி, சரீரம் வாழ முடியாது என்பதால், கிறீஸ்துநாதரின் திரு இரத்தமும் அவருடைய திருச்சரீரத்தில் இருக்கிறது. 

இவ்வாறு, ஒரு கணத்திற்கு முன் வெறும் அப்பத்தைத் தம் கரத்தில் வைத்திருந்தவர் இப்போது அதற்குப் பதிலாக, மகா உன்னத சர்வேசுரனுடைய திருச்சுதனாகிய சேசுக்கிறீஸ்து நாதரை ஏந்தியிருக்கிறார். இது உண்மையாகவே அளவற்ற விதமாக மிகப் பெரிய பரம இரகசியமாகவும், நம் புத்தியெல்லாம் கடந்த ஓர் அற்புதமாகவும் இருக்கிறது. இதில் ஒரு புதுமை மட்டுமல்ல, பல, பெரிய புதுமைகள் அடங்கியுள்ளன.

அப்பம் கிறீஸ்துநாதரின் நிஜ சரீரமாகவும், இரசம் அவரது நிஜ இரத்தமாகவும் மாற முடியும் என்பது அற்புதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அற்புதமல்லவா? தேவ வசீகரத்திற்குப் பிறகு பீடத்தின் மீது அப்பமும், இரசமும் இல்லை என்றாலும், அவற்றின் வெளி குணங்கள் நிலைத்திருப்பது அற்புதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அற்புதமல்லவா? 

தேவ வசீகரத்திற்கு முன் அவை கொண்டிருந்த அவற்றின் வடிவமும், நிறமும், சுவையும் மாறாமல் இருக்கின்றன. இந்த வெளி குணங்கள் சுபாவத்திற்கு மேலான ஒரு முறையால் மற்ற எல்லாவற்றிலிருந்தும் சார்பற்றவையாக நிலைத்திருப்பதும், அப்படியே அவை பாதுகாக்கப்படுவதும் அற்புதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அற்புதமல்லவா? 

சுவர்கள் எல்லாம் விழுந்து விட கூரை மட்டும் அந்தரத்தில் எந்தத் தாங்குதலும் இன்றி நிற்பதை விட இது ஒன்றும் சிறிய புதுமையல்ல. சிறு அப்பத்திலும், அதை விட, அதன் ஒரு சிறு துணுக்கிலும் கூட, கிறீஸ்துநாதரின் மனித சரீரம் அடங்கிவிடும் அளவுக்கு அவர் தம்மைக் குறைத்துக் கொள்ள முடிவது அற்புதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அற்புதமல்லவா?

இந்த மாபெரும் அற்புதங்கள் அனைத்தும், இங்கே சொல்லப்படாத இன்னும் பல அற்புதங்களும் நம் இரட்சணியத்திற்காக, ஒவ்வொரு பூசையிலும் தேவ வசீகர வேளையில் கிறீஸ்துநாதரால் செய்யப்படுகின்றன. இதன்மூலம் அவர் நமக்குத் தரும் நன்மைகள் அளவிட முடியாத அளவுக்கு விஸ்தாரமானவை. 

நாம் அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளின் "வெளிப்பாடுகளில்" வாசிப்பது போல, இது அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஒரு முறை, அவள் பூசை கண்டு கொண்டிருந்த போது, தேவ வசீகரத்திற்குச் சற்று முன் அவள் தரை வரைக்கும் பணிந்து வணங்கியபடி நம் ஆண்டவரிடம், "ஓ என் இனிய சேசுவே, நீர் இப்போது செய்ய இருக்கும் செயல் எவ்வளவு மதிப்பிட இயலாததாகவும், எவ்வளவு அளவுகடந்த புனிதமுள்ளதாகவும், பக்திக்குரியதாகவும் இருக்கிறது என்றால், என்னைப் போல இவ்வளவு இழிந்தவளும், தாழ்ந்தவளுமான ஒருத்தி, அந்த அதிசயத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணிய இயலாது. ஆகவே, நான் தாழ்ச்சியின் மிகத் தாழ்வான ஆழங்களுக்குள் தஞ்சமடைந்து, அங்கே, இந்தப் பரம இரகசியம் உம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் கொண்டு வரவிருக்கும் இரட்சணியத்தில் என் பங்கைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பேன்' என்றாள். 

