இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பழைய ஏற்பாட்டில் நம் பூசையின் பல வகையான முன்னடையாளங்களாக இருந்தவை எப்படி நிறைவேறுகின்றன

ஆனால் இந்தப் பரம இரகசியங்களைத் தொடர்ந்து விளக்குவதற்கு முன், அடுத்ததாக, பழைய ஏற்பாட்டில் நம் பூசையின் பல வகையான முன்னடையாளங்களாக இருந்தவை எப்படி நிறைவேறுகின்றன, அவை எப்படிப் புதுப்பிக்கப்படுகின்றன என்று நான் காட்டுவேன்.

முதலாவது அடைளாயம் பக்தியுள்ளவரும், நீதிமானுமாகிய ஆபேல் செலுத்திய பலி. 

தமது மெய்யான பக்தியின் காரணமாகவும், தேவ மகத்துவத்திற்குத் தாம் கீழ்ப்பட்டவர் என்பதை ஏற்றுக் கொள்ளும் அடையாளமாகவும், தமது மந்தையின் தலையீற்றுகளை அவர் தமது தேவனாகிய ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். இந்தப் பலி கடவுளுக்குப் பிரியமானதாக இருந்தது என்பதை, "ஆண்டவர் ஆபேலையும் அவனது காணிக்கைகளையும் அங்கீகரித்தார்'' (ஆதி. 4:4) என்ற வேதாகம வார்த்தைகளைக் கொண்டு நாம் அறிந்து கொள்கிறோம். 

அல்லது இந்த வாக்கியம் வேறு விதமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பது போல, "ஆண்டவர் ஆபேலின் பலியைத் தகனமாக்கினார்." அதாவது, பக்திமானான ஆபேல் பீடத்தின் மீது விறகை அடுக்கி, அதன் மீது தம் காணிக்கையை வைத்து, தமது ஜெபங்களின் மூலம் அதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தபோது, வானினின்று நெருப்பு இறங்கி, கொல்லப்பட்டிருந்த செம்மறிக் குட்டியின் மாமிசத்தைச் சுட்டெரித்தது. 

திவ்விய பலிபூசையிலும் இதுவே நிகழ்கிறது; குருவானவர் பீடத்தின் மீது அப்ப, இரசக் காணிக்கைகளை ஒப்புக்கொடுத்து, அவற்றிற்கு மேலாக தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும்போது, தெய்வீக அக்கினியாகிய இஸ்பிரீத்து சாந்துவானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, அவற்றைக் கிறீஸ்துநாதரின் திருச்சரீரமாகவும், திரு இரத்தமாகவும் மாற்றுகிறார். 

ஆபேலின் பலி சர்வ வல்லபரான கடவுளின் கண்களில் தயவு பெற்றது; கிறீஸ்தவ பலியோ அவரது கண்களுக்கு ஒப்பற்ற விதமாக, அதிக இன்பம் தருவதாக இருக்கிறது. ஏனெனில் பலி ஒப்புக்கொடுக்கும் குரு திவ்விய அப்பத்தை எழுந்தேற்றம் செய்து, சர்வேசுரனுக்கு அதை ஒப்புக்கொடுக்கும் போது, தாம் சேசுநாதரின் ஞானஸ்நானத்தின்போது பேசிய அதே வார்த்தைகளைப் பரலோக பிதா உச்சரிக்கிறார்: "என் நேச குமாரன் இவரே, இவர்பேரில் நான் பூரண பிரியமாயிருக்கிறேன்" (மத். 3:17).

பூசையின் இரண்டாவது முன்னடையாளம் பிதாப்பிதாவாகிய நோவே செலுத்திய பலியாகும். 

அதைப் பற்றிப் பரிசுத்த வேதாகமத்தில் நாம் இப்படி வாசிக்கிறோம் : "நோவே ஆண்டவருக்கு ஒரு பீடத்தைக் கட்டி, அதன்மேல் சதுர்பாக மிருகங்களிலும், சுத்தப் பறவைகளிலும் பலவற்றை எடுத்து, சர்வாங்க தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தான். ஆண்டவரோ அவற்றைச் சுகந்த பரிமளமாக ஒப்புக்கொண்டு “நாம் இனி மனிதன் நிமித்தமாகப் பூமியை நிச்சயம் சபிப்பதில்லை ” என்று திருவுளம் பற்றினார்” (ஆதி. 8:20, 21). 

இனி, கடவுளின் கடுஞ்சினம் தணிந்து போகும் அளவுக்கு நோவேயின் பலி கடவுளுக்கு மிகவும் பிரியமானதாக இருந்தது என்றால், அவரது ஏக சுதன் ஓர் இனிய பலியாக அவருக்கு ஒப்புக்கொடுக்கப்படும் புதிய ஏற்பாட்டுக் குருவின் பலி, அவருக்கு இன்னும் எவ்வளவு அதிகப் பரியமானதாக இருக்கும்!

பூசையின் பழைய ஏற்பாட்டு முன்னடையாளங்களில் மூன்றாவதாக, பரிசுத்த பிதாப்பிதா ஆபிரகாமின் பலியை நாம் காண்கிறோம். 

