இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

செம்மறிப்புருவையானவர் பரம இரகசிய முறையில் ஒவ்வொரு பூசையிலும் புதிதாகப் பலியாக்கப்படுகிறார்

அமெரும்னஸ் என்ற பெயருள்ள ஒரு சாராசீனிய அரசன் ஒரு முறை தன் மருமகனை அம்ப்லோனா பட்டணத்திற்கு அனுப்பினான். அங்கே ஓர் அற்புதமான தேவாலயம் கட்டப்பட்டு, அர்ச். ஜார்ஜியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. 

தொலைவிலிருந்து இந்த தேவாலயத்தைக் கண்டதும் அந்த சராசீனியன் தன் ஊழியர்களிடம், அங்கே ஒட்டகங்களுக்குத் தொழுவம் அமைக்கவும், பீடத்தின் மீது ஒட்டகங்களுக்கான தீவனத்தை வைக்கவும் உத்தரவிட்டான். அங்கு வந்து சேர்ந்ததும், அவர்கள் அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றத் தயாரானார்கள். ஆனால் குருக்கள் தலையிட்டு, கடவுளின் இல்லத்தை இளவரசன் இவ்வாறு அவசங்கை செய்வதற்கு எதிராக அவனை எச்சரித்தார்கள். 

ஆனால் அவர்களுடைய எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை. ஒட்டகங்கள் கோவிலுக்குள் விரட்டப்பட்டன. ஆனால் அவை ஆலய வாசலைக் கடந்ததும் அந்த இடத்திலேயே செத்து விழுந்தன. அந்த சராசீனியன் எச்சரிக்கை உணர்வு பெற்று, இறந்த ஒட்டகங்களின் உடல்களை உடனே ஆலயத்திலிருந்து அகற்ற தன் ஊழியர்களுக்குக் கட்டளை யிட்டான்.

இது நடந்த நாள் தற்செயலாக ஒரு திருநாளாக இருந்தது. பூசை காண்பதற்காக மக்கள் ஏராளமாகக் கூடியிருந்தார்கள். ஆனால் குருவானவர் பூசையைத் தொடங்க அஞ்சினார். ஏனெனில் அந்த சராசீனியன் பூசையின் போது, தேவநிந்தையாக ஏதாவது செய்யக் கூடும் என்று அவர் அஞ்சினார். என்றாலும் இறுதியாக அவர் பூசையைத் தொடங்கினார். இளவரசன் பீடத்தில் நடக்கும் சடங்குகளை நன்கு கவனிக்கும் அளவுக்கு, அதற்கு மிக அருகில் இருந்தான். அவன் அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். 

குருவானவர் கிரேக்க ரீதிப்படி, தேவ வசீகரம் செய்யப்பட்ட திவ்விய அப்பத்தை ஒரு கத்தியால் நான்கு பகுதிகளாக வெட்டிப் பிரித்த போது, ஒரு மிக அழகிய குழந்தையின் திருச்சரீரம் வெட்டிப் பிரிக்கப்படுவது போலவும், திருக்கிண்ணத்திலிருந்து அக்குழந்தையின் திரு இரத்தம் நிரம்பி வழிந்தோடுவது போலவும் அந்த சராசீனியனுக்குத் தோன்றியது. இந்தக் காட்சியால் கோபமடைந்த அவன் அந்த இடத்திலேயே குருவைத் தன் வாளால் இரண்டாகப் பிளந்து விட விரும்பினான். ஆயினும் ஒரு வகையான வினோதப் பிரியம் அப்படிச் செய்ய விடாமல் அவனைத் தடுத்தது.

திவ்விய நன்மை உட்கொள்ளும் நேரம் வந்தது. குருவானவர் திவ்விய அப்பத்தையும், திரு இரசத்தையும் உட்கொண்டபோது, அவை அந்தச் சராசீனியனின் கண்களுக்கு அப்ப, இரசமாகத் தோன்றாமல், நிஜ மாமிசமாகவும், இரத்தமாகவும் தோன்றின. திவ்விய நன்மை வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு திவ்விய அப்பத்திலும் இதே தோற்றத்தை அவன் கண்டான். 

"இந்தக் கிறீஸ்தவர்கள் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளாக இருக்க வேண்டும்!'' என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். "இவர்கள் தங்கள் விக்கிரக வழிபாட்டுச் சடங்குகளின் போது, ஒரு குழந்தையைக் கொன்று, அதன் மாமிசத்தை உட்கொள்கிறார்கள். இந்த மாசற்ற குழந்தையின் கொலைக்காக நான் இவர்களை நிச்சயமாகப் பழிவாங்குவேன். இந்தக் காட்டுமிராண்டித்தனமான அரக்கர்களுக்கு நான் ஒரு பரிதாபமான முடிவைத் தருவேன்."

பூசை முடிந்த பின், குருவானவர் யூலோஜியா என்னும் மந்திரிக்கப்பட்ட அப்பத்தை (வசீகரிக்கப்பட்ட அப்பமல்ல) மக்களுக்குக் கொடுத்தார். அந்த அந்நியனுக்கும் அதில் ஒரு துண்டு கொடுக்கப்பட, "இது என்ன?" என்று அவன் கோபத்தோடு கேட்டான். "இது மந்திரிக்கப்பட்ட அப்பம்" என்று பதிலளித்தார் குரு. 

அப்போது அந்த விசுவாசி உரத்த சத்தமாக: "மனிதத் தன்மையற்ற ஈனர்களாகிய நீங்கள் பீடத்தின் மீது செய்வது இதுதானா? ஓர் அழகான இனிய குழந்தையை நீர் உமது சொந்தக் கரங்களால் கொலை செய்ததையும், அக்குழந்தையின் மாமிசத்தை உண்டு, இரத்தத்தைக் குடித்ததையும் நான் என் சொந்தக் கண்களால் கண்டேன். அதன்பின் நீர் அதை மற்றவர்களுக்கும் கொடுக்க வில்லையா?" என்று கேட்டான். 

பெரும் ஆச்சரியத்தால் முதலில் வாயடைத்துப் போன குருவானவர் அதன் பின் சுதாரித்துக் கொண்டு, "என் எஜமானரே, நான் இவ்வளவு பக்திக்குரிய பரம இரகசியங்களைக் காணத் தகுதியற்ற ஒரு பாவி! அவற்றைக் காண நீர் சலுகை பெற்றிருப்பதால், கடவுளிடம் மிகுந்த தயவு பெற்றவராக நீர் இருக்க வேண்டும்" என்றார். 

அதன்பின் சராசீனியன், அப்படியானால், தான் கண்டது உண்மையாகவே நடக்கவில்லையா என்று கேட்டான். அது உண்மையாகவே நடந்தது என்றாலும், இந்த ஆழமான பரம இரகசியத்தை ஊடுருவிக் காணும் சலுகை பாவியான மனிதனின் கண்களுக்குத் தரப்படவில்லை என்றும், தாம் அப்பத்தையும், இரசத்தையும் மட்டுமே கண்டதாகவும், ஆனால் தேவ வசீகர வார்த்தைகளால் இவை இரண்டும் காண முடியாத விதத்தில் கிறீஸ்துநாதரின் திருச்சரீரமாகவும், திரு இரத்தமாகவும் மாறுகின்றன என்றும் அவனுக்கு விளக்கிக் கூறினார்.

தான் கண்டவையும் கேட்டவையுமான இந்த அதிசயத்திற்குரிய காரியங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட அந்த சராசீனியன் உடனே தான் ஒரு கிறீஸ்தவனாக விரும்புவதாகக் கூறி, தனக்கு ஞானஸ்நானம் வழங்கும்படி குருவானவரிடம் கெஞ்சினான். ஆனால் குருவானவர் அந்த இளவரசனின் மாமனாகிய அரசனின் கோபத்திற்குப் பயந்து, அவனுடைய வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மறுத்து விட்டார். ஆயினும், உண்மையாகவே அவன் ஒரு கிறீஸ்தவனாக விரும்பினால், சினாய் மலை மீது தங்கியுள்ள மேற்றிராணியாரிடம் சென்று, தான் கண்டதை அவருக்கு விவரித்துக் கூறும்படி அவனுக்கு ஆலோசனை கூறினார். முதலில் அவன் ஞானோபதேசம் கற்றுக் கொண்ட பின், மேற்றிராணியார் ஞானஸ்நானம் பெற அவனை அனுமதிப்பார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே அந்த சராசீனியன் தன் ஊழியர்களிடம் திரும்பி வந்தான். ஆனாலும் நடந்தது எதையும் அவர்களிடம் அவன் கூறவில்லை . இரவில் அவன் ஒரு திருயாத்திரிகனைப் போல மாறுவேடமிட்டுக் கொண்டு, இரகசியமாக சினாய் மலைக்குப் புறப்பட்டான். அங்கே மேற்றிராணியாரைச் சந்தித்து, தனது மனந்திரும்புதலைப் பற்றி அவருக்கு அறிவித்தான். அவரும் அவனுக்கு ஞானோபதேசம் கற்றுத் தந்து, ஞானஸ்நானமும் வழங்கினார். 

பக்கோமியுஸ் என்னும் பெயர் அவருக்குத் தரப்பட்டது. பிற்பாடு அவர் ஒரு துறவியானார். மூன்று வருடங்கள் கடுமையான தவ வாழ்வு நடத்திய பிறகு, அவர் தமது மடத்துச் சிரேஷ்டரின் அனுமதியுடன், தன் மாமனை மனந்திருப்பும் நம்பிக்கையுடன் தம் வீட்டுக்குத் திரும்பி வந்தார். ஆனால் அதற்கு மாறாக, அவர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியாகக் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார்.

நமதாண்டவரின் திருச்சரீரமும், திரு இரத்தமும் ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தில் உண்மையாகவே இருக்கின்றன என்பதை மட்டுமின்றி, இரத்தம் சிந்தாத விதத்தில், பரம இரகசிய முறையில் அவர் உண்மையாகவே பீடத்தின் மீது பலியாக்கப்படுகிறார் என்பதையும் இந்தப் புதுமை நமக்குக் காட்டுகிறது. 

ஒரு முழுமையான அவிசுவாசியாக இருந்த அந்த சராசீனியர் தாம் கண்டவற்றைப் பற்றி அதிசயித்து, அதைப் பற்றி விசாரிக்கும்படி தூண்டப்பெற்று, அதன் வழியாகக் கிறீஸ்தவ வேதத்தைத் தழுவிக் கொள்ளும்படி, பூசையில் குருவானவர் ஒரு குழந்தையின் திருச் சரீரத்தை வெட்டிப் பிரிக்கும் காட்சி அவருக்கு அருளப்பட்டது. மேலும், இந்த புத்திக்கெட்டாத பரம இரகசியத்தில் நம் அறிவை அதிகரிக்கவும், நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், இந்த நிகழ்ச்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவும், எதிர்கால சந்ததிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்படவும் கடவுள் சித்தங்கொண்டார். 

ஏனெனில் திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் சரீர வேதனையையோ, மரணத்தையோ அனுபவிப்பதில்லை என்றாலும், முன்பு தாம் கசைகளால் அடிக்கப்பட்டதையும், முள்முடி சூட்டப்பட்டதையும், சிலுவையில் அறையப்பட்டதையும் தம் பரலோகப் பிதாவுக்கு முன்பாக எப்படி சமர்ப்பித்தாரோ, அப்படியே பூசையிலும் அவர் தமது பிதாவுக்கு உண்மையாகவே தம்மைக் காட்டுகிறார். இப்போது மீண்டும் உள்ளபடியே உலகின் பாவங்களுக்காக இந்த வாதைகளைத் தாம் அனுபவிப்பது போலவே இந்தக் காட்சி தெள்ளத் தெளிவாகப் பிதாவுக்குக் காண்பிக்கப்படுகிறது.