அப்போது நமதாண்டவர், "இந்த நோக்கத்திற்காக, அதாவது, ஜீவியரும், மரித்தோருமான சகல கிறீஸ்தவர்களுக்கும் பலனுள்ளதாக இருக்கும் இந்தப் பலி தனது மாபெரும் மகத்துவத்தின் அளவுக்குத் தகுந்தபடி நல்லதொரு விளைவையும் ஏற்படுத்தும் நோக்கத்திற்காக, நீ உன் மிகக் கடினமான உழைப்புகளை என் ஊழியத்தில் பயன்படுத்துவாய் என்றால், நான் நிறைவேற்ற இருக்கும் வேலையில் நீ எனக்குப் பெருமளவில் ஒத்தாசை செய்தவள் ஆவாய்” என்று அவளுக்குப் பதிலளித்தார்.

இதே முறையில், நாமும் தேவ வசீகரத்திற்கு முன்பாக, எத்தகைய அசாதாரணமான ஓர் அற்புதத்தைக் கடவுள் நம் இரட்சணியத்திற்காகப் பீடத்தின் மீது நிகழ்த்துகிறார் என்பதையும், நாம் பங்குபெறும் இந்தப் பரிசுத்த பலியோடு நாமும் சேர்ந்து, கடவுளின் அதிமிக மகிமைக்காகவும், விசுவாசிகளின் நன்மைக்காகவும் ஒத்துழைக்க வேண்டும் என்ற ஓர் உயிருள்ள ஆசையை அவர் எப்படி நம் இருதயங்களுக்குள் தூண்டி விடுகிறார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக, அர்ச். ஜெர்த்ரூத்தின் வார்த்தைகளில் நாம் ஜெபிக்க வேண்டும்:

"ஓ என் இனிய சேசுவே, நீர் இப்போது செய்ய இருக்கும் செயல் எவ்வளவு மதிப்பிட இயலாததாகவும், எவ்வளவு அளவு கடந்த புனிதமுள்ளதாகவும், பக்திக்குரியதாகவும் இருக்கிறது என்றால், என்னைப் போல இவ்வளவு இழிந்தவளும், தாழ்ந்தவளுமான ஒருத்தி, அந்த அதிசயத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணிய இயலாது. ஆகவே, நான் தாழ்ச்சியின் மிகத் தாழ்வான ஆழங்களுக்குள் தஞ்சமடைந்து, அங்கே, இந்தப் பரம இரகசியம் உம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் கொண்டு வரவிருக்கும் இரட்சணியத்தில் என் பங்கைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பேன். 

ஓ என் இனிய சேசுவே, இந்த மகிமையான வேலையில் என்னால் மட்டும் கடவுளோடு ஒத்துழைக்க முடியுமென்றால்! ஜீவியரும், மரித்தோருமாகிய சகல கிறீஸ்தவர்களுக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படும் இந்த பலி, அதன் மேன்மைக்குத் தக்க அளவு பலன் தரும்படியாக, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு என் பலம் முழுவதையும் செலவிடுவதோடு, எத்தகைய மிகக் கடுமையான உழைப்பையும் தாங்கிக் கொள்வேன்! பூசை நிறைவேற்றுபவர்களும், காண்பவர்களுமாகிய அனைவரும் இந்த மகா பரிசுத்த பலியை உமது அதிமிக மகிமைக்காகவும், சகல விசுவாசிகளுடைய நன்மைக்காகவும் ஒப்புக் கொடுக்கும்படியாக, அவர்களுக்கு வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறேன். ஆமென்."

கிறீஸ்துநாதர் அற்புதங்களில் எல்லாம் மேலான அற்புதத்தை --அப்பத்தையும் இரசத்தையும் அவரது திருச்சரீரமாகவும், திரு இரத்தமாகவும் மாற்றும் அற்புதத்தை -- ஒரு சில வார்த்தைகளைக் கொண்டு நிறைவேற்ற குருவானவருக்கு அவர் வல்லமை தரும் போது, சம்மனசுக்களின் மீது அல்ல, மாறாக மனிதர்களின் மீது அவர் பொழிகிற அதிகாரம் எவ்வளவு மிகப் பரந்ததாக இருக்கிறது என்பதை இனி நாம் தொடர்ந்து தியானிப்போம். 