இவர் ஒரு முறை தம் மகன் ஈசாக்கையே ஒப்புக்கொடுக்கத் துணிந்தார். இவரைப் பற்றிப் பரிசுத்த வேதாமகத்தில் அடிக்கடி, "அவர் ஆண்டவருக்கு ஒரு பீடத்தைக் கட்டி, கடவுளுடைய திருநாமத்தைத் தொழுது கொண்டார்" என்று கூறப்பட்டுள்ளது (ஆதி. 12:8). 

ஈசாக் மற்றும் யாக்கோபைப் பற்றியும் இந்த வார்த்தைகளை நாம் சொல்லலாம். இவர்கள் கடவுளின் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களாக இருந்தார்கள். அவருடைய எல்லா ஊழியர்களையும் போல, ஆண்டவருக்குத் தகனப்பலிகளையும், சாதாரணப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது. 

புதிய ஏற்பாட்டுக் குருக்கள் அனைவரும் பழைய ஏற்பாட்டின் இந்த மாபெரும் பிதாப்பிதாக்களைக் கண்டு பாவிப்பவர்களாகவும், கடவுளின் மிகுந்த பிரியத்திற்குரிய பூசைப் பலியை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு இடங்களிலும் உன்னத சர்வேசுரனுக்கு பக்தியோடு ஒப்புக்கொடுப்பதன் மூலம் அந்தப் பிதாப்பிதாக்களின் முன்மாதிரிகையை இவர்கள் நெருக்கமாகப் பின்பற்றியிருக்கிறார்கள். 

இந்த வழக்கம் இன்று வரைக்கும் கூட, இன்னும் அதிக பக்தியார்வத்தோடு தொடர்கிறது. ஏனெனில் உண்மையான பக்தியுள்ள ஒவ்வொரு குருவுக்கும் தினமும் கடவுளுக்குப் பூசைப் பலி ஒப்புக்கொடுப்பது இப்போது வழக்கமாக இருக்கிறது.

பூசையின் நான்காவது பழைய ஏற்பாட்டு முன்னடையாளம் மெல்கி செதேக்கின் பலியாகும். 

இவர் அரசராகவும், உன்னதக் கடவுளின் குருவாகவும் இருந்தார். பிதாப்பிதாவாகிய அபிராம் தம் எதிரிகளைக் கொன்று வெற்றிவீரராகத் திரும்பி வந்தபோது, இவர் நன்றியறிந்த தோத்திரமாகக் கடவுளுக்கு ஒரு புதிய பலியை ஒப்புக்கொடுத்தார். அது அப்ப, இரசப் பலியாக இருந்தது, விசேஷ வடிவங்களோடும், சடங்குகளோடும் அது ஒப்புக்கொடுக்கப் பட்டது. இந்நூலின் முதல் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது போல, மெல்கிசெதேக் கிறீஸ்துநாதரின் மாதிரிகையாகப் பரிசுத்த வேதாகமத்தில் குறித்துக் காட்டப்படுகிறார்.

ஆரோனாலும், மோயீசனின் திருச்சட்டத்தைச் சார்ந்த மற்ற எல்லாக் குருக்களாலும் ஒப்புக்கொடுக்கப்பட்ட பலி, ஐந்தாவது வகையாகும். 

கடவுளாலேயே வழங்கப்பட்ட இந்தத் திருச்சட்டம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன், பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள், சுபாவ ஒளியால் வழிநடத்தப்பட்டு, தகனப்பலிகளையும், மற்ற பலிகளையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து வந்தார்கள். 

மோயீசனின் திருச்சட்டத்தில், கடவுள் ஒட்டுமொத்த யூத இனத்தாலும் மூன்று வகையான பலிகள் தமக்கு ஒப்புக்கொடுக்கப் பட வேண்டுமென நியமம் செய்தார். அவை தகனப் பலிகள், சமாதானப் பலிகள், பாவப் பரிகாரப் பலிகள் ஆகியவையாகும். மாசுமறுவற்ற இரண்டு செம்மறிக் குட்டிகள் ஜெருசலேமிலுள்ள தேவாலயத்தில் தினமும் அவருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியிருந்தது. 

யூதர்களின் இந்தப் பலிகள் கிறீஸ்துநாதரின் காலம் வரையிலும் நீடித்தன. இவை அனைத்தும் சிலுவைப் பலியைத் தெளிவாக முன் நிழலிட்டுக் காட்டின. கிறீஸ்துநாதரின் மரணத்திற்குப் பின் இவை நின்றுபோயின. ஏனெனில் யூதப் பலிகள் கிறீஸ்தவப் பலியில், அதாவது பூசைப் பலியில் ஒன்றாகக் கலந்து விட்டன.

இந்தப் பழங்காலப் பலிகள் அனைத்தும், குறிப்பாக ஆபேல், ஆபிரகாம், மற்றும் பெரிய குருவாகிய மெல்கி செதேக் ஆகியோரின் பலிகளும், பூசையில் விசேஷமாகக் குறிப்பிடப்படுகின்றன. 

தேவ வசீகரத்திற்குப் பிறகு, குருவானவர், ''ஆண்டவரே தேவரீருடைய அடியார்களும், உமது பரிசுத்த மக்களுமாகிய நாங்கள்... ஒரு தூய்மையான பலியும், பரிசுத்த பலியும், மாசற்ற பலியுமாக நித்திய ஜீவியத்தின் பரிசுத்த அப்பத்தையும், நித்திய இரட்சணியத்தின் பாத்திரத்தையும் தேவரீருடைய உன்னத மகத்துவத்திற்கு ஒப்புக் கொடுக்கிறோம். இவற்றின் மீது தேவரீர் இரக்கமும் சாந்தமுமுள்ள முகத்தோடு கண்ணோக்கியருளி, நீதிமானாகிய உமது தாசன் ஆபேலின் காணிக்கைகளையும், எங்கள் பிதாப்பிதாவாகிய அபிரகாமின் பலியையும், உமது பெரிய குருவாகிய மெல்கி செதேக் தேவரீருக்கு ஒப்புக்கொடுத்த பரிசுத்த பலியையும், மாசற்ற பலிப் பொருளையும் ஏற்றுக்கொள்ளத் தயை கூர்ந்தது போல, இவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயை செய்தருளும் " என்று ஜெபிக்கிறார். 

இந்தத் தனது வழிபாட்டு வார்த்தைகளின் மூலம் பரிசுத்த திருச்சபை, பழைய ஏற்பாட்டுப் பலிகள், பரிசுத்த பூசைப் பலியின் மாதிரிகைகளாக இருந்தன என்றும், அதனால் அவை மகா உன்னத சர்வேசுரனுக்கு ஏற்புடையவையாகவும், பிரியமானவையாகவும் இருந்தன என்று அறிக்கையிடுகிறது.

சில பக்தியுள்ள கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாத பலரும், இந்த ஜெபத்தை எதிர்க்கிறார்கள், அல்லது இந்த ஜெபத்தால் இடறலும் அடைகிறார்கள். ஏனெனில், கடவுள் ஆபேல், அபிரகாம், மெல்கிசெதேக் ஆகியோரின் பலிகளை ஏற்றுக் கொள்ளத் தயைகூர்ந்த அதே முறையில், புதிய ஏற்பாட்டுக் குரு தமது பலியையும் தயவுகூர்ந்து ஏற்றுக்கொள்ளுமாறு கடவுளிடம் மன்றாடுவது போன்ற தோற்றத்தை இந்த ஜெபம் ஏற்படுத்துவதாக இவர்கள் நினைக்கிறார்கள். 

ஆனால், கிறீஸ்துநாதரின் திருச்சரீரமும், இரத்தமும் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் பூசைப் பலி, பழைய ஏற்பாட்டுப் பிதாப்பிதாக்களால் அவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மிருகங்கள் அல்லது அப்ப, இரசப் பலிகளை விட அவருக்குப் பாரதூரமான அளவுக்கு, அதிகப் பிரியமானதாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

ஆயினும், குரு கடவுளுக்குத் தாம் ஒப்புக்கொடுக்கும் பலிப் பொருளானவரைத் தயவோடு கண்ணோக்கியருளும்படி கடவுளை மன்றாடவில்லை என்பதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. ஏனெனில், அவர் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும் பலிப் பொருளாகிய அவரது பிரிய நேச குமாரனாகிய சேசுக்கிறீஸ்துநாதர் கடவுளின் பார்வையில், எந்த ஒரு சிருஷ்டியையும் விட ஒப்பற்ற விதமாக அதிகம் விலைமதிக்கப்பட முடியாதவராக இருக்கிறார். 

குரு கடவுளிடம் கேட்பதெல்லாம், தாம் இந்தப் பலியை ஒப்புக்கொடுக்கும் வகையிலும், முறையிலும், அதைக் கடவுள் தயவோடு ஏற்றுக்கொள்ளும்படியாக மட்டுமே. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆபேலும், ஆபிரகாமும், மெல்கிசெதேக்கும் அவருக்குச் செலுத்திய வழிபாட்டை அவர் ஏற்றுக் கொண்டது போலவே தாம் ஒப்புக்கொடுக்கும் பலியையும் ஏற்றுக்கொள்ளும் படியாக அவர் மன்றாடுகிறார். 

இவ்வாறு, இந்தக் காரியத்திலுள்ள முக்கியக் கருத்து, பலிப் பொருளானவரின் தகுதி அல்ல, ஏனெனில் அது எந்த விதமான விவாதத்திற்கும் அப்பாற்பட்டது. மாறாக, பலியை ஒப்புக்கொடுக்கும் குருவின் பக்தியும், அவருடைய ஜெபங்களோடு தங்கள் ஜெபங்களை இணைக்கும் விசுவாசிகளின் திருக்கூட்டத்தின் பக்தியுமே இந்த ஜெபத்தில் குறிப்பிடப்படுகிறது.