இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கத்தோலிக்கப் பூசை விளக்கம் - கிறீஸ்துநாதர் தந்த புனிதப் பலி

பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை, தனது திரிதெந்தின் பொதுச் சங்கத்தில், கிறீஸ்துநாதர் எந்த விதமான புனிதப் பலியைத் தம் திருச்சபைக்குத் தந்து, அதை நித்திய பலியாக ஏற்படுத்தினார் என்று நமக்குப் போதிக்கிறது:

"அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரின் சாட்சியத்தின்படி, முந்தின உடன்படிக்கையின் கீழ், லேவிய குருத்துவத்தின் பலவீனத்தின் காரணமாக, அதன் பலிகள் சம்பூரணமானவையாக இருக்கவில்லை " (எபி.7:11,18) என்பதால், மெல்கி செதேக்கின் முறைமைப்படி மற்றொரு குருவானவர் எழும்புவது இரக்கங்களின் பிதாவாகிய கடவுள் மற்றொரு குருத்துவத்தை ஏற்படுத்துவது அவசியமானதாக இருந்தது. 

இதற்காக அவர் நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரை நித்திய குருவாக ஏற்படுத்துவார்; இவரோ, இந்தப் பலியை நிறைவு பெறச் செய்து, அர்ச்சிக்கப்பட வேண்டிய அனைவரையும், உத்தமமானது எதுவோ, அதை நோக்கி வழிநடத்துவார். 

ஆகவே, நம் தேவனும், ஆண்டவருமான அவர், தம் மரணத்தின் வழியாக பிதாவாகிய சர்வேசுரனுக்கு சிலுவைப் பீடத்தின் மீது நித்திய இரட்சணியப் பலியாகத் தம்மையே ஒரு முறை ஒப்புக் கொடுக்க இருந்தார் என்றாலும், அவருடைய மரணத்தோடு அவரது குருத்துவம் முற்றுப்பெறக் கூடாததாக இருந்ததால், தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அவர் முன்னறிவிக்கப்பட்ட மெல்கிசெதேக்கின் முறைப்படியான குருவாகத் தம்மையே பிரகடனப்படுத்திக் கொண்டு, பிதாவாகிய சர்வேசுரனுக்கு, அப்ப, இரசத்தின் குணங்களுக்குள் தமது சொந்த சரீரத்தையும், இரத்தத்தையும் ஒப்புக் கொடுத்தார். 

இதே பலிப் பொருட்களின் வெளித் தோற்றத்தின் கீழ் அவர் தம் சொந்த சரீரத்தையும், இரத்தத்தையும், புதிய ஏற்பாட்டின் குருக்களாகத் தாம் அதே நாளில் ஏற்படுத்திய தம் அப்போஸ்தலர்களுக்கு உணவாகவும், பானமாகவும் தந்தார். 

மனித சுபாவத்திற்குத் தேவைப்படுகிறபடி, தமது நேசத்திற்குரிய மணவாளியாகிய திருச்சபைக்கு, காணக்கூடிய ஒரு பலியை அவர் விட்டுச் சென்றார். இதன்படி, சிலுவையின் மீது ஒரு முறை நிறைவேற்றப்பட வேண்டியிருந்த இரத்தப் பலி, உலக முடிவு வரை தொடர்ந்து இரத்தம் சிந்தாத பலியாகத் திருச்சபையின் பலிபீடங்களின் மீது நிறைவேற்றப்படும் படியாகவும், அதன் நினைவு உலக முடிவு வரை நிலைத்திருக்கும் படியாகவும், அதன் பலன் மிக்க பேறுபலன், நாம் தினமும் கட்டிக் கொள்ளும் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கடவுளுக்குச் செலுத்தப்படும் படியாகவும், அவர் பூசைப் பலியை உண்டாக்கினார். 

"என் நினைப்புக்காக இதைச் செய்யுங்கள்'' (லூக். 22:19) என்ற வார்த்தைகளைக் கொண்டு, அவர் தம் அப்போஸ்தலர்களை இந்தக் குருத்துவத்தில் தமது ஸ்தானாதிபதிகளாக ஏற்படுத்தி, இந்தப் பலியைத் தொடர்ந்து நிறைவேற்ற அவர்களுக்குக் கட்டளையிட்டார். இந்த விதமாகவே கத்தோலிக்கத் திருச்சபை எப்போதும் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டுள்ளது. அப்படியே அது போதித்தும் வந்துள்ளது'' (திரிதெந்தின் பொதுச் சங்கத்தின் 22-ம் அமர்வு, அத். 1).

பரிசுத்த திருச்சபை இன்னும் அதிகமாக நமக்குக் கற்பிக்கிறது. அதாவது, கடைசி இராப் போஜனத்தின் போது, கிறீஸ்துநாதர் அப்பத்தையும், இரசத்தையும் தம் திருச்சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றியது மட்டுமின்றி, அவர் அவைகளைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு உன்னத பலியாகவும் ஒப்புக்கொடுத்து, தமது சொந்த ஆளுமையில் புதிய ஏற்பாட்டுப் பலியையும் ஸ்தாபித்து நியமம் செய்தார். 

மெல்கிசெதேக்கின் முறைமைப்படி தம்மை ஒரு குருவாகக் காண்பிப்பதற்காகவும் அவர் இப்படிச் செய்தார். இந்த மெல்கி செதேக்கைப் பற்றிப் பரிசுத்த வேதாகமம்: "சாலேமின் இராஜாவும், உன்னதக் கடவுளின் குருவுமாயிருந்த மெல்கிசெதேக் அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் கையில் ஏந்தி வந்து, அபிராமை ஆசீர்வதித்தார்” (ஆதி.14:18) என்று கூறுகிறது. 

மெல்கிசெதேக் மகா உன்னத சர்வேசுரனுக்கு பலி ஒப்புக்கொடுத்தார் என்று இந்த வேதாகம வார்த்தைகள் நேரடியாகக் கூறவில்லை, என்றாலும் தொடக்கத்திலிருந்தே கத்தோலிக்கத் திருச்சபை இதை இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளது. 

திருச்சபைத் தந்தையரும் இதற்கு இப்படித்தான் விளக்கம் தந்திருக்கிறார்கள். "நீர் என்றென்னறும் மெல்கிசெதேக் என்பவருடைய முறைமையின்படி குருவாயிருக்கிறீர் என்று ஆண்டவர் ஆணையிட்டார், அதைப் பற்றி அவர் வருந்தவுமில்லை" என்று தாவீதரசர் கூறுகிறார் (சங்.109:4). 

கிறீஸ்துநாதரும், மெல்கிசெதேக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்கள் என்பது அர்ச். சின்னப்பர் எபிரேயருக்கு எழுதிய, "எந்தக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப் பட்டிருக்கிறார்" (எபி. 8:3) என்ற வார்த்தைகளிலிருந்து விளங்குகிறது. 

"எந்தக் குருவும் மனிதர்களுக்குள்ளே தெரிந்து கொள்ளப்பட்டு, காணிக்கைகளையும் பாவங்களுக்காகப் பலிகளையும் செலுத்தும்படி தேவ ஆராதனைக்கடுத்த காரியங்களில் மனிதர்களுக்குச் சனுவாக ஏற்படுத்தப்படுகிறார்" (எபி.5:1). 

கிட்டத்தட்ட இதன் தொடர்ச்சியாக, "ஆரோனைப்போல் சர்வேசுரனாலே அழைக்கப்பட்டாலொழிய ஒருவனும் இந்த மகிமைக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. அப்படியே கிறீஸ்துநாதரும் குருவாகும்படி தம்மைத் தாமே உயர்த்தவில்லை. ஆனால்: நீர் என்னுடைய குமாரன். இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன் என்று அவரை நோக்கிச் சொன்னவரே அவரை உயர்த்தினார் (சங்.2:7). 

அப்படியே வேறோரிடத்திலும்: நீர் மெல்க்கிசதேக்கின் முறைமையின்படியே என்றென்றைக்கும் குருவாய் இருக்கிறீர் என்று திருவுளம் பற்றுகிறார்" என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். 

மீளவும்: "சம்பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்பட்டிருக்கிற யாவருக்கும் நித்திய ஈடேற்றத்தின் காரணராகி, மெல்க்கிசதேக்கின் முறைமையின்படியே பிரதான குரு என்று சர்வேசுரனால் நாமம் சூட்டப்பட்டார். 

இந்த மெல்கிசதேக் கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம். ஆயினும் நீங்கள் கேட்கச் சக்தியற்றவர்களாகையால், அதை விளங்கப் பண்ணுவது கூடாத காரியம்” (எபி.5:9-11) என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வேதாகமப் பகுதிகளிலிருந்து, கிறீஸ்துநாதரும், மெல்கிசெதேக்கும் பிரதான குருக்களாக இருந்ததால், இவர்கள் இருவரும் மெய்யான சர்வேசுரனுக்கப் பலிகளைச் செலுத்தினார்கள் என்பது தெளிவாகிறது. 

ஆபிரகாமும், முற்காலத்தில் மெய்யான தேவனை ஆராதித்த மற்றவர்களும் செய்தது போல, மெல்கிசேதேக் மிருகங்களை பலியாக ஒப்புக்கொடுக்கவில்லை. மாறாக, இஸ்பிரீத்து சாந்துவின் ஏவுதலின்படியும், அக்கால வழக்கத்திற்கு மாறுபட்ட விதத்திலும் செயல்பட்ட அவர், சில ஜெபங்களையும், சடங்கு களையும் கொண்டு அப்ப, இரசத்தை அர்ச்சித்து, அவற்றை எழுந்தேற்றம் செய்து, கடவுளுக்கு ஏற்புடைய ஒரு பரிசுத்த பலியாக, அவற்றைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். 

இவ்வாறு, அவர் இயேசுக்கிறீஸ்துவுக்கு மாதிரிகை ஆனார், அவரது காணிக்கை, புதிய உடன்படிக்கையின்கீழ் சேசுக்கிறீஸ்துநாதருடைய இரத்தம் சிந்தாத பலிக்கு மாதிரிகையாக ஆனது. இனி, பலி மிருகங்களைக் கொன்று பலி ஒப்புக்கொடுத்த ஆரோனின் முறைப்படி பிதாவாகிய சர்வேசுரன் கிறீஸ்துநாதரைப் பிரதான குருவாக அபிஷேகம் செய்யவில்லை. மாறாக, அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த மெல்கி செதேக்கின் முறைமையின் படியே அவர் அவரைப் பெரிய குருவாக ஏற்படுத்தினார். இதிலிருந்து, அவரும் தம் வாழ்நாளின் போது தமது குருத்துவ அலுவல்களைச் செயல்படுத்தி வந்தார், கடவுளுக்கு அப்ப, இரசப் பலி ஒன்றைச் செலுத்தி வந்தார் என்பது விளங்குகிறது.

கிறீஸ்துநாதர் எப்போது மெல்கி செதேக்கின் முறைப்படி தமது குருத்துவத்தைச் செயல்படுத்தினார் என்று நாம் கேட்கிறோம். கடைசி இராப் போஜனத்தின் போது, அவர் அப்பத்தை எடுத்து, அதை ஆசீர்வதித்து, தம் சீடர்களிடம்: "இதை வாங்கிப் புசியுங்கள்; இது என் சரீரமாயிருக்கிறது" என்றபோதும் (மத். 26:26), அப்படியே அவர் திராட்சை இரசமிருந்த கிண்ணத்தை எடுத்து, ஆசீர்வதித்துத் தம் சீடர்களுக்கு அளித்து, "நீங்கள் எல்லாரும் இதிலே பானஞ் செய்யுங்கள். ஏனெனில் இது பாவங்களின் பொறுத்தலினிமித்தம், அநேகருக்காகச் சிந்தப்படும் புதிய உடன்படிக்கையின் என் இரத்தமாயிருக்கின்றது... இதை என் நினைப்புக்காகச் செய்யுங்கள்" என்று கூறிய போதும் (மத். 26:27, 28; லூக் 22:19), அவர் தம் குருத்துவத்தைச் செயல்படுத்தினார்.

ஆகவே, அந்த சமயத்தில் கிறீஸ்துநாதர் மெல்கி செதேக்கின் முறைமையின்படி தமது குருத்துவ அதிகாரத்தைச் செயல்படுத்தினார். ஏனெனில், அப்போது அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், தமது வாழ்நாள் முழுவதும் அவர் அதை ஒருபோதும் செய்திருக்க மாட்டார். அப்படி இருந்திருந்தால், அவர் மெல்கிசெதேக்கின் முறைமையின்படி ஒரு குருவாக இருந்திருக்க மாட்டார். 

அர்ச். சின்னப்பர் சேசுவின் குருத்துவத்தை எவ்வளவு உயர்வான வார்த்தைகளில் எடுத்துரைக்கிறார் என்று காணுங்கள்: ''மற்றவர்கள் ஆணையின்றிக் குருக்களானார்கள். இவரையோ ஆண்டவர்: நீர் எந்நாளும் குருவாயிருக்கிறீரென்று நான் ஆணையிடுகிறேன். அதனிமித்தம் நான் மனம் வருந்துகிறதில்லை யென்று சொல்லி ஆணையின் பேரில் குருவாக்கினார். இவரோ நித்தியகாலம் நிலைத்திருப்பவரானதால் என்றென்றைக்கும் குருத்துவம் உள்ளவராயிருக்கிறார்" (எபி.7:20,21,24). 

இவ்வாறு, திரிதெந்தின் பொதுச் சங்கத்தில் கத்தோலிக்கத் திருச்சபை கற்பிக்கும் காரியத்திலுள்ள உண்மையை நாம் கண்டு பிடிக்கிறோம்: "கத்தோலிக்கத் திருச்சபை எப்போதும் புரிந்து கொண்டு, கற்பித்து வந்துள்ள முறைப்படி, அவர் கடைசி இராப்போஜனத்தில், அப்ப, இரச குணங்களுக்குள் தம் திருச்சரீரத்தையும், இரத்தத்தையும் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்ததோடு, "இதை என் நினைப்புக்காகச் செய்யுங்கள்" என்ற போது, இந்த அடையாளங்களின் கீழ் தமது திருச்சரீரத்தையும், இரத்தத்தையும் தொடர்ந்து ஒப்புக்கொடுத்து வருமாறு, அவர் தமது அப்போஸ்தலர்கள் மற்றும் அவர்களது ஸ்தானாதிபதிகளுக்கு குருத்துவத்தை அளித்து, அவர்களுக்குக் கட்டளையிட்டார். 

எல்லா இடங்களிலும், தமது திருநாமத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்று மலாக்கியாஸ் தீர்க்கதரிசியின் வழியாக ஆண்டவர் முன்னுரைத்த பரிசுத்த பலி இதுவே. அதுவே பலி ஒப்புக்கொடுப்பவர்களின் தகுதியின்மையாலோ, அவர்களுடைய துர்க்குணத்தாலோ ஒருபோதும் கறைப்படுத்தப்பட முடியாததாக இருக்கிறது" (அமர்வு 22, அத். 1).

இந்தப் பரிசுத்த பலியின் ஒப்புக்கொடுத்தல், மலாக்கியாஸ் தீர்க்கதரிசியால், பின்வரும் வார்த்தைகளில் முன்னுரைக்கப்பட்டது: "உங்கள் மட்டில் எம் மனது திருப்தி கொள்ளாது; உங்கள் கரத்தினின்று காணிக்கைகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர். சூரியன் உதயந்தொட்டு அஸ்தமனம் வரைக்கும் நமது நாமம் சனங்கள் நடுவில் மகத்தானதாயிருக்கின்றது; எவ்விடத்தும் பலியிடப்பட்டும், நமது நாமத்துக்குச் சுசிகர நிவேதனம் (பரிசுத்தமான பலி) நடந்து வருகின்றது; ஏனெனில், நமது நாமம் சனங்களுக்குள் அவ்வளவு சிறந்ததா யிருக்கின்றது" (மலாக் 1:10-11). 

இந்த வேதாகம வார்த்தைகள் பரிசுத்த பூசைப்பலியையே குறிக்கிறது என்று திருச்சபைத் தந்தையர் அனைவரும் கருதுகிறார்கள். ஏனெனில் இந்தத் தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டில் அல்ல, புதிய ஏற்பாட்டில்தான் நிறைவேறுகிறது. 

மேலும், "நீர் நம்முடைய சுதன், இன்று நாம் உம்மை ஜனிப்பித்தோம். நீர் நம்மிடத்தில் கேளும்; உமக்குச் சுதந்திரமாக ஜனங்களையும், உமக்குச் சொந்தமாகப் பூமியின் எல்லைகளையும் கொடுப்போம்" (சங். 2:7-8) என்று பிதாவாகிய சர்வேசுரன் தம் திருச்சுதனிடம் கூறிய வார்த்தைகளும் புதிய ஏற்பாட்டில்தான் நிறைவேறின. 

அப்போஸ்தலர்களின் போதனையால் புறஜாதியார் விசுவாசத்திற்கு மனந்திருப்பப்பட்டபோது இது நிறைவேறியது. இங்கே மலாக்கியாஸால் முன்னுரைக்கப்பட்டுள்ள பலி, கத்தோலிக்கரல்லாதோரல் வலியுறுத்தப்படுவது போல, சிலுவையின் மீது கிறீஸ்துநாதரால் நிறைவேற்றப்பட்ட பலியைக் குறிப்பது அல்ல. 

ஏனெனில், சிலுவைப் பலி, தீர்க்கதரிசியானவர் அறிவிப்பது போல எல்லா இடங்களிலுமல்ல, மாறாக, கல்வாரி என்னும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் நிறைவேறியது. இது ஸ்துதிப் பலி அல்லது நற்செயல்களின் பலி என்றும் நாம் அனுமானிக்க முடியாது, ஏனெனில், இவை பலி என்னும் வார்த்தையின் முறையான பொருளின்படி, உண்மையான பலிகளாக இருப்பதில்லை, அவை, தீர்க்கதரிசியானவர் கூறுவது போல, எப்போதும் "ஒரு பரிசுத்த பலியாக" இருப்பதுமில்லை . "உமக்கு முன்பாக, எங்கள் நீதிச் செயல்கள் எல்லாம் அசுத்தக்கந்தல் போலாம்" (இசை. 64:6).

இதன் காரணமாக, புதிய ஏற்பாட்டின் ஒரே, உண்மையான பலியாக, தன்னிலேயே முற்றிலும் மாசற்றதும், பரிசுத்தமானதுமாகிய பலியாக, எல்லாக் காலங்களிலும், எவ்விடத்திலும், கிறீஸ்து நாதராலேயே அவரது குருக்களின் வழியாகப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் பலியாக, இருக்கிறது என்று இந்தத் தீர்க்கதரிசனம் நேரடியாகவே குறித்துக் காட்டுகிறது. 

கிறீஸ்துநாதர்தான் பிரதான குருவாக இருக்கிறார்; நம் குருக்கள் அவருடைய ஊழியர்கள் மட்டுமே. ஒரு காணக்கூடிய பலியை ஒப்புக்கொடுக்க அவர் அவர்களது கரங்களையும், அவர்களது உதடுகளையும் பயன்படுத்திக் கொள்கிறார். கிறீஸ்துநாதர் தமது மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை, நமக்கோ, நம் ஊனக் கண்களால் காணப்படக் கூடிய ஒரு பலிப்பொருள் அவசியம் என்பதால், தமது திவ்விய பலியை ஒப்புக்கொடுப்பதில் அவர் குருவின் ஒத்துழைப்பைப் பயன்படுத்துகிறார். 

இந்தப் பலி உலகம் முடியும் வரை தொடர்ந்து ஒப்புக்கொடுக்கப்படும்.

பூசை என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் காணப்பட வில்லை என்பது கத்தோலிக்கர்களாகிய நமக்கு எதிரான ஒரு கண்டனமாக கத்தோலிக்கல்லாதாரால் நம்மீது சாட்டப்படுகிறது. சந்தேகமின்றி, இது உண்மைதான். 

ஆனால் தமத்திரித்துவம் என்ற வார்த்தையும் பூசை என்ற வார்த்தையைப் போல வேதாகமத்தில் எங்கும் காணப்படவில்லை. ஆனாலும் இந்த மகா பரிசுத்த பரம இரகசியத்தை விசுவசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். 

ஞாயிற்றுக்கிழமைகளைப் பரிசுத்தமாக அனுசரிக்க வேண்டும் என்றோ, குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட வேண்டும் என்றோ , வேதாகமம் கூறுகிறது. ஆயினும் இந்த இரண்டுமே நமக்கு அதிகாரபூர்வமான கடமையாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். 

திருச்சபையின் தொடக்க காலப் பாப்பரசர்கள் மற்றும், வேதபாரகர்களின் எழுத்துக்களில், பூசை என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்; புனித இராயப்பரின் மூன்றாவது ஸ்தானாதிபதியான அர்ச். கிளமெண்ட், மற்றும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த எவரிஸ்துஸ் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகிய பாப்பரசர்களின் எழுத்துக்களை ஆராய்ந்து பாருங்கள். 

அர்ச் அகுஸ்தீனாரும், அர்ச். அமிர்தநாதரும், அர்ச் கிறீசோஸ்தோமும், மற்ற பல திருச்சபைத் தந்தையரும் புதிய ஏற்பாட்டுப் பலியைப் பற்றிப் பேசும்போது பூசை என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். 

"நான் என் இடத்திலேயே இருந்து, பூசை நிறைவேற்றத் தொடங்கினேன். பலியின் போது, நம் உதவிக்கு வருமாறு சர்வ வல்லபரான சர்வேசுரனை நான் மன்றாடினேன்" என்று அர்ச். அமிர்தநாதர் எழுதுகிறார். 

அர்ச். அகுஸ்தீனாரோ, "திவ்விய பலி பூசையில் வாசிக்கப்படும்படி முறைப்படுத்தப்படும் வாசகங்களில் நாம் காண்பதாவது...'' என்று கூறுகிறார். 

கிறீஸ்துவுக்கு முன்னூறு வருடங்களுக்குப் பின் வாழ்ந்த இந்தத் திருச்சபையின் வேத பாரகர்கள் இருவரும் பூசை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அச்சமயத்தில் இந்த வார்த்தைப் பொதுப் புழக்கத்தில் இருந்தது என்பதை இது காட்டுகிறது.