இதைப் பற்றி ஆலானுஸ் த ரூப் கூறுவதாவது: “ஒன்றுமில்லாமையிலிருந்து பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனின் வல்லமை மிகப் பெரியது; கடவுளின் திருச்சுதன் ஒரு பலியாகவும், தேவத்திரவிய அனுமானமாகவும் ஆகும்படி அவரையே பூலோகத்திற்கு வரவழைப்பவரும், இந்த பலி மற்றும் இந்த தேவத்திரவிய அனுமானத்தின் வழியாக, இரட்சகர் மனிதர்களுக்காக சம்பாதித்த பொக்கிஷங்களை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வல்லவருமான குருவின் வல்லமை மிகப் பெரியது. 

கடவுளின் மகத்துவமும், அவரது திருமாதாவின் மகிழ்ச்சியும் பெருமளவுக்கு இதில்தான் அடங்கியுள்ளது; இதுவே மோட்சவாசிகளின் பேரின்பத்தை உருவாக்குகிறது, இதுவே ஜீவியர்களின் மிக நிச்சயமான உதவியாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களின் முதன்மையான ஆறுதலாகவும் இருக்கிறது.''

தேவ வசீகர வார்த்தைகளின் மாபெரும் வல்லமை, குருவானவரின் கரங்களின் கிறீஸ்துநாதரின் மனிதாவதாரத்தின் புதுப்பித்தல், உண்மையாகவே அற்புதமானது, பெரும் வியப்பிற்குரியது! 

மேலும், கிறீஸ்துநாதரின் அதிகாரத்தில், திவ்விய பலிபூசையின் வழியாக, நம் பரலோகப் பிதாவை மகிமைப்படுத்தவும், நம் பரிசுத்த இராக்கினிக்கும், மகிமையில் இலங்கும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரவும் நாம் சலுகை பெற்றிருக்கிறோம் என்பது பற்றி நாம் அகமகிழ்ந்து களிகூர்வோமாக! இது தவிர, திவ்விய பலிபூசை ஜீவியருக்கு மிகச் சிறந்த உதவியாகவும், உலகை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அனைத்திலும் இனிய ஆறுதலாகவும் இருக்கிறது.

இங்கே, "சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார்" (அரு.3:16) என்று நாம் மீண்டும் வியந்து கூறுவோம். 

தமது திருச்சுதன் தம் மீது மனித சுபாவத்தை எடுத்துக் கொள்ளும்படி பரலோகத்திலிருந்து பிதாவானவர் அவரை அனுப்பிய போது, தாம் உலகின் மீது கொண்டுள்ள இந்த வாக்குக் கெட்டாத அன்பை அவர் முதலில் வெளிப்படுத்தினார். இப்போது, பூசையில் மீண்டும் மனிதனாகும்படி தம் திருச்சுதனைப் பரலோகத்திலிருந்து மீண்டும் அனுப்புவதன் மூலம் அவர் அதே அன்பை மீண்டும் புதிதாக, அனுதினமும் வெளிப்படுத்துகிறார். 

திருச்சுதனின் முதல் மனிதாவதாரம் செய்தது போலவே, பீடத்தின் மீது அவரது அனுதின மனிதாவதாரமும் பரலோகவாசிகளுக்கு மகிழ்ச்சி தந்து, பூலோகத்தாருக்கு இரட்சணியத்தைக் கொண்டு வருகிறது. தமது முதல் மனிதாவதாரத்தால் கிறீஸ்துநாதர் அளவிட இயலாத தேவ வரப்பிரசாதப் பொக்கிஷங்களைச் சம்பாதித்தார்; அந்த மனிதாவ தாரத்தின் புதுப்பித்தலால், பக்தியோடு பூசை செய்கிற அல்லது காண்கிற அனைவருக்கும் அந்தப் பரலோக செல்வங்கள் அனைத்தையும் அவர் பகிர்ந்தளிக்கிறார். பின்வரும் உதாரணம் இதை விளக்குகிறது: